ஆபத்தான ஆவிக்குரிய தீண்டாமை...
(குறிப்பு : “கண்ணுக்கு தெரியாமல் பரவும் புற்று செல்போல் ‘ஆவிக்குரிய தீண்டாமை’ — பிறரை புறக்கணித்து, கடவுளின் பெயரை தன்னுடைய பெருமைக்காக பயன்படுத்தும் மனப்பான்மை. இது பிளவு படுத்த வேண்டுமென்று அல்ல; விழிப்புணர்வு ஏற்படுத்தி, உண்மையான மரியாதையையும், ஒற்றுமையையும் நிலைநாட்டுவதே நோக்கம்.” )
ஆவிக்குரிய தீண்டாமை என்றால் என்ன?
மனித சமூகம் பல்வேறு பிளவுகளை சந்தித்திருக்கிறது. சாதி, மதம், மொழி, நிறம் என்று எண்ணற்ற காரணங்களால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புறக்கணித்து, “நாம் மேலானவர்கள், நீங்கள் கீழானவர்கள்” என்ற மனப்பான்மையில் நடந்திருக்கிறார்கள். இந்த நிலையில், மதத்தின் பெயரில் நடைபெறும் தீண்டாமை இன்னும் ஆபத்தானது. ஏனெனில் அது வெளிப்படையான சாதி அடிப்படையிலான பிரிவு அல்ல; ஆனாலும் “ஆவிக்குரியவர்கள்” என்ற பெயரில் பிறரை தாழ்த்தி, தங்களை உயர்த்திக் கொள்ளும் அகம்பாவம். இதுவே “ஆவிக்குரிய தீண்டாமை” எனக் குறிப்பிடப்படலாம்.
திருமணப் பேச்சு, சபை, வழிபாட்டு சூழல்கள் – பிறரை வாயடைத்து தன் விருப்பத்தை நடப்பதாக காட்டும்.
குடும்ப உறவுகள் – “நாம் மேலானவர்கள், நீங்கள் கீழானவர்கள்” என்ற மனப்பான்மையில் புறக்கணித்தல்.வேலை/அதிகாரம் – அதிகாரத்தை, ஒழுக்கத்தை தவறாக காட்டி பிறரை அடக்கம் செய்தல்.
ஆவிக்குரிய தீண்டாமையின் மிகப் பெரிய பிரச்சனை, அது “கடவுளின் சித்தம்” என்ற பெயரில் நடத்தப்படுவதுதான். சாதாரண சண்டையில் ஒருவர் “என் விருப்பம்” என்று சொன்னால், எதிர்காலத்தில் சமரசம் செய்ய முடியும். ஆனால் ஒருவர் “இது கடவுளின் விருப்பம், நாம் ஜெபித்தோம்” என்று சொன்னவுடன் மற்றவர்கள் வாயடைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதுவே மறைமுகமாக மிகப் பெரிய அடக்குமுறையாகிறது. ஏனெனில், கடவுளை எதிர்க்க யாரும் முன்வரமாட்டார்கள். அந்த அடக்குமுறையின் காரணமாக, பலர் அவமானப்படுத்தப்பட்ட உணர்ச்சியோடு அமைதியாக விலகுகிறார்கள்.
இத்தகைய நிலை குடும்ப வாழ்க்கையிலோ, திருமண பேச்சிலோ, சமூக உறவுகளிலோ தொடர்ந்தால் அதன் விளைவுகள் ஆபத்தானவை. குடும்பத்தின் உள்ளேயே பிளவு, பரஸ்பர நம்பிக்கையின் அழிவு, “அவர் சொன்னால் மட்டுமே நடக்கும், மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது” என்ற அடிமைத்தனமான சூழல் உருவாகும். இது அன்பின் அடிப்படையில் கட்டப்பட வேண்டிய குடும்ப உறவை அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுவதற்கு சமம். அதிகாரம் தற்காலிகமாக வெற்றியைத் தரலாம்; ஆனால் அன்பும் மரியாதையும் இல்லாத இடத்தில் நீண்டநாள் அமைதி நிலவாது.
ஆவிக்குரிய தீண்டாமை கொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள் சொற்களில் நிம்மதியும் பெருமையும் தேடுகிறார்கள். “நாம் ஆவிக்குரியவர்கள், நம்மால் தான் காரியம் நடக்கிறது” என்ற பெருமை பார்வை அவர்களுக்கு தற்காலிக திருப்தியைத் தரலாம். ஆனால் அந்த பார்வை, சுற்றியுள்ள உறவினர்களின் மனங்களில் ஆழமான காயத்தை உண்டாக்குகிறது. அந்தக் காயம் வெளியில் பேசப்படாமல் அமைதியாக புதைக்கப்படும்; ஆனால் அது நீண்ட காலத்தில் பிளவுகளையும் மனக்கசப்பையும் வளர்க்கும்.
ஆகவே, உண்மையான ஆவிக்குரிய நிலைமை என்னவெனில் — மற்றவர்களை மதிக்கும் பணிவு, உறவுகளின் பங்கு உணர்வு, “எங்களால் மட்டுமே நடக்கும்” என்று சொல்லாமல், “நாம் அனைவரும் சேர்ந்து ஜெபிக்கிறோம், கடவுள் நடக்கச் செய்கிறார்” என்ற மனப்பான்மை. யாரையாவது புறக்கணித்து காரியம் சாதித்தால் அது வெற்றி அல்ல; அது தோல்வி. அது கடவுளின் சித்தம் அல்ல, அது மனித அகம்பாவத்தின் வெளிப்பாடு.
ஆவிக்குரிய தீண்டாமை என்பது சாதி, மதம் போன்ற வெளிப்படையான தீண்டாமைகளைவிட இன்னும் அபாயகரமானது. ஏனெனில் அது கடவுளின் பெயரை மூடையாகப் பயன்படுத்துகிறது. கடவுளின் பெயரை மூடையாகப் பயன்படுத்தும் இடத்தில் உண்மையான கடவுள் இல்லை; அங்கு இருக்கிறதே சுயநலம். ஆகவே குடும்பங்களில், சமூகத்தில், குறிப்பாக திருமண பேச்சு போன்ற நுணுக்கமான சூழல்களில், ஆவிக்குரிய தீண்டாமையை அடையாளம் கண்டு எதிர்க்க வேண்டும். இல்லையெனில், வெளியில் சாதனையோ வெற்றியோ போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் மரியாதை, அன்பு, அமைதி அனைத்தும் சிதைந்துவிடும்.
விளைவுகள்:
- குடும்பம், உறவுகள், சமூக உறவுகளில் பிளவு.
- பரஸ்பர நம்பிக்கை அழிவு.
- அன்பும் மரியாதையும் இல்லாமல், நீண்டநாள் அமைதி அழிந்து போகும்.
ஒரு "கதை" ஒன்னு நடந்ததோ, நடப்பதோ, நடக்க போவதோ,... ஆனா இதை கதையாக எடுத்துக்கொள்வோம்!...
ஒரு ஊரில், திருமண பேச்சு நடக்க ஒரு நாள் நிர்ணயிக்கப்பட்டது. மாப்பிளை வீட்டார், பெண் வீட்டார், உறவினர்கள் என பலர் கூடியிருந்தார்கள். அந்த கூட்டத்தில் மாப்பிளையின் தாய் மாமன் மிகவும் மரியாதையோடு அமர்ந்திருந்தார். தமிழ் மரபில் தாய் மாமன் பேசுவது மிகப்பெரிய பங்காக கருதப்படுகிறது.
அப்போதே பெண் வீட்டார் அம்மா திடீரென்று சத்தமாக சொன்னார்:
“நீங்கள் பேச வேண்டாம்! நாங்கள் ஆவிக்குரியவர்கள். நாங்கள் ஜெபம் பண்ணிட்டு வந்திருக்கிறோம். காரியம் கடவுளால் நடத்தப்படும். நாங்கள் மாப்பிளை வீட்டாரோடு பேசிக்கொள்கிறோம்.”
அந்தக் கணத்தில், அங்கே இருந்த அனைவரும் சற்றே அதிர்ந்தனர்.
மாமனின் முகத்தில் ஒரு சின்ன காயம் தெரிந்தது. மனசுக்குள் அவர் பேசிக்கொண்டார்:
“என் பங்கை மறந்து, கடவுளின் பெயரை வைத்து என்னை வாயடைத்து விட்டார்கள். இது கடவுளின் சித்தமா, இல்லையா அவருடைய பெயரை பயன்படுத்திய சுயநலமா?”
அவருக்கு கோபம் வந்தது. பலர்முன் அவமானம் வந்தது. ஆனாலும் அவர் எதுவும் பேசவில்லை. மனதில் மட்டும்:
“இது என் தங்கை மகனின் வாழ்வு. என்னால் எதுவும் கெட்டுப்போகக் கூடாது. காரியத்தை நிறுத்தக்கூடாது” என்று சொல்லிக்கொண்டு அமைதியாக விட்டு வந்தார்.
அந்த நாள் காரியம் சாதிக்கப்பட்டது. இங்கே உண்மையான ஆவிக்குரியவர் யார்?
“ஆவிக்குரிய தீண்டாமை – கடவுளின் பெயரை வைத்து பிறரை அடக்கும் அகம்பாவம். இதை ஒழிக்க வேண்டும்"
கடவுளின் பெயரை வைத்து பிறரை அடக்குவது உண்மையான ஆவிக்குரிய தன்மையல்ல. அது ஆவிக்குரிய தீண்டாமை.
உண்மையான ஆவிக்குரியவர், தாழ்மையோடு, பிறருக்கு மரியாதை கொடுத்து, அனைவரையும் இணைத்து நடத்துவதே.
மீண்டும் ஒரு உரையாடலில் சந்திப்போம்,...
ஆ.ஞானசேகரன்
மீண்டும் ஒரு உரையாடலில் சந்திப்போம்,...
ஆ.ஞானசேகரன்
0 comments:
Post a Comment