சொந்த ஊரை தொலைத்து வந்த ஊரை சொந்தமாக்கினோம்!
நான் வசிக்கும் ஊர் மலைக்கோட்டை நகரம் திருச்சிராப்பள்ளியிலிருந்து 20கி மீ தூரத்தில் இருக்கும் அண்ணாநகர் திருச்சி-26.
தென்கிழக்கில் பாரத் மிகு மின் தொழிற்சாலை, கிழக்கில் துப்பாக்கித் தொழிற்சாலை, வடகிழக்கில் ஹெவி அலாய் பெனிரேட் தொழிற்சாலை, வடக்கில் பன்னாட்டு விமான நிலையம், வடமேற்கில் பொன்மலை ரயில் பெட்டி தொழிற்சாலை என்று புடைசூழ அமைந்த ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர் திருச்சி-26. 1984 ம் ஆண்டு டாக்டர் புரட்சி தலைவர் M G ராமசந்திரன் அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதித் துறையினால் தொடங்கப்பட்ட ஊர்தான் அண்ணாநகர் திருச்சி-26.
ஒருமுறை டாக்டர் புரட்சி தலைவர் M G ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ரஷ்யா சென்றார், அங்கு எல்லா தர மக்களும் ஒரே இடத்தில் ஏற்ற தாழ்வின்றி குழுமி வசிக்குபடியான நிலையில் ஒரு நகரத்தை பார்த்தாராம். அதுபோல் நம் ஊரிலும் ஒரு நகரம் அமைத்திட வேண்டும் என்ற கனவில் உருவான நகரம்தான் சேட்லைட் சிட்டி திருச்சி அண்ணாநகர்.
இது ஒரு கனவு நகரம்... உண்மையில் இது ஒரு சமத்துவபுரம். மக்களின் மனித நேயம் உருவாக்கும் பட்டறை. இங்கு கிறிஸ்தவ தெரு, முஸ்லிம் தெரு, இந்துக்கள் தெரு என்பது கிடையாது. இங்கு பறையர் தெரு, பள்ளர் தெரு, கள்ளர் தெரு, நாடார் தெரு என்று சாதிப் பேர் சொல்லும் சாக்கடை கிடையாது. இங்கு மேலோர் கீழோர் என்ற பாகுபாடுயின்றி ஓரிடத்தில் வசிக்கும்படி அமைக்கப்பட்ட வடிவம் தான் இதன் தனிச்சிறப்பு. எங்கள் தெருவில் மாரியம்மன் பல்லக்கும் வரும், மாதாவின் சப்பரமும் வரும், முஸ்லிம் சகோதரனின் சமய ஊர்வலம் வரும். எது வந்தாலும் எல்லா இனத்தவரும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வரவேற்பதும் எங்கள் வழக்கம்.
இதை எதிர்பார்த்து தான் புரட்சி தலைவர் இந்த ஊரை உருவாக்கினார். மேலும் அவர் கண்ட கனவு இங்கே ஒரே இடத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் என்ற கல்லூரிகள், பள்ளி வளாகங்கள் எல்லாம் ஒர் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டார். அதன்படி தொடக்க நிலையில் ஆரம்பமாகின. காலத்தின் ஓட்டம் அவர் 1987 ல் டிசம்பர் 24 நாள் காலமானார். அதன் பின் வந்த அரசியல் மாற்றங்கள், ஆட்சியாளர்கள் தன்னிடம் உள்ள தரிசு நிலங்கள் பணமாக்க கல்லூரிகள் இடம் மாற்றப்பட்டது. கடைசிவரை இந்த அண்ணாநகர் புரட்சி தலைவர் கண்ட கனவுக்கு வரவேயில்லை.
இந்தியாவிலேயே பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பஞ்சாயத் இந்த அண்ணாநகர் அமைந்த நவல்பட்டு பஞ்சாயத்து தான். இதில் ஒரு வேடிக்கை இந்த அண்ணா நகரை என்ன காரணம் என்று முழுமையாக தெரியவில்லை இரு கூறுக பிரித்து ஒரு பகுதி கும்பகுடி பஞ்சாயத்தாகவும், ஒரு பகுதி நவல்பட்டு பஞ்சாயத்தாகவும் பிரிந்துள்ளது. அதுவே அதன் தனித்தன்மை காற்றில் பறந்தது. என்னதான் பாதாள சாக்கடை அமைப்பு பெற்றாலும் இது ஒரு கிராம பஞ்சாயத்து என்பதால் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமல் மூடும் நிலைக்கு செல்கிறது. இங்குள்ள சமுக ஆர்வலர்களும், பஞ்சாயத்து தலைவர்களின் பெரும்பாடு களாலும் இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அண்ணாநகர் நவல்பட்டு ஒரு மிக பெரிய பஞ்சாயத்தாக இருக்கின்றது. அதில் வருமானம் அதிகம் ஈட்டும் பஞ்சாயத்து தாகவும் இருக்கிறது.
சீரும் சிறப்பு கொண்ட இந்த ஊரை மாதிரி நகரமாக பார்க்கவும், சீரமைக்கவும் எந்த தலைவர்களும் வரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக இருந்தபோது இங்கு ஒரு ஐ டி பார்க்கை நிறுவினார். தற்பொழுது 3, 4 கம்பெனிகள் இயங்கும் நிலையில் இருக்கிறது. மேலும் இதை மேம்படுத்த அடுத்து வந்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. இன்னும் அப்படியே இருக்கிறது, காரணம் கமிஷன் பேரம் சரியாக ஒத்துவரவில்லை என்பதுபோல் ஒரு பேச்சு வழக்கில் இருக்கிறது.
இங்குள்ள சாலைகள் பல 20 வருடம் மேல் எந்த ஒரு பராமரிப்பின்றி குண்டும் குழியாக இருக்குது. இருப்பினும் அதை மேம்படுத்த நிதி ஒதுக்கீடும் இல்லை கவனிப்பதும் இல்லை. ஒரு நல்ல மாடல் நகரம் பார்வையற்று கிடப்பது வருத்தப்பட கூடியதாக இருக்கின்றது. அதே போல் ஆங்காங்கே குப்பை மேடுகள் இருக்கிறது அதை பராமரிக்காமல் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. அதே போல் பாதாள சாக்கடை மேன்கோல்ஸ் மூடிகள் இல்லாமல் நீர் வழிந்த நிலையில் இருப்பது. கனவு நகரம் காணாமல் போகிறது.
ஒரு நல்ல மாதுரி நகரம் இனி வரும் ஆட்சியாளர்கள் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவும் அதை மேம்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கின்றோம்.
1. ஒரு 24 மணி நேர மருத்துவமனை நிறுவப்பட வேண்டும்.
2. பாதாள சாக்கடை அதன் வெளியேற்றும் பம்பு நிலையங்கள் சரி செய்ய வேண்டும்
3, நல்ல ஒரு வணிக வளாகம் வேண்டும்.
4.சாலைகளை செப்பனிட வேண்டும்.
5. பகுதிக்கு ஒன்றாக விளையாட்டு அரங்கம், நல்ல நூல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
6. இந்த அண்ணாநகரின் தனி சிறப்பை பாதுகாக்க வேண்டியது மட்டுமல்லாமல் இது போல நகரம் பல இடங்களில் அமைத்து உண்மையான சமத்துவபுரம் உருவாக்கப்பட வேண்டும்.
7. பேருந்துகள் அதிகப்படுத்த வேண்டும் . 100 அடி சாலை வழியாக ஒரு பேருந்து இயக்கினால் நல்லது.
8. ஐ டி பார்க்கில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
9. இங்கு ஒரு பகுதிக்கு ஒன்றாக சமுதாயக் கூடம் அமைக்க பட வேண்டும்.
இது எல்லாம் வரும் ஆட்சியாளர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகின்றோம்.