பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடன் அழைகப்படும் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அன்பாலும் சிந்தனைகளாலும் ஈக்கப்பட்டு அவர் வழியில் போராடிய ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றாலும், இன்றைய இந்திய அரசால் சுதந்திர போராட்ட வீரர்களுக்காண உதவிதொகை பெறமுடியாதவர். இந்திய தேசிய ராணுவத்தில்(INA) சேர்ந்து சுபாஸின் வழியில் போராடிய பலருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்பது இவர் சொல்லிதான் எனக்கு தெரியும். போராட்டக் காலத்தில் இவர் சிங்கபூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக அடிக்கடி சொல்லுவார். சுதந்திர போராட்டத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி இருந்துவிட்டதால் திருமணம் ஆகாமலே இருந்துவிட்டார். நான் ஊருக்கு எப்பொழுது சென்றாலும் இவரை பார்க்காமல் வருவதில்லை....நான்: தாத்தா நல்லாயிருக்கிங்களா?
தாத்தா: யாரு சேகரா? வாப்பா பேராண்டி எப்படியிருக்க? சிங்கபூரிலிருந்து எப்ப வந்த? மனைவி பிள்ளைங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா?
நான்: நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம் தாத்தா. நீங்க எப்படியிருக்கீங்க? நம்ம நாட்டின் 63வது சுதந்திர தினம் வருகின்றது. உங்களை போன்றவர்களை பார்ப்பதில் பெருமையா இருக்கு தாத்தா. இந்த வயதிலும் கம்பீரமாக இருக்கின்றீர்கள் எப்படி தாத்தா?
தாத்தா: இந்த உடம்பு வெள்ளக்காரனுக்கு முன்னாடி துப்பாக்கியை தோளுல தூக்கிய உடம்பு. ஒருபக்கம் காந்திமகான் அமைதி வழியிலேயும் மறுபக்கம் சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தியும் போராடி பெற்ற சுதந்திரம் தான் நாம் இப்பொழுது அனுபவிப்பது. இவர்களுகுள் கருத்து வேறுபாடு இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் நோக்கம் ஒன்னுதான், இந்தியா அடிமை தளத்திலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணங்கள இவர்களுக்கு இருந்தது. ம்ம்ம்.. இப்ப என்ன சொல்லுரதுன்னு தான் தெரியல மறுபடியும் இந்த அரசியல்வாதிகள் நாட்டை துண்டு போட்டு அந்த ஆங்கிலேயனுக்கே வித்துவிடுவானுங்க போல இருக்கு. நான் சாகரதுக்குள்ள அப்படியெல்லாம் நடக்க கூடாதுப்பா....
நான்: அப்படியெல்லாம் நடக்காது தாத்தா இந்த காலத்து இளைஞர்கள் தெளிவா இருக்கின்றார்கள். நாளைய அரசியலிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தாத்தா. (என்று தாத்தாவிற்காக சொன்னாலும் நடந்துவரும் லஞ்சம், அரசியல் அராசகம் எல்லாம் பார்த்தால் என்னாலும் பொறுக்க முடியவில்லைதான்)
தாத்தா: நீ சொல்லுரதும் சரிதான் ஆனால் இப்ப நடக்குர சாதிக்கலவரம், படிக்கரதுக்கு காசு வாங்குரானுங்க, நோவுனு போனா பணம் பணமுனு பேயா அழையுரானுங்க. இதெல்லாம் பார்க்க முடியலப்பா. வெள்ளைக்காரனுக்கு எதிரா துப்பாக்கி ஏந்திய எனக்கு இந்த கொள்ளை காரனுக்கு எதிரா ஏந்தனுமோ என்ற எண்ணம்தான் இருக்கு. வயசாயிருச்சி கண்ணும் மங்கி போச்சு ஆனா நம்ம நாடு நல்லாயிருக்கனும் என்ற வேறி மட்டும் அடங்கலப்பா சேகர்.
நான்: நீங்க சொல்லுரதும் சரிதான் தாத்தா. இதுகெல்லாம் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டதான் முடியும்னு தோனுது. லஞ்சம் வாங்குறவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?
தாத்தா: பேராண்டி நீயும் சரியாதான் பேசுர ... அதுகெல்லாம் என்ன செய்யலாம்னு நீ நினைகிற? சுதந்திரம் வாங்கி 62 வருசம் ஆகியும் ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிட்டான்.
நான்: ஆமாம் தாத்தா இந்தியா ஒரு ஏழை நாடு ஆனால் பணம் படைத்தவர்கள் அதிகம் உள்ள நாடு. அம்பானி வாழ்க்கை சரித்திரம் புத்தகம் ஒன்றில் படித்தேன் " நான் எனது முன்னேற்றதிற்கு காரணம் இந்திய அரசை நான் சரியாக புரிந்துக்கொண்டேன்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு சரியான அர்த்தம் நமக்கு புரியாமலா போகும். ஆமாம் தாத்தா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கியவர்கள் தானே நம்முடைய பிரதிநிதிகள். இவர்களை சட்டதிற்கு முன் நிறுத்தி தண்டனை பெறமுடியுற காரியமா என்ன?...
தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.
நான்: தாத்தா நீங்க சொல்லுவது பேச்சுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த பாழபோன அரசியலுல போராடி வெற்றிபெற முடியுமா? அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் செய்யுற தவற்றைதான் நாமும் செய்யனும். அதுல என்ன ஞாயம் இருக்கு?
தாத்தா: நீ நினைப்பதை போல மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஸ்சந்திர போஸ், பகத்சிங் போன்றவர்கள் நினைத்துருந்தால் இன்றைய சுதந்திர இந்தியாவை பார்க்கமுடியுமா? பேராண்டி... "போராடினால்தான் வெற்றி! உழைத்தால்தான் உணவு!"
நான்: இப்படிதான் தோழர் கக்கன் போன்றோர் நேர்மையா அரசியல் பன்னுனாங்க அவர்களுக்கு இந்த சமுதாயம் என்ன செய்தது? ஒரு தகர பெட்டியும், உடுத்திகொள்ள ஒரு சில வேஷ்டியும் தானே இருந்தது.
தாத்தா: அப்படி நேர்மையா இருந்ததாலேதான் அவரைப் பற்றி பெருமையா நீ பேசுகின்றாய்.. அப்படிதான் நல்லது செய்யனும், ஒதுங்கி நின்னு கேள்வியை கேட்டுட்டு போரதுல என்ன முன்னேற்றம் காணமுடியும். ஏரில இறங்கி கலக்கினாதான் மீன் பிடிக்க முடியும். அப்படிதான் நாங்க அந்த வெள்ளையனை எதிர்த்து நின்னோம். அப்ப எங்கள் மனசுல நினைத்தது எல்லாம் நம்ம நாடு, நாட்டின் சுதந்திரம் மட்டும்தானே!
நான்: தாத்தா போன பாராளுமன்ற தேர்தலில் (2009) சென்னை சேப்பாக்கம் தொகுதில் படித்த இளைஞர் சரத் பாபு நின்றார். நல்ல நேர்மையாக உள்ளவர் அவருக்கு இந்த மக்கள் வாக்களித்தார்களா? இதை பார்த்த எந்த இளைஞன் அரசியலுக்கு வருவான்.
தாத்தா: அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..
நான்: நீங்கள் வெள்ளையனை எதிர்த்து போராடினீங்க. வெற்றியும் கண்டீர்கள். நாங்கள் எதுக்காக போராடனும் எங்களின் அடிப்படை உரிமைகளை கொடுப்பது அரசின் கடமையள்ளவா?... பிறகு ஏன் அது மறுக்கப்படுகின்றது?
தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....
நான்: ""தலைய சொருஞ்சுகிட்டு நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதைதான் நானும் நினைத்துக் கோண்டு இருக்கேன்!""
வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்கள்!
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
(முற்றிலும் கர்ப்பனையானாலும் செய்திகள் உண்மை)