_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label முடப்பழக்கம். Show all posts
Showing posts with label முடப்பழக்கம். Show all posts

Friday, November 20, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மேலேயுள்ள சுட்டிகளில் மூடப்பழக்கங்கள் பற்றிக்கொள்ள நம்மை ஆட்கொள்ளும் பயமும் அதன் மீது கொண்ட அறியாமையாலும் வருகின்றது என்பதை பார்த்தோம். அதேபோல் மனிதனிடம் உள்ள அதிகமான ஆசைகளாலும் அதன் மேல் கொண்டுள்ள ஈப்பாலும் மனிதனை மூடப்பழக்கங்களுக்கு கொண்டுச் செல்கின்றது. என்னை பொருத்தவரை எப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் இருக்கின்றது என்று ஆராய்வதை விட ஏன் மனிதனை இந்த பழக்கம் கவ்விக்கொள்கின்றது என்று ஆராயவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தொடர் தொடங்கினேன்.

மனிதனின் அறிவிற்கு முரனாண பழக்கங்கள் ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், சிறியவர் பெரியவர் என பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் இருக்கின்றது என்பதுதான் இதில் ஒரு குழப்பம். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அறிவு சார்ந்த விடயமா? அல்லது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வா? என்ற குழப்பங்கள்தான் மீதம் வெளிப்படுகின்றது.

ஒன்றைப் பற்றி நாம் முழுமையாக அறியாமல் இருக்கும் வரை இந்த நம்பிக்கையின் நாடியும் அடங்க மறுக்கின்றது. அதே போல் "பயம்" என்பது மனிதனின் வளரும் சூழ்நிலைகளால் வருகின்றனவா? அல்லது பாரம்பரிய செல்களால் கடந்து வந்துள்ளதா? என்ற ஆய்வின் முடிவின் கைகளில் இந்த நம்பிக்கையும் இருக்கின்றது. பிறந்ததிலிருந்து ஒவ்வொன்றாக கற்று வருகின்றோம் நாம் அறியா ஒன்றை அறியும் வரை அதன் மேல் உள்ள பயமும் நம்மை விட்டு நீக்கிவிடுவதில்லை. அதனை பற்றி அறிந்த பின் அந்த பயம் மட்டும் மூளையில் பிரதி எடுத்து வைத்துக்கொள்கின்றது. பின்னர் அதேபோல் அல்லது அதனை ஒத்த நிகழ்வுகள் வரும் பொழுது அந்த பயமும் படமெடுக்கின்றது என்பதுதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது. எத்தனை சீர்திருத்த வாதிகள் தோன்றினாலும் இந்த மூடப்பழக்கங்கள் அழிந்தபாடில்லை ஏன்?

பெண்களுக்கு கல்வியறிவு வளர்க்க வேண்டும் அப்படி பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான நம் சமூகம் இந்த மூடப்பழக்கங்களிலிருந்து விடுபடும் என்று பெரியார் சொன்னார். உண்மைதான், இன்றை நிலையில் படிக்காத பெண்களை விட படித்த பெண்களிடம் இப்படிப்பட்ட மூடப்பழக்கம் அதிகமாகவும் மிக சாதுர்த்தியமாகவும் இருப்பதை உணரமுடிகின்றது. இந்த நாளில் இந்த விரதம் இருந்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பட்டியல் போட்டுடல்லாவா சொல்லுகின்றார்கள். அப்படியே தன் கணவன் குடுப்பத்தரையுமல்லவா தன்வயப்படுத்தியுள்ளார்கள். இவற்கெல்லாம் அவர்களிடம் உள்ள ஆசைகள்தான் காரணம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன் குடும்பத்தினரிடம் உள்ள பற்று அதுவே ஆசைகளாக வந்தடைவதன் காரணமே இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்துவிடுகின்றது.


இதுவரை கண்டுள்ள ஆசைகளிலே மிக கொடூரமான ஆசைகளா இருப்பது பதவியாசை. ஒருவன் ஒரு பதவியை சுவைத்துவிட்டான் என்றால் அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுதரமாட்டான் என்பதுதான் வரலாறு சொன்ன பாடம். அந்த பதவிக்காக யாகங்கள் வைப்பது, பூஜைகள் செய்வது, ஏன் பலியிடுதல் செய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளை பலியிட்டால் நிரந்தரமாக பதவியில் இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டு அதற்காக யாகங்கள் நடத்தவும் செய்கின்றார்கள் என்ற செய்திகளை படிக்கின்ற பொழுது தலையே சுற்றுவதில் ஆச்சரியமில்லை. வயதான பின்னரும் இளம் நங்கையை மணம் முடித்தால் பதவியில் நீண்டு இருக்கலாம் என்று மணம் செய்தவர்களையும் வரலாறு பார்த்துள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது இந்த ஆசைகள்......

இவற்றிலிருந்து பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. அப்படி எல்லொரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்று சொல்லும் மூடப்பழக்கங்களைப்பற்றி தொடர்ந்து வரும் பகுதியில் சிந்திக்கலாம்.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.


Tuesday, November 10, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

மற்ற விலங்குகளை விட மனிதன் சிறப்புமிக்க உயிர். அவனிடன் நல்லது எது? கெட்டது எது? என பகுத்தாய்ந்து செயல்படும் திறன் அவனுக்கு மட்டுமே உள்ளது. ஒருவரின் அறிவுக்கும் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நம்பிக்கை என்பது அறிவு சார்ந்த விடயமா? சென்ற பகுதியில் பின்னூட்டமாக ஷண்முகப்ரியன் ஐயா பின் வருமாறு கூறினார். "
ஷண்முகப்ரியன் said... நம்பிக்கை என்பதே ஒன்றைப் பற்றி முழுக்க அறியாமல் இருக்கும் போது நாம் கொள்ளும் உணர்வு.அறிவுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஞானம். இதனை அறியவே முடியாது என்ற அறிவின் உச்சத்தில் பிறப்பது 'trust'. அறியாமையில் பிறப்பது ‘belief'."

ஷண்முகப்ரியன் ஐயா சொல்வதிலிருந்து ஒன்றைப்பற்றி முழுமையாக அறியாமல் கொள்ளும் உணர்வுக்கு நம்பிக்கை என்றால் அறியாதவற்றை அறிந்துக்கொண்டால் அந்த நம்பிகைகளிலிருந்து விடுபட முடியம் என்பது சரிதானே. அப்படி எல்லாவற்றையும் நம்மால் அறிந்துக்கொள்ள முடிகின்றதா? நம் அறிவுக்கு எட்டிய வரை அறிந்துக்கொள்கின்றோம். அதற்கு அப்பால் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியும் அதற்கான தேடல்களும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றது. இந்த தேடல்கள் இருக்கும் வரை நாம் நம் உணர்வில் கொண்டிருக்கும் நம்பிக்கைகளும் தொடரும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. தேடல்களும் நின்றுவிட போவதில்லை அதனோடு இருக்கும் நம்பிக்கையும் தொடருமா? என்ற கேள்வியையும் நம்மோடு வைக்கின்றது.

சாதாரணமாக கைகுழந்தைகள் இரவு நேரங்களில் சின்ன சின்ன உடல் உபாதைகளினால் அழுகும். பல வேலைகளின் அந்த குழந்தை ஏன் அழுகின்றது என்பதை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. இதுபோன்ற சமயங்களில் பெரியவர்கள் குழந்தைக்கு கண்திஸ்டி பட்டுள்ளது என்று சொல்லி திஸ்டியை போக்க சுற்றிப்போடுதல் என்ற ஒன்றை செய்வார்கள். இதுபோன்ற சமயங்களில் பகுத்தறிவான தந்தைகள் தடுப்பதில்லை மாறாக எனக்கு நம்பிக்கையில்லை வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் நம்பிக்கைக்காக செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள். எப்படியாவது குழந்தை அழுவது நின்றால் போதும் என்ற ஆசைகளால் ஏற்படும் நம்பிக்கைதான் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இதற்கு சமமான மற்றொரு என் இடுகை இதையும் படியுங்கள் கானல்நீர் தேடும் தாகம்... மனிதன் வாழும்
சமூகம் பாசம் பந்தம் என்ற பிணைப்பில் உள்ளது. ஒரு பகுத்தறிவாதி சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தவும் அதனால் ஏற்படும் பாதகங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றான். ஆனால் தன்னை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதற்கு உடன் படாதவனாகின்றான் என்பதை அந்த இடுகை சொல்லும்.

நம்பிக்கையும் மூடநம்பிக்கைகளும் மனிதனின் சமூக கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியவை. அப்படிப்பட்ட நம்பிக்கைகள் ஒரு சிலரை மட்டும் வஞ்சிக்கும் விதமாகவும், ஒரு சிலரை மட்டும் பாதிப்புக்கு ஆழ்படுத்துவதும் தான் மிக கொடுமையாக சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட மூடப்பழக்கங்களைதான் பெரியார் போன்ற சமூக சிற்பிகள் எதிர்த்து வந்தனர். சமுக பழக்கங்கள் சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது. அவைகளை அவ்வப்பொழுது உருவாகும் சமுக சிற்பிகளால் கழையப்படுகின்றது. மூடப்பழக்கங்களில் சில இரவில் வேப்பமரத்தில் பேய் இருக்கும் என்றும். இரவில் வீட்டை கூட்டி வெளியில் குப்பையை போட்டால் ஸ்ரீதேவி வெளியில் சென்றுவிடுவாள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இவற்றில் உண்மைநிலை வேறு.


பயம் என்பது மனித உணர்வுகளில் ஒன்றுதான். இதுதான் மூடப்பழக்கங்களின் ஆணிவேராக இருக்கின்றது. சிறுவயதில் ஏற்படும் சின்ன சின்ன பயம்தான் வளர்ந்த பின் மனிதனை மூடப்பழக்கங்களை எதிர்க்கும் திரணியற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இந்த பயம் இருக்கின்றவரை மனிதன் மனம் ஏதோ ஒன்றை நம்ப தயாராய்கின்றது. சிறுவயதில் பெற்றோர்கள், வளரும் சுற்றுசூழல், பின் அவனின் சமூகம் இந்த பயத்தை கற்றுக்கொடுக்கின்றது. இப்படி ஏற்படும் பயம் மூளையில் பதிய வைக்கப்படுகின்றது. அப்படி பதிந்துள்ள நகல்கள் எதோ ஒன்றுக்கு பொருந்தி பயத்தையும், அதனை சார்ந்த மூடநம்பிக்கைக்கு ஏற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இப்படி ஏற்படும் நம்பிக்கைகளுக்கு அவனிடம் கொண்டுள்ள பகுத்தறிவும் பயனற்றவையாக இருக்கின்றது.

குழந்தைகளின் சூழல் அவர்களின் வளர்ப்பு முறைகளை கட்டுப்படுத்த பெற்றோர்கள் "அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது. அப்படியே செய்யும் சின்ன சின்ன மாற்றங்களும் தற்காலிகமாகவே இருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.