_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, September 13, 2010

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்....

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்.....

(இணையத்தில் சுட்டப்படம்)

இதற்கு முன் சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்
வலைப்பக்கத்தில் மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....
என்ற ஒரு இடுகை எழுதியிருந்தேன், சுட்டியை ஒரு முறை சுட்டுங்கள். நன்றி நண்பர்களே! உங்களின் எனர்ஜி உங்களின் கைகளில் இருக்கும்பொழுது எங்கே தேடுகின்றீகள்? அட ஆமாங்க நல்லா பாருங்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதை எடுத்து சுவைக்கதான் நாம் மறந்துவிடுகின்றோம்.

என்னோடு வேலை செய்யும் ஒரு சீன நண்பர் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. ஏன் என்று விசாரித்ததில் அவருக்கு தோண்டை புற்று நோய் வந்து சிகிச்சையில் இருக்கின்றார் என்றும் பிழைப்பது மிக கடினம் என்றும் சொன்னார்கள். ஆனால் சில மாதங்களுக்கு பின் அவர் வேலைக்கு வந்தார். அவரை பார்த்ததும் ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்ச்சி இருந்தது. அவரை பார்த்து "நான் (How are you sir?) நலமாக இருக்கின்றீர்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே" ( Till i am live) இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்" என்றார். அதை கேட்டதும் எனது மூச்சு காற்று சிறிது நின்றே வந்தது. என்ன வார்த்தை அது! ஆனால் அவர் அதை சிரித்துக்கொண்டே சொன்னார். அவரின் எதார்த்தம் இன்னும் அவரை வாழவிடுகின்றது. இன்னும் பல அவர் சொல்லுவார்..... " நான் தினமும் காலையில் எழுந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன்"..... அந்த மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. " என்று கூறுவார்..... ஏன் அப்படி என்று கேட்டால் " ஆகா நான் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்.... இன்னும் அப்படியே இருப்பேன் என்ற நம்பிக்கை வரும் அதனால்தான் நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்" என்று சொல்லுவார். நம்மில் எத்தனை பேர் அந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளோம்... அவர் இன்றும் அதே நம்பிக்கையில் நலமாக இருக்கின்றார். அவரிடம் இருக்கும் எனர்ஜி பூஸ்டை சுவைப்பதினால் அவரால் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகின்றது. (பின் குறிப்பு: உறக்கம் என்பது தற்காலிக மரணம் என்று சீனர்கள் நம்புவதுண்டு. உறக்கதிலிருந்து எழுந்ததும் கடவுளிடம் நன்றி சொல்வதும் அவர்களின் பழக்கம்).

நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......

கவணக்குறைவாக சாலையை கடக்கும்பொழுது எதிரே வரும் வண்டியை கவணிக்காமல் செல்கின்றோம். வண்டி ஓட்டுனர் விரைவாக வண்டியை நிறுத்துகின்றார். அப்போழுதான் நம்முடைய கவணக்குறைவை உணர்கின்றோம்.. உடனே வண்டி ஓட்டுனருக்கு கையை உயர்த்தி நம்முடைய நன்றியையும் சிரமபடுத்தியதற்கு வருத்ததையும் தெரியப்படுத்தலாம். ஏன் மன்னிப்பை கூட தெரிவிக்கலாம். இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

அலுவலகம் ஒன்றிக்கு மகிழுந்தில்(car) செல்கின்றோம். காவலாளி கதவை திறந்து விடுகின்றார். கதவை திறந்த காவலாளிக்கு கையை உயர்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரியப்படுத்துகின்றோம். கதவை திறந்துவிடுவது அவரின் வேலையாக இருக்கலாம், நீங்கள் அப்படி செய்வதினால் அவரால் அந்த வேலையை சோர்வின்றி செய்ய முடிகின்றது. மறுமுறை நீங்கள் வரும்பொழுது உங்களை இன்னும் மகிழ்வுடன் வரவேற்று கதவை திறந்துவிடுவார்...... காலதாமதமாக அவர் திறந்துவிட்டால் நீங்களும் மன அழுத்ததிற்கு ஆளாவீர்கள் அதனால் அவரும் மன அழுத்தம் கொள்வார்..... இது அனைவருக்குமே நற்பயனை அழிக்காது..... நீங்க செய்வது ஒன்றுதான் சிறிது கையை உயர்த்தி வணக்கமும் நன்றியும் சொல்வதுதான்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் கத்திரிக்கா வாங்குகின்றார்.... கத்திரிக்கா கொடுத்ததும் அதற்கு சாமமான காசை கொடுக்கின்றார். வாடிக்கையாளருக்கு ஒரு " நன்றிங்க" என்று சொல்வதினால்!............ வாடிக்கையாளர்க்கு கத்திரிக்காவின் விலையின் கடினம் அற்றுபோய் மகிழ்வைதான் கொடுக்கும். அதனால் மீண்டும் பல முறை உங்கள் கடைக்குதான் வருவார்.... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட நம்கைகளில்தான் இருக்கின்றது!

நன்றி, வணக்கம், சிரமத்திற்கு கொடுக்கும் வருத்தம், சிறிய மன்னிப்பு இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்டை தாரளமாக கொடுப்பதினால் நம்மால் நாமும், நம்மால் அவர்களும் உச்சாகமுடன் மகிழ்வை அடைய முடிகின்றது......

எல்லோருக்கும் மகிழ்வை கொடுக்கும் எனர்ஜி பூஸ்ட் சிறு துளியில் இருக்கும்பொழுது.... அதை பயன்படுத்தி பயனாகலாம்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்




Sunday, August 15, 2010

இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...

இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...

Photobucket

இப்படி இருந்த நான்!..... இப்போ எப்படினு சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை மனதில் பல கேள்விகள் இல்லாமல் இல்லை. இந்தியா 64 வருடங்களுக்கு முன் வெள்ளையர்களிடம் அடிமைபட்டு இருந்தது. "அதனால் என்ன? இன்றுதான் சுதந்திரமாக இருக்கின்றோமே!... " அந்த சுதந்திரத்தில் தான் எனக்குள் இருக்கும் கேள்விகள். எப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனுபவிக்கின்றோம்?

முறையாக அரசு சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் அரசு சார்ந்த சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... கையூட்டு கொடுக்காமல் வாங்க நினைக்கும் என்னால் குறித்த நேரத்தில் சரியான சான்றிதல் பெறமுடியாமல் தவிற்பதேன்? அட குடும்ப அட்டை பெறுவதில் எத்தனை சிக்கல்?..... எப்படிப்பட்ட உரிமை இந்த அரசு நமக்கு அழித்துள்ளது? முறையாக குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் எத்தனை? இதுதான் 64 ஆண்டுகால சாதனையா? இன்னும் நாம்முடைய பழைய அரசியல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வதால்தான் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெறுவதற்கும் சாதகமாக இருக்கு... சட்ட ஒழுங்கும் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கேள்வி.... இந்தநாள் வரை கையூட்டு கொடுக்காமல் மற்றும் உயர் அதிகாரி சிபாரிசு செய்யாமல் நான் அரசிடமிருந்து எனது சரியான சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் பெற்றுள்ளேன் என்று சொல்ல முடியுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையூட்டு கொடுத்தவர்களாகவே இருக்கின்றோம்.......... இவற்றுக்கெல்லாம் காரணம் நம்முடைய அவசரம் மட்டும் காரணமாக சொல்ல முடியாது. அரசு தன் கடமைகளை சரியாக கவணிக்காமல் போகின்றது. சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு சிறு மாறுதல்கள் செய்யாமல் இருப்பதனால் அதிகாரிகள் அவற்றை முறையின்றி பயன்படுத்துகின்றார்கள்.

இந்நாட்டின் மிக பெரிய சொத்து இடம் மனைகள். மனைகளை விற்க வாங்க எத்தனை சட்ட சிக்கல்கள். ஒரு இடத்தை பலருக்கு விற்பது. மற்றவர் இடத்தை வேறு ஒருவன் விற்பது. அப்படியே சரியாக விற்றாலும் அந்த இடத்திற்கான பட்டா முறைகேடாக இருப்பது. எல்லாமே இந்த அரசு அதிகாரிகளின் கையூட்டுதான் காரணமாக இருக்கு. இவற்றையெல்லாம் கடந்து நீதி மன்றம் சென்றால் அது இல்லை இது இல்லை என்று சொல்லி பாதிக்கபட்டவன் மீண்டும் பாதிக்கபடுகின்றான். இந்த நாட்டை ஆழ்பவர்கள் உண்மையில் தாதாக்களும் கட்டப்பஞ்சாத்துகாரர்களுமே..... அரசு ஒரு சும்மாதான்.... நீதி மன்றத்தில் கிடைக்கா பல நியாம் கட்டபஞ்சாயத்தில் கிடைப்பதாக மக்கள் நம்ப வேண்டிய சூழல்கள் இருக்கின்றதை மறுக்க முடிவதில்லை.... நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தாதாக்களிடம் கிடைக்கும் என்றுதான் தோற்றம் உள்ளது. பல குற்றவாளிகள் சுதந்திரமாக வேளிவந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் மகளிர்க்கெதிரான வன்முறை, பாலியல் கொடுமை, சிறார்களின் வன்கொடுமை என்று செய்திகளில் வருகின்றதே தவிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? 15 நாட்களில் ஒப்புதலின் பேரில் வெளிவந்து மீண்டும் அதே தவறுகளுக்கு ஆய்த்தமாகின்றார்கள். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியில் சொல்வதேயில்லை..... அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நியாத்திற்காக நிதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் இடம் இருக்காது. அந்த அளவிற்கு குற்றம் மலிந்துள்ள சமூகமாக இருக்கின்றது....

"மக்களையும் மக்கள் வாழ்க்கை முறையும் பாதுக்காக்க வேண்டியது காவல்த்துறையின் கடமை". தனக்கும் தன்குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி வேண்டுகோள் கொடுக்க எந்த ஒரு குடிமகனுக்கும் காவல் நிலையம் செல்ல துணிவுள்ளதா? அப்படி பட்ட சூழல் இருப்பதாக தெரிகின்றதா?... பாதுகாப்புக்காக மற்றொரு ரெளடியை நாட வேண்டியுள்ளது...... இவற்றையெல்லாம் காணும்பொழுது இந்த கொள்ளையர்களை விட அந்த வெள்ளையர்களே மேல் என்றல்லாவா தோன்றம் கொடுக்கின்றது.

எல்லோருக்கும் முறையான கல்வி கிடைப்பதில் அரசு கவணம் செலுத்தாமல், கல்வியை தனியாரிடம் கொடுத்து "காசுக்காக கல்வி" என்ற நிலையில் இன்று நாம்...... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.

விவசாயிகள் விளைவித்த தானியங்களை கொள்முதல் தனியாரிடம் கொடுத்துவிட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவது...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

நாளுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் மின்வெட்டு... பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் மின் வழங்குதல்..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

தெற்கு எல்லையில் அவ்வப்போழுது சுட்டுக்கொள்ளும் தமிழக மீனவர்களை கண்டு கொள்ளாமல் மெத்தன இருப்பது..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

சாதாரண குடிநீர் கொடுப்பதில் தன்நிறைவு பெற முடியாமல் வல்லரசு கனவில் நாம்.... காசு கொடுத்து தண்ணீர் பெறும் நிலையில்.... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

மனிதன் மலத்தை சக மனிதன் கையில் அள்ளிப்போடும் அவலமான நிலையில்தான் கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ள நாம்.... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.

விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாற்றி பணம் பார்க்கும் கொள்ளையரை கண்டும் காணாமல் இருக்கும் அரசு...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

இப்படி எண்ணற்ற சாதாரண கேள்விகளுக்கே பதில் கிடைக்காமல் போகின்றது. அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த 64 வது சுதந்திர தின உணர்வு தேவையா? என்ற கேள்வியும் எல்லோருக்கும் இருக்கலாம்..... என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட தேச உணர்வு இல்லாமல் இருப்பதே இந்த சுழல்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்வேன்.....

நாம்!...
நம் நாடு!....
நம் மக்கள்!....
என்ற உணர்வை நம் சந்ததினர்க்கு விட்டு செல்லாமல் இருந்தோமேயானால் மீண்டும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய நிலமையும் வரலாம். அரசை தட்டி கேட்பது நமது உரிமை அதே சமயம் நாட்டையும் நாட்டின் உணர்வையும் மதிக்க வேண்டியது நமது கடமை...... உலகிலேயே மிக பெரிய முழு சனநாயக நாடு இந்தியா..... முறையான சட்டங்கள் இருந்தும் ஒழுங்கற்ற சூழல்களினால் தடம் புரண்டு ஓடுகின்றது. சரியான தலைமை இல்லாமல் இருப்பதும் நமது பாக்கியமின்மை. நல்ல தலைவர்களுக்காக இன்னும் எத்தனை காலம் காக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை?....... அப்படிப்பட்ட நல்ல நாளை எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்..... வல்லரசு கனவை தூக்கி எரிந்துவிட்டு நல்லரசை காண விழைவோம். அந்த நல்லரசே வல்லரசாகும்......

நாமும் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம்?, என்ன செய்துக்கொண்டுள்ளோம்?, என்ன செய்ய போகின்றோம்? என்று எண்ணிப்பார்க்கும் தருணமாக கருதுவோம்!... குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....


64 வது சுதந்திரன தின வாழ்த்துகள் சொல்லிக்கொள்பவன்..
ஆ.ஞானசேகரன்.

Tuesday, July 27, 2010

எல்லாம் தெரிந்தாலும்!.......

எல்லாம் தெரிந்தாலும்!.......

(படம் இடுகைக்கு தொடர்பில்லை)

மின்னஞ்சலில் படித்த ஒரு கதை .... தன்னுடை நண்பரை தேடி ஒருவர் அவர் வீட்டிற்கு செல்கின்றார். அந்த நண்பரோ வெளியில் சென்றுவிட்டார், அவரின் பாட்டி மட்டும் இருந்தார். அவர் பாட்டியிடம் நண்பரே பற்றி கேட்கிறார். நண்பர் வெளியில் சென்று விட்டதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நாற்காலியில் அமர செய்துவிட்டு தேனீர் எடுத்து வர பாட்டி சென்று விடுகின்றார்.... அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன் உள்ள சிறு மேசையில் சில பாதாம் பருப்பு தட்டில் இருந்தது. அவர் அவற்றில் ஒன்றை வாயில் போட்டு சாப்பிட்டார். சுவையாய் இருந்தது எனவே மற்றொன்றை வாயில் போட்டார்.... இப்படியே எல்லாவற்றையும் முடித்துவிட்டார். பாட்டி வந்ததும் " பாட்டி இங்கிருந்த பாதாம் சுவையாய் இருந்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன்" என்றார். பாட்டியோ " பரவாயில்லை தம்பி நான் தான் சாக்லைட் சாப்பிடும்பொழுது பல் இல்லாததால் பாதாம் பருப்பை மட்டும் துப்பி வைத்திருந்தேன், நல்ல வேலை வீனாகாமல் நீ சாப்பிட்டுவிட்டாய்" என்றார். அவருக்கு என்னவோ போல ஆகிவிட்டது.

மேல் சொன்ன கதை ஒரு சின்ன காமடியோடு முடிந்தது பரவாயில்லை. இது போல தன்னுடைய நண்பனை தேடி அவன் வேலை செய்யும் இடத்திருக்கு சென்றான். நண்பர் வெளியில் சென்றுள்ளதால் காத்திருக்க வேண்டிருந்தது. வந்த கலைப்பு தாகமாக இருந்ததால் அருகில் இருந்த தண்ணிர் வைத்திருக்கும் கண்ணாடி குடுவையை எடுத்து மலமலவென்று குடித்துவிடுகின்றார். பிறகுதான் தெரிந்தது அவன் குடித்தது தண்ணீர் இல்லை "தின்னர்".... பின்னர் உயிருக்கு போராடி பிழைத்துவிட்டார்.....
நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம்.... இருந்தாலும் நமக்கு பழக்கமில்லாத இடத்தில் கேட்டு செய்வதுதான் பாதுகாப்பு என்பது மேற்கண்ட நிகழ்வு தெளிவுப்படுத்துகின்றது.

" எல்லாம் தெரிந்திருந்தாலும் கேட்டு செய்வதினால் எந்த கெடுதலுமில்லையே!"


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

Thursday, July 22, 2010

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

"பெண்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் ஒரு பெண்ணால் புரிந்து உணர்ந்துக்கொள்ள முடியும். ஒரு ஆணால் கேட்டு புரிந்து தெரிந்துக்கொள்ள முடியும்.........."


வணக்கம் நண்பர்களே!
நான் வீட்டுக்கு வரும் வழியில் நான்கு பெண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண் கர்ப்பிணி. கர்ப்பிணி பெண்ணிடம் ஒரு பெண் " ஏங்க நீங்க உட்காந்து பேசுங்க எனக்கு கால் வலிப்பதுபோல இருக்கு" என்று சொன்னார்கள்.... அந்த நிமிடங்களில் எனக்கு ஒரு வித மகிழ்ச்சி வந்துசென்றாலும் சில சில வாங்கியங்கள் நினைவில் வந்து சென்றதை தவிற்க முடியவில்லை......... அதுவும் பெண்களிடமிருந்து வந்த வார்த்தைகள்தான்.
" என்னமோ இவ மட்டும் புள்ளதச்சியா இருப்பதாக நிணைச்சி இந்த ஆட்டு ஆட்டுரா.."
"நாங்களெல்லாம் புள்ளபெத்துகல இவ என்ன? இங்க நோவுது அங்க நோவுது என்று நடிக்கின்றா..."

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

என்னோடு வேலை செய்யும் சீன பெண் ஒருத்தி என்னிடம் ஒரு நாள் " இன்று காலை மருத்துவரை பார்த்தேன் மருத்துவர் உறுதிப்படுத்தினார்..... இது மூன்றாவது மாதம்" என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல அவள் வேலையை பார்த்துக்கொண்டுருந்தாள்..... இது அவளுக்கு முதல் குழந்தை.

பக்கத்து வீட்டில் தங்கிருக்கும் தம்பதினர் காலையில் வெளியில் சென்றனர்..... என்னை பார்த்துவிட்டு இருவரும் சிரித்துக்கொண்டே சென்றார்கள்.... பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் அவர் வீட்டிற்கு பொழுது போக்காக நான் சென்றேன். அந்த நண்பர் சமையல் அறையில் போராடிக்கொண்டிருந்தார். "என்ன சார் சமையல் எல்லாம் கலக்கலா இருக்கு" என்றேன். " ஆமாம் சார் காலையில் மருத்துவரை பார்க்க சென்றோம் மருத்துவர் உறுதி படுத்தினார்" என்றார். "அடடேய் வாழ்த்துகள் தலைவரே" என்றேன்....... " நன்றி சார் வீட்டுல மயக்கமா இருக்காங்க அதுதான் நான் சமையலுல இறங்கிட்டேன்" என்றார்..... "நல்லது விட்டுலயும் வாழ்த்து சொன்னதாக சொல்லிருங்க"... என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

பேரூந்தில் அன்று கும்பல் அதிகமாகவே இருந்தது அந்த நேரம் பார்த்து ஒரு கர்ப்பிணி பெண் வண்டியில் ஏறுகின்றாள்.... " ஏம்பா புள்ளதாச்சிக்கு யாராவது ஆம்பளங்க ஏந்திருச்சி உட்கார இடம் கொடுங்கப்பா...." முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் சொல்லுகின்றாள்.......

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கிராமத்தில் சில பெண்கள் வேகமாக வயல் வெளிக்கு சென்றார்கள்.... சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஒரு சிறு கைகுழந்தையுடன் வந்தார்கள்.... அவர்களுக்கு பின் மெதுவாக அந்த தாயும் வந்துகொண்டிருந்தாள்..... கழை எடுக்க சென்ற பெண் பிரசவ வலி எடுத்து அந்த வயல் மேட்டுலேயே பிள்ளை ஈண்றாள்....

=> " நான்கு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தாச்சா?" ம்ம்ம்ம் எடுத்தாச்சி அக்கா நல்லாயிருக்குண்ணு சொன்னாங்க.........
=> "ஆறு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தியா இல்லையா? ம்ம்ம்ம்ம் குழந்தை நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.......
=> "ஒன்பது மாசம் ஆச்சா..... டாக்டர் என்ன சொன்னாங்க.? ம்ம்ம்ம்ம் டாக்டர் ஸ்கேன் எடுத்தாங்க குழந்த நல்ல வளர்ச்சியுடன் இருக்கு பயம் வேண்டாம் என்று சொன்னார்........
பிரசவ வலியில் அவள்.... டாக்டர் அவள் கணவனிடம் " குழந்தை திரும்பவில்லை உடன் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் உங்களின் ஒப்புதலுக்காகத்தான் காத்திருக்கின்றோம்....... (செலவு ரூ.20,000)"

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

ஒரு சில நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி...... அது மறக்க வேண்டிய செய்தி அதனால் அதன் சுட்டியை சேமிக்கவில்லை இங்கே சுட்டியை கொடுக்க மனமுமில்லை.... 14 வயது மாணவி கழிப்பறையில் தானாக குழந்தையை பெற்றெடுத்து குப்பை தோட்டியில் வீசி வந்த கொடுமை........
இது எப்படி சாத்தியம் என்று மருத்துவ பதிவர்கள்தான் விளக்கம் சொல்லமுடியும்.... இதுபோல கழிவறையில் குழந்தை பெற்று வீசி எரிந்த சம்பவம் எல்லா நாடுகளிலும் இருப்பதாக பல செய்திகளில் பார்க்க முடிகின்றது.....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை கண்டிப்பாக படிக்கவும்)

என் எண்ணங்களில் வந்து சென்ற விடயங்கள் யாரையும் புண்படுதுவதற்காக இல்லை....

நட்புடன்...
ஆ.ஞானசேகரன்.

Saturday, July 3, 2010

நான் யாரோ!.....

நான் யாரோ!.....


நான் என்பவன் யார்? என்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட கேள்விகள் நம் எல்லோருடைய மனங்களிலும் இருக்கும். ஏன் இதைப்பற்றி ஞானிகளும் யோகிகளும் சிந்தித்துக்கொண்டுள்ள கேள்வி. நான் யார்? என்று அறிந்தவன் உண்மையில் ஞானிதான்ங்க. ஆனால் இந்த விடையை முதன் முதலின் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தவன் டார்வின்.... அதுபோல் நம் பதிவர் CorText என்பவர் நான் யார்? என்ற கேள்வியோடு அதற்கான விடைகளையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.... அவற்றை முழுவதுமாக படிக்க சுட்டியை தட்டுங்கள்.....

நான் யார்?



உன்னை அறிந்தால்... நீ! உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்... (திரைப்பாடல்)


அன்புடன்

ஆ.ஞானசேகரன்

Saturday, June 26, 2010

வாழ்க்கையினா,.. ஏதாவது ஒண்ணு வேணுங்க!....

வாழ்க்கையினா,.. ஏதாவது ஒண்ணு வேணுங்க!....

"யாரும் யாருக்காகவும் வாழவேண்டியதில்லை" என்பது என்னவோ சரிதான் போல தெரிகின்றது. ஆனால்
நாம் அப்படியா வாழ்ந்துக்கொண்டுள்ளோம்? இல்லையே!!!! நம் வாழ்க்கையை நம்மை சார்ந்த சூழல்கள்தான் நிர்ணயம் செய்துக்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடிவதில்லை.

ஒரு தவளை கதை ஒன்னுங்க...... தவளைகள் கூட்டமாக ஒரு மலையின் அடிவாரத்தில் நின்று பேசிகொண்டன அதில் ஒரு தவளை " யார் இந்த மலையில் உச்சியை முதலில் தொடுவார்கள் என்று பார்க்கலாமா?" என்று கேட்டது. அதில் சில தவளைகள் என்னால் முடியாது என்று நின்றுவிட்டது. சில தவளைகள் முயற்சிக்கலாம் என்று தயாரானது. அதன்படி சிலதவளைகள் உச்சியை நோக்கி புறப்பட்டது. ஆனால் கீழேயுள்ள தவளைகள் மேலே போகின்ற தவளைகள் பார்த்து "வேண்டாம் கால் வழிக்கும் நின்றுவிடுங்கள்.... இது வீண் முயற்சி" என்றேல்லாம சொல்லி சிரித்தன. அதை கேட்ட சில தவளைகள் பாதி தூரம் சென்றதும் நின்றுவிட்டது. இன்னும் சில தவளைகள் செல்லும் வழியில் சோர்வு அதிகமாகி நின்றுவிட்டன. ஆனால் ஒரு தவளை மட்டும் துள்ளி துள்ளி மலையின் உச்சியை அடைந்துவிட்டது. ஆச்சரியமாக அந்த மலையின் உச்சியை அடைந்த தவளைக்கு காது கேட்காது. அதன் வெற்றியின் ரகசியமே அதற்கு காது கேட்காததுதான்.... மற்ற தவளைகள் சொல்லிய முயற்சியற்ற வார்த்தைகள் இதனை பாதிக்கவில்லை. அதற்காக நமக்கும் காதுகேட்காமல் இருக்கவேண்டும் என்பதிற்கில்லை. மற்றவர்கள் சொல்லும் வசைசொற்களை புறந்தள்ளி வாழ்ந்தாலே வேற்றியின் படிகள் நமக்குதான்.


இதே போல இன்னொன்று சொல்லுவார்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்பொழுது நம்மை யாரோ விரட்டி வருவதாக நினைத்துக்கொண்டு ஓடினால் வெற்றி பெறலாம் என்றும் சொல்வதுண்டு. வாழ்க்கை ஓட்டத்திலும் அப்படிதாங்க நாம் ஓடிதான் ஆகவேண்டும் ஏன் ஓடவேண்டும் யாருக்காக ஓட வேண்டும் என்ற எண்ணங்கள் மனதில் ஓடினால் வாழ்வதற்கு அர்த்தமே இருக்காது. ஓடிதான் ஆகவேண்டும் ஓடிய தூரங்கள் நமது வேற்றியாக மகிழவேண்டும். இதுதான் வாழ்க்கை! இதுதான் நம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சப்பானியர்கள் உணவு வகைகளின் ஒரு வித்தியாசம் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படிதான் கடலிருந்து மீன் பிடித்து அந்த மீனை சாப்பிடுபொழுது அவர்களுக்கு திருப்தி அழிக்கவில்லை. மீனை பிடித்து கரைக்கு எடுத்து வரும்பொழுது அது இறந்து விடுகின்றது. அப்படி இறந்த மீனை உண்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை எனவே படகுகளில் தண்ணீர் தொட்டிகள் மூலம் மீன்களை எடுத்து வந்து சாப்பிட்டார்கள். அதுவும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. மீன்களை தண்ணீர் தொட்டிகளில் அடைக்கப்பட்டதால் மீன்கள் சோர்வாக இருக்கின்றன அதனால் அவர்களுக்கு திருப்தி தரவில்லை. மீண்டும் அந்த மீன்களுக்கு ஒரு புத்துணர்வு கொடுக்க அந்த மீன் தொட்டிகளில் ஒரு சுரா மீனை விட்டார்கள். சுராமீனால் விரட்டப்பட்டு தப்பித்த மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததால் அந்த மீனை உண்பதில் சப்பானியர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள் என்ற கதையும் உண்டு. ஆமாங்க நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு சுரா தேவைதான் படுகின்றது. நம் வாழ்க்கையில் ஓட வேண்டும் என்பது ஒரு மாயை எதையோ அடைய வேண்டும் என்பதும் ஒரு மாயை. அப்படிபட்ட வாழ்க்கை மாயையில் சுராவாக இருப்பது வாழ்க்கை ஓடத்தின் ஏற்ற இறக்கங்கள். எதையோ ஒன்றை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம். ஆனால் அதில் ஒருவரை அழித்து ஒருவன் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எதனால்?........

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம் -பாரதிதாசன்

அழிந்து வரும் தமிழனுக்காக சின்னதாய் ஒரு முடிவு எடுப்பார்களா???... இந்த கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்............


நீண்ட இடைவெளியில் சின்னதாய் ஒரு இடுகை...
அன்புடன்...
ஆ.ஞானசேகரன்

Wednesday, June 16, 2010

சாமானியனை வஞ்சிக்காத சிங்கப்பூர், கடந்து வந்த பொருளியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் மீண்டது எப்படி?

சாமானியனை வஞ்சிக்காத சிங்கப்பூர், கடந்து வந்த பொருளியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் மீண்டது எப்படி?


வணக்கம் நண்பர்களே!
இந்த இடுகையை படிக்கும் முன் கீழ்கண்ட எனது முந்தய இடுகையை படித்திருந்தால் நன்றாக இருக்கும்.....

சுட்டியை தட்டுங்கள்

சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்.

சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?


மேற்கண்ட எனது சுட்டிகளை படித்திருப்பீர்கள்... மிக்க நன்றிங்க.
உண்மைதானுங்க சாமனியந்தான் உலகப் பொருளியியலை நிர்ணயம் செய்யக்கூடியவன். ஒரு நான்கு நாட்களுக்கு முன் சிங்கப்பூர் வானோலியில் கேட்ட செய்தி.... "கடந்து வந்த பொருளியியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் பாதிக்கப்படாமல் மீண்டு வந்துள்ளது. அதே சமயம் பொருளாதார வளர்ச்சியும் பெற்று இன்று ஒரு சிறப்பான பொருளியியல் நிலையும் பெற்றதற்கு காரணம் என்ன?" என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் " சிங்கப்பூர் இதற்கு முன் சந்தித்த பொருளியியல் மந்தநிலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்தான் இந்த பொருளியியல் மந்தநிலையை சாமாளிக்க முடிந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தின்படி, இந்த பொருளியியல் மந்தநிலையில் நாங்கள் சாமானியனுக்கு வேலையிழப்பு செய்யவில்லை மாறாக அரசு கசானாவிலிருந்து காசு எடுத்து சமன்படுத்தினோம். அது ஆரப்பத்தில் கடிணமாக இருந்தாலும் போக போக பொருளியியல் நிலைப்பு தன்மைப்பெற்றது. இதுதான் எங்களின் வெற்றிக்கு காரணம்" என்று கூறப்பட்டது. மேலும் சொல்லப்பட்டது " அப்படி வேலையிழப்பு செய்த நாடுகளில் இன்னும் பொருளியியல் மீட்சி பெறாமல் இருக்கின்றது. மேலும் விலைவாசியும் அத்தியவசிய பொருள்களின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றதாக என்று சொல்லப்பட்டது."


ஒரு அரசாங்கம் சாமானியனுக்கு மனபுழுக்கம் இல்லாத பணபுழக்கம் கொடுத்தால் நாடும் அதன் பொருளியியலும் கெட்டியான இடத்தை பிடிக்கும் என்பது மேலே சொன்ன பதில்களிலிருந்து தெரிகின்றது. பொருளியியல் பற்றிய சாதாரண விளக்கங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள கீழேயுள்ள எனது இடுகையை பார்க்கலாம். மேலும் உங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.

சொல்லதான் நினைக்கின்றேன்....

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....

தங்கமான தங்கம்.....

திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.



Saturday, May 29, 2010

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!.. விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.






அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.



இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

Monday, May 24, 2010

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு.....

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்கள். வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் ஒரு மாபெரும் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகதான் இருக்கும். சந்திப்பு மற்றும் BBQ பாபிக்கியூ உணவும் உண்டு மகிழ்ந்தனர். உணவின் முத்தாய்ப்பாக சிங்கை நாதனின் பாதாம் அல்வா சிறப்பான இடத்தை பிடித்தது.

விழாவின் சிறப்புகளை நமது பதிவர்கள் பகிர்ந்துக்கொள்வார்கள். மேலும் இதன் தொடர் நிகழ்வுகள் "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்" தில் வெளியாகும். அன்று நடைபெற்ற நிகழ்வுகளை புகைப்படமாக பதியப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று புகைப்படங்களை சுட்டியை சுட்டி காணுங்கள்..... தாங்களும் அந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்வதில் ஆணந்தமே.......

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...(புகைப்படங்கள்)

உங்களோடு பகிர்ந்துக்கொண்ட...
ஆ.ஞானசேகரன்







Monday, May 17, 2010

வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!

வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!


கிட்டதட்ட என்னை மறந்தே விட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். காலம் கைகொடுக்காத காரணங்களால் வலைப்பக்கம் வரமுடிவதில்லை. விரைவில் முழு உச்சாகத்துடன் வருவேன். அதுவரை சின்ன சின்ன இடுகைகளில் சந்திப்போம்.

நேற்று 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை5.00 மணியளவில் முனைவர் மு.இளங்கோவன் சிங்கப்பூர் வருகையும் அதன் பின் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பும் நடந்தது. அதில் சிறப்பான கலந்துரையாடலும் அதன் பின் நடைப்பெற்ற இலக்கிய உரையாடலில் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் அதில் சுவைக்கப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களை பற்றியும் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பாக உரையாற்றினார். சிங்கப்பூர் தமிழ் அறிஞர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டு கலந்துரையாடல்களுடன் சிறப்பான சந்திப்பாக இருந்தது. பல விடயங்கள் விவாதிக்கப்பட்டது. அதன் விவரங்கள் மற்ற பதிவர்கள் மற்றும் முனைவர் மு. இளங்கோவன் எழுதுவார்கள்.


சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். சுட்டியை சுட்டி காணலாம்.

முனைவர் மு. இளங்கோவன் மற்றும் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு

புகைப்படங்களை பற்றி பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு செல்லுங்கள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்