_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, November 15, 2009

படம் சொல்லும் கதைகள் எனது மற்றொரு பக்கம்

படம் சொல்லும் கதைகள் எனது மற்றொரு பக்கம்


" சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல... அதுபோல படங்கள் பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் சில செய்திகளையாவது சொல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி நான் பார்த்ததும் சுட்டப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆசையில் உருவான என் மற்றொரு பக்கம் கண்டதும் சுட்டதும்.

பிடித்திருந்தால் ஊக்கம் கொடுங்கள்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்...


Tuesday, November 10, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

மற்ற விலங்குகளை விட மனிதன் சிறப்புமிக்க உயிர். அவனிடன் நல்லது எது? கெட்டது எது? என பகுத்தாய்ந்து செயல்படும் திறன் அவனுக்கு மட்டுமே உள்ளது. ஒருவரின் அறிவுக்கும் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நம்பிக்கை என்பது அறிவு சார்ந்த விடயமா? சென்ற பகுதியில் பின்னூட்டமாக ஷண்முகப்ரியன் ஐயா பின் வருமாறு கூறினார். "
ஷண்முகப்ரியன் said... நம்பிக்கை என்பதே ஒன்றைப் பற்றி முழுக்க அறியாமல் இருக்கும் போது நாம் கொள்ளும் உணர்வு.அறிவுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஞானம். இதனை அறியவே முடியாது என்ற அறிவின் உச்சத்தில் பிறப்பது 'trust'. அறியாமையில் பிறப்பது ‘belief'."

ஷண்முகப்ரியன் ஐயா சொல்வதிலிருந்து ஒன்றைப்பற்றி முழுமையாக அறியாமல் கொள்ளும் உணர்வுக்கு நம்பிக்கை என்றால் அறியாதவற்றை அறிந்துக்கொண்டால் அந்த நம்பிகைகளிலிருந்து விடுபட முடியம் என்பது சரிதானே. அப்படி எல்லாவற்றையும் நம்மால் அறிந்துக்கொள்ள முடிகின்றதா? நம் அறிவுக்கு எட்டிய வரை அறிந்துக்கொள்கின்றோம். அதற்கு அப்பால் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியும் அதற்கான தேடல்களும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றது. இந்த தேடல்கள் இருக்கும் வரை நாம் நம் உணர்வில் கொண்டிருக்கும் நம்பிக்கைகளும் தொடரும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. தேடல்களும் நின்றுவிட போவதில்லை அதனோடு இருக்கும் நம்பிக்கையும் தொடருமா? என்ற கேள்வியையும் நம்மோடு வைக்கின்றது.

சாதாரணமாக கைகுழந்தைகள் இரவு நேரங்களில் சின்ன சின்ன உடல் உபாதைகளினால் அழுகும். பல வேலைகளின் அந்த குழந்தை ஏன் அழுகின்றது என்பதை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. இதுபோன்ற சமயங்களில் பெரியவர்கள் குழந்தைக்கு கண்திஸ்டி பட்டுள்ளது என்று சொல்லி திஸ்டியை போக்க சுற்றிப்போடுதல் என்ற ஒன்றை செய்வார்கள். இதுபோன்ற சமயங்களில் பகுத்தறிவான தந்தைகள் தடுப்பதில்லை மாறாக எனக்கு நம்பிக்கையில்லை வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் நம்பிக்கைக்காக செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள். எப்படியாவது குழந்தை அழுவது நின்றால் போதும் என்ற ஆசைகளால் ஏற்படும் நம்பிக்கைதான் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இதற்கு சமமான மற்றொரு என் இடுகை இதையும் படியுங்கள் கானல்நீர் தேடும் தாகம்... மனிதன் வாழும்
சமூகம் பாசம் பந்தம் என்ற பிணைப்பில் உள்ளது. ஒரு பகுத்தறிவாதி சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தவும் அதனால் ஏற்படும் பாதகங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றான். ஆனால் தன்னை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதற்கு உடன் படாதவனாகின்றான் என்பதை அந்த இடுகை சொல்லும்.

நம்பிக்கையும் மூடநம்பிக்கைகளும் மனிதனின் சமூக கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியவை. அப்படிப்பட்ட நம்பிக்கைகள் ஒரு சிலரை மட்டும் வஞ்சிக்கும் விதமாகவும், ஒரு சிலரை மட்டும் பாதிப்புக்கு ஆழ்படுத்துவதும் தான் மிக கொடுமையாக சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட மூடப்பழக்கங்களைதான் பெரியார் போன்ற சமூக சிற்பிகள் எதிர்த்து வந்தனர். சமுக பழக்கங்கள் சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது. அவைகளை அவ்வப்பொழுது உருவாகும் சமுக சிற்பிகளால் கழையப்படுகின்றது. மூடப்பழக்கங்களில் சில இரவில் வேப்பமரத்தில் பேய் இருக்கும் என்றும். இரவில் வீட்டை கூட்டி வெளியில் குப்பையை போட்டால் ஸ்ரீதேவி வெளியில் சென்றுவிடுவாள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இவற்றில் உண்மைநிலை வேறு.


பயம் என்பது மனித உணர்வுகளில் ஒன்றுதான். இதுதான் மூடப்பழக்கங்களின் ஆணிவேராக இருக்கின்றது. சிறுவயதில் ஏற்படும் சின்ன சின்ன பயம்தான் வளர்ந்த பின் மனிதனை மூடப்பழக்கங்களை எதிர்க்கும் திரணியற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இந்த பயம் இருக்கின்றவரை மனிதன் மனம் ஏதோ ஒன்றை நம்ப தயாராய்கின்றது. சிறுவயதில் பெற்றோர்கள், வளரும் சுற்றுசூழல், பின் அவனின் சமூகம் இந்த பயத்தை கற்றுக்கொடுக்கின்றது. இப்படி ஏற்படும் பயம் மூளையில் பதிய வைக்கப்படுகின்றது. அப்படி பதிந்துள்ள நகல்கள் எதோ ஒன்றுக்கு பொருந்தி பயத்தையும், அதனை சார்ந்த மூடநம்பிக்கைக்கு ஏற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இப்படி ஏற்படும் நம்பிக்கைகளுக்கு அவனிடம் கொண்டுள்ள பகுத்தறிவும் பயனற்றவையாக இருக்கின்றது.

குழந்தைகளின் சூழல் அவர்களின் வளர்ப்பு முறைகளை கட்டுப்படுத்த பெற்றோர்கள் "அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது. அப்படியே செய்யும் சின்ன சின்ன மாற்றங்களும் தற்காலிகமாகவே இருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.

Saturday, November 7, 2009

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு.....

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு....

எப்படியோ பதிவர்கள் சோர்வை போக்கும் விதமாக அவ்வப்பொழுது ஏதாவது ஒரு தொடர் விளையாட்டு வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பதிவர்களும் ஆர்வம் குறையாமல் கலந்துக்கொள்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதில்
எனக்கு இன்னும் கொஞ்சம் சிந்தனைகள் தூண்டும்படியாக இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணங்கள் உண்டு. அதே போல் ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் தலைப்புகள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் பலரின் பார்வையில் ஒரு தலைப்பின் கீழ் பார்க்கும்பொழுது அதுவும் சிறப்பாகதான் இருக்கு. முதலில் இப்படிப்பட்ட தொடரை தவிற்த்து விடலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் பலரின் கருத்துகளுடன் நம் கருத்து எப்படியிருக்கு என்ற ஆசைகளுடன் நானும் கலந்துக்கொள்கின்றேன்.

நண்பர் உழவன் (Uzhavan) உழவனின் உளறல்கள், வலையுலக தம்பி அன்பு மதி OPEN HEART யும் "தீபாவளி சிறப்பு பதிவு 2009" அழைப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். எனக்கும் தீபாவளிக்கும் உள்ள தூரம் அதிகம் என்றே நினைக்கின்றேன். பொதுவாக திருவிழாக்களில் ஈடுப்பாடு இல்லாதவனாக இருக்கின்றேன் (தற்பொழுது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் இருப்பதுண்டு). எனவே இங்கு கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பொய்யாகதான் பதில் சொல்லவேண்டி வரும். இருந்தாலும் சிலது உங்களுக்காக நான்ன்ன்ன்ன்ன்ன்......



1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் இல்லை. நான் நானாக வாழ்ந்துக்கொண்டுள்ள சாதாரணமானவன். திருச்சியிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூரில் வேலைசெய்துக்கொண்டுள்ளேன். பார்த்ததில் உணர்ந்ததில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இந்த வலைப்பூ.....

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
நினைவில் இருக்கும் அளவிற்கு எந்த ஈடுப்பாடும் இல்லை.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சிங்கப்பூரில்,

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
சிங்கப்பூர் அரசு தீபாவளி கொண்டாடும் விதமாக அரசு விடுமுறை அளித்துள்ளது. பட்டாசுகள் வெடிக்க அரசு தடையுள்ளது ஆனால் மத்தாப்பு மட்டும் கொழுத்தி மகிழலாம். இங்குள்ள ஒரு பகுதி குட்டி இந்தியா (Little India) தீபாவளி சிறப்புக்காக வண்ணத் தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் பார்க்க சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இந்த அளவிற்கு இந்திய பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது ஒரு மகிழ்ச்சியான விடயம்தான்.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
மன்னிக்கவும், அந்த அளவிற்கு ஈடுப்பாடு இல்லை.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
நண்பர் வீட்டில் கிடைத்த விருந்தில் பலகாரம் சாப்பிட்டேன்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
ஈடுப்பாடு இல்லாததால் தவிற்த்துவிட்டேன்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் இரவுப்பணி முடிந்ததும் மறுநாள் தூக்கம். முடிந்ததும் நண்பர் அழைப்பில் சிறிது உணவு......

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
வாய்ப்பு கிடைத்தால் செய்வதுண்டு.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
இப்படியே சென்றால் அடுத்த வருடம் தீபாவளி வந்துவிடும் எனவே என்னோடு முடித்துவிட்டேன்.

அடுத்த விளையாட்டுக்கு அழைத்திருப்பவர்கள்
தலைமை ஆசிரியை அருணா அன்புடன் அருணா அவர்களும் நம்ம டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி அவர்களும் பிடித்ததும் பிடிக்காததும் என்ற தலைப்பின் கீழ் அழைத்துள்ளனர். பிடிக்காதவர்களை சொல்லும் அளவிற்கு என்னிடம் துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் புரிதலும் இல்லை என்று சொல்லிக்கொள்ள துணிச்சல் இருக்கு. இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் என்னை யோச்சிக்க வைக்கவில்லை. உண்மையில் எதைப்பற்றியும் சிந்தனை என்னிடம் முழுமையில்லை. நான் பார்த்த, உணர்ந்த விடயங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளத்தான் இந்த வலைப்பூ தவிற என்னுடை திறமையை வெளிப்படுத்த இல்லை. இசை, இலக்கியம்,கலை போன்றதுறைகளில் வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு என்னிடம் ஆர்வமும் ஞானமும் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே பிடித்தது பிடிக்காதது என்று சொல்லும் அளவிற்கு என்னால் செல்ல முடிவில்லை. இருந்தாலும் உங்களின் அன்பின் காரணமாக எல்லோரையும் போல பிடித்தவைகளை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணங்களுடன் ஆ.ஞானசேகரன்.


1.அரசியல் தலைவர் : வம்பில் மாட்டிக்கொள்ள முடியாது...
கலைஞரிடம் பிடித்தது: தினம் ஒரு அறிக்கையிட்டு தொண்டர்களை அன்பில் கட்டிவைப்பது.
பிடிக்காதது: தினம் ஒரு அறிக்கையிட்டு மக்களை ஏமாற்றுவது.

செல்லி ஜெயலலிதாவிடம் பிடித்தது: அரசியலில் இருக்கும் மன உறுதி
பிடிக்காதது: மக்களுக்கு நல்லது செய்யும் வாய்ப்புகள் இருந்தும் செய்யாத உறுதி


2.எழுத்தாளர்:
எழுத்துக்களை பிடிக்கும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு படிக்கவில்லை.

3.கவிஞர்:
மக்களைப்பற்றி சிந்தித்ததால் பட்டுக்கொட்டை கல்யாணசுந்தரம்.

4.இயக்குனர்:
பாக்கியராஜின் திரைக்கதை, இயக்கம் பற்றிய பாதிப்பு எனக்குண்டு.. அதன் வரிசையில் வரும் இயக்கங்கள் பிடிக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பதுண்டு. கமல் இயக்கிய விருமாண்டி பட இயக்கம் பாக்கியராஜ் பாதிப்பு இருப்பதாக தெரியும்.

5.நடிகர்:
பிடித்த படத்தில் நடித்த நடிகரை பிடிக்கும். பிடித்த படம் தனியாக சொல்லமுடியவில்லை.

6.நடிகை:
அழகான..........

7.இசையமைப்பாளர்:
பிடித்த இசை தாலாட்டு....... தாலாட்டு இசைப்பவர்

இந்த தொடர் அனேகமாக எல்லோரையும் அடைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு சிலரை அழைக்கலாம் என்ற எண்ணங்கள்

1.வானம் வெளித்த பின்னும் "ஹேமா".

2.உழவனின் உள்றல்கள் "உழவன்"

3.
Globetrotter "மலர்"

4.என் கனவில் தென்பட்டது "நசரேயன்"

5.பின்னோக்கி "பின்னோக்கி"


அன்புடன்
ஆ.ஞானசேகரன்
.

Thursday, November 5, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 7

ஏன்? எதற்கு? எப்படி?..... 7

நிறத்தினாலே உலகம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதை பற்றி எல்லோருக்கும் தெரியும். கருப்பர்கள் வெள்ளையர்கள் என்ற பாகுபாடு நிலை இன்றுவரை நின்றபாடில்லை. எண்ணற்ற போராட்டங்கள் இந்த நிறத்தினால் வந்துள்ளது, வந்துக்கொண்டே இருக்கின்றது என்றே சொல்லலாம். ம்ம்ம்ம்... அது சரி நிறம் என்றால் என்ன? அந்த நிறம் அந்த நிறமாக இருக்க காரணம் என்ன?


முதலில் ஒரு பொருள் இருக்கின்றது அது எப்படி நமக்கு தெரிகின்றது? கண்ணிருந்தால் தெரிகின்றது. கண் இருந்தால் மட்டும் போதுமா? அப்படியென்றால் இருட்டில் அந்த பொருள் தெரியவில்லையே ஏன்? ஆக ஒரு பொருள் நம் கண்ணுக்கு தெரியவேண்டும் என்றால் அங்கே ஒளி வேண்டும், அதாவது வெளிச்சம் வேண்டும். உலகில் ஒளியின் முதன்மையான ஆதாரம் சூரியன். மேஜையின் மீது பேனா இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். இப்பொழுது ஒளியானது அந்த பேனா மீது பட்டு எதிரொளிக்கப்படுகின்றது. அப்படி எதிரொளிக்கும் ஒளி நம்முடைய கண்ணை அடையும் பொழுது அந்த பேனா நம் கண்ணுக்கு தெரிகின்றது. அதை மூளை பேனாவாக உணர்த்துகின்றது. இவற்றை பற்றிய மற்றொரு என் இடுகை விளக்கமான விளக்கு...

பேனாவின் மீது படும் ஒளி அதன் விலகல் மற்றும் உட்கவரும் தன்மையை பொருத்து அதன் நிறம் மற்றும் உருவம் தெரிகின்றது. சூரிய ஒளி ஏழு நிறங்களின் கூட்டு ஆனால் நமக்கு வெள்ளை நிறமாக தெரிகின்றது. முதன்மையான நிறம் என்றால் அது சிகப்பு, பச்சை, நீலம். மற்ற நிறங்கள் இந்த மூன்றின் கூட்டு சேர்க்கைகளால் ஆனவை. மேலும் முக்கிய நிறங்கள் ஏழு ஆகும் அவை 1.சிகப்பு 2.ஆரஞ்சு 3.மஞ்சள் 4.பச்சை 5.நீலம் 6.இண்டிகா(இளநீலம்) 7. ஊதா என்பன.

இந்த எழு நிறங்களின் கூட்டு வெள்ளையாக இருக்கும். இவற்றை பின் வரும் படத்தில் உள்ளது போல ஒரு வட்ட வடிவ அட்டையில் ஏழு நிறங்களையும் சமபாகங்களாக வரைந்துக்கொண்டு மையத்தில் துளையிட்டு பென்சிலால் வேகமாக சுற்று, இப்பொழுது வெள்ளை நிறமாக தெரியும். ஆக நிறங்களின் கூட்டு என்பது வெள்ளையாக இருக்கும். கருப்பு என்பது நிறமே இல்லை என்றே சொல்லலாம்.
(படம்)

இப்பொழுது மேஜையில் மீது உள்ள பேனா சிகப்பாக தெரிகின்றது என்று வைத்துக்கொண்டால் அந்த பேனா சிகப்பாக தெரிவதற்கு காரணம் என்ன? வெள்ளை நிற ஒளி பேனாவின் மீது பட்டு எதிரோளிக்கும் பொழுது எல்லா நிறங்களையும் அந்த பேனா உட்கவர்ந்து கொண்டு சிகப்பு ஒளியை மட்டும் வெளியிடுகின்றது. அப்படி வெளியிடும் ஒளி நம் கண்ணை அடையும் பொழுது அது சிகப்பாக தெரிகின்றது. எல்லா ஒளியையும் வெளியிட்டால் அது வெள்ளையாகவும், எல்லா ஒளியையும் உட்கவர்ந்து கொண்டால் அது கருப்பாகவும் தெரியும். ஒருவர் வெள்ளையாக இருந்தால் உண்மையில் அவர் எந்த நிறத்தையும் உட்கவரவில்லை என்றுதான் அர்த்தம். எல்லா நிறங்களையும் தனக்குள் வைத்துள்ளவர்கள்தான் கருப்பாக இருக்கின்றனர். உடல் கருப்பாகவும் மனம் வெள்ளையாகவும் உள்ளவர்களே சிறப்பானவர்கள் என சொல்லலாமா!

ஆக நிறம் என்பது ஒரு பொருளினால் வெளியிடப்படுகின்ற, தெளிக்கப்படுகின்ற, கடத்தப்படுகின்ற ஒளியின் காட்சி பதிவு என கொள்ளலாம். அதே போல் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அலை நீளம் மற்றும் அதிர்வெண்கள் உண்டு அதை பொருத்துதான் அந்த நிறம் கடக்கும் தூரம் அமையும் அதைப்பற்றி பின்னொரு நாளில் பார்க்கலாம். மற்றொரு சிந்தனைக்கான கேள்வி அந்த நிறம் மற்றும் பொருளை மூளை எப்படி நிச்சம் செய்கின்றது?

மூளை அந்த பேனாவின் நிறம் சிகப்பு என நிச்சயம் செய்துவிட்டது. அதனால்தான் அந்த பேனாவின் நிறம் சிகப்பு என்று நாம் சொல்லுகின்றோம். அப்படி அந்த பேனாவின் நிறம் ஒருவருக்கு சரியாக தெரியாவிட்டாலும் அல்லது எல்லாமே ஒரே நிறமாக தெரிந்தாலும் அவற்றுக்கு நிறக்குருடு என்று சொல்லுகின்றோம். நிறக்குருடு மறபணு அடிப்படையினால் ஏற்பட்டாலும்
சில சூழல்களில் மூளை,நரம்பு அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதியல் பொருள்களினாலும் ஏற்படுகின்றது. இரவு பணி அதிகம் பார்ப்பவர்களுக்கும் இந்நோய் வர வாய்ப்புள்ளதாகவும் சொல்லுகின்றார்கள். நிறக்குருடு குறையுள்ளவர்கள் சிலரால் நன்மைகளும் இருக்கின்றது. ஒரே நிறத்தை பார்ப்பவர்களாக உள்ளதால் குழப்பம் இல்லாமல் குறிபார்த்து சுட முடியும் அதே போல் இருட்டில் இருப்பவர்களை எளிதில் உணரவும் பார்க்கவும் முடியும். {கண்டிப்பாக நிறகுருடு உள்ளவர்கள் வாகனம் ஓட்ட கூடாது}.

மஞ்சள் நிறத்தின் அலை நீளம் மற்ற நிறங்களின் அலைநீளதிற்கு இடையில் உள்ளதால் மஞ்சள் நிறம் சுழபமாக கண்ணுக்கு தெரியும். அதனால் முக்கிய அறிவிப்பு பலகைகள் மஞ்சள் நிறத்தில் வைப்பார்கள். சோர்வாக இருப்பவர்களுக்கு அதனால்தான் பார்க்கும் பொழுது பார்வை மஞ்சளாக தெரியும் என்பார்கள்.

ஒரு வயதான தாத்தா ஒருவர் டாக்டரிடம் சென்று "டாக்டர் எனக்கு எதை பார்த்தாலும் மஞ்சளாகவே தெரிகின்றது ஒரே கலைப்பாக உள்ளது என்றார்" அதற்கு டாக்டர் "நல்லா சாப்பிட்டாயா " என்று கேட்டார். "சாப்பாடுதான் சரியாக சாப்பிட முடிவதில்லை" என்று தாத்தா சொன்னார். "யூரின் நன்றாக போகின்றதா? " என்று டாக்டர் கேட்டதும் தாத்தா " ம்ம்ம்ம் நன்றாக வெள்ளையாகதான் போகின்றது" என்றார். "பார்கின்றதெல்லாம் மஞ்சளா தெரியுதுனு சொன்னாயே யூரின் மட்டும் எப்படி வெள்ளையா தெரிந்தது" என்று டாக்டர் கேட்டதும் தாத்தா குழம்பியே போய்ட்டார்....(சும்மா ஒரு காமடிதான்)


மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.



Monday, November 2, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

நிலாவில் அவ்வை பாட்டி வடை சுடு்ம் கதை கேட்டு வளர்ந்த நமக்கு, இன்று
"இந்தியா" சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பி நிலவில் நீர் உள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும். அப்படி இருந்தால் உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்ற கண்டுபிடிப்பும் நம்மை பிரமிக்க செய்கின்றது. மேலும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் மேல் உண்டாகிய மோதல் மூலம் நீர் நிலைகள் அதிகம் உள்ளதாக உறுதிப்படுத்தியும் உள்ளது.
அறிவியலில் சாதனைகள் செய்கின்ற அதே மானிட சமுகத்தில்தான் பகுத்தறிவுக்கு முரண்பாடான நம்பிக்கைகளும் நிரம்பியுள்ளது. ஒருவரின் நம்பிக்கை அவரின் முழு தனிமனித சுதந்திரத்திற்கு தடையில்லை என்பதும் உண்மை. அதே சமயம் அந்த நம்பிக்கை மற்ற உயிர்களிடத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்பொழுது வன்மையாக கண்டிக்கத்தக்கதாக இருக்கின்றது. மூடப்பழக்கங்களிளேயே என்னை பொறுத்தவரை மிக மோசமானது பலியிடுதல். சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என சாகடித்தல். தலச்சன் பிள்ளையை குலதெய்வத்திற்கு பலியிட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கைகளும் நம்மை நடுங்க வைக்காமல் இருக்க முடியாது. பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றியும் இன்னும் நம்மிடையே துடைத்தெரிய வேண்டிய மூடப்பழக்கங்கள் கோடி எனலாம்.

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இருக்கும் இடைவெளி சிறிதுதான். நன்றாக படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. படிக்கின்றபொழுது மிட்டாய் சாப்பிட்டால் நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறலாம் என்பது அறிவுக்கு முரண் பாடான நம்பிக்கை. இதில் மிட்டாய் சாப்பிடுதல் என்பது ஒரு செயல் அதை செய்தால் நன்றாக படிக்கலாம் என்பது ஒரு தூண்டுதல்தானே தவிர அதுதான் உண்மை என்பது இல்லை. அதுபோலதான் சாமி கும்பிடுதலும். சாமி கும்பிட்டால் நன்றாக படிக்கலாம் என்பதும் ஒரு தூண்டுதல்தான் அதுவே காரணமாக இருக்காது. ஒரு நம்பிக்கையானது அது மூடநம்பிக்கையாக இருந்தலும் சரி அது பிறரை பாதிக்காத வரை அந்த நம்பிக்கையை சரி என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி இன்று எல்லோரிடமும் உள்ளது. அப்படிபட்ட நம்பிக்கைகள் இன்று உலகெங்கிலும் பரவலாக உள்ளது.

தனிமனித நம்பிக்கையாக இருந்தாலும் அந்த மூடநம்பிக்கையால் அறிவு மழுங்கடிக்கப்பட்டு நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதை நாம் கண்முன் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் மனிதனிடையே
துடைத்தெரிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் பலரின் வாதம்.

பகுத்தறிவு என்றால் என்ன? மூடப்பழக்கங்கள் தோன்றுவது எதனால்? எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை "புரோகிதர் வேதம் சொல்லும்பொழுது பூனையை கட்டிப்போடுதல்". ஒரு புரோகிதர் தன் சீடர்களுடன் வேதம் சொல்லிக்கொண்டிருந்தார், அப்பொழுது அங்கு அவர் வளர்த்த பூனை அங்குமிங்கும் போய்கொண்டு தொந்தரவாக இருந்தது. உடனே புரோகிதர் சீடர்களிடம் அந்த பூனையை கட்டிப்போட சொன்னார். மறுநாள் சீடர்கள் புரோகிதர் வேதம் சொல்லும் முன்பாகவே பூனையை கட்டிப்போட்டார்கள். இப்படியே நாட்கள் ஓடியது புரோகிதர் இறந்துவிட்டார். அந்த இடத்திற்கு ஒரு புதிய புரோகிதர் வந்தார் சீடர்களிடம் "முன்பு இருந்தவர் எப்படி வேதம் சொல்லுவார்" என்று சீடர்களிடம் கேட்டதும் "வேதம் சொல்லும் முன் பூனையை கட்டிப்போட வேண்டும்" என்று சொன்னதும் அதுவே நடைமுறையாக்கப்பட்டது.

இரண்டு அணிகள் விளையாட தயாராகின்றது முதலில் கள‌த்தில் இறங்கும் அணி எது? நாணயத்தை சுண்டி பூவா? தலையா? பார்க்கப்படுகின்றது. கண்டிப்பாக பூவோ தலையோ விழும் என்பதுதான் உண்மை. இதில் ஆட்டத்தை கட்டுப்படுத்துவது அந்த நாணயமாக இருக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதில்தான் பகுத்தறிவாக இருக்க முடியும்.

பயமும் எல்லையில்லா ஆசைகள்தான் மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்து விடுகின்றது. நினைத்ததை அடைய வேண்டும் என்ற எண்ணம். அதுவும் நமக்கே விரைவாக கிடைக்கப்பட வேண்டும் என்ற ஆசைகள்தான் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைக்கு மனம் சென்றுவிடுகின்றது. அதே போல் விஞ்ஞான வளர்ச்சிகளும் நின்றுவிடவில்லை. மனிதன் கண்டுபிடிப்புக்கு அப்பாற்பட்டதை அறிய ஆசைப்படுகின்றான் அதை அறியாதவரை அவற்றை ஒரு மாய சக்தியாக நினைத்துகொள்கின்றான்.

ஆதிகாலம் கொண்டே மனிதனின் பயமும், ஆசைகளுக்கும் காரணமான மூடப்பழக்கங்கள் இன்றும் நின்றுவிடவில்லை, கொஞ்சம் குறைக்கபட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய அழிகப்பட்டதாக கொள்ளமுடியாது. மனிதனின் தனித்தனி குழுக்கள் தனித்தனி சமுக அமைப்பாக இருக்கின்றது. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு கலாச்சரங்களும் உள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழங்கங்கள் இந்த கலாச்சார நிகழ்வுக்குள் பதுங்கி இருப்பதால் அவைகளை பிரித்தெடுப்பது மிக மிக கடினமான ஒன்று.

பெரியார் வாழ்வில் கண்ட ஒரு நிகழ்வு, பெரியார் மலேசியா நாட்டிற்கு வருகை புரிகின்றார். ஒரு பெரிய மகான் வந்துள்ளார் என்று மக்கள் கூடுகின்றார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி "சாமி எனக்கு பிள்ளை வரம் கொடுங்கள்" என்று கேட்கின்றார். அதற்கு பெரியார் " பிள்ளையே இல்லாத என்னிடம் பிள்ளை வரம் கேட்கின்றாய் இந்தியாலிருந்து வரும் பொழுது எல்லா மூடப்பழக்கத்தையும் விட்டுவிட்டு வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன் நீங்கள் மொத்தமாக மூட்டை கட்டி எடுத்து வந்துள்ளீர்கள்" என்று நகைச்சுவையாக கூறுவார். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இப்படிப்பட்ட பழக்கங்கள் பொதிந்து உள்ளதை காணமுடிகின்றது.

பெரும்பான்மையான மூடப்பழக்கங்கள் மதங்களிலும் அதில் அறிவுறுத்தும் அறிவுரைகளால் ஆரப்பமானது என்றாலும் பல நம்பிக்கைகள் ஆசைகளாலும் பயத்தாலும் ஆனது என்பதை உணரமுடியும். மனிதனின் மனம் மென்மையானது அவனின் நம்பிக்கையும் அவனின் மனதை பொருத்தே அமைகின்றது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக ஏற்றுகொள்ள மனம் தடுமாறும்பொழுதுதான். மனம் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாக்கபடுகின்றது. இது மனம் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் தெளிவான ஆய்வு தேவைப்படுகின்றது. மூடப்பழக்கங்களை தவிர்க்க சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் இருக்கும் தொடர்ச்சியான பழக்கங்கள் கூட மூடநம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றது. சீருடை அணிதல், தலைவரிடன் குழந்தைக்கு பெயர் வைத்தல், சீர்திருத்த மணம் செய்தல் போன்றவைகளை சொல்லலாம். ஆரம்பத்தில் அறிவுரைக்காக எனக்கொண்டாலும் போக போக அதுவும் ஒரு சடங்காக மாற்றியமைக்கப்படுகின்றது. இறந்தவர்களை நினைவுகூறுதல் எந்த வகை பகுத்தறிவை சாரும். ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது அவற்றை உடைத்து எறிந்துவிடுகின்றோம். அந்த இயந்திரத்தை நினைவிலா வைத்துக்கொண்டுள்ளோம்?... பகுத்தறிவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்கப்படும்பொழுது அந்த பழக்கங்களும் பின்னாளில் மூடப்பழக்கமாகத்தான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள்.

தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பின்னாளில் அவற்றின் மீது நம்பிக்கை பொய்யானது என்று சொல்லி வெளிவருவதுமுண்டு அதேபோல் தெய்வ நம்பிக்கையில்லாதவர்கள் பின்னாளில் ஆத்திகராவதுமுண்டு. எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நினைத்தது நிறைவேறாத காரணம்தான். அப்படி நாம் நினைத்ததை நிறைவேற வேண்டும் என்றால் ஏதோ ஒன்றில் நம்ம்பிக்கையை வைக்கின்றார்கள். அந்த நம்பிக்கைதான் தொடர்ந்து வரும் மூடநம்பிக்கையாக இருக்கின்றது.

ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு காரணத்தால் கட்டியாளப்படுகின்றது. அந்த கட்டியாளப்படும் காரணிகள்தான் நாளாடைவில் நம்பிக்கையாகவும் பின்னர் மூடநம்பிக்கையாகவும் வந்துள்ளது. மனம் என்பது வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என்ற வகைப்படுத்தி சொல்வதுண்டு. வெளிமனம் என்னதான் பகுத்தறிவுகளை பேசினாலும் உள்மனமும், ஆழ்மனமும் நம்மை நக்கல் செய்துக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சின்ன சின்ன விடயங்களை பற்றி பின் வரும் இடுகைகளில் பார்க்கலாம்....

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Thursday, October 29, 2009

என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரம்....

என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரம்....

வலைநண்பர்களே!
என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே காணப்படுகின்றது. எப்படியும் இன்று உங்களுடன் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் என்றாலும் சொல்ல வரும் விடயங்கள் ஒழிந்து விளையாடுகின்றது. அடுத்து வரும் இடுகை ஒரு சிந்தனையை தூண்டும்படியாக அமைய வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன்.

ஏன்?எதற்கு? எப்படி? எண்ணங்களையும் தொடர வேண்டும் என்ற ஆசைகள் உண்டு. இந்த கேள்விகளும் எண்ணங்களும் எனது சிறுவயதில் உள்ள கேள்விகளும் அதற்கான தேடல்களும்தான். அந்த தேடல்கள் சரியாக சென்றடைந்திருந்தால் இன்னும் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் என் தேடல்களில் பல நையாண்டிகளாகவே அமைந்தது. அதற்கும் நானே பொறுப்பாக வேண்டும். ஏனனில் தேடல்களில் பொருமையின்மை அதனால் கிடைத்த கூலிதான் அந்த நையாண்டிகள். எந்த ஒரு செயலிலும்" ஏன்?" என்ற கேள்வியை உனக்குள் கேட்டுப்பார்! இது எல்லோருக்கும் தெரியும் அதேபோல் நானும் கேட்டு அதன் பதிலுக்காக நானே எனக்குள் தேடியதுண்டு.

"நீராவில் புகைவண்டி ஓடுகின்றதாம்" நானும் ஒரு வண்டி செய்ய ஆசைப்பட்டேன். அட்டையில் வண்டி செய்து அதன் மேல் ஒரு குப்பியில் தண்ணீர் வைத்து, மெழுகுவர்த்தியால் தண்ணீரை சூடு செய்து நீராவியை உண்டாக்கினேன். நீராவியும் வந்தது வண்டி ஓடவில்லை. கடைசியில் வண்டி நெருப்புக்கு இறையானது. அப்படியே நாட்கள் ஓடியது பேட்ரியில் கார் ஓடுகின்றதாக செய்திகளில் படித்ததும் ஒரே மகிழ்ச்சி என்னிடம் ஒரு பழைய பேட்ரி செல் இருந்தது. சிகரட் அட்டையில் உள்ள வெள்ளித்தாள் உதவிக்கொண்டு அந்த பேட்ரியில் மின் விளக்கு (Light) எரியவிட்டு மகிழ்ந்த எனக்கு காரையும் ஓட்டலாம் என்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே தயாரானது ஒரு அட்டைக்கார் சோடா மூடிதான் சக்கரம் பேட்ரியின் மின்சாரம் லாபகமாக அதே வெள்ளித்தாள் துணையுடன் சகரத்தில் செலுத்தப்பட்டது. செலுத்தினேன்..... செலுத்தினேன்... கார் நகரவில்லை, காற்றில் சிறிது அசைந்தாலும் கார் நகர தாயாராகின்றதாக ஒரு எண்ணம். பிறகு என்ன அதே போல நாட்கள் ஓடியது. இப்படி பல நையாண்டி சோதனைகள் எனக்குள் உண்டு.

எந்த ஒரு தேடல்களிலும் வெற்றிப்பெற்றதாக எனக்கு தெரியவில்லை ஆனால் அதற்காக நான் கவலைப்பட்டதும் இல்லை. எல்லாம் ஒரு பசுமையான இன்பங்களாகவே இருந்தது. அன்று கேட்ட கேள்விகள் இன்று உங்களோடு பகிர்துகொள்வதுதான் இந்த ஏன்? எதற்கு? எப்படி?.... இப்படிப்பட்ட கேள்விகள் நமது வயதிற்கு தெரிந்தவைகளாக இருந்தாலும் கேட்பதில் ஒரு சுகமாக இருப்பதாக தெரிகின்றது. எனவே இன்னும் தொடரும் என்றே ஆசைகள்.

மனிதனும் அவனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் உண்டா? இந்த எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றதா? அப்படியே சென்றாலும் கட்டுப்பாடு இருக்கின்றதா? இப்படிப்பட்ட கேள்விகளும் என்னிடம் இருக்கதான் செய்கின்றது. நான் சரி என்று நினைத்த ஒன்று மற்றவர்களுக்கு தவறாகப்படுகின்றதே ஏன்? மற்றவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட ஒன்று எனக்கு சரியாக படவில்லையே ஏன்? இப்படிப்பட்ட முறன்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அந்த செயலா? இல்லை மனிதனா? இதுவும் புரியவைக்கபடாத ஒன்றுதான். அப்படி பார்க்கையில் மனித இனத்தில் குடிபுகுந்து பல்லாயிரம் ஆண்டுகாளாக பழகிபோன ஒன்றைப்பற்றி அடுத்து வரும் இடுகையில் சிந்திக்கலாம் என்ற எண்ணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான் மூடப்பழக்கங்கள். பலவகையான மூடப்பழக்கங்கள் மனிதனின் காலாச்சரத்தோடு இணைந்துள்ளது. அப்படி இணைந்துள்ளதால் அவற்றை கழைவது அவ்வளவு எளிதான விடயமும் இல்லை என்பதை நான் கண்டுள்ளேன். இதைப்பற்றி ஆழ்ந்து உங்களோடு சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... என்ற தலைப்பின்கீழ் அடுத்து சந்திப்போம்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Monday, October 26, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 6

ஏன்? எதற்கு? எப்படி?..... 6

என்னப்பா உலகம் ஒரே அவசர காலமா போச்சு.. காலை எழுந்து நானும் வேலைக்கு கிளம்பனும் மனைவிக்கும் உதவிகளை செய்யனும் மனைவியும் வேலைக்கு போகனும்... குழந்தைகளுக்கு தேவைகளை எல்லாம் செய்யனும். அப்பறம் அலுவலக வேலைகள் எல்லாம் முடிந்தது சாய்காலம் வீடுக்கு சென்றால் ஓய்வே இல்லாமல் மீண்டும் வேலைகள். ம்ம்ம் 24 மணி நேரம் பத்த மாட்டேங்குதே! யாராச்சும் 2 மணி நேரம் அதிகமா வாங்கி கொடுங்கப்பா,... இப்படி பல காலப்பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மனிதன் வாழ்ந்துக்கொண்டு உள்ளான்.

காலம் என்றால் என்ன? அது யாரால் கொடுக்கப்பட்டது? எப்படி கணகீடப்படுகின்றது?
மனிதனில் வாழ்நாளில் காலம் ஒரு அங்கமாகி போய்விட்டது. காலம் மனிதனை துரத்துகின்றதா? அல்லது மனிதன் காலத்தை துரத்துகின்றானா? இன்னும் புரிய வைக்கப்படாத கேள்விகள். ஆனாலும் துரத்தல்கள் நின்றபாடில்லை.

பசித்தது சாப்பிட்டேன், பின்னர் பசி எடுத்ததும் சாப்பிடுகின்றேன், அதன் பிறகு பசி எடுத்தால் சாப்பிடுவேன். இது ஒரு செயல், இந்த செயலுக்கு இடையில் இருப்பதுதான் நேரம் என்று சொல்லப்படுகின்ற காலம். அதாவது ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியைதான் காலம் அல்லது நேரம் என்று சொல்லுகின்றோம்.( புரியவில்லை என்றால் மீண்டும் படித்துப் பார்க்கவும்). இப்பொழுது நம்முடைய சிந்தனைக்கு!..... இங்குள்ள செயலை நீங்கி விட்டால் காலத்திற்கு மதிப்பு உள்ளதா? இல்லையா?. ஒரு செயல் நடக்காவிடில் அங்கு காலம் பூஜியமாக்கப்பட்டுள்ளதே. இதிலிருந்து காலம் என்பது இருக்கா? இல்லையா? என்ற கேள்வியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இந்த அண்டம் ஆற்றல்களால் நிறப்பட்டுள்ளது. அந்த ஆற்றல்கள் பல இயக்கங்களாக உள்ளது. இந்த இயக்கங்கள் நின்று போனால் காலமும் நேரமும் அர்த்தங்களை கொடுக்காது (காலத்தை கணித்து கொடுக்கப்படும் ஜோசியங்கள் எப்படி சரியாக இருக்கும் என்பதை யோசிக்கவும்). எல்லா இயக்கங்களும் காலத்தினால் இயக்கப்படுகின்றதா? இல்லை இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றதா? இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றது என்பதுதான் சரியாக இருக்கும். இரண்டு புள்ளிகளுக்கிடையில் தூரம் இல்லை என்றால் அளவீடுகளும் இல்லை.

இயக்கங்களின் இடைவெளியில் இருப்பது காலம் என்றால் அதை எப்படி கணக்கிடுவது? சாப்பிடும் செயலை எடுத்துகொண்டால் அதன் இடைவெளி சமபாகங்களாக இல்லை எனவே இவற்றை கணக்கீட முடியாது. சம இடைவெளியில் தொடர் இயங்கங்ளால்தான் காலத்தை கணக்கீட முடியும். சூரியனும் சந்திரனும் காலத்தை அளவிட சமசீர் இயக்கங்களை கொண்டுள்ளன. இவற்றின் இயக்கங்களை வைத்து மனிதன் காலத்தை கணக்கிட்டான். பகல், இரவு என்றும் பின்னர் ஒரு பகல் ஒரு இரவை ஒரு நாள் என்றும் காலக்கணக்கீடுகள் உண்டாக்கப்பட்டன.

காலம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறுகள் இவற்றை கணக்கீட முடியும் என்பது ஒரு சிலரின் வாதங்களாக இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. தொடர் நிகழ்வுகளையும் அவற்றின் இடைவெளியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கால அளவீடுகள் உருவாக்கப்பட்டன. சூரியனின் இயக்கம். பூமியின் சுழற்சி, சந்திரனின் தேய்பிறை வளர்பிறை இவற்றை அடிப்படையாக கொண்டே காலங்கள் அளக்கப்படுகின்றன. மேலும் துள்ளியமாக அளக்க ஊசல்கள் (Pendulum),ஆணுக்கருவில் வெளியாகும் எலக்ட்ரான்களின் இடைவெளி பயன் படுத்தப்படுகின்றது. இதன் அடைப்படையில் கடிகாரங்கள் உருவாகப்பட்டது. ஆரம்பத்தில் மணற்கடிகாரம்,நிழல்க்கடிகாரம் இருந்தாலும் பின்னர் ( pendulum) ஊசல்களின் இயக்கம், குவாட்ஸ் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

என்னதான் காலம் நம்மை ஆட்கொண்டாலும் காலத்தை வெல்லுவதைதான் மனிதனும் மனிதனின் முயற்சிகளும் இருக்கின்றன. வேகம் வேகம் என்று கால இடைவெளியை கைகுள் வைப்பதன் விளைவுதான் கைகடிகாரம் என்றே நினைக்கின்றேன்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

பிடித்திருந்தால் சொல்லுங்கள் இன்னும் வரும்...

Friday, October 23, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-4 (முற்றும்)

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-4 (முற்றும்)

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

"ஒருவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு குறைவான வருமானம் என்றால் அது வறுமை என உலக வங்கி நிர்ணயத்துள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் 41% மக்கள் வறுமையில் இருக்கின்றனர். இது ஆப்பிரிக்கா நாட்டைவிட அதிகம் என சொல்லப்படுகின்றது. 2015 ல் இன்னும் அதிகமானோர் வறுமையில் இருப்பார்கள் என்ற எச்சரிக்கையும் நம்மை கலங்க வைக்கின்றது."

என்னதான் ஏழ்மைக்காண காரணங்களையும் சொல்லியும், அதற்கு பொறுப்பானவர்களை குறை சொல்லிக்கொண்டே போனாலும் மேலே உள்ள செய்தி நம் அடிவயிற்றை கலக்க செய்கின்றது. என்னுடன் படித்த நண்பன் ராம்ராஜ் என்பவன் நன்றாக படிப்பான். கணிதத்தில் 100 சதவிகிதம் வாங்குபவன். அவனது குடும்பம் கல் உடைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் காலம் நடத்தியது. தினம் அவன் பள்ளிக்கு பழைய சோறும் வெங்காயமும் எடுத்துவருவான். சகமாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட கூச்சப்படுவான். ஆனால் நாங்கள் அவனை சேர்த்துக்கொள்ளுவோம். நான் என்னுடைய சாப்பாட்டை பகிர்ந்துக்கொள்வேன். நான் அவன் எடுத்து வரும் வெங்காயத்தை எடுத்து சாப்பிடுவேன். காலங்கள் ஓடியது எல்லோரும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் வெற்றியும் பெற்றோம். ராம்ராஜ் நல்ல மதிப்பெண் பெற்றான். கணிதத்தில் 98 சதவிகிதம் எடுத்தான். என் நண்பர்கள் அனைவரும் +2 வில் சேர்ந்து படித்தோம். அவன் மட்டும் பாலிடெக்னிகில் சேர்ந்து படிப்பதாக கூறினான். பின்னர் அவனுடைய தொடர்பு கிடைக்கவில்லை. ஒரு 15 வருடத்திற்கு பின் அவனை பார்க்க நேரிட்டது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது மூன்று குழந்தைகள், குழந்தைகளின் நிலையை பார்த்தாலே அவனின் வறுமையை புரிந்துக்கொள்ள முடிந்தது. "ராம் ராஜ் என்ன செய்கின்றாய் என்றேன்". அவன் "பாலிடெக்னிக் சேர்ந்து இரண்டாம் ஆண்டுடன் நிறுத்திவிட்டதாகவும், தந்தையின் உடல்நிலை மோசமானதால் குடும்பத்தின் சுமையை ஏற்க வேண்டி வந்தது. வேறு வழியில்லாமல் அப்பா சென்ற அதே இடத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டேன். அங்கு "பாறை வெடி" வெடிக்க செய்யும் வேலைக் கிடைத்தது. எனக்கு திருமணமும் ஆகிவிட்டது" என்றான். என்னால் அதற்கு மேல் கேள்விகளை கேட்க முடியவில்லை. அவன் குழந்தையிடம் 50 ருபாய் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். அதற்கு பின் அவனை பார்க்க முடியவில்லை, என் எண்ணங்கள் அவனை பற்றியே சில நாட்கள் ஓடியது பின் எப்பொழுதும் போல சகசநிலைக்கு வந்துவிட்டேன்.

என்னதான் கல்வியும் சந்தர்ப்பமும் கிடைத்தாலும் காலம் பல வேளைகளில் எங்கேயோ எட்டி உதைத்துவிடுகின்றது. என்பதை என் நண்பன் மூலம் அறிய முடிந்தது. அது போல இன்னும் சிலர் இருப்பதையும் நான் பார்த்துள்ளேன். என்னை பொருத்தவரை சரியான விழிப்புணர்வு இல்லாததால் இவர்களை போன்றவர்கள் சரியாக வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்றே தோன்றுகின்றது. இன்றைக்கு இந்த பிரச்னையை தீர்த்து விட்டால் போதும் என்ற நோக்கில் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வறுமையை ஒழிக்க அரசாங்கம் கொடுக்கும் இலவசங்கள் போதுமானவை என்ற போக்கை அரசு நிறுத்திவிட்டு சரியான வழிகாட்டல்களும் விழிப்புணர்வுகளையும் உண்டாக்க முயன்றால் நன்றாக இருக்கும்.

(படம் வழக்கம்போல் இணையத்தில் சுட்டது)

நாட்டின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கும் ஒரு நல்ல கட்டமைப்பும் ஆராய்ச்சியும் தேவை. அதைவிட முக்கியம் நல்ல திட்டங்களும் நிர்வாக திறமையும் உள்ள அரசும் தேவை. திட்டங்களை விட திட்டங்களின் செயல்வடிவம் மக்களுக்கு சென்றடைவதுதான் மிக முக்கியம். நமது நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துதான் உள்ளது. நாளைய உலகின் மிக பெரிய பற்றாகுறை "உணவு" என்ற உண்மை உலகையே கலங்க செய்துக்கொண்டு உள்ளது. இந்தியாவின் வளங்களை சரியா பயன்படுத்தினால் இந்தியா உலக நாடுகளுக்கு சோறு போடமுடியும் என்பதை நாமும் இந்த அரசும் எப்பொழுது புரிந்துக்கொள்ள போகின்றதோ தெரியவில்லை. மக்கட் செல்வமும் விளைநிலப்பரப்பும் ஒருங்கே கொண்ட ஒரே நாடு நம் வாழும் பாரத நாடுதான். அதை முறையாக பயன்படுத்த நல்ல ஒரு அரசாங்கம் தேவை.

இன்று செயல்பட்டுகொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுகின்றது என்பது பாராட்டகூடியது. அதே சமயம் தமிழகத்தில் வேலை செய்பவர்கள் அதிகமானோர் வட இந்தியர்களாய் இருக்கின்றனர். இதிலிருந்து தமிழகத்தில் வறுமை நிலை நீங்கியுள்ளது என்று அர்த்தமும் கொள்ளமுடியாது. இங்குள்ளவர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை மேலும் நெர்மை குறைவாக உள்ளது என்பதை நிர்வாகம் சொல்லும் பொழுது நாமும் வெட்கி தலைகுனியதான் வேண்டும். மேலும் வெளிநாட்டில் ஆள் எடுப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார்கள் என்ற செய்தியும் வேதனைக்குறியதே. சுமார் 20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று வேலை வாய்ப்புகள் அதிகமாகதான் இருக்கின்றது. ஆனால் அந்த வேலைதான் வேண்டும் என்று காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது.

வறுமை ஒழிப்புக்காகவும் சுயவேலை வாய்ப்புக்காகவும் அரசங்கம் சில திட்டங்களும் செயல்படுத்தியுள்ளது. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் கிடைத்தவர்கள் சரியாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மாடே வாங்காமல் மாட்டு கடன் வாங்குவது பின் அது இறந்துவிட்டதாக சொல்லி கடனை ரத்து செய்ய சொல்வதும் நடக்கின்றது. இதற்கு வங்கி அதிகரிகளும் துணைபோகின்றார்கள், அதற்காக இவர்கள் பணம்பெறுகின்றனர். எனக்கு தெரிந்து ஒருவர் மனைவி பெயரில் ஒன்று மகன் பெயரில் ஒன்றாக கறவை மாடு கடன் வாங்கி சரியாக உழைத்து அதிக லாபத்தை பார்த்துள்ளார். முறைகேடாக மூவர் பெயரில் கடன் வாங்கினாலும் அவரின் முறையான உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாதே.

இந்தியாவில் வறுமை அதிகரித்தாலும் அதை ஒழிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் நாமும் அதற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசைகளாக இருக்கும். ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தேடி தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அருகில் உள்ள நம்முடைய உதவிகள் தேவை படுவோர்களுக்கு சிறிய உதவிகளையும் விழிபுணர்வுகளையும் கொடுத்தாலே போதும். நாளைய இந்தியா வளமாக இருக்கும் என்று நம்புகின்றேன்...

என்னால் இந்த நாட்டிற்கு ஏழ்மையை கொண்டு செல்ல விடமாட்டேன் என்ற உறுதிமொழியை நாம் ஒவ்வொருவரும் ஏற்று சுறுசுறுப்புடனும் நேர்மையுடனும் செல்படுவோம்.

வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்!

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.

Monday, October 19, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 5

ஏன்? எதற்கு? எப்படி?..... 5

நாம் தூரத்தில் செல்கின்றவரை சத்தமிட்டு அழைக்கின்றோம். சத்தமிட்டு அழைத்தால் அவர் திரும்புகின்றாரோ இல்லையொ ஒருவரை தொட்டு கூப்பிட்டால் கண்டிப்பாக திரும்புவார். ஆமங்க அதுதான் தொடும் உணர்வின் சிறப்பு. இப்படிப்பட்ட உணர்வை கொடுப்பது நமது உடம்பை போர்த்திருக்கும் தோல். தோலில் உள்ள மிக நுண்ணிய உணர்வு ஏற்பிகள் (sensory receptors)தான் இந்த உணர்வை கொடுக்கின்றது. தொடுதல், அழுந்த தொடுதல் (அதனால் ஏற்படும் வலி), அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி போன்றவற்றை உடன்க்குடன் மூளைக்கு அனுப்பி வைப்பதுதான் இந்த ஏற்பிகளின் வேலை.

இந்த ஏற்பிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் உணர்வுகளும் அதிகமாக இருக்கும். விரல் நுணி, உதடு, காது மடல் போன்ற இடங்களில் இந்த ஏற்பிகள் திரளாக இருப்பதால் தொடும் உணர்வும் அதிகமாக இருக்கும். நீரின் சூட்டை அறிய விரலில்தான் தொட்டு பார்க்கின்றோம். உதட்டின் உணர்வை காதலர்கள் புரிந்துக்கொண்டதால்தான் முத்தங்கள் பரிமாறப்படுகின்றது.

ஒருவனை என்னதான் திட்டினாலும் உணர்வற்றவனாக இருந்தால், அவனுக்கு தோல் தடிமம் என்று சொல்லுகின்றோம். அந்த அளவிற்கு உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது தோல் தொடு உணர்வு. தோலுக்கு மட்டும் இந்த தொடும் உணர்வு இல்லை என்றால் உயிர் உள்ளவன் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிருக்கும். உயிரோடு கலந்தே இருப்பதே இந்த தொடும் உணர்வு. ஒருவரோடு ஒருவர் கட்டி பிடிப்பதால் வரும் உணர்வுகளுக்கு இணையான இன்பம் இருக்க முடியாது என்றே கூறலாம். பிரிந்தவர் கூடினால் உடனே கட்டி பிடித்து அன்பை பகிர்ந்துக்கொள்கின்றனர்.

மனிதனுக்கு இணையான ரோபோக்களுக்கு இந்த தொடும் உணர்வுதான் இல்லாமல் இருக்கும். அதையும் சமீபத்தில் சோனி நிறுவனம் தொடும் உணர்வோடு ரோபோக்களை தயாரித்துள்ளனர். தொட்டால் திரும்பி பார்க்குமாம். மெல்லிய இழைகளால் தோலை போல போர்த்தி தயாரித்துள்ளார்களாம். வரும் காலங்களில் நாம் ரோபோக்களோடு போட்டியிட வேண்டி வருமோ என்னவோ?

விலங்குகளுக்கு மட்டும்தான் இந்த தொடு உணர்வு இருக்கின்றதா? தாவரங்களுக்கும் இந்த உணர்வு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். தொட்டால் சினுங்கி இலையை தொட்டால் சுறுங்கிக்கொள்ளும்.

தோலை பாதுக்காப்பாக வைத்துக்கொண்டாலே உடலின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தோலில் உணர்வுகள் இல்லாமல் போனால் நோய்க்காண அறிகுறிகள்தான். ஒருவகை வைரஸ்சால் உண்டாக்கும் நோய்தான் தொழுநோய். உணர்வற்ற தோல்களில் உண்டாகும் புண்களால் உடலை அலங்கோலமாக்கிவிடும். இது ஒரு தொற்று நோய் வகையை சேர்ந்ததே. இதற்கு முறையான மருத்துவம் பலனை அழிக்கும். அரசு சுகாதார மையங்களில் இதற்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட தொடும் உணர்வு செல்கள் வயிற்றில் உள்ள குடல் மற்றும் இறைப்பைகளுக்கு கிடையாது. குடலின் மேற்பறப்பில்தான் குறைந்த அளவில் ஏற்பிகள் இருக்கின்றது. குடல் மற்றும் இறைப்பைகளில் உணர்வு செல்கள் இருந்தால் எப்படி உணரப்படும்? நாம் உண்ணும் உணவு செல்லும் உணர்வை கொடுக்கும். குடிக்கும் நீர் செல்லும் இடமெல்லாம் உணரப்படும். இது நமக்கு ஒரு வித சங்கடங்களை கொடுக்கும் எனவே இயற்கையாகவே உணர்வு செல்கள் குடலில் இல்லாமல் இருக்கின்றது.
முடி, நகங்களுக்கு உணர்வு ஏற்பிகள் கிடையாது. அதனால் இவற்றை வெட்டினாலும் வலிக்காது. முதுகில் ஏற்பி செல்கள் குறைவாக இருக்கும் அதனால்தான் செல்லமாக வலியிள்ளாமல் அடிக்க முதுகில் அடிப்பார்கள்.

வேர்க்காத இடம் உதடு.
வலிக்காத இடம் முடியும் நகமும்.
எலும்பு இல்லா இடம் நாக்கு, மூக்கு, காதுமடல்.
அழகு கொடுப்பது தோல்,
அணைத்தால் கிடைப்பது அன்பு.
தொடும் உணர்ச்சி இல்லாதவன் பிணத்திற்கு சமமானவன் ஆவான்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, October 16, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2

ஏழ்மைக்கான காரணங்கள் ஆயிரங்கள் இருந்தாலும் அவற்றை உலகிலிருந்து கழைவது இன்னும் ஆராய்வு வடிவிலேயே இருப்பதுதான் நம்மில் பலருக்கு இருக்கும் கேள்விகள். பொருளாதர கொள்கைகளாக இப்போதைக்கு நம்மில் இருப்பவை தனியுடமை/முதலாளித்துவமும் தான். சோவியத் யூனியன் பிரிவிற்கு பின் தனியுடமை கொள்கை கேள்விக்குறியவைகளாக ஆனாலும் சீனாவில் ஏற்புடையதாகவே இருக்கின்றது. சீனாவின் பொருளாதாரக் கொள்கை உலக நாடுகளை பயம்கொள்ள வைகின்றது என்பதும் உண்மைதான். அதே போல உலகின் பல நாடுகள் அமெரிக்காவை நம்பியே இருக்கின்றது. அமெரிக்காவின் பொருளாதரக் கொள்கை முதலாளித்துவம் முதலில் வெற்றியை கொடுத்தாலும் பின்னர் பின்னடைவையும் சந்திக்கதான் செய்கின்றது. இரண்டிலும் நலது கெட்டது இருந்தாலும் தேவையான சூழ்நிலைக்கு அவைகள் ஏற்புடையதாக்கப்படுகின்றது. இதற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில்தான் இந்தியா இருந்து வருகின்றது. இந்த நிலை தற்போதைக்கு சாதகமாக இருந்தாலும் இது ஒரு ஆபத்தான நிலைதான். இவற்றிலிருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள ஒரு சுயமான பொருளாதார கொள்கை தேவை என்பதை நாம் மறுக்க முடியாது.

அதுபோல இந்தியா தன்னை தனித்தன்மையாக காட்டிகொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் ஏற்றுகொள்கின்றார்களோ இல்லையோ சில மாற்றங்களை செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலைதான் இன்றைய இந்தியா. ஏழைகள் டாட்டா, பிர்லா போன்று பணக்காரர்களாக ஆக வேண்டாம் சாதாரணமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கிடைத்தாலே நாம் மகிழ்ச்சியடைவோம். அப்படிப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் மக்கள் முறைப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டுமே. அதற்கு தற்பொழுது உள்ள சனநாயக முறையால் கட்டுப்படுத்த முடியுமா? என்றால் சந்தேகமே. இன்று வளர்ந்து வரும் பல நாடுகளில் மக்களுக்கு உரிமைகள் எந்த அளவிற்கு கொடுக்கின்றதோ அந்த அளவிற்கு உரிமையை சரியாக பயன்படுத்தாதவர்களுக்கு தண்டனைகளும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கின்றது. இதில் சனநாயக நாட்டில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மறைமுகமாகவோ மாற்று வழிகளிலோ கொடுக்கப்படுகின்றது என்றால் நம்பமுடியாது ஆனாலும் நிருபிக்க வாய்பில்லா உண்மை.


சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி சாதனைகள் புரிந்தாலும் இன்னும் இந்தியாவில் பிச்சைகாரர்கள் இருக்கின்றார்கள் என்றால் யாரை குறைசொல்ல முடியும். எவ்வளவு நாட்களுக்கு அரசாங்கத்தையே குறைசொல்லிக்கொண்டு இருக்க போகின்றோம். எத்தனை பிச்சைகாரர்கள் வேலை செய்ய தாயாராக இருக்கின்றார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். சுமார் 25 வருடங்களுக்கு முன் தொழு நோயாளிகள் பலர் தெருவோரம் பிச்சை எடுத்துகொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு தகுந்த இலவச கட்டாய சிகிச்சைகளும் பின்னர் மறுவாழ்வு மையங்களும் செய்துகொடுத்து இன்று அப்படிப்பட்ட சூழல்களை இல்லாமல் செய்துள்ளார்கள் என்றால் நாம் இந்த இந்திய அரசிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இன்றும் தொழுநோய்க்கான சிகிச்சை அரசு சுகாதார மையங்களில் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றதை நான் பார்த்துள்ளேன். அவற்றுகெல்லாம் என்னுடைய நன்றியின் கரகோசம் உண்டு. திருச்சி மாவட்டத்திலுள்ள செம்பட்டு என்ற கிராமத்தில் கத்தோலிக்க கிருஸ்துவ அமைப்பால் ஒரு தோழுநோயாளி மறுவாழ்வு மையம் இயங்கி வருகின்றது. இங்கு அவர்களுக்கு வேலையும் சிகிச்சையும் கிடைக்கின்றது.


உங்கள் வீட்டின் அருகில் நல்ல ஆரோக்கியமானவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறு வேலைகளை கொடுத்து பின் நல்ல பணம் தருவதாக கூறிப்பாருங்கள். ஒன்று அவர்கள் செய்ய மாட்டார்கள் அல்லது செய்வதுபோல நடித்து கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படிதான் அரசாங்கம் கொடுக்கும் மறுவாழ்வு திட்டங்களும் நாசமா போகின்றது. இவற்றிக்கு நாமும் முறையற்ற அரசு அதிகாரிகளும் காரணமாகின்றனர். இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்கள் சரியாக செயல்பட வேண்டும் என்றால் முறைகேடுகளுக்கு காரணம் எதுவாயினும் மன்னிப்பு இல்லா தண்டனைகள் வழங்கப்பட்டுதான் ஆக வேண்டும். இது ஒரு சர்வாதிகாரம் என்றாலும் வரவேற்கதான் வேண்டும். அதை விட எல்லோருக்கும் விழிபுணர்வும் தேவை. எத்தனை மாட்டு கடன், எத்தனை ஆட்டுக்கடன், எத்தனை சிறுதொழில் கடன் பயன் இல்லாமல் போய்கொண்டுள்ளது.

இயற்கை வளங்கள் அதிகம் இருந்தும் இன்னும் ஏழ்மையின் சதவிகிதம் கூடிகொண்டே இருப்பதற்கு காராணம் இந்த பொருளாதாரக்கொள்கை, அரசு, மற்றும் சமூக அமைப்பு என்று சொல்லிகொண்டே இருப்பதை விட நம்மில் இருக்கும் சோம்பேறி தனம், பொறுப்பின்மையை, நேர்மையின்மையை அறுத்தெடுக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று, இன்றைய சிந்தனைகளாகச் சொல்லி............ உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.