_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, September 5, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?..

ஏழை, ஏழையாக இருப்பதேன்?...

"அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகில் ஓலை குடிசைக்கட்டி
பொன்னான உலகமுனு பெயருமிட்டால்
இந்த நாடு சிரிக்கும்
நம்ம ஊரு சிரிக்கும்......"
ஆசியாவிலே மிக பெரிய ஜனநாயக நாடு என்றால் அது இந்தியா. ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் இன்னும் ஏழை பாணக்கார ஏற்றதாழ்வுகள் அதிகம் கொண்ட நாடாகதான் இன்றும் இருக்கின்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மக்கள் தொகை 33 கோடியாக இருந்தது இன்று வறுமையில் வாழும் ஏழைகளும் 33 கோடிக்கு மேல் இருப்பதாக ஒரு கணிப்பு கூறுகின்றது. இந்தியா ஒரு பணக்கார நாடு ஆனால் இந்தியர்கள் ஏழைகள். இந்தியாவில் எல்லா வளங்கள் இருந்தும் இன்னும் கையேந்தும் நிலைகள்தான் இருக்கின்றது. "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில்". இறக்குமதி என்பது தரமான பொருளின் பங்கீடுக்காக இருக்க வேண்டுமேயன்றி கையேந்தும் நிலையல்ல.


சமீபத்திய உலக வங்கியின் ஆய்வின் படி இந்தியாவின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் நான்கின் ஒருவர் என்று கணக்கிட்டு சொல்லியுள்ளது. இதில் தமிழகத்தில் இன்னும் மோசமான நிலை என்பது அதிர்ச்சியை கொடுக்கின்றது. சுதந்திரம் பெற்று சுமார் அரை நூற்றாண்டுகள் ஆகியும், பல பொருளாதார திட்டங்களாலும், ஏழ்மையை போக்க எடுத்து வரும் பல நடவடிக்கைகளாலும் நாம் இன்னும் அந்த நிலையை எட்ட முடியாதது இங்கே நடந்துவரும் முறைகேடுகள் மற்றும் பெருகிவரும் லஞ்சங்கள் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

"பலர் வாட வாட
சிலர் வாழ வாழ ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை-(வாலியின் வரிகள்)"
இயற்கையில் ஏழைகள் உருவாக்கபடுவதில்லை நாட்டியில் உள்ள போருளாதார கொள்கை தடுமாற்றதாலும் சுரண்டல் பெருச்சாளிகளின் கொட்டங்களாலும் இந்த நிலையை எட்டியுள்ளது. இந்தியா கிராமங்கள் பல கொண்ட விவசாய நாடு, இருப்பினும் பட்டினியால் இருப்போர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. சமீபத்தில் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை மாவட்டத்தில் பட்டினி சாவுகளும், வறுமையில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது.

"கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்"
கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் திட்டங்களும் சட்டங்களும் ஒன்றும் செய்யாமல் இடைதரகர்களையும் பதுக்கல் பேர்வலிகலையும் வாழவைக்கின்றது. தன் தேவைக்கும் பயன்பாட்டுக்கும் அதிமான சொத்துகள் என்பது பலர் உயிர் வாழ உதவக்கூடியவை என்பதை மக்களும் அரசும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நில உச்சவரம்பு சட்டங்களின் தேவையை இந்தியா மட்டும் ஏன் புரிந்துகொள்ளவில்லை. சட்டங்களும் அதிகாரங்களும் இன்னும் அதிகார வர்க்கத்தினரிடம் இருப்பதால் எல்லாமே உடப்பில் போடப்படுகின்றது. உலக பணக்கார வரிசையில் இந்தியர்கள் பலர் இருக்கின்றனர். அதேபோல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பட்டினி சாவுகளும் தற்கொலைகளும் இங்குதான். எல்லா முறன்பாடுகளையும் பார்த்து கண்மூடிக்கொண்டு இருக்கும் அரசாங்கம்.

"இருப்பது எல்லாம் பொதுவாயிட்டா..
எடுக்குற கூட்டமும் இருக்காது,
பதுக்குற கூட்டமும் இருக்காது "
என்ற பட்டுகோட்டையின் வரிகளை ரசிக்க முடிந்த அளவிற்கு மக்களின் மனங்கள் பொதுவுடமை இல்லாதது ஏன் என்று புரிவதில்லை. நான் எனது என் சொந்தங்கள் என பார்த்து பக்கத்தில் இருக்கும் பட்டினி அவளங்களை கண்டுகொள்வதுமில்லை.
" பணம் கண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை... தரும் கைகள் தேடி பொருள் வருவதில்லை."

பொதுவுடமை என்பது ஒரு உணர்வாக இருக்கவேண்டுமேயொழிய திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் அதே சமயம் மக்களுக்காக இருக்கும் அரசு என்று மக்களின் பிரதிநிதிகள் என்று புரிந்துக்கொள்வார்களோ தெரியவில்லை. என்று வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படுகின்றதோ அன்றுதான் நாம் ஏழ்மையிலிருந்து விடுபட முடியும் என்பது திண்ணம். பிரதமர் டாகடர் மன்மோகன் சிங்கின் "வறுமை போர்" திட்டம் திட்ட அளவில் இல்லாமல் முனைப்புடன் செயல்பட்டால் ஓரளவிற்கு இந்தியாவை முன்நடத்தி செல்ல முடியும். மக்களின் அடிப்படை கல்வி, தொழிற்பயிற்சியின் அவசியம், கிராமம் மறுவாழ்வு, கிராமபுற மக்களின் ஆரோக்கியம் என்பன கவணம் செலுத்த வேண்டிய முக்கிய விடயம்.
"பொருள் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருப்பவரிடம் பொருள் வருவதுமில்லை"

இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

49 comments:

சி.கருணாகரசு said...

அடிமைப் படுத்தும் எண்ணமும் தானே அத்தனைக்குமான அளுமையாகவும் இருக்க ஆசைபடுவதும், இல்லாதவர்களின் உழைப்பை சுரண்டி தின்னும் மேலதிக்க மனிதர்களினால் தான் வறுமை, இல்லாமை, பசி, பட்டினி, தற்கொலை, இப்படி எல்லாமெ.....

தங்களின் உலக பார்வை மற்றும் ஆக்கபூர்வ சிந்தனைப் படைப்புகள் மிக அருமை. வாழ்த்துக்கள் நண்பா.

குடந்தை அன்புமணி said...

நீங்கள் நிறைய சிந்திக்கிறீர்கள்...
ஆனால் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
அப்படியும் போராடுபவர்களுக்கு ஆதரவாக மக்கள் கை கோர்ப்பதில்லை. இலவசங்களில் முழ்கிவிடுகிறார்கள்.
என்ன செய்வது...

ஆ.ஞானசேகரன் said...

[[ சி.கருணாகரசு said...

அடிமைப் படுத்தும் எண்ணமும் தானே அத்தனைக்குமான அளுமையாகவும் இருக்க ஆசைபடுவதும், இல்லாதவர்களின் உழைப்பை சுரண்டி தின்னும் மேலதிக்க மனிதர்களினால் தான் வறுமை, இல்லாமை, பசி, பட்டினி, தற்கொலை, இப்படி எல்லாமெ.....]]

ஆம் நண்பா,.. இந்த உழைப்பு சுரண்டல்தான் ஏழ்மைக்கு முக்கிய காரணம்.. உங்களின் கருத்தும் மெய்சிலிர்க்க வைக்கின்றது

[[ தங்களின் உலக பார்வை மற்றும் ஆக்கபூர்வ சிந்தனைப் படைப்புகள் மிக அருமை. வாழ்த்துக்கள் நண்பா.]]

உங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க தோழா

ஆ.ஞானசேகரன் said...

[[ குடந்தை அன்புமணி said...

நீங்கள் நிறைய சிந்திக்கிறீர்கள்...
ஆனால் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.]]

சிந்திக்க வேண்டியவர்களும் சிந்திக்க வேண்டிய சூழலுக்கு வரவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது நண்பா...

[[அப்படியும் போராடுபவர்களுக்கு ஆதரவாக மக்கள் கை கோர்ப்பதில்லை. இலவசங்களில் முழ்கிவிடுகிறார்கள்.
என்ன செய்வது...]]

ம்ம்ம்ம் அதுதான் கொடுமை... இலவசங்களை எதிர்ப்பார்க்கும் வறுமையும் ஒரு காரணம். தொலைநோக்கு பார்வை இல்லா அரசில் அவலங்கள் என்ன சொல்வது?

S.Gnanasekar said...

இந்தியா ஒரு பணக்கார நாடு ஆனால் இந்தியர்கள் ஏழைகள். இந்தியாவில் எல்லா வளங்கள் இருந்தும் இன்னும் கையேந்தும் நிலைகள்தான் இருக்கின்றது. "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில்".
"அயல்நாட்டில் மட்டும் நாம் கையேந்த வில்லை" சில இலவசங்களுக்காக கையேந்தி நிற்கும் நிலை மாறி உழைத்து வாங்கவேண்டும் என்ற என்னம் வரும்வரை இந்தநிலமை நீடிக்கும்..

ஆ.ஞானசேகரன் said...

[[ S.Gnanasekar Somasundaram said...

இந்தியா ஒரு பணக்கார நாடு ஆனால் இந்தியர்கள் ஏழைகள். இந்தியாவில் எல்லா வளங்கள் இருந்தும் இன்னும் கையேந்தும் நிலைகள்தான் இருக்கின்றது. "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில்".
"அயல்நாட்டில் மட்டும் நாம் கையேந்த வில்லை" சில இலவசங்களுக்காக கையேந்தி நிற்கும் நிலை மாறி உழைத்து வாங்கவேண்டும் என்ற என்னம் வரும்வரை இந்தநிலமை நீடிக்கும்..]]

உண்மைதான் தோழரே... ஏழ்மையை போலி அரசுகளும் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றதே... தன்னுடையா ஏழ்மைக்காக மக்களும் சோரம் போகின்றார்கள் என்பதும் உண்மை.... மாற்றம் வேண்டும்.....

சத்ரியன் said...

ஞானசேகரன்,

ஒருவன் மட்டுமல்ல ஒவ்வொருவனும் உணர வேண்டிய உண்மை. பணம் படைத்த எவன் ஒருவனது கண்ணிலாவது படுமா இந்த பதிவு.? படித்தால், அவனது நெஞ்சம் நெகிழுமா? பணம் பண்ணத் தெரிந்தவனுக்கு உலகின் ஏழ்மையும், வறுமையின் கொடுமையும் புரிவதில்லை போல...!

ஈரோடு கதிர் said...

கருத்துள்ள இடுகை

காணொளியில் ஈ மொய்க்கும் போது விரட்ட திராணியில்லாமல் அமைதிகாக்கும் மனிதனைப் பார்க்கும்போது மனதுக்குள் ஏதோ புரள்கிறது

Anonymous said...

பொருள் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருப்பவரிடம் பொருள் வருவதுமில்லை"
//

உண்மையான கூற்று.

ஆ.ஞானசேகரன் said...

[[சத்ரியன் said...
ஞானசேகரன்,

ஒருவன் மட்டுமல்ல ஒவ்வொருவனும் உணர வேண்டிய உண்மை. பணம் படைத்த எவன் ஒருவனது கண்ணிலாவது படுமா இந்த பதிவு.? படித்தால், அவனது நெஞ்சம் நெகிழுமா? பணம் பண்ணத் தெரிந்தவனுக்கு உலகின் ஏழ்மையும், வறுமையின் கொடுமையும் புரிவதில்லை போல...!
]]
வாங்க சத்ரியன்,... உங்களின் உணர்வுதான் எனக்கும் என்ன செய்வது... மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் ஏமாளிகாளாக இருக்கின்றோம்... உஙகளின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[கதிர் - ஈரோடு said...
கருத்துள்ள இடுகை

காணொளியில் ஈ மொய்க்கும் போது விரட்ட திராணியில்லாமல் அமைதிகாக்கும் மனிதனைப் பார்க்கும்போது மனதுக்குள் ஏதோ புரள்கிறது]]

ஆம் தோழரே,... அது ஒரு சொல்லத்தெரியாத வலி...
மிக்க நன்றி தோழரே

Anonymous said...

பணம் அதிகமாக இருக்கும் பலர் திருப்பதி கோவிலிலும். திருவண்ணாமலையில் உள்ள குபேரனிடமும் அள்ளி அள்ளி விசுகின்றனர். பணக்கார சாமியை மேலும் பணக்காரராக மாற்ற... ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை மறந்த கூட்டம்.
பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு அவர்களின் வாழ்வாரதத்திற்கு உதவினாலே பசி பட்டினிகள் குறையும். கோவில் உண்டியலில் போடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.

கடவுள் நம்பிக்கை என்பது வேறு. காசு கொடுத்து கடவுளை காண்பது வேறு. எனக்கு கடவுள் மீது அளவற்ற பற்று உண்டு. ஆனால் காணிக்கை போட்டு கடவுளை வணங்கும்பவர்களையும்.... பூசாரிகளின் காலில் விழுந்து வணங்கி பொன்னையும் பொருளையும் அள்ளி கூடுப்பவர்கள் மீது அளவற்ற கோபபமும் உண்டு.

கோவிலுக்கு செல்கின்ற காணிக்கைகள் ஏழைகள் வீட்டுக்கு சென்றhல் என்ன? அவர்களின் பசியை தீர்த்தாலே புண்ணியம் தானாகவே வரும் இல்லையா?
இந்த தடவை திருவண்ணாமலை கிரிவலம் சென்ற போது கண்ட சில காட்சிகள் மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவே இருந்தது. குபேர லிங்கம் கோலில் காசை அப்படி வீசுகிறhர்கள். எதுக்கு...100 ருபாய் போட்டால் ஒரு லட்சமாக கிடைக்கன்னு வேண்டிக்கிட்டு போடுறhங்க...சாமிக்கே லஞ்சம்....
சரி விடுங்க...
எதுக்கு சொல்லேன்னு சொன்னா.... எங்கோயோ போகும் பணம் ஏழைகள் வாழ்வுக்கு திட்டமாக போனால் நல்லது தானே. வறுமை குறையுமே.

ஆ.ஞானசேகரன் said...

[[கடையம் ஆனந்த் said...
பொருள் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருப்பவரிடம் பொருள் வருவதுமில்லை"
//

உண்மையான கூற்று]]

ம்ம்ம் நன்றி நண்பா,... வரிகளோடு நிறுத்தி விடுகின்றோம்.. என்று விடியலை பார்க்க போகின்றோம்..மிக்க நன்றி நண்பா

Anonymous said...

நல்லபதிவு நண்பா... பார்க்கலாம். நல்லது நடக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

[[[கடையம் ஆனந்த் said...
பணம் அதிகமாக இருக்கும் பலர் திருப்பதி கோவிலிலும். திருவண்ணாமலையில் உள்ள குபேரனிடமும் அள்ளி அள்ளி விசுகின்றனர். பணக்கார சாமியை மேலும் பணக்காரராக மாற்ற... ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை மறந்த கூட்டம்.
பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு அவர்களின் வாழ்வாரதத்திற்கு உதவினாலே பசி பட்டினிகள் குறையும். கோவில் உண்டியலில் போடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.

கடவுள் நம்பிக்கை என்பது வேறு. காசு கொடுத்து கடவுளை காண்பது வேறு. எனக்கு கடவுள் மீது அளவற்ற பற்று உண்டு. ஆனால் காணிக்கை போட்டு கடவுளை வணங்கும்பவர்களையும்.... பூசாரிகளின் காலில் விழுந்து வணங்கி பொன்னையும் பொருளையும் அள்ளி கூடுப்பவர்கள் மீது அளவற்ற கோபபமும் உண்டு.

கோவிலுக்கு செல்கின்ற காணிக்கைகள் ஏழைகள் வீட்டுக்கு சென்றhல் என்ன? அவர்களின் பசியை தீர்த்தாலே புண்ணியம் தானாகவே வரும் இல்லையா?
இந்த தடவை திருவண்ணாமலை கிரிவலம் சென்ற போது கண்ட சில காட்சிகள் மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவே இருந்தது. குபேர லிங்கம் கோலில் காசை அப்படி வீசுகிறhர்கள். எதுக்கு...100 ருபாய் போட்டால் ஒரு லட்சமாக கிடைக்கன்னு வேண்டிக்கிட்டு போடுறhங்க...சாமிக்கே லஞ்சம்....
சரி விடுங்க...
எதுக்கு சொல்லேன்னு சொன்னா.... எங்கோயோ போகும் பணம் ஏழைகள் வாழ்வுக்கு திட்டமாக போனால் நல்லது தானே. வறுமை குறையுமே.]]


அப்பாடி... நண்பா ஒரு இடுகையே இட்டு சென்றுவிடீர்கள், உங்களின் ஆதங்கம் என்னால் புரிந்துகொள்ளமுடிகின்றது. புரியவேண்டியவர்களுக்கு புரியுமா? என்பது சந்தேகமே!... நீண்ட கருத்திற்கு உண்மையில் நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

[[கடையம் ஆனந்த் said...
நல்லபதிவு நண்பா... பார்க்கலாம். நல்லது நடக்கும்.
]]

அதுதான் எல்லோரும் எதிர்ப்பார்க்கும் ஆசைகள்..

Anonymous said...

குடந்தை அன்புமணி said...
நீங்கள் நிறைய சிந்திக்கிறீர்கள்...
ஆனால் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
அப்படியும் போராடுபவர்களுக்கு ஆதரவாக மக்கள் கை கோர்ப்பதில்லை. இலவசங்களில் முழ்கிவிடுகிறார்கள்.
என்ன செய்வது...

ஆம் வழிமொழிகிறேன்....

Anonymous said...

நாம் உணர்ந்து என்ன பயம் அதிகாரம் கையில் உள்ளவர்கள் ஆலோசிக்க வேண்டிய ஒன்று....இந்த சமுதாயத்துக்காக நீங்கள் சிந்திப்பவை பாராட்டபட வேண்டியது சேகர்....

அன்புடன் அருணா said...

பொருள் பொதிந்த பதிவு...பூங்கொத்து!

ஆ.ஞானசேகரன் said...

[[தமிழரசி said...
குடந்தை அன்புமணி said...
நீங்கள் நிறைய சிந்திக்கிறீர்கள்...
ஆனால் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
அப்படியும் போராடுபவர்களுக்கு ஆதரவாக மக்கள் கை கோர்ப்பதில்லை. இலவசங்களில் முழ்கிவிடுகிறார்கள்.
என்ன செய்வது...

ஆம் வழிமொழிகிறேன்....]]

மிக்க நன்றிங்க தமிழரசி
[[
நாம் உணர்ந்து என்ன பயன் அதிகாரம் கையில் உள்ளவர்கள் ஆலோசிக்க வேண்டிய ஒன்று....இந்த சமுதாயத்துக்காக நீங்கள் சிந்திப்பவை பாராட்டபட வேண்டியது சேகர்....]]

உண்மைதான் தோழி.. அதிகாரத்தில் இருப்பவர்கள் உணரவேண்டும் அதே போல் நாமும் நம்மால் முடிந்ததை செய்துதால்தானே நல்லது. இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்????????

ஆ.ஞானசேகரன் said...

[[அன்புடன் அருணா said...
பொருள் பொதிந்த பதிவு...பூங்கொத்து!]]



மிக்க நன்றிங்க‌

ஷண்முகப்ரியன் said...

ஏழ்மைக்குப் பல கார்ணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
பொருளாதார முறைகேடுகள்,சமூக வியல் காரணங்கள்,இயற்கையின் சீற்றங்கள்,ஆன்மீகத் தேறுதல்கள்,ஜ்யோதிடக் கணிப்புக்கள்,மக்களின் அறிவின்மை,மனிதர்களின் ஆற்றலின்மை,விதியின் கொடுமைகள் இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் ஏழை மட்டும் ஏழையாகவே இருக்கிறான்.

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
ஏழ்மைக்குப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
பொருளாதார முறைகேடுகள்,சமூக வியல் காரணங்கள்,இயற்கையின் சீற்றங்கள்,ஆன்மீகத் தேறுதல்கள்,ஜோதிடக் கணிப்புக்கள்,மக்களின் அறிவின்மை,மனிதர்களின் ஆற்றலின்மை,விதியின் கொடுமைகள் இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் ஏழை மட்டும் ஏழையாகவே இருக்கிறான்.//


ஆகா... ஆமாங்க சார்.. அதுதான் ஏன் என்பதன் புரியாத புதிர்.... ஏழை ஏழையாக இருக்கின்றான். பணக்காரான் மேலும் மேலும் பணத்தில் புரளுகின்றான்.... மேலும் பணக்காரனுக்கு பணத்தின் மேல் ஆசைகள் போவதில்லையே ஏன்????... மிக்க நன்றி சார்..

CorTexT (Old) said...

//"பலர் வாட வாட, சிலர் வாழ, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை" -- வாலி.
இயற்கையில் ஏழைகள் உருவாக்கபடுவதில்லை.
//
ஏழைகள் இயற்கையில் தான் உருவாகின்றனர். விபச்சாரம் போல், மனித கலாச்சாரம் தோன்றிய நாட்களிலிருந்து ஏழ்மையும் இருக்கின்றது. ஏசு வாழ்ந்த காலங்களிலெல்லாம் அது பல மடங்கு அதிகமாக இருந்தாகத் தெரிகின்றது. விலங்குகளிலும் அது உண்டு; ஆனால் பார்ப்பதற்கு அது எளிதில் தெரிவதில்லை. அவைகள் சூழலுக்கு ஏற்ப அழிந்து விடுவதால், பெரிய பஞ்ச கூட்டத்தை பார்க்க முடிவதில்லை. நாம் பிச்சை போட்டே, ஒரு பெரிய பிச்சை பட்டாளத்தை உருவாக்கியுள்ளோம்.

//"இருப்பது எல்லாம் பொதுவாயிட்டா..எடுக்குற கூட்டமும் இருக்காது, பதுக்குற கூட்டமும் இருக்காது".
"பணம் கண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை... தரும் கைகள் தேடி பொருள் வருவதில்லை".
//
இவை வாழ்கைக்கு உதவாத, நடைமுறைக்கு உதவாத, உண்மைக்கு எதிரான வரிகள். இவைகள் இயற்கையை அறிந்தவர்களாலோ, பொருளாதாரம் புரிந்தவர்களாலோ எழுதப்படவில்லை. அதற்கு பொதுவுடமை (சமதர்மம்), தனியுடமை (முதலாளித்துவம்) போன்ற பொருளாதார அமைப்புகளைப் பற்றி ஆராய வேண்டும். பலவற்றில் தனியுடமையே நீடித்த நல்பலனை தருகின்றது; ஆனால் சிலவற்றிக்கு தற்காலிக பொதுவுடமை தேவைப்படலாம்.

ஏழ்மையை போக்க வெறும் உண்ர்ச்சி மட்டும் போதாது; அதை ஆராய்ந்து நடைமுறை தீர்வு காண வேண்டும் (அது நம் பொது அறிவிற்கு எதிர்மறையாகவும் இருக்கலாம்). நாட்டிலுள்ள எல்லா பணக்கார்களிடமிருந்து பிடிங்கி, பட்டினியில் கிடப்போருக்கு உணவிட்டால், அது சில வாரங்களோ, சில மாதங்களோ தாங்கும்; அதற்கு பிறகு? உண்மையான தீர்வுக்கு தொடர்ந்து முன்னேற்றம் காணும் வளர்ச்சி வேண்டும். அதற்கு வெளிசந்தை போன்ற தனியுடமை பொருளாதார அமைப்பு நல்லது (குறைகள் இருந்தாலும், ஜனநாயக அரசியல் அமைப்பு எப்படி நல்லதென்று நாம் அறிந்து கொண்டோமே, அது போல் தான். அதைவிட நல்ல அமைப்புகளுக்காக பலர் ஆராய்ந்து கொண்டு உள்ளனர்).

//ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் அதே சமயம் மக்களுக்காக இருக்கும் அரசு என்று மக்களின் பிரதிநிதிகள் என்று புரிந்துக்கொள்வார்களோ தெரியவில்லை.
//
அரசு மக்களின் பிரதிநிதிகள் என்று பிரதிநிதிகளுக்கு புரியவையுங்கள்; அல்லது புரிந்தவர்களை பிரதிநிதிகளாக்குங்கள். அதுதானே ஜனநாயகம்; அதற்குத்தானே தேர்தல், ஒட்டு.

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...
//"பலர் வாட வாட, சிலர் வாழ, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை" -- வாலி.
இயற்கையில் ஏழைகள் உருவாக்கபடுவதில்லை.
//
ஏழைகள் இயற்கையில் தான் உருவாகின்றனர். விபச்சாரம் போல், மனித கலாச்சாரம் தோன்றிய நாட்களிலிருந்து ஏழ்மையும் இருக்கின்றது. ஏசு வாழ்ந்த காலங்களிலெல்லாம் அது பல மடங்கு அதிகமாக இருந்தாகத் தெரிகின்றது. விலங்குகளிலும் அது உண்டு; ஆனால் பார்ப்பதற்கு அது எளிதில் தெரிவதில்லை. அவைகள் சூழலுக்கு ஏற்ப அழிந்து விடுவதால், பெரிய பஞ்ச கூட்டத்தை பார்க்க முடிவதில்லை. நாம் பிச்சை போட்டே, ஒரு பெரிய பிச்சை பட்டாளத்தை உருவாக்கியுள்ளோம்.]]

ஏழ்மை இயற்கையானது என்று சொல்வதிற்கில்லை. சூழல் என்று சொல்லாலம். அப்படி பார்த்தால் ஏழ்மையை அழிக்க வழியே இல்லை என்றுதான் பொருள்படும். ஆனால் குறைக்க முடியும் என்று நம்புகின்றேன். விலங்களிலும் ஏழ்மை உண்டு என்பது புதிய சிந்தனை பாராட்டகூடியதும் நான் ஒப்புக்கொள்கின்றேன். ஏழ்மை சூழல் காரணமாக உருவானாலும் சிலர் சில காரணங்களுக்காக ஏழ்மையாக்கப்படுவதை வண்மையாக கண்டிக்கக்கூடியதே... இப்படிப்பட்ட கண்டிப்பும் தேவை என்பதும் ஒரு சூழ்நிலைதான்.... நல்ல கருத்தோட்டம் மிக்க நன்றி


[[//"இருப்பது எல்லாம் பொதுவாயிட்டா..எடுக்குற கூட்டமும் இருக்காது, பதுக்குற கூட்டமும் இருக்காது".
"பணம் கண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை... தரும் கைகள் தேடி பொருள் வருவதில்லை".
//
இவை வாழ்கைக்கு உதவாத, நடைமுறைக்கு உதவாத, உண்மைக்கு எதிரான வரிகள். இவைகள் இயற்கையை அறிந்தவர்களாலோ, பொருளாதாரம் புரிந்தவர்களாலோ எழுதப்படவில்லை. அதற்கு பொதுவுடமை (சமதர்மம்), தனியுடமை (முதலாளித்துவம்) போன்ற பொருளாதார அமைப்புகளைப் பற்றி ஆராய வேண்டும். பலவற்றில் தனியுடமையே நீடித்த நல்பலனை தருகின்றது; ஆனால் சிலவற்றிக்கு தற்காலிக பொதுவுடமை தேவைப்படலாம்.]]


இப்படிபட்ட கனவுகள் கவிஞர்களுக்கு உண்டு அதுவும் தேவைதான்.தனியுடையிலும் போதுவுடைமையிலும் சில குறைகள் இருப்பது உண்மைகள். இதை ஆராயப்பட வேண்டியது ஆனால் யார் அதை செய்வது என்பதில்தான் சிக்கல். இந்தியா ஒரு பாரம்பரியமிக்க தொண்மையான நாடு இந்நாட்டு மக்களை அவ்வளவு எழிதாக ஒருங்கினைக்க முடியாது. அதனால்தான் வலியவர்கள் மட்டும் முன்னேற முடிகின்றது எழியவர்கள் சிதைந்து போகின்றனர். நீங்கள் சொல்வதை போல் தீர்க்க ஆராயவேண்டியது உண்மைதான்..


[[ஏழ்மையை போக்க வெறும் உண்ர்ச்சி மட்டும் போதாது; அதை ஆராய்ந்து நடைமுறை தீர்வு காண வேண்டும் (அது நம் பொது அறிவிற்கு எதிர்மறையாகவும் இருக்கலாம்). நாட்டிலுள்ள எல்லா பணக்கார்களிடமிருந்து பிடிங்கி, பட்டினியில் கிடப்போருக்கு உணவிட்டால், அது சில வாரங்களோ, சில மாதங்களோ தாங்கும்; அதற்கு பிறகு? உண்மையான தீர்வுக்கு தொடர்ந்து முன்னேற்றம் காணும் வளர்ச்சி வேண்டும். அதற்கு வெளிசந்தை போன்ற தனியுடமை பொருளாதார அமைப்பு நல்லது (குறைகள் இருந்தாலும், ஜனநாயக அரசியல் அமைப்பு எப்படி நல்லதென்று நாம் அறிந்து கொண்டோமே, அது போல் தான். அதைவிட நல்ல அமைப்புகளுக்காக பலர் ஆராய்ந்து கொண்டு உள்ளனர்).]]

உண்மைதான் பணக்காரர்களிடம் பிடிங்கி போடுவதால் எந்த நன்மையும் இல்லை. ஆனால் பதுக்கல்களையும் லஞ்சங்களையும் ஒழித்தால் எழ்மையை குறைக்க வழிகள் பிறக்கலாம். அதே போல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் வழிகிடைக்கும் அதற்கு முறையான கட்டமைப்புக்கொண்ட அரசாங்கம் தேவை. அது தற்பொழுது உள்ள சட்டங்களும் திட்டங்களும் பத்தாது என்பதும் உண்மைதானே.


[[//ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் அதே சமயம் மக்களுக்காக இருக்கும் அரசு என்று மக்களின் பிரதிநிதிகள் என்று புரிந்துக்கொள்வார்களோ தெரியவில்லை.
//
அரசு மக்களின் பிரதிநிதிகள் என்று பிரதிநிதிகளுக்கு புரியவையுங்கள்; அல்லது புரிந்தவர்களை பிரதிநிதிகளாக்குங்கள். அதுதானே ஜனநாயகம்; அதற்குத்தானே தேர்தல், ஒட்டு.

அதில்தானே சிக்கல் இருக்கு போதிய கல்வி அறிவு இல்லாதவர்க‌ளாலும்.. சுயநலம் கொண்ட நபர்களாலும் பிரதிநிகள் தேர்ந்தெடுக்க படுகின்றார்கள்.. நிலைமையும் அப்படியே இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

காணொளி கண்கலங்க வைத்திட்டது சேகர்......

:((

ஆ.ஞானசேகரன் said...

[[ பிரியமுடன்...வசந்த் said...
காணொளி கண்கலங்க வைத்திட்டது சேகர்......

:((
]]
வாங்க நண்பா,... என்ன சொல்வது பிழை எங்கிருக்கின்றது என்பதுதான் தெரியவில்லை

CorTexT (Old) said...

//ஏழ்மை இயற்கையானது என்று சொல்வதிற்கில்லை. சூழல் என்று சொல்லாலம். அப்படி பார்த்தால் ஏழ்மையை அழிக்க வழியே இல்லை என்றுதான் பொருள்படும்.//

ஏழ்மை இயற்கையில் நிகழ கூடியதே. ஆனால், அது நல்லதென்று சொல்லவரவில்லை. இயற்கை பலநேரம் கொடூரமானதே. அதை நாம் தடுக்க போராடுகின்றோம். பலவற்றில் வெற்றி பெற்றுள்ளோம். சரியான தீர்வுக்கு முதலில் சரியான புரிந்தல் வேண்டுமே. "பலர் வாட வாட, சிலர் வாழ, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை" - என்று தவறாக நினைத்து கொண்டிந்தால், நம் அணுகுமுறையும் தவறாகவே இருக்கும்.

//இப்படிபட்ட கனவுகள் கவிஞர்களுக்கு உண்டு.//

கனவுகள் சரிதான். ஆனால், அது வாழ்கைக்கு உதவாத, நடைமுறைக்கு உதவாத, உண்மைக்கு எதிராக இருக்க வேண்டாம். பாரதி கண்ட பல கனவுகள் எனக்கு பிடிக்கும் (சிந்து நதியின் மிசையின் கனவு என் விருப்பம்).

//வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் வழிகிடைக்கும்//

இதற்கு வெளிசந்தை போன்ற தனியுடமை பொருளாதார அமைப்பே நீடித்த நல்பலனை தரும். பொதுவுடமை அல்ல. பொதுவுடமையை ஒருசிலவற்றில் நானும் வரவேற்கின்றேன். [http://ecortext.blogspot.com/2008/10/why-socialism.html]. அரசு என்பதே ஒரு பொதுவுடமை கட்டமைப்பு தான். அது ஓரளவு தேவைதான். ஆனால் அது திறனாக இருப்பதில்லை. எனவே குறைந்தபட்ச அரசே நம் தேவை. தனியுடமை பொருளாதார அமைப்பு, ஒரு சமூகம் திறனாக வளர உதவுகின்றது; அதை எல்லாவகையிலும் ஊக்கப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.
பதுக்கல்களையும் லஞ்சங்களையும் ஒழுப்பதும் முக்கியம்தான். ஆனால், பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களை போல், அது சமூக கலாச்சாரத்துடன் பின்னப்பட்டுள்ளது. எனவே அதை மொத்தமாக அணுகவேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

[[RajK said...
//ஏழ்மை இயற்கையானது என்று சொல்வதிற்கில்லை. சூழல் என்று சொல்லாலம். அப்படி பார்த்தால் ஏழ்மையை அழிக்க வழியே இல்லை என்றுதான் பொருள்படும்.//

ஏழ்மை இயற்கையில் நிகழ கூடியதே. ஆனால், அது நல்லதென்று சொல்லவரவில்லை. இயற்கை பலநேரம் கொடூரமானதே. அதை நாம் தடுக்க போராடுகின்றோம். பலவற்றில் வெற்றி பெற்றுள்ளோம். சரியான தீர்வுக்கு முதலில் சரியான புரிந்தல் வேண்டுமே. "பலர் வாட வாட, சிலர் வாழ, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை" - என்று தவறாக நினைத்து கொண்டிந்தால், நம் அணுகுமுறையும் தவறாகவே இருக்கும்.]]


சரியான வியூகம்தான்.... இயற்கை கொடுரூரமாக இருக்கலாம் ஆனாலும் வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும்


[[//வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் வழிகிடைக்கும்//

இதற்கு வெளிசந்தை போன்ற தனியுடமை பொருளாதார அமைப்பே நீடித்த நல்பலனை தரும். பொதுவுடமை அல்ல. பொதுவுடமையை ஒருசிலவற்றில் நானும் வரவேற்கின்றேன். [http://ecortext.blogspot.com/2008/10/why-socialism.html]. அரசு என்பதே ஒரு பொதுவுடமை கட்டமைப்பு தான். அது ஓரளவு தேவைதான். ஆனால் அது திறனாக இருப்பதில்லை. எனவே குறைந்தபட்ச அரசே நம் தேவை. தனியுடமை பொருளாதார அமைப்பு, ஒரு சமூகம் திறனாக வளர உதவுகின்றது; அதை எல்லாவகையிலும் ஊக்கப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.
பதுக்கல்களையும் லஞ்சங்களையும் ஒழுப்பதும் முக்கியம்தான். ஆனால், பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களை போல், அது சமூக கலாச்சாரத்துடன் பின்னப்பட்டுள்ளது. எனவே அதை மொத்தமாக அணுகவேண்டும்.]]


தனியுடைமை பொருளாதாரம் சரியாக இருக்கும் என்று வைத்துக்கொண்டால். அமேரிக்காவும் தனியுடைமை பொருளாதாரம் கொண்ட நாடுதானே இன்று அதுவும் ஆட்டம் கண்டுள்ளதே!

CorTexT (Old) said...

//தனியுடைமை பொருளாதாரம் சரியாக இருக்கும் என்று வைத்துக்கொண்டால். அமேரிக்காவும் தனியுடைமை பொருளாதாரம் கொண்ட நாடுதானே இன்று அதுவும் ஆட்டம் கண்டுள்ளதே!//

உலகை சுற்றிவர மாட்டுவண்டியை விட விமானத்தில் செல்வதே விரைவான நல்பலன் தரும். ஆனால், விமான பயனத்தில் விபத்துகள் ஏற்படலாம். அதை குறைக்க, கழைய விமான வடிவமைப்பை தொடர்ந்து மேன்படுத்த வேண்டும். அமேரிக்காவின் இந்த ஆட்டத்திற்கு பின்னாலுள்ள ஒரு முக்கிய காரணம் ஒரு பொதுவுடமை ஆசையும் கூட: அது அனைவரும் சொந்த வீடு வாங்க வசதி செய்ய வேண்டும் என்பதே! எப்படியாகிலும், இந்த ஆட்டத்திற்கெல்லாம் பயப்பட தேவையில்லை. மாட்டுவண்டியில் உலகை சுற்றிவரும் கனவு, வெறும் கனவாகவே இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...
//தனியுடைமை பொருளாதாரம் சரியாக இருக்கும் என்று வைத்துக்கொண்டால். அமேரிக்காவும் தனியுடைமை பொருளாதாரம் கொண்ட நாடுதானே இன்று அதுவும் ஆட்டம் கண்டுள்ளதே!//

உலகை சுற்றிவர மாட்டுவண்டியை விட விமானத்தில் செல்வதே விரைவான நல்பலன் தரும். ஆனால், விமான பயனத்தில் விபத்துகள் ஏற்படலாம். அதை குறைக்க, கழைய விமான வடிவமைப்பை தொடர்ந்து மேன்படுத்த வேண்டும். அமேரிக்காவின் இந்த ஆட்டத்திற்கு பின்னாலுள்ள ஒரு முக்கிய காரணம் ஒரு பொதுவுடமை ஆசையும் கூட: அது அனைவரும் சொந்த வீடு வாங்க வசதி செய்ய வேண்டும் என்பதே! எப்படியாகிலும், இந்த ஆட்டத்திற்கெல்லாம் பயப்பட தேவையில்லை. மாட்டுவண்டியில் உலகை சுற்றிவரும் கனவு, வெறும் கனவாகவே இருக்கும்.
]]

மாட்டு வண்டி உதாரணம் சரியாக படவில்லை. எப்படியாகினும் தனியுடைமை பொருளாதார அமைப்பும் ஆய்வுக்குட்பட்டதே. அதற்காக முழுமையான பொதுவுடைமையும் சரி என்று வாதிடவில்லை..
(நல்ல பயனுள்ள கருத்துகளை பகிர்ந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ராஜ்)

பா.ராஜாராம் said...

தெளிவான புள்ளிவிவரங்களுடன்,கட்டுரை அலசுகிறது.இடைசெருகல் பாட்டுவரிகள் நல்ல முயற்ச்சி.இந்த வீடியோ காட்சி தாங்க முடியாததாய் இருக்கிறது.மனிதநேயம் மிக்க மற்றொரு முயற்ச்சி!வாழ்த்துக்கள் சேகர்!

ஆ.ஞானசேகரன் said...

// பா.ராஜாராம் said...

தெளிவான புள்ளிவிவரங்களுடன்,கட்டுரை அலசுகிறது.இடைசெருகல் பாட்டுவரிகள் நல்ல முயற்ச்சி.இந்த வீடியோ காட்சி தாங்க முடியாததாய் இருக்கிறது.மனிதநேயம் மிக்க மற்றொரு முயற்ச்சி!வாழ்த்துக்கள் சேகர்!//

உங்களின் கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பா

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல சிந்தனைங்க.. ஆனா ஒரு பிரபலமான தத்துவம் இல்லே பழமொழி நியாபகம் வருதுங்க..

ஏழையாக பிறப்பது குற்றமில்லை ஆனால் ஏழையாக இறப்பதே குற்றம்..

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல சிந்தனைங்க.. ஆனா ஒரு பிரபலமான தத்துவம் இல்லே பழமொழி நியாபகம் வருதுங்க..

ஏழையாக பிறப்பது குற்றமில்லை ஆனால் ஏழையாக இறப்பதே குற்றம்//

ஆகா... நல்ல பழமொழிங்க .... மிக்க நன்றிங்க நண்பா

ஹேமா said...

ஞானம் தொடரும் சமூகச் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.

பதுக்கும் கறுப்புப் பணங்களை உரிமையாளர்கள் பகிர்ந்து கொடுத்தாலே நல்ல விஷயம்.
பக்கத்து வீட்டுக் குழந்தை பசியில் வாடும்.கோவிலில் தன் பெயரில் ஒருவன் பாலாபிஷேகம் செய்துகொண்டிருப்பான்.

அடுத்து எனக்கு இன்னொன்றும் தோன்றும்.ஏழைகள் சிலரிடம் முயற்சியும் குறைவு.நாங்கள் இப்படித்தான் என்று அதே வாழ்க்கை முறையிலேயே இருப்பார்கள்.
நாங்களும் மாறவேணும்.
அதற்குண்டான படிப்பு-பணம்-உதவிகளைத் தேடிப் போதல் என்பவற்றுக்கான முயற்சியில் ஈடுபட மாட்டார்கள்.ஏன்...?

வால்பையன் said...

ஏழை பணக்காரன் என்பதை நான் உணர்வுபூர்வமாக பார்க்கிறேன்!

தினம் பிரச்சனைகளோடு பணக்காரனாக இருக்க விருப்பமா?
ஏழையாக இருந்தாலும் நிம்மதியாக இருக்க விருப்பமா?

நான் நிம்மதியாக இருக்கிறேன்!

காமராஜ் said...

நல்ல இடுகை. உடன் சிந்திக்கச் செய்கிற எழுத்து.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்.வல்லான் பொருள் குவிப்பதை விதியென்று கூறி ஒளிந்து கொள்ளல் பாவம்.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் தொடரும் சமூகச் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.//

உங்களின் பாராட்டுக்கு நன்று ஹேமா..

// பதுக்கும் கறுப்புப் பணங்களை உரிமையாளர்கள் பகிர்ந்து கொடுத்தாலே நல்ல விஷயம்.
பக்கத்து வீட்டுக் குழந்தை பசியில் வாடும்.கோவிலில் தன் பெயரில் ஒருவன் பாலாபிஷேகம் செய்துகொண்டிருப்பான்.//

உங்களின் சிந்தனைகளும் ஏற்புடையதே அடுத்து வரும் சிந்தனைகளுக்கு நல்ல பாண்ட்

// அடுத்து எனக்கு இன்னொன்றும் தோன்றும்.ஏழைகள் சிலரிடம் முயற்சியும் குறைவு.நாங்கள் இப்படித்தான் என்று அதே வாழ்க்கை முறையிலேயே இருப்பார்கள்.
நாங்களும் மாறவேணும்.
அதற்குண்டான படிப்பு-பணம்-உதவிகளைத் தேடிப் போதல் என்பவற்றுக்கான முயற்சியில் ஈடுபட மாட்டார்கள்.ஏன்...?//


கண்டிப்பாக முயற்சி இல்லாதவர்களிடம் பணம் வந்து சேர்வதில்லை இதை நான் பலரிடம் கடிந்தும் கூறியுள்ளேன் அதைப்பற்றி வரும் இடுகையில் பார்க்கலாம்

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

ஏழை பணக்காரன் என்பதை நான் உணர்வுபூர்வமாக பார்க்கிறேன்!

தினம் பிரச்சனைகளோடு பணக்காரனாக இருக்க விருப்பமா?
ஏழையாக இருந்தாலும் நிம்மதியாக இருக்க விருப்பமா?

நான் நிம்மதியாக இருக்கிறேன்!//

வாங்க நண்பா,.. பிரச்சனைகள் என்று சொல்வதைவிட சவால்கள் என்று சொல்லலாமே. சாவால்களை சந்திப்பதிலும் இன்பமே. சவால்களை எதிர்கொள்ள திரணியில்லாமல் ஏழையாகவே இருக்கலாம் என்பது நல்லதா?

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...

நல்ல இடுகை. உடன் சிந்திக்கச் செய்கிற எழுத்து.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்.வல்லான் பொருள் குவிப்பதை விதியென்று கூறி ஒளிந்து கொள்ளல் பாவம்.//

வணக்கம் நண்பா.. உங்கள் பாராட்டுக்கு நன்றி.
"வல்லான் பொருள் குவிப்பதை விதியென்று கூறி ஒளிந்து கொள்ளல் பாவம்" அருமை...
அதே போல் முயற்சி செய்யாமல் ஏழையா இருப்பதும் பாவமே..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல இடுகை!

ஆதங்கம் இயல்பானது, நியாயமானது!

தொடர்ந்து கலக்குங்கள் ஞானம்.

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல இடுகை!

ஆதங்கம் இயல்பானது, நியாயமானது!

தொடர்ந்து கலக்குங்கள் ஞானம்.//

மிக்க நன்றிங்க

தேவன் மாயம் said...

நில உச்சவரம்பு சட்டங்களின் தேவையை இந்தியா மட்டும் ஏன் புரிந்துகொள்ளவில்லை. சட்டங்களும் அதிகாரங்களும் இன்னும் அதிகார வர்க்கத்தினரிடம் இருப்பதால் எல்லாமே உடப்பில் போடப்படுகின்றது. உலக பணக்கார வரிசையில் இந்தியர்கள் பலர் இருக்கின்றனர். ///

நிலத்தில் இருந்த பழங்குடியினர் ஏழையாகவே இருப்பதும் முதலாளிகள் பெருத்து இருப்பதும் எங்கும் இருக்கிறது... வருந்தவேண்டிய விசயம்!!

ஆ.ஞானசேகரன் said...

[[ தேவன் மாயம் said...

நில உச்சவரம்பு சட்டங்களின் தேவையை இந்தியா மட்டும் ஏன் புரிந்துகொள்ளவில்லை. சட்டங்களும் அதிகாரங்களும் இன்னும் அதிகார வர்க்கத்தினரிடம் இருப்பதால் எல்லாமே உடப்பில் போடப்படுகின்றது. உலக பணக்கார வரிசையில் இந்தியர்கள் பலர் இருக்கின்றனர். ///

நிலத்தில் இருந்த பழங்குடியினர் ஏழையாகவே இருப்பதும் முதலாளிகள் பெருத்து இருப்பதும் எங்கும் இருக்கிறது... வருந்தவேண்டிய விசயம்!!]]

ம்ம்ம் உண்மைதாங்க தேவன் சார்..
மிக்க நன்றிங்க

Unknown said...

//"பொருள் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருப்பவரிடம் பொருள் வருவதுமில்லை" //

இது மட்டும் போதுமே... இதை விட இலகுவாக கூற முடியுமா ஏழைகளின் பிரச்சினைகளை...???
நல்ல சமூக ரீதியிலான சிந்தனையுடைய பதிவு...

ஆ.ஞானசேகரன் said...

// கனககோபி said...

//"பொருள் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருப்பவரிடம் பொருள் வருவதுமில்லை" //

இது மட்டும் போதுமே... இதை விட இலகுவாக கூற முடியுமா ஏழைகளின் பிரச்சினைகளை...???
நல்ல சமூக ரீதியிலான சிந்தனையுடைய பதிவு...//

ஊங்களின் முதல் வருகை எனக்கு மகிழ்ச்சியே

"உழவன்" "Uzhavan" said...

அங்கங்கு கொடுத்த பாடல் வரிகள் எழுத்தை மேலும் அழகு சேர்க்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...

அங்கங்கு கொடுத்த பாடல் வரிகள் எழுத்தை மேலும் அழகு சேர்க்கிறது.//

மிக்க நன்றி நண்பா...