ஒரு பொருள் ஒரே இடத்தில் இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கலாம்? அந்த பொருளை வேறு நிலைக்கு மாற்ற என்ன தேவைப் படுகின்றது?

வணக்கங்க,.. நாம் நடக்கின்றோம், ஓடுகின்றோம், அதற்கு நம்முடைய கால்கள் தேவையாகின்றது. கால் மட்டும் இருந்தால் போதுமா? நாம் நடக்க, ஓட வேறு என்ன காரணிகள் தேவையாகின்றது. " அவனின்றி ஒரு அணுவும் அசையாது" என்பார்கள். ஆனால் ஆற்றல் இன்றி இங்கு ஒன்றுமே இல்லைங்க. அந்த ஆற்றல்தால் கடவுளாக சொல்லுகின்றார்களோ என்னவோ? இந்த அண்டம் என்பது ஆற்றலின் கூடாரம். நாம் அண்டத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆற்றலை பற்றி முன்பே சொல்லியுள்ளோம். அதன் சுட்டி இதோ ஏன்? எதற்கு? எப்படி?..... 2
இப்போ! ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் என்ன அர்த்தமாக இருக்கும்? அந்த பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு என்ன தேவையாகின்றது? அந்த பொருளை இடம் மாற்ற வேண்டும் என்றால் தள்ளுகின்றோம், இழுக்கின்றோம். அந்த தள்ளுதல், இழுத்தல் 'விசை'யின் அடிப்படையாக உள்ளது. ஒரு பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு விசை தேவையாகின்றது.
ஆமாம் விசை என்றால் என்ன? அதை காண முடியுமா? விசையை பார்க்கவோ, ருசிக்கவோ முடியாது. அதன் விளைவை மட்டுமோ உணரமுடியும். ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு உண்டாக்கும் விளைவைதான் காணமுடியும். அதன் மூலம்தான் விசையை விளக்க முடியும். அதேபோல ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் அந்த பொருளின் மேல் எந்த புறவிசையும் தாக்காமல் இருக்கின்றது என்பது அர்த்தம். தொடர் இயக்க நிலையில் இருக்கும் பொருளும் நிலையான பொருள் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்க நிலையில் உள்ள பொருளை நிறுத்தவோ அல்லது திசை மாற்றவோ விசை தேவையாகின்றது. நிலையாக இருக்கும் பொருளில் எப்பொழுதுமே நிலையான உராய்வு விசை செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த உராய்வு விசைக்கு சாமமான புறவிசை செயல்படும்பொழுது அந்த பொருள் நிலையாகவே இருக்கின்றது.
விசையை பற்றி கலிலியோ, நீயூட்டன் இருவரும் பல ஆய்வுகள் செய்து விசையை பற்றிய விதிகளும் சொல்லியுள்ளார்கள். ஒரு பொருளின் மீது விசை செயல் படாதவரை அந்த பொருள் மாறாத வேகத்தில் இயங்குவதாக கலிலியோ கூறியுள்ளார். நியூட்டன் தம் பங்கிற்கு விசையை பற்றி மூன்று விதிகளையும் கூறியுள்ளார். அதை நீயூட்டன் விதி என்று அழைக்கின்றோம்.
விசையை பற்றி ஓரளவிற்கு புறிந்துகொண்டோம்...... ஒரு சின்ன கேள்வி நாம் காரில் (மகிழுந்து) செல்கின்றோம், ஓட்டுனர் திடீர் என்று காரை நிறுத்தும் பொழுது நாம் ஏன் முன்னோக்கி சாய்கின்றோம்?
மேலும் ஏன்? எதற்கு? எப்படி?... தொடரும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்