_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, July 31, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1

குடிநீரும் அதன் அவசியமும் சொல்ல தேவையில்லை. தாவரங்கள் முதல் மனிதன் வரை உயிர்வாழ மிக அவசியமானதாகும். மனிதனின் உடலில் பிரதான சக்தி நீராக இருக்கின்றது.


மனிதன் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தேவை நீர். நம் பூமியானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டிருந்தாலும். மனிதனின் தேவைக்கு மழை நீரையும், நிலத்தடி நீரை பயன்ப்படுத்த வேண்டியுள்ளது. கடல் நீர் உப்புத்தன்மையும் கடினதன்மையும் உள்ளதால் நேரடியாக விவசாயத்திற்கோ இல்லை குடிநீராகவோ பயன்படுத்த முடியவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் இருந்தும் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. இதன் செலவினங்கள் அதிகம்.. ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள். உபரியாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து குடிநீராக்கும் திட்டங்களை கொண்டு வரலாமே!

மனிதன் நாகரிகம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி என்றால் இந்த நூறு வருடங்களை எடுத்துகொள்ளலாம். அதிலும் அதீத வளர்ச்சி என்றால் ஒரு 50 வருடங்களை சொல்லலாம். அந்த 50 வருடங்களில் 40 வருடங்களை நான் கடந்து வந்ததில் எனக்குள் மகிழ்ச்சியே. நான் கண்ட குடிநீர் மாற்றங்களையும் பிரச்சனைகளையும் சொன்னாலே போதுமானதாக இருக்கலாம்.

ஆதிகால மனிதன் நாடோடியாக காடுகளில் சுற்றி திரிந்துக் கொண்டும் கண்ணில் கண்ட பழங்கள் கிழங்குகளை உண்டும் வாழ்த காலங்களை தாண்டி, என்று மனிதன் குழுக்களாக ஓர் இடத்தில் தங்கி வாழத்தொடங்கினானோ அன்றுதான் மனித நாகரிகமும் வளர்ச்சிக் கண்டது. அதேபொல் அவனால் உண்டாக்கப்பட்ட கழிவுகளும் பிரச்சனைகளாக உருவாகிவிட்டது.

இயற்கையான கழிவுகளை இயற்கையே சமன் செய்துவிடும். ஆனால் மனிதன் நாகரிக வளச்சிப்பாதையில் உண்டான தொழிற்ச்சாலை வேதியியல் கழிவுகள் நதியிலும் ஆற்று படுகைகளிலும் கலந்து விடப்பட்டன. இதனால் நதிநீரும் மாசுப்பட்டது அதனைச் சார்ந்து நிலத்தடிநீரும் உவர்ப்பானது. இதன் காரணமாக பல நோய்களும் வர ஆரம்பித்துவிட்டது. 65 சதவிகிதம் நோய்கள் நீரினால் பரவுகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாம் வரலாற்று பாடங்களில் படித்துள்ளோம், குளங்களை வெட்டினார் அணைகள் கட்டினார்கள் ஆனால் இன்று நடப்பது குளங்கள் தோரும் துண்டு போட்டு வீடுகள் கட்டினோம். தப்பி தவறி இருக்கும் குளங்கள் தூரு வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

நான் சிறுவனாக இருக்கும் பொழுது வயல்களில் களைப்பறிக்கும் என் பாட்டிக்கு சோறு எடுத்து செல்வதுண்டு. அப்பொழுது குடிக்க தண்ணீர் எடுத்து செல்வதில்லை வயல்வெளிகளில் உள்ள வாய்க்காலில் வரும் தண்ணீரை மேலாக வரும் தூசிகளை நீக்கிவிட்டு ஒரு குவளையில் எடுத்து குடிப்பார்கள். நானும் குடித்துள்ளேன் அந்த தண்ணீரின் சுவையை இன்று நான் சுவைக்கவில்லை. மழை நீர் மற்றும் காட்டாற்று தண்ணீரை சேமித்து வைப்பதுதான் அந்த குளம். குளத்தின் நீர் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படுகின்றது. சிறு சிறு மாசுகள் கலந்திருப்பினும் இயற்கையே அதை சமன் படுத்திவிடும். ஆனால் இன்று மனித கழிவுகளும் பக்கத்து தொழிச்சாலையில் வரும் கழிவுகளும் நேரடியாக கலந்துவிடுகின்றது. இதனால் அந்த ஊரின் நிலத்தடிநீரும் உவர்ப்பாகிவிடுகின்றது.

மனித நாகரிக வளர்ச்சிதான் இந்த சீர்கேடுக்கு காரணம் என்று சொல்வதிற்கில்லை. நாகரிக வளர்ச்சியையும் நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும். அதே வேலையில் தொலை நோக்குப்பார்வையில் சில நடவடிக்கைகளும் நாம் மேற்கொண்டால்தான் இந்த பூமியை நாளைய தலைமுறைக்கும் விட்டு செல்ல முடியும்.

தனிப்பட்ட மனிதனின் முன்னேற்ற வழிகளை அவனால் பார்த்துக்கொள்ளமுடியும். பார்த்துக்கொள்ளதான் வேண்டும். ஆனால் குளங்களை வெட்டுவது, அவற்றை தூர்வாறுவது, நதிகளின் போக்கை பயன்படும்படி நடவடிக்கை எடுப்பது, அணைகள் கட்டி பாசன வசதியை அதிகப்படுத்துவது எல்லாம் நாம் நமக்காக ஏற்படுத்திய அரசுதான் செய்ய வேண்டும். அதுதான் அரசின் தலையான கடமையும் கூட. நாம் காண்பது இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குதல், இலவச வேட்டி சேலை வழங்குதல்.

முன்பெல்லாம் ஊர் திருவிழாக்களில் தண்ணீர் பந்தல் வைப்பார்கள். எனக்கு தெரிந்து கோடைக்காலங்களில் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல் ஒரு சேவையாக செய்வார்கள். ஆனால் இன்று குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான் இன்றைய மிகப்பெரிய கவலை. இந்த நிலை வெறும் பத்தாண்டுகளில் தான் நடந்துள்ளது என்றால் நாம் எதோ ஒன்றை தவறவிட்டுவிட்டோம் என்பதுதான் உண்மை.

எங்கள் ஊரில் ஒரு குளம் ஒன்று இருக்கும் . இந்த குளத்தில் மழையின் நீரை தேக்கி வைக்கப்பட்டிருக்கும் . இந்த குளத்தை குடிநீருக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த நீர் பார்ப்பதற்கு செம்மண் நிறத்தில் இருக்கும் ஆனால் அதன் சுவை தீத்திப்பாக இருக்கும். இந்த செம்மண் நிற தண்ணீரை மண்பாண்டத்தில் எடுத்துவந்து தேத்தாங் கொட்டையை பானையினுள் சிறிது நேரம் உரசுவார்கள் செம்மண் நிறம் திரிந்து வெளிராகும். பின்பு ஒரு துணியில் வடிக்கட்டி குடிநீராக பயன்படுத்துவார்கள். எங்கள் ஊருக்கு வருபவர்கள் தோத்தாங்கொட்டை தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். காலமும் நாகரிக வளர்ச்சியும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை மறக்கடிக்க செய்துவிட்டது என்று நினைக்கின்ற பொழுது கொஞ்சம் மனம் கலங்கத்தான் செய்யும்.

காலங்களின் வளர்ச்சினால் மனிதன் பெரிய பெரிய கட்டிடங்களிலும் தனித்தனி வீடுகளிலும் வசிக்க ஆரம்பித்தான். அதே போல் வீடுகளில் தனியாக குளியல் அறை, கழிவறை என்ற அமைப்புக்கு சென்றான். (இன்னும் கழிவறை இல்லா வீடுகளும் இருக்கு அதே போல் திறந்த வெளியில் மலம் போக்கும் நிலையும் இருக்கு என்பதும் கசப்பான உண்மை) இதனால் தண்ணீரின் பயன்பாடும் அதிகரித்தது அதனுடன் அதன் கழிவுகளும் அதிகரித்தது. இப்படி வரும் கழிவுகளை முறையற்ற நிலையில் மறுபடியும் நதிகளிலும் ஆறுகளிலும் கலந்துவிடுவதால் வந்த நிலைதான் இன்றைய சுகாதரமற்ற குடிநீருக்காண காரணங்கள்.

தாகம் என்று வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதும் . தண்ணீர் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்வதும் மக்களின் பண்பாடாக இருந்தது. ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கி தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை. இவற்றிக்காண காரணங்களை வரும் இடுகைகளில் யோசிப்போம்.....

அதுவரை அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

என் இடுகைக்கு பின்னர் வந்த தினமலர் செய்தி... கண்டிப்பாக படித்து தெரிந்துகொள்ள வேண்டியவை சுட்டியை அமுக்கி படிக்கவும்..

அழிவின் விளிம்பில் கொடைக்கானல் ஏரி

Thursday, July 30, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்.... பகுதி-1

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1

நீர் இல்லா நிலையை இந்த பூமியில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதேபோல் நீர் இல்லாமல் உயிரின் ஒரு அணுவும் அசையாது என்பதும் உண்மையே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமி வெறும் பாறையாகதான் இருந்ததாக அறிவியல் சொல்கின்றது. அப்பொழுது எந்த உயிர்களும் இல்லை. முதலில் செடி கொடிகள்தான் இந்த பூமியை கண்ட உயிர் என்றே சொல்கின்றார்கள். இதற்கெல்லாம் மூலமாக இருப்பது நீர். இந்த செடி கொடிகள்தான் சுவாசித்தலின் மூலம் ஆக்ஸிசனை (O2) வெளியிட்டு பூமியில் ஆக்ஸிசனை நிறப்பியது. இந்த ஆதாரம்தான் மனிதனை போல விலங்கினங்கள் உருவாக காரணமாக இருந்தது.

பூமி பந்தின் நிலப்பரப்பு தற்பொழுது இருப்பது பல மாற்றங்களுக்கு பிறகு வந்த நிலைதான். அதற்கு முன் இந்தியா ஆசியா கண்டத்திலேயே இல்லை ஆப்ரிகாவுடன் இணைந்திருந்தது. இயற்கையின் பல மாற்றங்களுக்கு பின் உருவானதுதான் இன்றைய உலகம். பூமி பந்தின் மைத்தியில் வயிற்று பகுதியை தவிர வடக்கிலும் தெற்கிலும் எல்லாமே பனி பாறைகள்தான். இவற்றை பனி பாலைவனங்கள் என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட பனிப் பாலைவனங்களை மனிதன் வாழ்வதற்கு தவிர்க்கப்பட்டது. இயற்கை செய்த விளையாட்டில் சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெப்பஉயர்வு பூமி பந்தின் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டதாக அறிவியலர்கள் கூறுகின்றார்கள். அந்நாளில் ஏற்பட்ட வெப்ப உயர்வு உலகின் பருவநிலையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டது. இந்த நிகழ்வுதான் நாகரிகத்தின் ஆதாரமாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.

அந்த பருவநிலை மாற்றங்கள் உலகில் தொடர்ந்தது. அந்த மாற்றம்தான் உலகை மாற்றியமைக்க முதன்மையான காரணமாக அமைந்துவிட்டது. தெற்கிலும் வடக்கிலும் உள்ள பனிப்பாறைகள் வெப்ப உயர்வு காரணமாக உருக ஆரப்பித்தது. பனி உருகி நீராகியது. நீர் நதிகளாகி கடலில் கலந்தது. அதனால் கடல்மட்டம் உயர்ந்தது.

வெப்ப அதிகரிப்பால் கடல் நீர் நீராவியாக மாறி மேலே கிளம்பி பின் மழையாக கொட்டியது. இதனால் ஏரி , குளங்கள் நதிகளாக ஓட ஆரம்பித்தது. இந்த நதிக்கரைதான் மனித நாகரிக வளர்ச்சியின் ஆதாரம். இந்த நதிக்கரை நாகரிகம்தான் மனித வரலாற்றை மாற்றியமைக்கப்பட்டது என்றே சொல்லலாம். இதற்கு பின் பருவநிலை மாற்றங்கள் உருவாகின.

இந்த பனி உருகல் சுமார் 3000 ஆண்டுகள் தொடர்ந்ததாக கணக்கிடப்படுகின்றது. இதனால் நதிகளும் ,கிளை நதிகளும் உருவாகின அதனோடு மனித நாகரிகமும் வளர்ச்சிப்பெற்றது. அதே போல் கடல் மட்டம் உயர்வால் பல நிலப்பரப்புகள் துண்டிக்கப்பட்டது, பல நீரினால் மூழ்கடிக்கப்பட்டது. நதிகள் போக்கால் நிலப்பரப்பும் நகர்த்தப்பட்டது. இப்படிப்பட்ட நிகழ்வுக்கு பின் உருவானதுதான் இன்றைய உலகப்படத்தில் காணும் உலகம். நதிகள் பொதுவாக மேற்கிலிருந்து கிழக்காக ஓடி கடலில் கலக்கும் இதற்கு பூமி பந்தின் வலம் சுழற்சியே காரணம்.

பூமியில் நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல் நீர் உவர்ப்பாக இருக்கும். நீருக்கு சுவையும் மணமும் கிடையாது என்றாலும் அந்த நீர் இருக்கும் நிலத்தின் தன்மையைக்கொண்டு சுவையும் மணமும் இருக்கும்.

உயிர்கள் வாழ நீர் மிக முக்கியம் . நீரை நன்னீர், கடினநீர் எனப்பிரிக்கலாம். நன்னீரில் வேதி உப்புகளும் திண்ம உலோகங்களும் குறைவாக இருக்கும். இந்த நீர்தான் மனிதன் குடிப்பதற்கும் வேளாண்மைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

நன்னீர் எங்கெல்லாம் கிடைக்கின்றது? நதி, ஏரி,குளம், ஊற்று, நிலத்தடியில், கேணிகள் மூலம் கிடைக்கின்றது.

நன்னீர் எப்படி உருவாகின்றது? பனி உருகுதல் மூலமும், மழையினாலும் நன்னீர் கிடைக்கின்றது.

நன்னீரின் நிலை என்ன? நன்னீர் மூன்று நிலைகளில் காணலாம். நீர்,பனிகட்டி,நீராவி ஆகும். இது மூன்றையும் ஒரே நேரத்தில் காண்பது அரிது. ஆனால் 4 டிகிரி செல்சியசில் இந்த மூன்றையும் காணலாம்..!

இப்படிப்பட்ட நன்னீர்தான் நாம் உயிர்வாழ பயன்ப்படுகின்றது. கடலிருந்து சூரியவெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று பின் குளிர்ந்து மழையாக பெய்கின்றது இதில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியிருந்தும் குடிநீருக்காக நாம் இன்று சிரமப்படுவதேன்?

இயற்கையாக கிடைக்கும் நன்னீர் மற்றும் நிலத்தடிநீருக்கு மனிதனால் ஏற்பட்ட தீங்குதான் என்ன? இவற்றையெல்லாம் சிந்திப்பதற்குதான் இந்த இடுகையின் நோக்கம். அன்று ஏற்பட்ட வெப்ப உயர்வால் ஏற்பட்ட மாற்றம்தான் இன்றைய நாகரிகம். ஆனால் இன்று மனிதனால் ஏற்பட்ட இயற்கை அழிவால் ஏற்பட்ட மாற்றத்தால் உலகம் வெப்பம் சிறிது உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் வெப்பம் உயர்ந்துகொண்டே இருக்கின்றது. இவற்றால் நன்மையா? தீமையா?. பொதுவாக மனித உயிர்களுக்கு தீமைதான் இதை தடுக்க வேண்டும் என்று சொல்கின்றது பொது அறிவியல். இன்றைய நிலையில் பருவநிலை மாற்றங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். நீரினால் நோய்கள், குடிநீருக்காக போராட்டங்கள். காசுக்கு வாங்கி நீரை குடிக்கும் நிலை மனிதனுக்கு மனிதனே காரணமாகின்றான். நீரை தனி ஒரு பொருளாக உருவாக்கவும் முடியாது என்பதுதான் உண்மை.

2025ல் ஆசியா ஆப்பிக்கா நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் உருவாகலாம் என்று கணக்கிடப்படுகின்றது. ஏன் நீருக்காக ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்கும் காலமும் வரலாம் என்று எச்சரிக்கை விடப்படுக்கின்றது. இருந்தாலும் மக்களிடம் எந்த விதமான விழிப்புணர்வும் வரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான ஒன்று. வளர்ந்துவரும் நாடுகள் கூட இதைப்பற்றி பெரிதுப்படுத்திக்கொண்டதாக தெரியவில்லை. வளர்ந்த நாடுகளோ நமக்கென்ன என்ற நிலையில் இருக்கின்றது.

குடிநீர் எப்படி மாசுப்படுகின்றது? நிலத்தடிநீர் குறைய காரணம் என்ன? உலக வெப்ப மயமானதிற்கும் குடிநீருக்கும் தொடர்பு உண்டா? இதை தடுக்க நாம் செய்ய் வேண்டிய கடமை என்ன? என்பதை பற்றி அடுத்து வரும் இடுகைகளில் பார்க்கலாம்.

அதுவரை அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

(சில ஆதாரங்கள் மதன் எழுதிய கிமு. கிபி தொடரில் எடுக்கப்பட்டது.)

Monday, July 27, 2009

மொழியில் "களை" எடுப்போமா!...

மொழியில் "களை" எடுப்போமா!...

என்மகளுக்கு வயது நான்கு அவள் பேசிகொண்டுள்ளதை நான் கவனித்துக்கொண்டு இருந்தேன். பல வார்த்தைகள் அவள் வயதிற்கு மிகுந்த வார்த்தைகளை சொன்னாள். உதாரணமாக "ஏய் இங்க பாரு வினோதமான பூச்சியை" " இதை பார்க்க அபூர்வமாக இருக்கே" இப்படி பல. அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளை கண்டிப்பாக எங்களிடம் கற்றுகொள்ளவில்லை நாங்கள் இப்படி பேசியதும் கிடையாது. பிறகுதான் புரிந்துக்கொண்டேன் இது எல்லாம் சுட்டி தொலைக்காட்சியின் மகிமை என்று. ஆமாங்க ஒரு தொலைக்காட்சி மூலமாகவோ, வானொலி மூலமாகவோ, பத்திரிக்கைகள் மூலமாகவோ புதினங்களை சுலபமாக பதியவைக்க முடியும் என்பது உண்மை.

இப்ப சொல்லுங்க தூய தமிழ் சொற்களை இப்படி பட்ட ஊடகங்களால் மக்கள் மனங்களுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாதா? கண்டிப்பாக முடியும் ஆனால் ஏன் செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை. நாம் எப்படி எப்படியோ திட்டமிட்டு தமிழில் கலந்துள்ள வடமொழி சொல் மற்றும் ஆங்கில சொற்களை களைவது என்பது காலம் கைகொடுக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற ஊடகங்களால் முடியும் அதற்கு அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும். சும்மானாச்சிக்கும் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதெல்லாம் வெற்று பிதற்றல். தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்று ஒரு துறை இருக்கின்றது, அந்த துறை இதுபோல பரிந்துரைகளை செய்தால் நன்றாக இருக்குமே.


தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது. இதிலிருந்தது என்னால் உணரமுடிந்தது அரசு முனைப்பாக தமிழ் சொற்களை பரிந்துரை செய்தால் மொழி கலப்பில் இருக்கும் வார்த்தைகளை மனங்களிலிருந்து களைந்து தூய தமிழை உருவாக்க முடியும். சட்டங்கள் தேவையில்லை முனைப்பான பரிந்துரை செயலாக்கம் போதுமானதே.

பல தமிழ் நாளிதழ்கள் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருப்பதால், அப்படிபட்ட நாளிதழ்களில் வடமொழி சொற்களை கையாண்டு மறைமுகமாக தமிழை மெல்ல அதன் சிறப்பை இழக்க வைக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்ககூடியது. இவற்றையெல்லாம் அரசு கவணத்தில் கொண்டு சிறப்பான செயல்பாடுகளால் தூய தமிழை கொண்டுவர முடியும் என்பது என் எண்ணம்.

Pant ன் மேல வேட்டியை கட்டிக்கொண்டும் சும்மா ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு செய்தி வாசித்தால் மட்டும் பத்தாது தமிழ் வார்த்தைகளை உர‌க்க சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இணையத்தின் மூலம் பதிவர்களிடம் சில நல்ல வார்த்தைகளும் பழக்கத்தில் இருக்கின்றது. உதாரணமாக விடயம், பகிர்வு, இடுகை, பதிவு, காணோளி போன்ற வார்த்தைகள். இவர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டாலும் மொக்கைகள் என்ற பெயரில் ஆங்கில சொற்களை கையாண்டும் வருகின்றோம். இவற்றைகளையும் தவிர்க்க உறுதி எடுத்தல் நல்லது.

மொழி என்பது அவனின் அடையாளம்...
மொழி என்பது அவனின் சமுக கலாச்சாரம்..
மொழிக்கலப்பினால்,
அவனின் அடையாளம் சிதையும்..
அவனின் சமுக கலாச்சாரம் அழியும்..

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.

Friday, July 24, 2009

கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!.... எப்படி?

கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!.... எப்படி?

பள்ளிகூடம் போகும்பொழுது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் உள்ள மாங்காய் மரத்தில் யாரும் பார்க்காவண்ணம் கல்லெறிந்து எடுத்த மாங்காயை பக்குவமாய் கொண்டு வந்த உப்புடன் தொட்டு சாப்பிட்ட ஞாபகம் இல்லாமலா போகும்.

டேய்.. சன்னல் கண்ணாடி இருக்கு பார்த்து கல்லெறிடா என்று சொன்னதும் சரியாக சன்னல் கண்ணாடியை பதம்பார்த்தான் ஒருத்தன். வீட்டுகாரன் விரட்டிவர ஓடி மறைவோம் ஒரு நொடியில்.... அத்தனையும் பால்ய ஞாபகம்.

கல்லெறிந்தது என்னவோ மாங்காவிற்காக ஆனால் உடைந்ததோ கண்ணாடி...


அதெல்லாம் சரி ரெண்டு மாங்காய் எப்படி?
சுட்டியை சுட்டுங்கள்.......
கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Wednesday, July 22, 2009

யாரும் யாருக்காகவும்!...

யாரும் யாருக்காகவும்!...

நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் பழமொழி " பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்" என்பது. உண்மைதான் சிலர் வேலை செய்யும் இடங்களில் " நான் இல்லை என்றால் இந்த வேலை நடக்க வாய்ப்பே இல்லை " என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள், அப்படிதான் அவர்கள் நடவடிக்கையும் இருக்கும். இதை நான் மட்டுமே சிறப்பாக செய்வேன், நான் இல்லை என்றால் ஒன்றுமே நடக்காது என்று வரிந்து வரிந்து சொல்லிக்கொள்வார்கள். அதே போல குடுப்பங்களிலும் என்னால்தான் எல்லாம், நான் இல்லை என்றால் இங்கு ஒன்றுமே நடக்காது என்ற நிலையில் பேசுவார்கள்.

இதை பார்க்கும் பொழுது நான் படித்த ஜென் கதை ஒன்றுதான் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு ஜென் துறவிக்கு துணையாக ஒரு சிஷியன் இருந்தான். அன்று அந்த சிஷியன் சோகமாக இருந்தான், அதை பார்த்த துறவி " ஏன் நீ இன்று சோகமாக இருக்கின்றாய்
உனக்கு என்ன பிரச்சனை " என்று அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "குருவே எனக்கும் உங்களை போல் இயல்பு வாழ்க்கை வெறுக்கின்றது நானும் உங்களை போல துறவியாகி விடலாம் என்றே தோன்றுகின்றது" என்றான். அதற்கு அந்த துறவி " அதற்காக ஏன் சோகமாக இருக்க வேண்டும்" என்றார். " நான் துறவி ஆகதான் விருப்பம் ஆனால் என்னை நம்பிதான் என் மனைவி மக்கள் இருக்கின்றனர், என் தாய் தந்தையரை நினைத்தால் பயம் வந்துவிடுகின்றது" என்று கூறினான்.

அதற்கு அந்த துறவி" நீ அதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றாயா?" என்று கேட்டார், சரி என்று ஒப்புகொண்டான். பிறகு அவனுக்கு மரண நிலையில் இருக்கும் ஆசனம் ஒன்றை அவனுக்கு கற்றுக்கொடுத்தார். பின் அவனிடம் " நீ உன் வீட்டிற்கு சென்று இந்த ஆசனத்தை பயன்படுத்தி படுத்துக்கொள்" என்று அனுப்பிவிட்டார். அவன் வீட்டிற்கு சென்று ஆசனத்தை பயன்ப்படுத்தி படுத்துக்கொண்டான். வீட்டில் உள்ளவர்கள் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அழுதுகொண்டிருந்தார்கள்.

அந்த வழியாக ஜென் துறவி வந்தார், அழுதுகொண்டிருந்தவர்களை பார்த்து " அவன் உயிர் பெற வேண்டும் என்றால் உங்களில் யாராவது உங்கள் உயிரை கொடுத்தால் போதும் நான் அவனை உயிர்ப்பெற செய்கின்றேன்" என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக உயிர் வாழ வேண்டும் என்பதாக சொல்லி பின்வாங்கினார்கள்.

அதற்குள் அவன் மனைவி உரத்த குரலில் " யாரும் இவருக்காக சாக வேண்டாம், இவர் இல்லாமலே எங்களால் வாழமுடியும், அவர் இல்லாமலே காலத்தைக் கழிப்போம்" என்று கூறினாள்.

ஆம்! யாரும் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியம் இல்லை, வாழவுமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை ஒப்புக்கொள்ளதான் மனம் தயக்கம் காட்டுகின்றதே தவிற வேறொன்றுமில்லை. நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும். இதற்கிடையில் இருப்பது தான் பந்தம், பாசம், உறவுகள் எல்லாம். தாய், தந்தை, மகன், மகள் உறவுகள் எல்லாமே ஏதோ ஒன்றை மற்றவரிடம் எதிர்ப்பார்த்துதான் வாழ்க்கையும் ஓடுகின்றது. இந்த எதிர்ப்பார்ப்பு இல்லை என்றால் உறவுகள் கூட நொருக்கிவிடுகின்றது.

யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்றுவிடுவதுமில்லை.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

நன்றி யூத்புல் விகடன்

Tuesday, July 21, 2009

ஓர் காணோளி பகிர்வு..

ஓர் காணோளி பகிர்வு..

இன்று மின்னஞ்சலில் ஒரு காணோளிப் பார்த்தேன்,...
மனதிற்கு ஏதோ ஒன்றை சொன்னது, அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசை..


Monday, July 20, 2009

இயற்கை....

இயற்கை....

ஒரு விதை
ஒன்றை விதைத்தேன்,
தண்ணீர் விட்டேன்
....

செடியானது
பூவானது
காயானது
கனியானது...

நான் விதைத்த
விதை ஒன்று
விதையானது....


( நண்பர்களின் ஆலோசையின்படி ஒன்னு ஐ ஒன்றாக மாற்றிவிட்டேன்)


ஆ.ஞானசேகரன்.

Sunday, July 19, 2009

வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)

வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)

வாங்க நண்பர்களே, மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சினா அது மத்தவுங்கள மகிழ்விற்கின்றது. (திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் பொன்மொழி) அந்த வாய்ப்பை வலைச்சரம் பொருப்பாசிரியர் சீனா ஐயா எனக்கு அளித்தார். சென்ற வாரத்தில் "பதிவர்களின் அறிமுகம்" என்று வலைச்சரத்தில் அந்த பணியை செய்தேன். ஊக்கம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இப்ப நடக்கின்றது விருது கொடுத்து விளையாடும் விளையாட்டு. இந்த ஊக்கம்மான வலைப்பதிவு விருது செந்தழல் ரவி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகின்றது. இப்படி ஒருவரால் ஒருவருக்கு ஊக்கப்படுத்தும் இந்த விளையாட்டு விருதிற்கு வாழ்த்துகள் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட விருது எனக்கும் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியே.
மூன்று பேர்கள் எனக்கு இந்த விருதை கொடுத்துள்ளார்கள்: சும்மா வலைதளத்தின் சொந்தகாரர் வலசு-வேலணை என்ற நண்பரும், குறை ஒன்றும் இல்லை !! என்ற தளத்தின் சொந்தகார நண்பரும், தமிழ்த்துளி தளத்தின் சொந்தகாரர் தேவன் மாயம் சார் அவர்களும் இந்த ஊக்கமான வலைப்பதிவு விருதை (Interesting Blog Award) எனக்கும் அளித்துள்ளார்கள். இதன் விதிப்படி இந்த விருதை ஆறு நண்பர்களுக்கு கொடுக்க வேண்டுமாம். அப்படி பார்த்தால் கூடிய விரைவில் எல்லோருக்கும் இந்த விருது கிடைத்துவிடும் என்றே தோன்றுகின்றது.

இப்பதான் வலைச்சரம் பதிவர்கள் அறிமுகம் முடித்துவிட்டு வந்த எனக்கு மீண்டும் ஒரு சோதனை, நான் யாரை தேடி கொடுப்பதென்றே தெரியவில்லை. அதற்குள் பலர் விருது வாங்கியும் விட்டார்கள்.

1. அகநாழிகை (பொன்.வாசுதேவன்)

2. எழுத்தோசை (தமிழரசி)

3. வானம் வெளித்த பின்னும் (ஹேமா)

4. வால் பையன் (வால் பையன்)

5. லக லக லக (நையாண்டி நைனா)

6. பொன்னியின் செல்வன் (கார்திகைப் பாண்டியன்)

இவர்கள் இந்த விருதிற்கு பொருத்தமானவர்கள் எனவே இந்த ஊக்கமான வலைப்பதிவு விருதை அன்புடன் வழங்குகின்றேன்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Sunday, July 12, 2009

அன்புடன் ஓர் அழைப்பு...

அன்புடன் ஓர் அழைப்பு...


அதாகப்பட்டது என்னவென்றால் அன்புக்குறிய சீனா ஐயா அவர்கள் ஒரு வார காலம் (சூலை 13ம் நாள் - திங்கள் முதல் - 19 - ஞாயிறு வரை) வலைச்சரத்திற்கு "எழுத்தோசை தமிழரசியை" தொடர்ந்து என்னையும் ஆசிரியராக பொறுப்பேற்க அன்பு வேண்டுகோள் விடுத்தார். ஐயா மேல் இருக்கும் மரியாதையின் காரணமாகவும், உங்கள் எல்லோருடைய அன்பு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலும் இந்த பொறுப்பை ஏற்கின்றேன்.

எனவே நாளை(13-07-2009) முதல் ஒரு வாரத்திற்கு நாம் வலைச்சரத்தில் சந்திக்கலாம்.
வலைச்சரம் சுட்டியை சுட்டவும்......

என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்

தடுக்கி விழுந்தால் விதி என்ன செய்யும்?...சிந்தனை சிதறல்கள்

தடுக்கி விழுந்தால் விதி என்ன செய்யும்?...சிந்தனை சிதறல்கள்

எனக்குள் இருக்கும் இந்த விதியை பற்றிய சிந்தனையில் விதியை படைத்தவன் யார்? கடவுளா? இல்லை மனிதனா? கண்டிப்பாக மனிதன்தான். கண்ணுக்கு தெரியாத ஒன்றையும் மனிதனுக்கு புலப்படாத ஒன்றையும் கூறிக் கொள்வதிற்குதான் மனிதன் இந்த விதி பயன்படுத்துகின்றான். விதிக்கு கடவுளை போல எல்லையில்லை அப்படி எல்லை வகுத்துக் கொள்வோமேயானால் விதியும் கடவுளும் நம் கைகளில்தான். எல்லையில்லா விதியை வெல்வது கடினம்தான் அதுவும் சமயத்திற்கு ஏற்றார்போல நகரும் விதியை சுத்தமாக வெல்லவே முடியாது.

விதியைப் பற்றி சொல்லாத அறிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஜோதிட வல்லுனர்கள் சிலர் இதேல்லாம் விதிக்கப்பட்ட விதி என்று சொல்வதுண்டு. சிலர் விதி என்பது இயலாமைக்கு சொல்லும் சப்பைக்கட்டு என்று சொல்வதும் உண்டு. சிலர் விதியை மதியால் வெல்லுவது விதியே என்றும் சொல்லுவர். ஆனால் நம்மை போன்ற சாமானியனுக்கு இந்த விதி ஒரு குழப்பம். விதியை பற்றி யார் என்ன சொன்னாலும் ஆமாம் சரிதான் என்றே சொல்ல வைத்துவிடும். ஏனெனில் விதியை பற்றிய குறிப்பு சரியாக வகுக்கப்படாததுதான்.

விதிக்கும் கடவுளுக்கும் ஒரு முரண்பாடு தெரியும். எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால், மனித வாழ்க்கை எல்லாம் முன்பே வகுக்கப்பட்ட விதி என்றால் மனிதன் கடவுளை வணங்குது எதற்காக? இதை சிலர் விதியின் வலியை தாங்கிக்கொள்ள என்றும் சொல்லுவார்கள். அப்படியானால் விதியின் வலியை தாங்க கடவுளை வணங்குதலும் விதியா? அப்போ விதிக்கு கடவுளைவிட வலிமை அதிகமா? எல்லாம் விதிப்படி நடந்தால் நம்முயற்சிக்கு என்னதான் பயன்? கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்தானே? என்னை பொருத்தவரை இந்த விதியை மொழியிலிருந்து எடுத்துவிட்டால் நல்லது. ஓ வார்த்தையை எடுத்துவிட்டால் உணர்வை என்ன செய்யமுடியும்? அதுவும் ஞாயமான கேள்வி. நான் கேட்பது இந்த விதியால் ஏதேனும் பயன் உண்டா? ஒன்று மட்டும் உண்டு முயற்சியின் தோல்வியை எல்லாம் விதி என்று ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.
சமீபத்தில் நான் படித்த கதை இதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். சுவாமி சுகபோனந்தா அவர்கள் எழுதிய "மனசே ரிலாக்ஸ் ப்லீஸ்" என்ற தொடரில் புத்தமத கதை ஒன்றை எழுதியுள்ளார். ஒரு கிராமத்து சிறுவன் விளையாட ஏரிக்கரைக்கு செல்கின்றான், அங்கே "என்னை காப்பாற்றுங்கள்! என்னை காப்பாற்றுங்கள்!" என்ற குரல் கேட்கின்றது. கரையோரத்தில் தண்ணீரில் கட்டப்பட்ட வலையில் சிக்கிய முதலை ஒன்று பரிதாபமாக சிறுவனிடம் "என்னை காப்பாற்று " என்று கண்ணீர் வடிக்கின்றது. சிறுவனோ "நான் உன்னை காப்பாற்றினால் நீ என்னை விழுங்கிவிடுவாய்" என்று மறுக்கின்றான். "நீ என்னை காப்பாற்றினால் சத்தியமாக உன்னை விழுங்கமாட்டேன்" என்று முதலை அழுதது. முதலையின் பேச்சை கேட்ட சிறுவனும் வலையை அறுத்து காப்பாற்ற முயற்சிகின்றான். அதற்குள் முதலை சிறுவனை பிடித்துவிடுகின்றது. "இது என்ன நியாயம் உன் பேச்சை நம்பிதானே காப்பாற்றினேன்" என்று முதலையிடம் வாதிடுகின்றான். அதற்கு அந்த முதலை " இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை!" என்று சொல்லி விழுங்க தொடங்குகின்றது. சிறுவனுக்கு தன் சாவைப் பற்றிக்கூட கவலையில்லை பொய் சொன்ன முதலையின் சித்தாந்தம்தான் ஏற்றுகொள்ளமுடியவில்லை.

முதலையின் வாய்க்குள் போகின்ற சிறுவன் அருகில் மரத்தில் உள்ள பறவைகளை கேட்க்கின்றான். "பறவைகளே முதலை சொல்வதுபோல இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்பது சரியா" என்றான். பறவைகளும் "முதலை சொல்வது சரிதான் நாங்கள் பாதுகாப்பாக முட்டையிடுகின்றோம் எங்கிருந்தோ வந்த பாம்புகள் முட்டையை குடித்துவிடுகின்றது எனவே முதலை சொல்வது சரிதான்" என்றது.

சிறுவனால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை அருகில் மேய்ந்த கழுதையை கேட்டான். கழுதையும் "நாங்கள் இளமையா இருந்த பொழுது என் எசமான் அழுக்கு துணியை ஏற்றி வேலை வாங்கினான் இப்பொழுது வயதாகிவிட்டது எங்களுக்கு தீனி தாராமல் விரட்டி விட்டான் எனவே முதலை சொல்வதும் சரிதான் இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்" என்றது.

அப்பொழுதும் சிறுவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை அருகில் வந்த முயலிடம் கேட்டான். முயல் '' இல்லை இல்லை முதலை பிதற்றுகின்றது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது " என்றது. முதலையும் கோபத்தில் வாதிட்டது அதற்கு முயல் "நீ சொல்வது புரியவில்லை வாயில் இருக்கும் பையனை வெளியே விட்டு விட்டு பேசு" என்றது. அதற்கு "முடியாது சிறுவன் ஓடிவிடுவான்" என்றதும் " புத்தியில்லா முதலையே உன் வாலின் பலம் உனக்கு தெரியாதா? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அடித்துவிடலாம்" என்று ஞாபகப்படுத்த சிறுவனை வெளியில் விட்டது. உடனே முயல் சிறுவனிடம் "ஓடிவிடு ஓடிவிடு" என்றது . சிறுவனும் ஓடிவிட்டான் சிறுவனை அடிக்க வாலை எடுக்குபொழுதுதான் முதலைக்கு புரிகின்றது வால்பகுதியில் வலையை எடுக்கும் முன்பே சிறுவனை விழுங்க ஆறம்பித்துவிட்டோம் என்று. கோபத்துடன் முதலை முயலைப் பார்த்தது, முயல் " இப்பொழுது புரிகின்றதா இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை " என்றது.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்திரை அழைத்து வந்தான். அவர்கள் முதலையை கொன்று விட்டனர். அதற்குள் அவர்களுடன் வந்த நாய் அந்த முயலை விரட்டியது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் நாய் முயலை கொன்றுவிட்டது. சிறுவனோ" இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை" என்று பெருமூச்சுவிடுகின்றான்...

மேற்சொன்ன கதையில் விதியாக என்ன சொல்லப்படுகின்றது. எல்லாவற்றுக்கும் விதியை காரணம் காட்டி வாழ்க்கை ஓட்டினால் வாழ்வில் ஒன்றும் சுவராசியம் இருக்காது. நம் வாழ்வில் நடக்கும் பல விடயங்களுக்கு அர்த்தம் தெரிவதில்லை அதற்கெல்லாம் விதிதான் என்றால் நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை. என்னை பொருத்தவரை விதினால் எந்த பயனும் இருக்கவில்லை எனவே விதியை ஒரு பொருட்டாக பார்க்க ஆரம்பித்தால் சாதனைகள் வந்து சேராது. முடிந்தவைக்கு காரணம் தேடுவதைவிட நடக்கும் நாட்களுக்கு அர்த்தம் தேடினால் நல்லது.

முதுகுவலியால் நான் மருத்துவரிடம் சென்றேன், MRI scan எடுக்க சொன்னார்கள். முடிவில் L4 L5 க்கும் இடையில் டிஸ்க் நழுவிவிட்டது என்றார். நான் "இது எதனால் வருகின்றது" என்று கேட்டேன். அதற்கு அந்த மருத்துவர் "இது எதனால் வந்தது என்ற ஆராய்ச்சி இப்பொழுது முக்கியம் இல்லை நிவாரணம்தான் முக்கியம்" என்றார். அவர் சொல்வதும் சரிதானே, அதன்படி அவர் ஆலோசனைகளை கேட்டு பயன் அடைந்தேன்.

எல்லாவற்றிக்கும் விதியை காரணம் காட்டி சும்மானு இருக்காம வாழ்க்கையை வாழ்கையாக வாழ இந்த சாமானியனின் எண்ணச் சிதறல்கள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Thursday, July 9, 2009

நடந்தது, கேட்டதில் உண்மை... அம்மா அப்பாவில்

நடந்தது, கேட்டதில் உண்மை... அம்மா அப்பாவில்

டிரிங் டிரிங் டிரிங்....... அலைபேசியின் ஓசை ஒலிக்கின்றது..

நான்: "ஹெலோ சொல்லரசன் நான் ஞானசேகரன் பேசுரேன்ங்க"
மேலும் நடந்ததைப் படிக்க சுட்டியை சுட்டலாம்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Tuesday, July 7, 2009

" இயற்கையோடு மனிதன்"-துவரங்குச்சியோடு சில நினைவுகள்...

"இயற்கையோடு மனிதன்"-துவரங்குச்சியோடு சில நினைவுகள்...ஆன்-லைன்' வர்த்தக தடை நீக்கம் : துவரம் பருப்பு விலை கிடு கிடு உயர்வு (08-07-2009)

மனிதன் வாழனும் அதற்காக எப்படிவேனாலும் வாழலாம் என்று சொல்லவில்லை. அவனுக்கென்று ஒரு கலாச்சாரம் பண்பாடு எல்லாம் இருக்கு என்பதை நானும் ஒத்துகொள்கின்றேன். நாகரிக வளர்ச்சியில் நாம் இயற்கையிலிருந்து தொலைதூரம் வந்துவிட்டோமோ என்றே எனக்குள் ஒரு அச்சம். மனிதன் வாழ மிக முக்கியம்னா உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இதுதானுங்க. இதற்கெல்லாம் இயற்கையோடு வாழ்ந்த காலங்களே போதுமானது தான்.

இப்ப அதையெல்லாம் தாண்டி விஞ்ஞான வளர்ச்சி அபாரமான கட்டமைபில் செல்கின்றது. இது எல்லாம் தேவையா என்றால் தேவைதான் ஆனால் அதனோடு நம்மில் உள்ள இயற்கையின் கட்டமைப்பை தொலைத்து விடுகின்றோம் என்பதில் தான் நம்முடைய கவலைகள். சாதணரமாக மனிதனின் தேவைகளுக்கு அப்பால் தொலைதொடர்பு, தொலைப்பயணம், பொழுதுப்போக்கு என விரிந்துசெல்லும் விஞ்ஞான கட்டமைப்புகள் நம்மிடையே இருக்கும் இயற்கையான வாழ்க்கையை இழக்க செய்துவிட்டது. வரும் காலங்களுக்கு மாபெரும் பசுமைப்புரட்சி தேவையாகிவிட்டது.

தொடர்ந்து வரும் நோய்கள், பூமியின் வெப்பமயமாக்கம், அழிந்துவரும் இயற்கை, காணாமல் போன பருவகாலங்கள் இவற்றையெல்லாம் பார்க்கின்றபொழுது நாம் வந்த வழிகளில் விட்டு சென்ற தடயங்கள் கவணிக்கப்படுகின்றது. அப்படி கவணித்த தடங்களில் ஒன்று இந்த துவரையும் கிராம வாழ்க்கையும்.

துவரை பேபேஸி இனத்தை சார்ந்த தாவரம். துவரை புஞ்சை காடுகளில் பயிரிடப்படுகின்றது. துவரை செடிகள் பாத்தி பாத்தியாக வளர்க்கப்படுகின்றது. இவற்றுடன் நிலகடலையும் பயிரிடப்படும். கடலைப்பற்றிய என் முந்திய பதிவு..
அம்மா நான் கடலை ஆயப்போறேன்... கடலை அறுவடைக்கு பின் துவரை அறுவடையாகும்.

துவரை பூ அவரைப்பூ போன்ற இருக்கும், அளவில் சிறியது. துவரங்காய் சிறிய
அவரைக்காய் போலவே இருக்கும், ஒரு காயில் 5 முதல் 6 பருப்புகள் இருக்கும். முதிர்ந்த பருப்பு கரும்சிகப்பு நிறத்தில் இருக்கும். தோல் இல்லா பருப்பை சமையலுக்கு பயன்ப்படுத்துகின்றோம். துவரங்காயை உப்பிட்டு வேகவைத்து திண்கின்ற காலம் இன்னும் என் நினைவில் இருக்கின்றது. இதுபோன்ற நினைவுகள் என் பிள்ளைகளுக்கு வருமா? என்றால் அய்யமே!...

துவரங்காய் முதிர்ந்ததும் பாத்தி பாத்தியாக பயிரிட்ட செடியை சிறிய அரிவாள் கொண்டு வெட்டி கட்டு கட்டாக அடுக்கி எடுத்து வந்து, விட்டு தோட்டத்தில் உலர்த்தி துவரம் பருப்பை எடுப்பார்கள். இப்படி எடுத்த பருப்பு கரும் சிகப்பு நிறத்தில் தோலுடன் இருக்கும். துவரம்ப்பருப்பில் உள்ள தோலை எடுத்துதான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.

துவரம்பருப்பில் உள்ள தோலை எடுக்க ஒருவகை செம்மண்ணுடன் பருப்பை குழைத்து காயவைத்து பின் திருகையில் இட்டோ அல்லது எந்திரத்தில் இட்டோ பருப்பில் உள்ள தோலை எடுப்பார்கள். திருகையில் இட்ட பருப்பு முழு பருப்பாக இருக்கும். எந்திரத்தில் இட்ட பருப்பு அரைப்பருப்பாக இருக்கும்.

துவரங்குச்சியை பொதுவாக அடுப்பெரிக்கலாம், பல நேரங்களில் குரும்பு செய்யும் பிள்ளைகளை அடிக்கவும் பயனாகும். வீட்டுக்கு முன் படல்(முல் இல்லா வேலி) அடைக்கவும் பயன்படும்.

துவரம் பருப்பில் புரதமும், வேதிப்பொருள்களும் அடங்கிய உணவு. மேலும் துவரையில் மருத்துவ குணங்களும் இருக்கின்றது. துவரை வேர் மூல நோயை குணப்படுத்துமாம். அதன் விவரங்களை பார்க்க சுட்டியை சுட்டுங்கள் மூலத்தை துரத்தும் துவரை வேர்

மேலும் துவரையிலிருந்து இயற்கையான ஷாம்பும் தயாரிக்கலாமாம். அதன் சுட்டியும் இதோ இயற்கையான ஷாம்பு

துவரை
ஆசியாவில் முதலில் பயிரப்பட்டதாக கருதப்பட்டாலும், இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரப்படுகிறது. தமிழர் சமையலிலும் பருப்பு ஒரு முக்கிய உணவாக அமைகிறது.

இயற்கையோடு அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


Saturday, July 4, 2009

குழந்தைகள் எதிர்நோக்கும் அபாயம்..

குழந்தைகள் எதிர்நோக்கும் அபாயம்..

குழந்தைகளை தெய்வதிற்கு சமமாக கருதுவதுண்டு. மனதளவில் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றே சொல்லி வருகின்றோம். அப்படி பட்ட குழந்தைகளுக்கு இந்த சமுகத்தால் இழைக்கப்படும் அபாயம் ஏராளம் ஏராளம்....

குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் சிசு பெண் கொலைகள்,பெண்சிசு வதைகள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், பெண் குழந்தைகளிடம் வன்செயல்கள் புரிதல், ஆண் குழந்தைகளிடம் அளவிற்கு அதிகமாக வேலை வாங்குதல்,பெரியவர்களும் பெற்றோர்களும் தங்களின் இயலாமையை குழந்தைகளிடம் காட்டுதல் போன்ற கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்றது.

இவற்றுகெல்லாம் காரணம் குழந்தைகள் பிறந்தவுடன் பெரியோர்களையும் பெற்றோர்களையும் அண்டி வாழவேண்டிய சூழல். இதனால் இவர்களால் இன்னலுக்கு ஆளாகவேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் தடுக்க அரசும் சமுகம்சார்ந்த நிறுவனங்களும் நடவடிக்கைகள் எடுத்தாலும், இன்னும் இப்படிபட்ட கொடுமைகள் அதற்கு மேலும் நடக்கதான் செய்கின்றன. இதை தடுக்க போதிய சட்டம் இல்லை என்றே தோன்றுகின்றது.

இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தைகளை கடத்தி ஊனம் செய்து பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடுதல் பொன்ற செயல்களும் நடக்கின்றன. இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்த வார (01-07-2209) குமுதத்தில் படித்து பதறவைத்த செய்திதான் என்னை இப்படி எழுத தூண்டியது. ஒரு கும்பல் குழந்தைகளை கடத்தி விற்பதும், பிச்சை எடுகக் செய்வதும், திருட பயன்படுத்துவதுமாக உள்ளது. ஆட்டோ ஓட்டுனர் ஜோசப் என்பவரால் அடையாளம் காணப்பட்ட கும்பலின் விவரம் பின் உள்ள படத்தை சுட்டி பெரிதாக்கி படிக்கவும்.
நம் நாட்டை பொறுத்தவரை நாம் கேள்விப்படுவதை காட்டிலும் பெரிய அளவில் வன் செயல்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்றது. இதை அரசும் சட்டங்களும் தடுத்தாலும் பெற்றோர்களிடம் ஒரு விழிப்புணர்வும் தேவை என்றே தோன்றுகின்றது. குழந்தைகளால் ஒன்றும் செய்ய முடியாது எனவே பெரியவர்களாகிய நாம் இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். வளர்கின்ற இவர்களை வழிநடத்த வேண்டும்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

வென்றிடுவீர் எட்டு திக்கும்!....

வென்றிடுவீர் எட்டு திக்கும்!....


சமுகத்தில் எழுத்தாளனுக்கு ஒரு அங்கிகாரம் இருந்தாலும், அதிகார பொறுப்பில் உள்ளவர்கள் எழுதும் எழுத்திற்கு கிடைக்கும் அங்கிகாரம் போல் சாமானியர்களின் எழுத்திற்கு கிடைப்பதில்லை. சாமானியர்களின் எழுத்து சபைக்கு வந்து சேர்வது அவ்வளவு எளிதான விடய
மும் இல்லை. பொதுதள ஊடகங்களில் சாமானியர்களின் எழுத்து ஏற்று கொள்ளப்படுவது, இல்லை என்று சொல்லும் நிலையில்தான் உள்ளது. இன்றைய சூழலில் சாமானியர்களின் எழுத்திற்கு கிடைத்த பெரும் வாய்ப்புதான் இணைய பதிவுலகம். இணைய பதிவர்கள் இன்று எழுதாத விடயம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பதிவுகள் குவிந்து கிடைக்கின்றது. இன்றைக்கு இணையத்தில் தேடும் பொறியில் தகவல்களை தேடினால் வந்தடைவது மிகுதியாக பதிவின் பக்கமே.

இணைய எழுத்தாளர்களினால் எந்த ஒரு மாற்றத்தையும் சமுகத்தில் உருவாக்க முடியுமா? என்பதுதான் பதிவர்களின் இன்றைய சவாலாக உள்ளது. இணைய எழுத்துலகம் பெருவாரியாக மக்களிடம் சென்றடையாத ஒருகாரணம் இணைய இணைப்பு இல்லாமை என்றாலும் சமுகத்தில் இதனின் தாக்கம் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது. ஏதோ வெட்டியாக எழுதும் இளைஞர்களின் குழு என்று சொல்லும் சிலரும் இருக்கதான் செய்கின்றனர். ஆனால் இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. அதேபோல் மிக பெரிய தாக்கமுள்ள கட்டுரைகள் நாள்தோரும் பதிவில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இவற்றையெல்லாம் பொது ஊடகங்கள் கண்டுகொள்வதுமில்லை. யூத்புல் விகடனில் பதிவர்களுக்கு மதிப்பளிப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது.

பதிவுலம் இன்னும் மக்களிடம் சென்றடையும் தூரம் அதிகம் உள்ளது. இந்த சாவல்களை எதிர்கொள்ள நமக்கு நாமே செய்யும் ஊக்கம் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊக்கத்தின் முதல் படியாகத்தான் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி . இதன் வெற்றிக்கு பிறகு இதுபோல ஊக்கங்கள் சமுகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்த போட்டியின் நோக்கம் படைப்பாளியின் ஆழ்ந்த சிந்தனையை தூண்டி சமுக கருத்துகளை நமக்கே உரிய கலாச்சாரத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தான். இதில் எந்த ஒரு உள்நோக்க அரசியல்கள் இல்லை என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகின்றேன்.

இந்த வாய்ப்பின் மூலம் வெற்றிபெற்று மூன்று முதல் பரிசாக சிங்கை ஒரு வார பயணம் பெற்றுடுவீர்.

போட்டியின் முழு விவரங்கள் சுட்டியை சுட்டுங்கள்
மணற்கேணி 2009

Manarkeni 2009