_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, September 11, 2009

அன்பில் ஓர் விடுமுறை விண்ணப்பம்..

அன்பில் ஓர் விடுமுறை விண்ணப்பம்...
நண்பர்களே!
குறுகியக் கால விடுமுறையின் காரணமாக இந்தியா ( திருச்சி அண்ணாநகர்) செல்ல இருப்பதால் என்னால் இந்த இரு வாரங்களுக்கு இணையம் பக்கம் வர இயலாது எனவே இந்த இரு வாரங்களுக்கு அம்மா அப்பா வலைப்பக்கம் புதிய இடுகைகளை காண்பிக்க இயலாது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகின்றேன். நண்பர்கள் அதுவரை புதிய புதிய சிந்தனைகளுடன் சிந்தித்து பின் சந்திப்போம் என்ற ஆசைகளில்....

அன்புடன் ஆ.ஞானசேகரன்.

Tuesday, September 8, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 2

ஏன்? எதற்கு? எப்படி?..... 2

உலகத்தில் எல்லா இடங்களிலும் பொதிந்து கிடக்குதுன்னா அது ஆற்றல்(energy) தாங்க. இந்த ஆற்றலைதான் கர்ப்பனையில் கடவுள் என்று சொல்லுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். சுற்றி சுற்றி கடவுளைப் பற்றி சொல்லும்பொழுது இந்த ஆற்றலில்தான் வந்து முடிப்பார்கள். ஆற்றலை மனிதன் எப்பொழுது புரிந்துக்கொண்டு பயன்படுத்தினானோ அன்றுதான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஆச்சரியமாகியது. இயற்பியலில் ஆற்றல் என்று சொல்லுவார்கள் இதை எளிதாக சொல்லவேண்டும் என்றால் "சுறுசுறுப்புடன் செயற்படுதல்" என கொள்ளலாம்.

ஆற்றல் பல வகைகளில் இருக்கின்றது. உதாரணமாக
நிலையாற்றல்
இயக்கயாற்றல்
வெப்ப ஆற்றல்
ஒலி ஆற்றல்
ஒளி ஆற்றல்
அணு ஆற்றல்
அணுகரு ஆற்றல்
வேதியாற்றல்
என இப்படி பலவகை ஆற்றல்களாக பொதிந்து கிடக்கின்றது. இப்படி பட்ட ஆற்றலை புரிந்துக்கொண்டால்தான் நாம் நம்முடைய தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தலாம், இது எல்லோருக்கும் தெரியும் என்றாலும் அதைப்பற்றி மேலும் மேலும் சொல்லிக்கொள்வதில்தான் விஞ்ஞான வளர்ச்சியே இருக்கு. அதுதான் இந்த "ஏன்? எதற்கு? எப்படி?.... " கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும் சொல்லிக்கொள்வோம் என்றுதான் இந்த இரண்டாவது பகுதியை தொடர்கின்றேன்.

ஆற்றலை பற்றியது "ஆற்றலை ஆக்கவொ அழிக்கவோ முடியாது, ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்." இந்த கோட்பாட்டை மனிதன் புரிந்துக்கொண்டதன் விளைவாகத்தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின என்றால் மிகையாகாது. உதாரணமாக இயக்காற்றலை மின் ஆற்றலாக மாற்றியதன் விளைவு "டைனமோ" உருவானது. மின்னாற்றலை இயக்காற்றலாக மாற்றியதன் விளைவு "மோட்டார்" உருவானது. இப்படி பல கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டுள்ளது.

இப்பொழுது நாம் "ஏன்? எதற்கு? எப்படி?.." தொடருக்கு வருவோம். ஒரு காப்பர் கம்பியால் சுற்றப்பட்ட ஆர்முச்சூர் காந்த புலத்தில் சுழற்றப்பட்டால் காப்பர் கம்பி வழியாக மின்சாரம் வெளிப்படும். அதாவது இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இதுதான் டைனமோ என்று சொல்லுகின்றோம். அதேபோல் சில மாற்றங்கள் செய்து காந்த புலத்தில் உள்ள அந்த காப்பர் கம்பியால் சுற்றப்பட்ட ஆர்முச்சூரில் கம்பியின் வழியாக மின்சாரம் செலுத்தப்பட்டால் ஆர்முச்சூர் சுற்றும். அதாவது மின் ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இதுதான் மோட்டார் என்று சொல்லுகின்றோம்.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்...
[படம்]

ஒரு மோட்டாரும் ஒரு டைனமோவும் ஒரே அச்சியில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் இடையில் ஒரு விசிரியும் இணைக்கப்பட்டுள்ளது. டைனமோவில் வெளிப்படும் மின்சாரத்தை மோட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது விசிரியை கையால் சுற்றிவிடப்படுகின்றது. அதன் அச்சியில் உள்ள டைனமோவும் சுற்றி மின்சாரத்தை வெளிப்படுத்தும். மின்சாரம் அதனுடம் இணைத்த மோட்டாரை சுற்ற வைக்கும். மோட்டார் சுற்றும் பொழுது விசிரியும் டைனமோவும் சுற்றும். அதேபோல் டைனமோவில் மின்சாரம் வெளிப்படும். இந்த சுற்றில் விசிரியானது தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்குமா? இருக்காதா? ஏன்?...................... அப்படி தொடர்ந்து சுற்றாது என்றால் ஏன்?.................

உயரமான இடத்தில் குவளை வடிவில் நீர்தொட்டிகள் கட்டி வைத்து குடிநீர்க்கு பயன்படுத்தி வருகின்றோம். இதில் நிலத்தடி நீரை மோட்டாரை இயங்க வைத்து உயரமான தொட்டியில் நீர் நிரப்பி வைக்கப்படுகின்றது. பின்னார் குடி நீருக்காக திறந்து விடப்படுகின்றது. இதை இயற்பியலில் சொன்னால் மின் ஆற்றல் மோட்டாரை இயக்க வைத்து, இயக்க ஆற்றல் நிலையாற்றலாக நீரை தொட்டியில் வைக்கப்படுகின்றது. பின்னர் நிலையாற்றல் இயக்க ஆற்றலாக குடிநீருக்காக திறந்து விடப்படுகின்றது.

[படம்]

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்றால் நிலத்தில் உள்ள நீரை ஏன் உயரமான தோட்டியில் மோட்டார் கொண்டு நிரப்பி பின்னர் குடிநீருக்காக அனுப்பபடுகின்றது. நேரடியாக மோட்டர் கொண்டு நீரை வினியோகம் செய்யலாமே. ஏன் அப்படி செய்யவில்லை? தொட்டியில் நிரப்பி பின் வினியோகிப்பதால் என்ன லாபம்?

கீழே உள்ள படத்தை பார்க்கவும்
[படம்]
சாதாரணமாக நீர் தொட்டிகள் குவளை வடிவில் வைக்கப்படும். சில இடங்களில் கூம்பு வடிவில் நீர் தோட்டிகள் வைக்கபடுகின்றது. இந்த கூம்பு வடிவ நீர் தொட்டிகளினால் என்ன அதிக லாபம்? அந்த லாபம் எதனால் ஏற்படுகின்றது?

இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
..

Saturday, September 5, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?..

ஏழை, ஏழையாக இருப்பதேன்?...

"அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகில் ஓலை குடிசைக்கட்டி
பொன்னான உலகமுனு பெயருமிட்டால்
இந்த நாடு சிரிக்கும்
நம்ம ஊரு சிரிக்கும்......"
ஆசியாவிலே மிக பெரிய ஜனநாயக நாடு என்றால் அது இந்தியா. ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் இன்னும் ஏழை பாணக்கார ஏற்றதாழ்வுகள் அதிகம் கொண்ட நாடாகதான் இன்றும் இருக்கின்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மக்கள் தொகை 33 கோடியாக இருந்தது இன்று வறுமையில் வாழும் ஏழைகளும் 33 கோடிக்கு மேல் இருப்பதாக ஒரு கணிப்பு கூறுகின்றது. இந்தியா ஒரு பணக்கார நாடு ஆனால் இந்தியர்கள் ஏழைகள். இந்தியாவில் எல்லா வளங்கள் இருந்தும் இன்னும் கையேந்தும் நிலைகள்தான் இருக்கின்றது. "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில்". இறக்குமதி என்பது தரமான பொருளின் பங்கீடுக்காக இருக்க வேண்டுமேயன்றி கையேந்தும் நிலையல்ல.


சமீபத்திய உலக வங்கியின் ஆய்வின் படி இந்தியாவின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் நான்கின் ஒருவர் என்று கணக்கிட்டு சொல்லியுள்ளது. இதில் தமிழகத்தில் இன்னும் மோசமான நிலை என்பது அதிர்ச்சியை கொடுக்கின்றது. சுதந்திரம் பெற்று சுமார் அரை நூற்றாண்டுகள் ஆகியும், பல பொருளாதார திட்டங்களாலும், ஏழ்மையை போக்க எடுத்து வரும் பல நடவடிக்கைகளாலும் நாம் இன்னும் அந்த நிலையை எட்ட முடியாதது இங்கே நடந்துவரும் முறைகேடுகள் மற்றும் பெருகிவரும் லஞ்சங்கள் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

"பலர் வாட வாட
சிலர் வாழ வாழ ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை-(வாலியின் வரிகள்)"
இயற்கையில் ஏழைகள் உருவாக்கபடுவதில்லை நாட்டியில் உள்ள போருளாதார கொள்கை தடுமாற்றதாலும் சுரண்டல் பெருச்சாளிகளின் கொட்டங்களாலும் இந்த நிலையை எட்டியுள்ளது. இந்தியா கிராமங்கள் பல கொண்ட விவசாய நாடு, இருப்பினும் பட்டினியால் இருப்போர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. சமீபத்தில் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை மாவட்டத்தில் பட்டினி சாவுகளும், வறுமையில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது.

"கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்"
கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் திட்டங்களும் சட்டங்களும் ஒன்றும் செய்யாமல் இடைதரகர்களையும் பதுக்கல் பேர்வலிகலையும் வாழவைக்கின்றது. தன் தேவைக்கும் பயன்பாட்டுக்கும் அதிமான சொத்துகள் என்பது பலர் உயிர் வாழ உதவக்கூடியவை என்பதை மக்களும் அரசும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நில உச்சவரம்பு சட்டங்களின் தேவையை இந்தியா மட்டும் ஏன் புரிந்துகொள்ளவில்லை. சட்டங்களும் அதிகாரங்களும் இன்னும் அதிகார வர்க்கத்தினரிடம் இருப்பதால் எல்லாமே உடப்பில் போடப்படுகின்றது. உலக பணக்கார வரிசையில் இந்தியர்கள் பலர் இருக்கின்றனர். அதேபோல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பட்டினி சாவுகளும் தற்கொலைகளும் இங்குதான். எல்லா முறன்பாடுகளையும் பார்த்து கண்மூடிக்கொண்டு இருக்கும் அரசாங்கம்.

"இருப்பது எல்லாம் பொதுவாயிட்டா..
எடுக்குற கூட்டமும் இருக்காது,
பதுக்குற கூட்டமும் இருக்காது "
என்ற பட்டுகோட்டையின் வரிகளை ரசிக்க முடிந்த அளவிற்கு மக்களின் மனங்கள் பொதுவுடமை இல்லாதது ஏன் என்று புரிவதில்லை. நான் எனது என் சொந்தங்கள் என பார்த்து பக்கத்தில் இருக்கும் பட்டினி அவளங்களை கண்டுகொள்வதுமில்லை.
" பணம் கண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை... தரும் கைகள் தேடி பொருள் வருவதில்லை."

பொதுவுடமை என்பது ஒரு உணர்வாக இருக்கவேண்டுமேயொழிய திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் அதே சமயம் மக்களுக்காக இருக்கும் அரசு என்று மக்களின் பிரதிநிதிகள் என்று புரிந்துக்கொள்வார்களோ தெரியவில்லை. என்று வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படுகின்றதோ அன்றுதான் நாம் ஏழ்மையிலிருந்து விடுபட முடியும் என்பது திண்ணம். பிரதமர் டாகடர் மன்மோகன் சிங்கின் "வறுமை போர்" திட்டம் திட்ட அளவில் இல்லாமல் முனைப்புடன் செயல்பட்டால் ஓரளவிற்கு இந்தியாவை முன்நடத்தி செல்ல முடியும். மக்களின் அடிப்படை கல்வி, தொழிற்பயிற்சியின் அவசியம், கிராமம் மறுவாழ்வு, கிராமபுற மக்களின் ஆரோக்கியம் என்பன கவணம் செலுத்த வேண்டிய முக்கிய விடயம்.
"பொருள் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருப்பவரிடம் பொருள் வருவதுமில்லை"

இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, September 4, 2009

"Trailer" முன்னாடியும் பின்னாடியும்...

"Trailer" முன்னாடியும் பின்னாடியும்....

ஓரு வண்டிக்கு பின்னாடி வருவதை Trailer என்கின்றோம். இந்த Trailer எப்பொழுதும் பின்னாடிதான் வருகின்றது. ஆனால் இப்பொழுது வரும்
Trailer முன்னாடிங்க. திரைப்படத்திற்கு முன்னாடி வருவது Trailer. உங்கள் முன்னாடி வரும் Trailer பத்மஸ்ரீ கமலஹாசனின் "உன்னை போல் ஒருவன்" Trailer.
பின்னாடி வரும் "Trailer"Thursday, September 3, 2009

ஏன்? எதற்கு? எப்படி?....

ஏன்? எதற்கு? எப்படி?.....

ஓடுகின்ற பேருந்திலிருந்து இறங்கினால் நாமும் சிறிது தூரம் ஓடிய பின்னர்தான் நிற்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே பேருந்தின் வேகம் அதிகமாக இருந்தால் நம்மால் இறங்க முடியுமா?
நாம் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் புகைவண்டியில் பிரயாணம் செய்துக்கொண்டுள்ளோம். புகைவண்டியுடன் நாமும் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் வேகத்தை நம்மால் உணரமுடிவதில்லை ஏன்?
அதே புகைவண்டியில் உற்கார்ந்த நிலையில் ஒரு ஆப்பிளை எடுத்து மேலே தூக்கிப்போட்டு பிடிக்கின்றோம். நாம் புகைவண்டியுடன் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக்கொண்டுள்ளோம், ஆனால் ஆப்பிளை தூக்கிப்போடும் பொழுது புகைவண்டிக்கும் ஆப்பிளுக்கும் தொடர்பில்லை அப்படியிருந்தும் ஆப்பிள் நம் கையை வந்தடைவது எப்படி? ஆப்பிளை 80 கிலோமீட்டர் வேகத்திலா தூக்கிபோட்டோம்?
அதே புகைவண்டியில் பிரயாணம் செய்யும் பொழுது நம் மேல் ஒரு "ஈ" உற்காருகின்றது நாம் அதை விரட்டினால் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று உட்காருகின்றது. "ஈ " 80 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தா பக்கத்தில் உள்ளவரிடம் சென்றடைகின்றது?...

ஒரு விண்கலம் பூமிலிருந்து 380 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை சுற்றிவரும்பொழுது அந்த விண்கலம் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகின்றது. விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியே வர முற்பட்டால் அவரின் நிலை என்ன?
அப்படி சில சமயம் பணியின் காரணமாக விண்வெளி வீரர்கள் வெளியில் வருவதும் உண்டு அவற்றிக்கு விண்வெளி உலா என்று சொல்கின்றனர். முதல் முதலில் ரஷ்ய வீரர் அலெக்சேய் லியானோவ் என்பவர் 1965 ல் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதன் பிறகு பலர் இந்த உலாவில் ஈடுபடுகின்றனர். விண்வெளி வீரர் விண்கலத்திலுருந்து வெளியே வந்தாலும் அவரும் ஒரு விண்கலம் போல அதே வேகத்தில் பூமியை சுற்றுவார். மாறாக பூமியை நோக்கி கீழே விழமாட்டார். விண்வெளி உலாவின் போது வீரர்கள் அதற்கான சிறப்பு உடை அணிந்திருப்பார்கள். அதே போல் விண்கலத்திற்கும் அவருக்கும் நீண்ட குழாயுடன் இணைந்தவராக இருப்பார். சில சமயம் இணைப்பு இல்லாமலும் செல்வதும் உண்டு அதற்காக ஒரு அழுத்தமான காற்று அடைக்கப்பட்ட சிலிண்டரை தன் முதுகில் கட்டி வைத்துருப்பார்கள். அந்த சிலிண்டரில் சிறு துளை வழியாக காற்றை பீச்சி வலது, இடது என போகவேண்டிய இடத்திற்கு செல்கின்றனர். மேலும் சுவாசக் காற்றையும் வைத்துருப்பார்.

விண்வெளியில் வீண்வெளி வீரர்களுக்கு கால்களிருந்தும் நடக்க முடிவதில்லையே ஏன்? பூமியில் நடப்பதற்கு கால் மட்டும் போதுமா? தரையில் எண்ணெய் கொட்டியிருந்தால் அவற்றில் மேல் நடக்க முடிவதில்லை ஏன்?

இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.