_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, June 29, 2009

ஒன்று மட்டும் உண்மை!....

ஒன்று மட்டும் உண்மை!....

நாம் சிலரை பார்த்திருப்போம், "அண்ணா எப்படி இருக்கின்றீர்கள்?" என்று கேட்டால் " ம்ம்ம்ம் எப்படியோ இருக்கின்றேன்" என்று சலிப்புடன் சொல்லுவார்கள். இவர்கள் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்காது. உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஏதோ ஒரு வைகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைபார்கள்.

குதிரை ஓட்டத்தில் 50 குதிரைகள் ஓடுவதாக வைத்துக்கொண்டால் அதில் ஒன்றுமட்டும்தான் வெற்றிபெரும் என்பதுதான் நியதி. அந்த ஒன்றை மட்டுமே நம்பி பந்தயம் கட்டும் வாடிக்கையாளர்களை என்னவென்று நினைப்பது. மீதி 49 குதிரைகள் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

ஒருவன் லாட்டரி சீட்டு வாங்குபவன் அவனிடம் ஒருவன் "நீ வாங்கும் லாட்டரிக்கு பரிசு விழாது விழுந்தால் நான் 500 ரூபாய் உனக்கு தருகின்றேன், விழவில்லை என்றால் நீ எனக்கு 50 ரூபாய் கொடுத்தால் போதும்" என்றான். அவனோ மறுத்துவிடுகின்றான். நம்பிக்கை இல்லா ஒரு வருமாணத்திற்காக ஏங்கி இருக்கும் மனிதர்கள் நிலை ??????

நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை. ஒரு ஜென் துறவி தன்னுடைய பழைய நண்பனை பார்க்க சென்றார். அந்த நண்பன் ஒரு விவசாயி. துறவியை பார்த்த அந்த நண்பன் இவரை துறவி என தெரியாது " நீ யார்? எங்கிருந்து வருகின்றாய்? எப்படி இருக்கின்றாய் என்று சாதாரணமாக கேட்டான்.

அதற்கு அந்த துறவி " நீ எப்படி இருக்கின்றாய்? " என்று பதிலுக்கு கேட்டார். அதற்கு அவன் " பரவாயில்லை ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்துக்கொண்டேன். நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" என்று சொன்னான்.

அந்த விவசாயி நண்பன் துறவியிடம் சொன்னதுதான் நாம் நமக்காக சொல்ல வேண்டியது.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Sunday, June 28, 2009

'பாப்' உலகின் 'சூப்பர் ஸ்டார்' மைக்கேல் ஜாக்சனும் தமிழ் திரைப்பாடலும் (காணொளி)

'பாப்' உலகின் 'சூப்பர் ஸ்டார்' மைக்கேல் ஜாக்சனும் தமிழ் திரைப்பாடலும் (காணொளி)

'பாப்' உலகின் சூப்பர் ஸ்டாராக உலகை கலக்கிய மைக்கேல் ஜாக்சனின் மரணம் ரசிகர்களை வருத்தப்பட வைத்துவிட்டது. ரசிகர்களின் சார்பாக ஆழ்ந்த "கண்ணீர் அஞ்சலி"







Friday, June 26, 2009

சட்டங்கள் இருப்பதை போல அதன் அமுலாக்கம் இருப்பதில்லை!..

சட்டங்கள் இருப்பதை போல அதன் அமுலாக்கம் இருப்பதில்லை!..

வணக்கம் நண்பர்களே! சென்ற இடுக்கைக்கு
காசுகேத்த கல்வியாம்!.. ஆதரவாக தமிழிஸில் வாக்குகளை (26 வாக்குகள்) அள்ளிக்கொடுத்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சமர்ப்பணம். மேலும் யூத்புல் விகடனுக்கும் நன்றிகள் பல. அதேபோல் பின்னூட்டதில் ஊக்கமழித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!


சென்ற இடுக்கையின் சாரமாக வாணிப மயமாக்கப்பட்ட கல்வியும் மருத்துவமும் எல்லாருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கிடைக்க வேண்டும் என்பதை வழியுருத்தினேன். அதை பலர் ஆதரவாக பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி இருந்தனர். இதன் மூலம் பரவலான பாதிப்பு இருப்பது உறுதியாகின்றது. இதை அரசு கவணிக்குமா? அல்லது ஏதோ ஒரு புரட்சிக்கு இட்டு செல்லுமா? என்பது தெரியாது. மண்டைய பிய்த்துக்கொள்ள வைக்கும் இந்த கல்வி நன்கொடை (கையூட்டு என்றே சொல்லலாம்) ஒரு நாள் வெடிக்கதான் செய்யும். டாஸ்மாக் கையில் எடுக்கும் அரசு கல்வியையும், கல்வியின் சீரமைப்பையும் எப்பொழுது கவணிக்க போகின்றது என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய கவலையாகும்......

இன்றைய தினமலர் செய்தியில் மருத்துவம் மற்றும் கல்வி சம்மந்தமாக அரசு எடுப்பதாக இருக்கும் நடவடிக்கை மகிழ்வை தருகின்றது. அதே போல் சட்டங்களும் அதன் செயலாக்கத்தில் உள்ள இந்திய குறைபாடுகள் நம்மை மகிழ்ச்சியிலிருந்து விடுபட வைக்கின்றது. நல்ல சட்டங்கள் இருந்து எந்த புண்ணியமும் இல்லை அதை செயல்படுத்தும் முறைகளிலும் செயல்படுத்தும் வேகத்திலும் உள்ளது.

1.
பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து?: மாணவர்கள் சுமையை குறைக்க திட்டம்
2.மருத்துவமனைகளில் எல்லாருக்கும் இலவச சிகிச்சை

மேற்கண்ட இரண்டு செய்திகளும் கொஞ்சம் நம்மை மகிழ்ச்செய்தாலும் அதன் செயல்வடிவம் முழுமையாக வந்தடையுமா? என்பதுதான் கேள்வியாகும். அரசு பள்ளிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பதை இந்த அரசு எப்பொழுது கவணிக்கும்? அரசு பள்ளிகளில் போதிய இடம் இல்லாமை, போதிய ஆசிரியர் இல்லாமை அப்படியே ஒரு ஆசிரியர் இருந்தாலும் பள்ளிக்கு வராமை எல்லாமே நம்மை வாட்டும் கவலைதான். சமிபத்தில் தமிழக முதல்வர் முதுகுவலி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையைதான் தேர்ந்தெடுத்துள்ளார். இதிலிருந்தே தெரிகின்றது அரசு மருத்துவ மனைகளில் போதிய வசதி இல்லை என்று. மேலும் அறிஞர் அண்ணா தனது சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டங்களைவிட அதன் செயல்வடிவம்தான் மிக முக்கியம் அதை இந்த இரு திட்டங்களுக்கு நினைவில் கொண்டு செயல்ப்படுத்தினால் நன்றாக இருக்கும். கல்வியும், மருத்துவமும் ஞாயமான முறையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் எல்லோருக்கு கிடைக்க அரசியல் அமைப்பில் சட்டம் இருக்கவேண்டும் என்பதே என் ஆசைகள் எல்லோருடைய ஆசைகளும்.

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.

Wednesday, June 24, 2009

காசுகேத்த கல்வியாம்!....

காசுகேத்த கல்வியாம்!..

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் முக்கியமாக கல்வியும் மருத்துவமும் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயதுவரை கல்வியை தரமாகவும் இலவசமாகவும் கொடுக்கவேண்டும் என்பது இந்திய அரசின் கடமை என அரசியல் அமைப்பு சட்டம் சொல்கின்றது. ஆனால் இன்றைய நிலைமை பாலர் கல்விக்கும், ஆரம்பக்கல்விக்குமே பெரும் செலவு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றொம்.

நாட்டில் எல்லொருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கைக்கொடுக்காததால். அன்றைய பிரதமர் ஜவர்கலால் நேரு தொண்டு நிர்வணங்களுக்கு அழைப்பு விடுத்தார். நேரு இட்ட அழைப்புக்கு முதலில் செவிக்கொடுத்தது கிருஸ்துவ ஸ்தாபணம். அவ்வாறு கிடைத்த அழைப்பின் படி இன்றுவரை கல்வியையும் மருத்துவத்தையும் சேவையாக செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள். தமிழ் நாட்டை பொருத்தவரை காமராஜர் காலத்தில்தான் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்கப்பட்டது. மேலும் இலவச மதிய உணவுத்திட்டமும் இருந்தது. இப்படி இலவசமாக கிடைத்த கல்வியை தனியாருக்கு தாரைவார்த்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை டாக்டர் MG ராமச்சத்திரனையே சாரும். இதற்கு பின் வந்த அரசுகளும் கல்வியில் காசுபார்க்க தொடங்கிவிட்டார்கள். கல்வி நிர்வணங்கள் வியாபார தளமாக மாற்றப்பட்டுவிட்டது.

உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். கல்வி தனியார் பொருளீட்டும் வழிகளில் ஒன்றாகதான் இன்று செயல்ப்பட்டு வருகின்றது. தற்பொழுது உள்ள சூழலில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை விட அதிகமாக உள்ளது. காசு உள்ள யார் வேண்டுமானாலும் கல்வி நிர்வணங்களை ஆரம்பித்து வாணிபம் செய்யலாம் என்ற நிலைமைதான் இன்று. எல்லா அமைச்சர்களுக்கும் சொந்தமாக ஒரு கல்வி நிர்வணம் உண்டு, சேவை செய்வதற்காக இல்லை பொருளீட்டுவதற்காகதான்.

எங்கள் பள்ளியில் தரமான கல்வித் தருகின்றோம் என்று சொல்லி காசை பிடுங்குவதுதான் நிர்வாகங்களுக்கான வேலை. நாமும் அப்படிதான் ஆகிவிட்டொம், கல்வி என்பது அறிவின் தேடல் என்பதை மறந்துவிட்டு பொருளீட்டுவதற்காண முதலீடு என்றுதான் கல்வியை பார்க்கின்றோம். அப்படிதான் இன்றைய கல்விமுறையும் இருக்கின்றது.

கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவை தந்து அதன் பின் அவர்களை ஆற்றலோடு வளர்ப்பதுதான் சரியானதே தவிர மதிப்பெண்ணின் நோக்கத்திற்காக இல்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தங்களின் லட்சியங்களை அடைந்திருக்கின்றார்கள்? வாழ்வில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரும் மதிப்பெண் பெற்றவர்கள் என்று சொல்லவும் முடியாது. கல்வி என்பது அறிவின் தேடல், அந்த தேடலின் வெற்றிதான் வாழ்க்கையின் வெற்றியாக இருக்கும். மதிப்பெண்ணுக்காவும் பொருளீட்டுவதற்காகவும் கொடுக்கப்படும் கல்வி வெற்றியை கொடுக்காது என்பதுதான் உண்மை. இப்படி பொருளீட்டுவதற்காக காசுகொடுத்து வாங்கும் கல்வியால்தான் பின்னர் தன் பொறுப்பில் உள்ள வேலைக்காக லஞ்சம் வாங்கும் நிலை ஏற்படுத்துகின்றது.

அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவணம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவணம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை. இன்னும் சில அரசியல் பூச்சிகள் "கள்" எடுக்க அங்கிகாரம் கேட்கின்றார்கள். ஆக மொத்தம் கல்வியை சாகடித்து விடுவார்கள் என்றே தோன்றுகின்றது.


அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


Sunday, June 21, 2009

"லோஷன்" அவர்களுடன் மாபெரும் சிங்கை பதிவர் சந்திப்பு (20-06-2009)

"லோஷன்" அவர்களுடன் மாபெரும் சிங்கை பதிவர் சந்திப்பு (20-06-200)

வானலை (வெற்றி FM) மூலம் தன் குரலை ரசிகர் மத்தியில் பதிந்துகொண்டும் வலைப்பதிவுகளிலும் கலக்கி கொண்டிருக்கும் இலங்கை பதிவர் "லோஷன்" அவர்களுடன் மரியாதையின் காரணமாக மாபெரும் சிங்கை பதிவர்கள் சந்திப்பு நேற்று (20-06-2009) புற நகரான Kallang ல் நதிக்கரை (நைல் நதியில்லாப்பா) ஓரம் நண்பர் "டொன் லீ " அறிவிப்பின் படி சிறப்பாக நடைப்பெற்றது.

முக்கிய பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டு கூட்டம் கலைகட்டியது. லொஷன் அவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கோவி.கண்ணன் அவர்களின் அருளால் பக்கோடா விருந்தும் நடைப்பெற்றது. கலந்துரையாடல் மட்டுமில்லாது மொக்கைகளும் கூட்டத்தை மிக சிறப்பாக்கியது. புதிதாக லோஷன் நண்பரும் பதிவருமான நண்பர் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்.

கூட்டத்தின் முக்கிய பேச்சாக கிரிக்கெட்(மட்டை பந்தாட்டம்) , இந்திய அரசியல் அதன் காமடிகளும் தேவைகளும், இலங்கை தமிழ் மக்களின் மானுடம் காக்கப்படவேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்வு அமையவேண்டும் என்றும் பேசப்பட்டது சிறப்பாக அமைந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களைப்பற்றி தனித்தனியாக சொல்லாவிட்டாலும் அவர்களின் புகைப்படம் மற்றும் காணொளியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் விவரங்கள் "டொன்"லீ பக்கம் பார்க்கவும் "சிங்கை பதிவர் ஒன்றுகூடல் அறிக்கை (20-06-2009)"

புகைப்படங்களை பார்க்க இங்கே செல்லவும்

கூட்ட அறிக்கையின் காணொளி பகிர்வு




Saturday, June 20, 2009

மழுங்கடிக்கும் மந்தநிலை...

மழுங்கடிக்கும் மந்தநிலை...

பிராந்திய நாடுகளில் இன்றைய பொருளியல் மந்தநிலை மீண்டு வருவதாக செய்திகள் கூறினாலும் வார்த்தகம் ஏற்றம் காண்பதுபோல் இருந்து பொய்த்து வருகின்றது. ஆசியா நாடுகளிலும் இதே நிலை என்றாலும் இந்தியாவில் இந்த பொருளியல் மந்தம் பெருவாரியாக தாக்கம் இல்லை இருப்பினும் தற்கொலைகள் அதிகமா இருப்பதும் வர்த்தகம் பொய்க்கும் காரணங்கள்தான்.

அரசாங்கம் பொருளியல் மந்தநிலையிலிருந்து மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தாலும், நிர்வாகங்களின் சுய லாபநோக்கமும், பொறுப்பற்ற நிலையும்தான் இந்த மந்தநிலை தீர்வுக்கு வரமுடியாமல் திணர்கின்றது என்பதுதான் என் எண்ணங்கள். இப்படியே போனால் இன்னும் ஒரு தலைமுறைக்கு இந்த தா
க்கம் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அமேரிக்க அதிபர் ஒபாமாவின் திட்டங்கள் கூட பொய்த்து வருகின்றது. அமெரிக்காவில் மந்தநிலை மீட்டெடுக்க முடியாமல் சுனக்கம் காண்பது சாமானியனுக்கு மிகுந்த கவலைதான்.


நிர்வாகத்திடம் அரசாங்கம் பொறுப்புடன் செயல்படும் என்ற நம்பிக்கையில் அவற்றுக்கு பொருளியல் உதவிகள் செய்கின்றது. அதேபோல் செலவினங்களை குறைக்க உதவியாக இருக்கின்றது. இதை நிர்வாகம் சாமானியர்களிடம் முறையற்ற நடவடிக்கையாக பல நூறு ஆண்டுகளாக போராடி வாங்கிய தொழிலாளர் சமுக நலன்களை பறிக்க பயன்படுத்துகின்றது. பறிக்கப்பட்ட நலன்கள் எக்காரணத்திற்காகவும் திருப்பி தர வாய்பில்லை என்பது கவணத்தில் கொள்ளவேண்டும். இப்படியாக பொருளியல் மந்தநிலையில் வரும் பாதிப்பை சாமானியன் தலையில் திணித்துவிடப்பட்டு நிர்வாகம் மேலும் கொள்ளை லாபம் பெறுகின்றது. இந்த லாபம்தான் வர்த்தகம் ஏற்றம் காண்பதுபோல தெரிவதும் பின் இறங்குவதும். சாமானியர்கள் அடிப்படை செலவினங்களுக்கு தடுமாறும்பொழுது பொருளியல் மந்தநிலையில் ஏற்றம் காண்போம் என்பது சாத்தியம் இல்லை. இதை நாம் கவணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. இதற்கு தொடர்புள்ள என் சுட்டிகள் இங்கே ஒன்று, இரண்டு .

சாமானியனிடம் திணிக்கப்பட்ட சுமையிலிருந்து எடுக்கப்படும் லாபங்களை வைத்து நிர்வாக வளர்ச்சி பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. சாமானியர்கள் பொருளியல் வளர்ச்சிதான் அந்த தேசத்தின் வளர்ச்சியே தவிற தனிப்பட்ட நிர்வாகத்தின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சியாக இருக்க முடியாது அப்படியே இருந்தாலும் அது நிரந்தரமற்ற நிலைதான். எனவே அரசாங்கம் சாமானியர்களின் பொருளியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டுவரவேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த பொருளியல் மந்தம் இன்னும் ஒரு தலைமுறைக்கு இருக்கும் என்பது இந்த சாமானியனின் எண்ணம்.

இந்த இக்கட்டாண நிலையில் சாமானியன் கவணிக்கப்படவேண்டியவைகள்
1. தேவையற்ற ஆடம்பர பொருள்களை வாங்குவதை தவிற்கவும்.
2. கடன் அட்டையை முறையாக பயன்படுத்தவும்.
3. கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி முதலீட்டை தவிற்கவும்.
4. தனிமனித சேமிப்பை அதிகப்படுத்தவும்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Wednesday, June 17, 2009

அம்மா நான் கடலை ஆயப்போறேன்...

அம்மா நான் கடலை ஆயப்போறேன்...
வணக்கம் நண்பர்களே சென்ற பதிவில் ன்மீது கல்லெரிந்தவர்கள்-புளியமரம் பற்றி படித்த சில நண்பர்கள் அலைபேசியில் அழைத்து "இனிய நினைவுகளை நினைவுப் படுத்திவிடீர்கள் மிக்க நன்றி" என்று கூறினார்கள். அதேபோல் ஒரு நண்பர் புளியங்கொட்டையில் செய்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு கடலை ஆய செல்வதையும் எனக்கு ஞாபகப்படுத்திவிட்டார். ஆமாங்க சிறுவகளாய் இருக்கும் பொழுது தோட்டதிற்கு கடலை ஆய சென்ற ஒரு மகிழ்ச்சியான அனுபவம் அவற்றையும் உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியே.

புன்சை நிலங்களிலும், வானம்பார்த்த நிலங்களிலும் துவரைப் பயிருக்கு ஊடுப்பயிராக நிலக்கடலையும் பயிர் செய்வார்கள். துவரைக்கு முன்பாகவே அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடலை பக்குவத்திற்கு வந்துவிடும். கடலை செடி குத்துக்கடலை, கொடிக்கடலை என இரு வைகை உண்டு. பக்குவத்திற்கு வந்த கடலைச்செடியை லாபகமாக கடலையுடன் பிடுங்குவார்கள். குத்துக்கடலை செடி புடுங்க சுலபமாகவும், கொடிக்கடலை கொஞ்சம் சிரமமாகவும் இருக்கும். கொடிக்கடலையில் ஒரு காயில் மூன்று பருப்புகள் என அதிகமாக இருக்கும். குத்துக்கடலையில் பொதுவாக ஒரு காயில் இரண்டு பருப்புதான் இருக்கும்.

இப்படி லாபகமாக புடுங்கிய கடலைச்செடியை போரைப்போல் குவித்து வைத்திருப்பார்கள். அந்த கடலைகளை செடிகளிருந்து ஆயத்தான் நாங்கள் அந்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு செல்வோம். பள்ளிக்கு சென்ற நேரம் போக கடலை ஆய நாங்கள் செல்வோம். கடலை ஆயும் பொழுது கொல்லைகார தாத்தாவிற்கு தெரியாமல் சில கடலைகளை வாயிலும் சிலகடலைகள் புட்டியிலும் வைப்போம். எப்படியும் தூரத்திலிருந்து அந்த தாத்தா நாங்கள் சாப்பிடுவதை பார்த்துவிடுவார். " எலேய் யாருட கடலை ஆயமா கடலையை சாப்பிடுவது அப்பறம் வயித்துக்கு நோவுனா என்ன சொல்லக்கூடாது" என்று வாஞ்சையுடன் தாத்தா கத்துவார்.

நான்கு புட்டி கடலை ஆய்ந்தால் ஒரு புட்டி கூலியாக கொடுப்பார்கள். நாங்கள் திண்ன மீதிதான் புட்டிக்கு கடலை வரும். கூலி கடலைக்காக வருகின்றோமோ இல்லையோ கடலையை தாத்தாவிற்கு தெரியாமல் சாப்பிடுவதற்காகவே அடிக்கடி கடலை ஆய வருவோம். கடலையை காம்பு இல்லாமல் ஆயவேண்டும் காம்பு அதிகம் இருந்தால் ஐந்து புட்டிக்கு ஒரு புட்டிதான் கூலியாக கிடைக்கும். காம்பு அதிகமாக இருந்தால் ஆயவேண்டாம்
என்று தடுத்துவிடுவார்கள். நான் மட்டும் காம்பு இல்லாமல் ஆய மிகவும் சிறமப்படுவேன்.

சாப்பிட்ட கடலைக்கு கண்டிப்பாக தலைவலியோ வயிற்றுவலியோ வரும் என்று பாதுகாப்பாக அம்மா வெல்லக்கட்டி கொடுத்து அனுப்புவாள். எல்லோரும் அப்படிதான் வெல்லக்கட்டி எடுத்து வருவார்கள். கடலையை சாப்பிட்டதும் வெல்லக்கட்டி சாப்பிட்டால் நோவு வராது என்பது அனுபவம். கடலை ஆய சென்றால் கடலையும் கிடைக்கும் வெல்லக்கட்டியும் கிடைக்கும் என்பதில் எத்தனை மிகிழ்ச்சி.

இப்படி கூலியாக கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும். இப்படி இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்.

இப்படிப்பட்ட கிராமத்து அனுபவங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

Saturday, June 13, 2009

என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்

என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்
என் ஊர், ஊரின் குளத்துமேட்டில் ஒரு பள்ளிக்கூடம், போகும் வழியில் நான்கு புளியமரம் என்று சொன்னதும் எல்லொருடைய மனதிலும் "ஆமாம் எங்கள் ஊர் புளியமரமும் " என்று கதை சொல்ல தொடங்கிவிடும். அந்த அளவிற்கு பால்ய வயதில் புளியமரத்தோட உறவு ஒரு நெருக்கம் உறுவாகி இருக்கும்.

"காய்த்த மரம் கல்லடிப்ப
டும்" என்று சொல்வதுண்டு இந்த புளியமரம் எங்களின் கல்லடி படாத நாட்களே இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமா எல்லா விதமான பால்ய விளையாட்டின் ஆடுகலமே இந்த புளியமரத்தடிதான். சில சமய கட்டப்பஞ்சாயத்துகளும் இந்த புளியமரத்தடியில்தான் நடக்கும். புளியமரத்தில் பேய்கள் இருக்கும் என்றும் சொல்வதுண்டு, எங்களை பார்த்துதான் அப்படி சொல்வார்களோ என்னவோ.... சுற்றி சுற்றி அந்த புளியமரத்தடியில்தான் நாங்கள் இருப்போம். எங்களை போன்றே அந்த புளியமரம் அடுப்பெரிக்கதான் பயனாகும், வேறு எந்த மரவேலைகளுக்கும் ஆகாது.

ஒவ்வொரு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு அந்த புளியமரம் எங்களோடு உறவாடுவதை நினைத்தால், இன்றும் பசுமரத்து ஆணிபோல நினைவில் உள்ளது. ஆணி என்றவுடன் ஒரு நினைவுகள் புளியமரத்தில் ஆணிகள் அடித்து வைக்கப்பட்டு இருக்கும். பேய் பிடிதவர்களை பேயை இறக்கி இந்த ஆணியில்தான் அடித்து வைப்பதாக கூறுவார்கள். எது எப்படியோ இந்த ஆணிகள்தான் புளிமரத்தில் ஏறுவதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த புளியமரம்தான் குண்டு,பம்பரம்,சில்லு, பேபந்து போன்ற விளையாட்டுக்கு ஆடுகலம். ( இதனோடு விளையாடிய காலம் மீண்டும் எப்போ வரும்????????)

பூக்காலம்; ஆடி காற்றில் அம்மியும் நகருமாம், இந்த காற்றில் புளியமரத்தின் இலை மட்டும்தான் நகரும். இந்த காத்தடிகாலம் முடிந்ததும் புளியமரம் பூ பூக்க ஆரம்பிக்கும். காத்தடிக்காலம் முடிந்ததும் கண்ணுவலியும் (கண்நோய்) வர ஆரம்பிக்கும். புளியம்பூவிற்கும் கண்ணுவலிக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்றாலும் புளியம்பூ
வை பார்த்தால் கண்ணுவலி வரும் என்று சொல்வதுண்டு. புளியம்பூ மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும். வாயில் போட்டு சுவைத்தால் துவர்ப்பு கலந்த புளிப்பு சுவையாக இருக்கும். தீப்பெட்டியில் இரண்டு மூன்று பூக்களை போட்டு ஒருப்பக்கம் அட்டையை எடுத்து விட்டு காகிதத்தால் மூடி மறுப்பக்கம் ஒரு ஊசி துவாரத்தில் பார்த்தால் வீரர்கள் சண்டை போடுவது போல காட்சி தெரியும்.

காய்க்காலம்; கிட்டதட்ட அரையாண்டு பரிச்சை முடிந்து பள்ளிக்கு செல்லும் காலமிது, இப்பொழுதுதான் புளியம்பூக்கள் எல்லாம் பிஞ்சாக காட்சியளிக்கும். உஸ்ஸ்... நினைத்தாலே வாயில் எச்சிலல்லவா வரும். பிஞ்சுகள் இதமான புளிப்பு சுவையுடையவை. இங்கு ஆரம்பிக்கும் கல்லெரிகள் பழமாக கீழே விழும் வரை தொடரும். சுத்தம் சோறு போடும் என்பார்கள் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. கல்லடிப்பட்டு கீழே விழும் பிஞ்சுகள் எல்லாம் எங்கள் வாயில்தான். புளியம்பிஞ்சை உப்புடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ..... சொன்னால் புரியாது. இன்னும் சிலர் மா இலை
கொழுந்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள் (மாங்காய் சாப்பிடுவதுபோல இருக்கும்).

கனிக்காலம்
; காய்த்த மரம் கல்லடிப்படும்பொழுது கனிந்த மரம் என்னாவாகும். பக்கத்தில் உள்ள அத்தனை கற்களும் இந்த புளியமரத்தடியில்தான். முழு ஆண்டு பரிச்சையும் முடியும், இந்த புளியம்பழமும் எங்கள் கைகளில் இருக்கும். எங்கள் ஊரின் நான்கு புளியமரம் பரம்பர பரம்பரையாக ஒரு பதினைந்து குடுப்பதிற்கு சொந்தமாக இருக்கும். மரத்தின் மேலே ஏறி உழுக்கியும் தொரட்டியில் உழுக்கியும் பழங்களை எடுத்து எல்லோரும் பங்கிட்டுகொள்வார்கள். இப்படி பார்த்தால் முழுஆண்டு பரிச்சை லீவில் எங்கள் தெருவில் புளியம்பழம் வாசலில் காய வைத்திருப்பார்கள்.

காய்ந்த பழங்களை தோலுரித்து பின் காயவைக்க வேண்டும் . தோல் உரித்த புளியம்பழம் காய்ந்ததும் அதன் பிசுப்பு இல்லாமல் இருக்கும். இவற்றை கோணி ஊ
சிகொண்டு கொட்டை எடுக்க வேண்டும். இப்படி கொட்டை எடுக்கும் பொழுது வாயில் போட்டு சுவைக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். கொட்டை எடுத்த புளியை தனியாக காயவைத்து பானையில் எடுத்து வைத்துக்கொண்டு அந்த வருட சமையலுக்கு பயன்படுத்தப்படும். புளி இல்லாத இந்திய சமையல் இல்லை என்றே சொல்லலாம். மீன் குழம்பிற்கு புளி மிக முக்கியமாக பயன்படுத்துவார்கள்.

ஒத்தையா ரெட்டையா; புளியிலிருந்து வரும் கொட்டை புளியங்கொட்டை, இவற்றை நாங்கள் எடுத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு ஒத்தையா இரட்டையா. அவரவர்கள் வீட்டு புளியங்கொட்டையை எடுத்துக்கொண்டு இந்த ஆட்டம் துவங்கும். ஒருவர் தான் வைத்திருக்கும் கொட்டையின் ஒரு பகுதியை தனியாக காட்டி ஒத்தையா? இரட்டையா? என்று கேட்பார். அதற்கு அடுத்த ஆட்டக்காரர் பதில் சொல்ல தனியாக காட்டிய பகுதியை இரண்டு இரண்டாக பிரிக்கப்படும் கடைசியில் வருவது ஒன்றாகவோ அல்லது இரண்டாகவோ இருக்கும் . அடுத்த ஆட்டகாரர் சொன்ன பதில் சரியாக இருந்தால் அந்த பகுதி புளியங்கொட்டையை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லை எனில் அவர் ஆட்டகாரருக்கு ஒரு சோடிக்கு ஒரு புளியங்கொட்டை என்று கொடுக்க வேண்டும் இதுதான் ஆட்டம்.

இப்படி விளையாடிய புளியங்கொட்டை வீடுவந்து சேரும்.... புளியங்கொட்டையின் தோலை டீ தூளில் கலப்படம் செய்வார்களாம். மேலும் காகித ஆலைக்கு தேவைப்படுமாம் அதனால் வியாபாரிகள் காசுக்கு வாங்கிச்செல்வதும் உண்டு. புளியங்கொட்டையை வறுத்து உப்புபோட்டு தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவதும் உண்டு. எழ்மையின் சாப்பாடு என்றும் சொல்வார்கள். முழு ஆண்டு பரிச்சை முடிந்து படித்து கிழித்த காதிதத்தையும் புளியங்கொட்டையையும் நுணுக்கி தண்ணீரில் கூழாக வேகவைத்து காகித பெட்டிகள் செய்வதும் உண்டு. இந்த காகித பெட்டிக்கு அச்சாக குடம், தவலை, செம்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள். காகிதப் பெட்டிக்கு வர்ணம் செய்து பார்க்க அழகாக இருக்கும்.

சென்றமுறை ஊருக்கு சென்றபொழுது அந்த புளியமரத்திற்கு வயதாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் யாரும் என்மீது கல்லெரிவதே இல்லை என்று என்னிடம் சொன்னது. நாகரிக வளர்ச்சியில் என்னடியில் எந்த கட்டப்பஞ்சாயத்துகளும் நடப்பதில்லை. பிள்ளைகள் ஆட்டோ, வேன்களில் பத்திரமாக பள்ளிக்கூடம் சென்றுவருவதாகவும் கூறி மகிழ்ந்து சிரித்தது அந்த புளியமரம்.....

புளியமரத்து நினைவுகளுடன்..
ஆ.ஞானசேகரன்.

Wednesday, June 10, 2009

அய்யோகோ...

10,00,000 வது வார்த்தையாகுமா 'ஜெய் ஹோ?' : இன்றிரவு அறிவிப்பு-நன்றி தினமலர்

"ஜெய் ஹோ' கேட்ட காதுகளுக்கு-ஏன்
ஈழத்தமிழனின் "அய்யோ" என்ற ஓலம் கேட்கவில்லை,
இசையில் குறையேதுமில்லை - உலகே
உன் இதயத்தில் குறையல்லவா இருக்கு.........

உங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

Sunday, June 7, 2009

செல்லம்மாள்.. (வலைப்பதிவர்கள் பங்கேற்கும் சிறுகதை போட்டிக்காக)

" எலே! செல்லம்மா, என்னபுள்ள ஆலு வரதே தெரியாம போர; ராமாயி அக்கா இருக்கானு ஞாபகம் இருக்காப்புள்ள?" என்று ராமாயி அழைத்தாள் செல்லம்மாவை. "இல்லக்கா ராவு ஆச்சியில்ல‌ போயிதான் கஞ்சு ஆக்கனும் அதுனாலதான் அவசரமா போறேன்" என்றாள் செல்லமா. "ங்ங்ங் உன்னதான் அந்த ஆண்டவன் வாழ்கையை பாழாக்கிபுட்டான் நீயும்தான் ஒண்டிக்கட்டையா இருந்து கஷ்டப்படுறத நினைச்சாலே தூங்க முடியல செல்லமா" என்று செல்லம்மாவை பற்றி சொல்லிக்கொண்டாள் ராமாயி அக்கா. செல்லம்மாவை கண்ணாலம் கட்டின பொன்னயையன் ரொம்ப நல்லவன், அது ஆண்டவனுக்கே பொறுக்காமதான் நோவுல அழைச்சுகிட்டான். அன்னையிலேருந்து செல்லம்மா இப்படிதான் ஒத்தாளா வாழ்கையை ஓட்டுரா.

இந்த ஊரிலேயே செல்லம்மாவுக்கு துணையின்னா ராமாயி அக்காதான். ராமாயி அக்கா புருசன் பக்கத்து ஊரு சக்கரை ஆலையில வேலை, ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. " செல்லம்மா நீ ஒரு ஆலுக்கு என்ன ஆக்கப் போர ஒரு வாய் இங்கேயே சாப்புடு புள்ள" என்றாள் ராமா
யி. " இல்லக்கா நேத்து வச்ச கருவாடு குழம்பு இருக்கு சோறு மட்டுதான் வைகனும் நான் வரேனக்கா" என்று புறப்பட்டாள் செல்லம்மா. "எப்பவேனாலும் பசினு வந்தா நம்ம ஊடு மாதுரி வந்து சாப்பிட்டு போ செல்லாம்மா" என்றாள் ராமாயி அக்கா.

போக்கும்போதே நினைப்பெல்லாம் ராமா
யி அக்காவிற்கு தான் செய்த துரோகத்தை நினைத்தாள் செல்லம்மாள். அவளுக்குனு ஒரே ஆறுதல் ராமாயி அக்காதான், எதானாலும் ராமாயிகிட்டதான் சொல்லி அழுவா. அதுபோலதான் அன்னக்கியும் ராமாயி அக்காவை பார்க்க செல்லம்மாள் ராமாயி வீட்டுக்கு சென்றிருந்தாள் . ராமாயி வீட்டுல இல்ல அவள் புருசன் மட்டுதான் இருந்தான். "அக்கா ... அக்கா "என்று சொல்லியவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் செல்லம்மா. "ராமாயி பக்கத்து தெருவுக்கு போயிருக்கு என்ன வேனும் செல்லமா? " என்றான் ராமாயி புருசன். ராமாயி போலவே இவனும் ரொம்ப நல்ல குணம். "அக்கா இல்லையா? சரி போயிட்டு அப்பறம் வரேன்" சொல்லி புறப்பட்டாள் செல்லம்மா. எது நடக்ககூடாதோ அது அன்னக்கி நடந்துருச்சி, காற்றும் மழையும் அவளை போக விடாமல் தடுத்துவிட்டது. கண்ணாலம் ஆயி ஒரு மாசம் மட்டுமே புருசனோடு கிடைச்ச ஒன்னு இப்ப கிடைச்சதும் வேனானு சொல்ல முடியல. ராமாயி புருசனும் வேனும்னு செய்யல எல்லாம் முடிஞ்சிருச்சி. அதுக்கப்பறம் எப்பல்லாம் தனியா பாக்குரோமோ அப்பல்லாம் அது நடந்துருது. அதுக்காக அவள் அந்த சந்தர்ப்பம் எதிர்ப்பார்ப்பவளாகவே ஆக்கிவிட்டது. அந்த சம்பவம் அவளை ரொம்பவும் வாட்டியது. ராமாயி அக்காவை பார்த்தாளே, அவள் செய்யுற துரோகம்தான் அவளை வாட்டுகின்றது. அவளால் அதை தடுக்கவும் மனம் இல்லை. எல்லாத்தையும் மனதில் ஓட்டியவாரே அவள் வீட்டுக்கு சென்றாள் செல்லாமாள்.

செல்லம்மா வீட்டுக்கு முன் யாரோ நிற்பது தெரிச்சது. "யாரூ தபால் கார அண்ணனா? என்ன இந்த நேரத்துல" என்று சொல்லியவாறு வந்தாள் செல்லம்மாள். " காலையில வேலைக்கு போயிட்டியாக்கும் உனக்கு உங்க அண்ணனுகிட்டேருந்து கடுதாசி வந்துருக்கு ஏதும் அவசரம் இருக்கும் என்றுதான் கொடுத்துட்டு போலாமுனு வந்தேன் செல்லம்மா" என்றார் தபால் காரர். "நீங்களே படித்து சொல்லுங்க அண்ணே" என்று சொல்லி ஆர்வமாய் கேட்டாள்.

"செல்லம்மாவிற்கு அண்ணன் ரங்கன் எழுதியது,
செல்லம்மா நீ நல்ல இருக்கியா? நாங்கள் அனைவரும் நல்லா இருக்கோம். அப்பாதான் உடம்புக்கு முடியாம ரொம்பவும் கஷ்டப்படுது. அவருக்கு துணையா இருக்கதான் ஒரு ஆல் இல்லை. வயல் வேலைகள் அதிகமாக இருக்கு என்ன பன்னுரதுனு தெரியல. நீயும்தான் எவ்வளவு நாளைக்கிதான் தனி ஆளா இருந்து கஷ்டப்படுவ. நடந்தது நடந்து போச்சி நீ இங்கு வந்தா அப்பாவிற்கு உதவியா இருக்கும். அப்பா எப்பவும் உன்
நினைப்புளதான் இருக்கார். உடனே நீ வந்தாதான் நல்லா இருக்கும். வீட்டுல இருக்க எல்லா சாமனையும் ராமாயி அக்காகிட்ட கொடுத்திட்டு நீ உடனே இங்கே வந்திரு. நீ சாவுர வரைக்கும் நானும் உதவியா இருப்பேன்.

உடன் வரவேண்டும்
ரங்கன்."


என்று தபால்காரர் படித்தவுடன் செல்லம்மாவிற்கு கண்களில் தண்ணீர் சொட்டியது. தபால் காரர் கொடுத்த தபாலை வாங்கி முந்தானையில் வைத்து கொண்டு, நல்ல முடிவு எடுத்தவளாக வீ
ட்டிற்குள் சென்றாள் செல்லம்மாள்.........

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி


என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, June 5, 2009

கேள்வினாவே பயம்!

ஆங்ங்... இந்த சாமானியனை மதிச்சு நம்ம சொல்லரசன் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளார்ங்க அதுவும் கேள்வி பதிலுங்க. எனக்கு கேள்வினாவே பயம் அதுவும் 32 கேள்விகள். என்னபன்னுறது சாமானியனுக்கு தெரிஞ்சதை சொல்லுறேங்க கோவப்படாதீங்க ஓகேவா............start >>>>>>>

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் அப்பா, அம்மாவைதான் கேட்கனும், ஆமாங்க என் பெயர் ஆ.ஞானசேகரன் பெயரிலாவது ஞானம் இருக்கடுமே என்று வைத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். ஒரு சாமானியனுக்கு ஞானத்தோடு பேரு புடிக்காதா என்ன? ரொம்ப ரொம்ப புடுச்சி இருக்குங்க.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
தெரியலங்க, எப்பொழுதாவது அழுவதுண்டு அது நல்லதுக்கும் இருக்கும் கெட்டதுக்கும் இருக்கும். வருத்தப்படுவது நிறையா............ இருக்கும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து நல்லா இருந்தா தலையெழுத்து நல்லா இருக்காதாம். எனக்கு ரெண்டுமே நல்லா இல்லை ஏன்னு தெரியலங்க. என் கையெழுத்து எனக்கு பிடிக்குமுங்கோ ஏன்னா என் கையெழுத்து எனக்கு மட்டும்தான் புரியும். தலையெழுத்தைப் பற்றி அப்பறம் சொல்லுறேனுங்க.

4.பிடித்த மதிய உணவு என்ன?
என் அம்மா என்னை அடிக்கடி திட்டி சொல்லுவது, "உனக்கு எப்படி ஆக்கி கொடுப்பதே தெரியல எது பிடிக்குது எது பிடிக்கலனு தெரியலப்பா". இப்பவும் அப்படிதானு நினைக்கின்றேன். காய்கறிகள் அதிகம் பிடிக்கும் அம்புட்டுதான்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்புக்காகவே பதில் சொல்லுரேன் அப்பறம் என்னங்க. உடனே இல்லாட்டியும் ஆழமா வச்சுக்குவேனுங்க.....

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
டிசம்பர் மாதப்பனியில் காலை 6 மணிக்கு ஏரியில் குளிக்க பிடிக்கும். அருவியில் குளிக்க ரொம்ப பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சந்தேகமே வேண்டாம் அவரைதான் கவனிப்பேன். கண்களை பார்த்து பேசினால் வாஞ்சையாக இருப்பதாக தெரியுமாம்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது தெரியலங்க, பிடிக்காதது நிறைய இருக்கு முன்கோபம், ஆங்காரம், தன்னை மீறிய நம்பிக்கை,காரியத்தில் காலம் கடத்துதல் இப்படி எல்லாம்........

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது என்மீது உள்ள காதல். பிடிக்காதது என்மீது உள்ள சுயநலமற்ற காதல்...

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
எல்லா நேரத்திலயும் இல்லை அந்தந்த சமயங்களின் இவர்கள் இல்லையேனு வருந்துவதுண்டு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இந்த கேள்வியின் அவசியம்தான் புரியல, இருந்தாலும் கரும்பச்சை நிற பேண்ட் மற்றும் கருப்பு டீ'சர்ட்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ம்ம்ம்ம் இந்த கேள்வியை பார்த்து பதிலை தட்டச்சு செய்யுறேன்பா.... என்ன கேள்வி இது?

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
அதெல்லாம் முடியாதுங்க எனக்கு இந்த மானிட பிறவிதான் பிடிக்கும். அதுவும் இந்த கருப்பு நிறமே போதும்.

14.பிடித்த மணம்?
குழந்தை இருக்கும் பொழுது பால்மணம், இளமையில் திருமணம்(நல்ல இருமணங்களாக), முதுமையில் சமர்ப்பணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
1. நல்ல படைப்பாளி, நல்லப் பண்பாளர் நண்பர் பொன். வாசுதேவன் அகநாழிகை அவர்களை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கின்றேன். அவரைப் பற்றி அவரே சொல்லி தெரிந்துக்கொள்ள ஆசை.

2.கொங்கு தமிழில் பேசி, சரியான தமிழ் வளர்க்க ஆசைப்படும் நண்பர் பழமைபேசி எழிலாய் பழமை பேச... அவர்களையும் இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கின்றேன். கொங்கு தமிழில் அவரைப் பற்றி அவரே சொல்லி தெரிந்துக்கொள்ள ஆசை.

3. ஒரு திரைப்பட எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தனது 58 வது வயதிலும் இளமையான எழுத்துகளுடன் என்னை கவர்ந்த ஐயா ஷண்முகப்ரியன் ஷண்முகப்ரியனின் படித்துறை அவர்களையும் இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கின்றேன். அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள எல்லோருக்கும் ஆசை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
20 பதிவு என்றாலும் எல்லாம் சமூக ஆரோக்கியம் உள்ளது.

17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கை விளையாட்டு, நான் ரசித்து விளையாடும் விளையாட்டு.

18.கண்ணாடி அணிபவரா?
"ரொம்ப முக்கியம்", 40தை கடந்து விட்டதால் கூடிய விரைவில்....

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சமுக அக்கறையுள்ள திரைப்படம். அது எந்த ஆண்டு வந்த திரைப்படமுனு கேட்கக்கூடாது.

20.கடைசியாகப் பார்த்த படம்?
"அயன்" இது எந்தவகையான சமுக அக்கறையுள்ளதுன்னு கேட்ககூடாது.

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்தக்காலம்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
படிப்பதை நிறுத்தி 20 வருடம் ஆகுதுங்க, இப்பதான் கொஞ்சம் பதிவுகளை படிக்கின்றேன். வாழ்க்கை சொல்லிக் கொடுக்கின்றதை படிக்கின்றேன் அம்புட்டுதானுங்க. எப்பொழுதாவது வாரப்பத்திரிக்கை படிப்பதுண்டு.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்பொழுதெல்லாம் நல்ல புகைப்படங்களை பார்கின்றேனோ, அப்பொழுதெல்லாம்........

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்ததும் பிடிக்காததும் சிரிப்புதானுங்க, இடத்திற்கு ஏற்றவாறு மாறும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சிங்கபூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இந்த கேள்விக்கு மார்க் வேண்டாம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மனிதனுக்கு மனிதனால் கிடைக்கும் மரணம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நாளை என்று நாட்களை கடத்துவது.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
நான் இதுவரை பார்க்காத இடம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்-பாரதிதாசன்
போரில்ல உலகம் காண ஆசை

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பதில் மட்டுதலில் உள்ளது.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிப்பாடும்
கன இரும்பும் நடனமாடும்.


நான் பாஸாயிட்டேனானு சொல்லுங்கப்பா,......
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


Thursday, June 4, 2009

சங்கடங்களில் இனியவைகள்...

குழந்தைகள் கேள்வி கேட்கனும் என்பது ஞாயமான ஒன்றுதான். அப்படி குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பல நேரங்களில் சங்கடத்தில் ஆழ்த்திவிடும். அது சங்கடங்களாக இருந்தாலும் இனிமையாகவே இருக்கும். இப்படிப்பட்ட பல சங்கட விடயங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்துக்கொள்வதும் உண்டு.

இப்படிதான் நண்பர் ஒருவரின் பையன் தொலைக்காட்சியில் நாப்கின் விளம்பரம் ஒன்றை பார்த்து "ஏம்ப்பா அந்த வெள்ளை செருப்புல ஊதா கலர் தண்ணிய ஊத்துராங்கனு " கேட்டானாம். நண்பர் எப்படி சொல்வதுனு புரியாம "தண்ணீய ஊத்தீனா தெரியாதுனு ஊதா கலர் தண்ணிய ஊத்துராங்கனு " சொல்லி சமாளிச்சாராம். பையனும் எல்லாம் தெரிஞ்சுகிட்ட மாதுரி தலையை ஆட்டினான்.

அதே போல ஒருவர் தன்னுடைய திருமண ஆல்பத்தை தன் குழந்தைகளுடன் பார்த்து மகிழ்ந்துக்கொண்டிருந்தார். ஆல்பத்தில் இதோ பார் மாமா, இதோ அத்தை பார், இதோ தாத்தா, பாட்டி பாருனு சொல்லி மகிழ்ந்தாராம். ஆல்பத்தை பார்த்த அவர் பொண்ணுக்கு ஒரு சந்தேகம் "உங்க கல்யாணத்துல நான் எங்கே போயிருந்தேன்? போட்டோவில் என்னை காணவில்லைனு" கேட்டாள். அதற்கு அவர் மனைவி "நீ அம்மா வயித்துல இருந்தேனு" சொன்னாங்க. பிறகு அந்த பொண்ணு "அப்போ அண்ணன் எங்கே போணான்?" என்று கேட்டதும் அண்ணனும் அம்மா வயித்துலதான் இருந்தானு சொன்னாங்க. இன்னும் அவள் விடுவதாக இல்லை தம்பி பாப்பா எங்கே போணான்? என்று கேட்டாள். தம்பி பாப்பாவும் அம்மா வயித்துலதான் இருந்தானு அம்மா சொன்னதும், "மூனு பேரும் உங்க வயித்துல இருந்தும் உங்க வயிறு வலிக்கலயா?" என்று கேட்டது அந்த பொண்ணு. அதற்கு அவர் மனைவி " அம்மா வயிறு வலிச்சுதான் செல்லங்களை பெத்தெடுத்தேன்" என்று சொன்னதும் அவர் பொண்ணு ஆணந்தமா சிரிச்சாளாம்.

அப்பறம் ஒரு காமடியான விடயம் (உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க) ஒருவர் இன்ப சுற்றுலாவாக தன் மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் கொடைக்காணல் சென்றாராம். அப்பொழுது அவர் மனைவி "என்னங்க நாம கனிமூனுக்கு வந்ததைவிட கொடைக்காணல் இப்போ நிறைய மாற்றம் இருக்கு" என்றாளாம். அப்பொழுது அவர் மகன் " நீங்க கனிமூனுக்கு வந்தப்ப நான் எங்கே இருந்தேன்" என்று கேட்டான். அதற்கு அவர் கனிமூனுக்கு வரும்போது நீ என் கூட இருந்த, போகும்போது நீ அம்மா கூட இருந்த" என்று சொன்னதும் எல்லாம் புரிந்தது போல தலைய தலைய ஆட்டிணானாம் அவர் மகன்....... ஹிஹிஹி கொஞ்சம் ஓவர்.

மீண்டும்,
ஆ,ஞானசேகரன்.

Tuesday, June 2, 2009

நெஞ்சே! பொறுப்பதில்லை ஏன்?

சென்ற பதிவு முடிவில் நான் சொன்னது "தவறு என்று தெரிந்தும் அதையே செய்யுறது எவ்வளவு தப்பு?... ஆனா அதை நாம் செஞ்சுக்கொண்டே இருக்கின்றோம் அது ஏன்?" பல தவறுகளை நாம் திரும்ப திரும்ப செய்தாலும் நான் பார்த்த ஒன்னு இங்கே நெஞ்சு பொறுக்காமல் உங்களுடன் ஒரு பகிர்வு...

சென்ற முறை இந்தியா செல்கின்றபொழுது,
என் தேசத்து மண்ணையும் என் மனைவி மக்களையும்..
காணும் ஆயிரம் கனவுகளுடன் திருச்சி விமானநிலைம் அடைந்தேன்.
01-05-2009 அன்றுதான் கோடை வெயில் சுட்டெரித்தாலும்;
மண்ணைத் தோட்ட மகிழ்ச்சியில் நெஞ்சம் குளிர்கின்றது.
கடவுசீட்டை கையில் எடுத்து வரிசையில் நிற்கையில்;
வெளியில் நிற்கும் மனைவி பிள்ளைகளின் எண்ணங்கள் எனக்கு...

காட்டாற்று வெள்ளம் போல வெளியில் வரும் எண்ணங்களின் மகிழ்ச்சி.
ம்ம்ம்ம் ஓடி வரும் மகளை தூக்கி முத்தமிட்டு ;
என் பையனின் கையை இருக பிடித்தேன்.
வாஞ்சையுடன் என் மனைவி என் அருகில் வந்ததும்
கண்களில் ஆயிரமாயிரம்..........

என் மனைவி, மகன் மற்றும் என் மகள் மூவர்மட்டுமே வாடகை சொகுசுந்து (Taxi) எடுத்து வந்திருந்தனர். நாங்கள் நால்வரும் என்வீட்டுக்கு செல்கின்றோம். OFT அண்ணாநகர் செல்லும் வழியில் புதுக்கோட்டை திருச்சி ரோடு ஒரு சோதனைச் சாவுடி இருக்கும். சோதனைச் சாவுடியில் எப்பொழுதாவது (பதற்ற சூழல் உள்ள பொழுது) சோதிப்பார்கள். பதற்றமான சூழலில் சோதனை நடத்துவார்களோ இல்லையோ, வெளிநாட்டு விமானம் வரும் நேரங்களில் ருசி
யோடு இருப்பார்கள். அதேபோல் அன்றும், என்னிடம் எந்த விதமான பொருள்களும் இல்லை (கைபை மற்றும் மடிக்கணனி மட்டுமே இருந்தது) . என் தந்தை வயதில் உள்ள ஒரு காவலாளி (போலீஸ்) எங்கள் வண்டியை ஓரமாக நிற்க சொன்னார். வண்டியும் திருச்சி நாங்களும் திருச்சிதான் இருந்தாலும் விமானம் வந்த நேரம் அதனால் ருசித்துப்பார்த்தார். ஓட்டுனரை தனியாக அழைத்து " காசு வாங்கி கொடு " என்று அவர் காதில் ஓதினார். இதுபோல் பலமுறை நடந்துள்ளது இதுபோன்ற சமயத்தில் நான் வாதிடுவதால் ஓட்டுனர் என்னை அழைக்கவில்லை. நானும் பிள்ளைகளை பார்த்த மகிழ்ச்சியில் வண்டியிலேயே இருந்துவிட்டேன். அவரின் நேரத்தை வீணாக்க விரும்பாமல் அவரே 20 ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் . எனக்குள் ஆயிரம் "இந்தியன்" ஆயிரம் "அன்னியன்" வந்துசென்றனர்.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரு கடத்தலோ அல்லது ஒரு சட்டவிரோத செயலோ நடந்துவிடவில்லை. இருப்பினும் அந்த இந்திய பிரசை, நம் நாட்டின் காவலாளி வாங்கிய கையூட்டுக்கு (லஞ்சம்) அர்த்தம்தான் என்ன? அந்த ஈன செயலுக்கு சொல்லும் விளக்கம்தான் என்ன?

அவர் யார்? நம்மை போன்ற ஒருவனின் தந்தை. ஒரு மனைவிக்கு கணவனானவர். இப்படி ஏதோ ஒரு உறவுக்குள் சணிக்ககூடியவர். யாருக்காக அவர் அப்படிச் செய்கின்றார்? இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி. இல்லை அந்த காசில் வாங்கிய பேனாவில்தான் இவரின் பிள்ளை பரிச்சை எழுதுகின்றார்களா?. கொஞ்சம் யோசிங்கள் கையூட்டு வாங்கும் தனிநபர் வேறு யாரும் இல்லை. நம்மில் ஒருவனின் தந்தை; நம்மில் ஒருவரின் கணவர்; நம்மில் ஒருவரின் மாமா; நம்மில் ஒருவரின் தம்பியோ அண்ணனோ இப்படி நம்மில் ஒருவரால் செய்யும் தவற்றை ஏன்
அங்கிகாரம் கொடுக்கின்றோம்? ஒரு தவற்றை தவறு என்று தெரிந்தும் செய்வது எதனால்? அந்த தவற்றை நான், நாம் ஏற்றுகொள்வதும் எதனால்?

'கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்' என்று பலகையிலும், சொல் அளவிலும் வைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கையின் அர்த்தம் வேண்டி...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.