_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, November 2, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

நிலாவில் அவ்வை பாட்டி வடை சுடு்ம் கதை கேட்டு வளர்ந்த நமக்கு, இன்று
"இந்தியா" சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பி நிலவில் நீர் உள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும். அப்படி இருந்தால் உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்ற கண்டுபிடிப்பும் நம்மை பிரமிக்க செய்கின்றது. மேலும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் மேல் உண்டாகிய மோதல் மூலம் நீர் நிலைகள் அதிகம் உள்ளதாக உறுதிப்படுத்தியும் உள்ளது.
அறிவியலில் சாதனைகள் செய்கின்ற அதே மானிட சமுகத்தில்தான் பகுத்தறிவுக்கு முரண்பாடான நம்பிக்கைகளும் நிரம்பியுள்ளது. ஒருவரின் நம்பிக்கை அவரின் முழு தனிமனித சுதந்திரத்திற்கு தடையில்லை என்பதும் உண்மை. அதே சமயம் அந்த நம்பிக்கை மற்ற உயிர்களிடத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்பொழுது வன்மையாக கண்டிக்கத்தக்கதாக இருக்கின்றது. மூடப்பழக்கங்களிளேயே என்னை பொறுத்தவரை மிக மோசமானது பலியிடுதல். சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என சாகடித்தல். தலச்சன் பிள்ளையை குலதெய்வத்திற்கு பலியிட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கைகளும் நம்மை நடுங்க வைக்காமல் இருக்க முடியாது. பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றியும் இன்னும் நம்மிடையே துடைத்தெரிய வேண்டிய மூடப்பழக்கங்கள் கோடி எனலாம்.

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இருக்கும் இடைவெளி சிறிதுதான். நன்றாக படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. படிக்கின்றபொழுது மிட்டாய் சாப்பிட்டால் நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறலாம் என்பது அறிவுக்கு முரண் பாடான நம்பிக்கை. இதில் மிட்டாய் சாப்பிடுதல் என்பது ஒரு செயல் அதை செய்தால் நன்றாக படிக்கலாம் என்பது ஒரு தூண்டுதல்தானே தவிர அதுதான் உண்மை என்பது இல்லை. அதுபோலதான் சாமி கும்பிடுதலும். சாமி கும்பிட்டால் நன்றாக படிக்கலாம் என்பதும் ஒரு தூண்டுதல்தான் அதுவே காரணமாக இருக்காது. ஒரு நம்பிக்கையானது அது மூடநம்பிக்கையாக இருந்தலும் சரி அது பிறரை பாதிக்காத வரை அந்த நம்பிக்கையை சரி என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி இன்று எல்லோரிடமும் உள்ளது. அப்படிபட்ட நம்பிக்கைகள் இன்று உலகெங்கிலும் பரவலாக உள்ளது.

தனிமனித நம்பிக்கையாக இருந்தாலும் அந்த மூடநம்பிக்கையால் அறிவு மழுங்கடிக்கப்பட்டு நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதை நாம் கண்முன் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் மனிதனிடையே
துடைத்தெரிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் பலரின் வாதம்.

பகுத்தறிவு என்றால் என்ன? மூடப்பழக்கங்கள் தோன்றுவது எதனால்? எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை "புரோகிதர் வேதம் சொல்லும்பொழுது பூனையை கட்டிப்போடுதல்". ஒரு புரோகிதர் தன் சீடர்களுடன் வேதம் சொல்லிக்கொண்டிருந்தார், அப்பொழுது அங்கு அவர் வளர்த்த பூனை அங்குமிங்கும் போய்கொண்டு தொந்தரவாக இருந்தது. உடனே புரோகிதர் சீடர்களிடம் அந்த பூனையை கட்டிப்போட சொன்னார். மறுநாள் சீடர்கள் புரோகிதர் வேதம் சொல்லும் முன்பாகவே பூனையை கட்டிப்போட்டார்கள். இப்படியே நாட்கள் ஓடியது புரோகிதர் இறந்துவிட்டார். அந்த இடத்திற்கு ஒரு புதிய புரோகிதர் வந்தார் சீடர்களிடம் "முன்பு இருந்தவர் எப்படி வேதம் சொல்லுவார்" என்று சீடர்களிடம் கேட்டதும் "வேதம் சொல்லும் முன் பூனையை கட்டிப்போட வேண்டும்" என்று சொன்னதும் அதுவே நடைமுறையாக்கப்பட்டது.

இரண்டு அணிகள் விளையாட தயாராகின்றது முதலில் கள‌த்தில் இறங்கும் அணி எது? நாணயத்தை சுண்டி பூவா? தலையா? பார்க்கப்படுகின்றது. கண்டிப்பாக பூவோ தலையோ விழும் என்பதுதான் உண்மை. இதில் ஆட்டத்தை கட்டுப்படுத்துவது அந்த நாணயமாக இருக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதில்தான் பகுத்தறிவாக இருக்க முடியும்.

பயமும் எல்லையில்லா ஆசைகள்தான் மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்து விடுகின்றது. நினைத்ததை அடைய வேண்டும் என்ற எண்ணம். அதுவும் நமக்கே விரைவாக கிடைக்கப்பட வேண்டும் என்ற ஆசைகள்தான் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைக்கு மனம் சென்றுவிடுகின்றது. அதே போல் விஞ்ஞான வளர்ச்சிகளும் நின்றுவிடவில்லை. மனிதன் கண்டுபிடிப்புக்கு அப்பாற்பட்டதை அறிய ஆசைப்படுகின்றான் அதை அறியாதவரை அவற்றை ஒரு மாய சக்தியாக நினைத்துகொள்கின்றான்.

ஆதிகாலம் கொண்டே மனிதனின் பயமும், ஆசைகளுக்கும் காரணமான மூடப்பழக்கங்கள் இன்றும் நின்றுவிடவில்லை, கொஞ்சம் குறைக்கபட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய அழிகப்பட்டதாக கொள்ளமுடியாது. மனிதனின் தனித்தனி குழுக்கள் தனித்தனி சமுக அமைப்பாக இருக்கின்றது. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு கலாச்சரங்களும் உள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழங்கங்கள் இந்த கலாச்சார நிகழ்வுக்குள் பதுங்கி இருப்பதால் அவைகளை பிரித்தெடுப்பது மிக மிக கடினமான ஒன்று.

பெரியார் வாழ்வில் கண்ட ஒரு நிகழ்வு, பெரியார் மலேசியா நாட்டிற்கு வருகை புரிகின்றார். ஒரு பெரிய மகான் வந்துள்ளார் என்று மக்கள் கூடுகின்றார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி "சாமி எனக்கு பிள்ளை வரம் கொடுங்கள்" என்று கேட்கின்றார். அதற்கு பெரியார் " பிள்ளையே இல்லாத என்னிடம் பிள்ளை வரம் கேட்கின்றாய் இந்தியாலிருந்து வரும் பொழுது எல்லா மூடப்பழக்கத்தையும் விட்டுவிட்டு வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன் நீங்கள் மொத்தமாக மூட்டை கட்டி எடுத்து வந்துள்ளீர்கள்" என்று நகைச்சுவையாக கூறுவார். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இப்படிப்பட்ட பழக்கங்கள் பொதிந்து உள்ளதை காணமுடிகின்றது.

பெரும்பான்மையான மூடப்பழக்கங்கள் மதங்களிலும் அதில் அறிவுறுத்தும் அறிவுரைகளால் ஆரப்பமானது என்றாலும் பல நம்பிக்கைகள் ஆசைகளாலும் பயத்தாலும் ஆனது என்பதை உணரமுடியும். மனிதனின் மனம் மென்மையானது அவனின் நம்பிக்கையும் அவனின் மனதை பொருத்தே அமைகின்றது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக ஏற்றுகொள்ள மனம் தடுமாறும்பொழுதுதான். மனம் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாக்கபடுகின்றது. இது மனம் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் தெளிவான ஆய்வு தேவைப்படுகின்றது. மூடப்பழக்கங்களை தவிர்க்க சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் இருக்கும் தொடர்ச்சியான பழக்கங்கள் கூட மூடநம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றது. சீருடை அணிதல், தலைவரிடன் குழந்தைக்கு பெயர் வைத்தல், சீர்திருத்த மணம் செய்தல் போன்றவைகளை சொல்லலாம். ஆரம்பத்தில் அறிவுரைக்காக எனக்கொண்டாலும் போக போக அதுவும் ஒரு சடங்காக மாற்றியமைக்கப்படுகின்றது. இறந்தவர்களை நினைவுகூறுதல் எந்த வகை பகுத்தறிவை சாரும். ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது அவற்றை உடைத்து எறிந்துவிடுகின்றோம். அந்த இயந்திரத்தை நினைவிலா வைத்துக்கொண்டுள்ளோம்?... பகுத்தறிவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்கப்படும்பொழுது அந்த பழக்கங்களும் பின்னாளில் மூடப்பழக்கமாகத்தான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள்.

தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பின்னாளில் அவற்றின் மீது நம்பிக்கை பொய்யானது என்று சொல்லி வெளிவருவதுமுண்டு அதேபோல் தெய்வ நம்பிக்கையில்லாதவர்கள் பின்னாளில் ஆத்திகராவதுமுண்டு. எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நினைத்தது நிறைவேறாத காரணம்தான். அப்படி நாம் நினைத்ததை நிறைவேற வேண்டும் என்றால் ஏதோ ஒன்றில் நம்ம்பிக்கையை வைக்கின்றார்கள். அந்த நம்பிக்கைதான் தொடர்ந்து வரும் மூடநம்பிக்கையாக இருக்கின்றது.

ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு காரணத்தால் கட்டியாளப்படுகின்றது. அந்த கட்டியாளப்படும் காரணிகள்தான் நாளாடைவில் நம்பிக்கையாகவும் பின்னர் மூடநம்பிக்கையாகவும் வந்துள்ளது. மனம் என்பது வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என்ற வகைப்படுத்தி சொல்வதுண்டு. வெளிமனம் என்னதான் பகுத்தறிவுகளை பேசினாலும் உள்மனமும், ஆழ்மனமும் நம்மை நக்கல் செய்துக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சின்ன சின்ன விடயங்களை பற்றி பின் வரும் இடுகைகளில் பார்க்கலாம்....

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

50 comments:

பழமைபேசி said...

ஞானியார் சிந்தனைகள் வளர்க!

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

ஞானியார் சிந்தனைகள் வளர்க!//

வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க

கோவி.கண்ணன் said...

கலக்கலாக இருக்கு

ராமலக்ஷ்மி said...

அருமையான ஆரம்பம். தொடருங்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

கலக்கலாக இருக்கு//

மிக்க நன்றிங்க கண்ணன்

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...

அருமையான ஆரம்பம். தொடருங்கள் ஞானசேகரன்.//

மிக்க நன்றிங்க.. உங்களின் ஊக்கம் என்னை மேலும் எழுத சொல்லும்

பிரபாகர் said...

ரொம்ப நல்லா ஆய்ந்து எழுதியிருக்கீங்க.... அருமையா இருக்குங்க.... தொடருங்க....

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

//பிரபாகர் said...

ரொம்ப நல்லா ஆய்ந்து எழுதியிருக்கீங்க.... அருமையா இருக்குங்க.... தொடருங்க....

பிரபாகர்.//

வணக்கம் பிரபாகர்,..
மிக்க் நன்றி நண்பா...

தீப்பெட்டி said...

சிறப்பான பதிவு..

தொடருங்கள்..

ஆ.ஞானசேகரன் said...

// தீப்பெட்டி said...

சிறப்பான பதிவு..

தொடருங்கள்..//

மிக்க நன்றி நண்பா...

தமிழ் said...

நல்ல இடுகை

தொடருங்கள் நண்பரே

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ் said...

நல்ல இடுகை

தொடருங்கள் நண்பரே

வாழ்த்துகள்//

வணக்கம் நண்பா, மிக்க நன்றிங்க

வால்பையன் said...

புதுசா எதாவது!?

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

புதுசா எதாவது!?//

சொல்லுங்கள் நண்பா அடுத்து வரும் இடுகையில் இணைத்து விடுவோம்..

S.A. நவாஸுதீன் said...

நல்லதொரு தொடர் பதிவு ஆரம்பம். அருமை நண்பா!. தொடர்ந்து எழுதுங்கள்.

நாளும் நலமே விளையட்டும் said...

நிறைய எழுத்துப் பிழைகள். கட்டுரை இன்னும் சற்று விரிவாக இருந்திருக்கலாம். நிறைய செய்திகள் ஒரே கட்டுரையில்!

கடவுள் நம்பிக்கை வேறு!
மூட நம்பிக்கை வேறு என என் நண்பர் சொல்வார். காரணம் கடவுள் இல்லை என நிரூபணம் செய்ய முடியாது. ஆனால் மூட நம்பிக்கை முட்டாள் தனம் என்பதை மிக எளிதில் காட்டலாம்.

பெரியார் சிலைகளை என் ஒவ்வொரு ஊரிலும் திறக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் "பெரியார் சிலை கும்பிட அல்ல(பூஜை செய்யவும் அல்ல), நம் மக்கள் அவரைப் பார்க்கும்போது எல்லாம் அவர் சொன்ன கருத்துகளை சிந்திக்க வேண்டும் என்பது தான்"

ஒரு நிறுவனத்தில் இருக்கிறோம் என்பதற்கே ஒரு அடையாளம் தேவை!

நான் பகுத்தறிவாதி எனக் காட்ட ஒரு அடையாளம்? ஆனால் ஏன் கருப்பு சட்டை என்பதற்கு பெரியார் ஒரு விளக்கம் சொல்லி உள்ளார் படித்துப் பாருங்கள்.

கலகலப்ரியா said...

//இன்னும் நம்மிடையே கழையவேண்டிய மூடப்பழக்கங்கள் கோடி எனலாம்.//

ஆமாங்க.. மிகவும் தேவையான பதிவு...!

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

நல்லதொரு தொடர் பதிவு ஆரம்பம். அருமை நண்பா!. தொடர்ந்து எழுதுங்கள்.//

வாங்க நணபா,..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// நாளும் நலமே விளையட்டும் said...

நிறைய எழுத்துப் பிழைகள். கட்டுரை இன்னும் சற்று விரிவாக இருந்திருக்கலாம். நிறைய செய்திகள் ஒரே கட்டுரையில்!//

மிக்க நன்றி நண்பரே! உங்களின் முதல் வருகை மகிழ்ச்சியே! எழுத்து பிழைகளை சரி செய்ய முயற்சிக்கின்றேன்


// கடவுள் நம்பிக்கை வேறு!
மூட நம்பிக்கை வேறு என என் நண்பர் சொல்வார். காரணம் கடவுள் இல்லை என நிரூபணம் செய்ய முடியாது. ஆனால் மூட நம்பிக்கை முட்டாள் தனம் என்பதை மிக எளிதில் காட்டலாம்.//

உண்மைதான் கடவுள் இல்லை என்பதை எப்படி நிருபணம் செய்ய முடியாதோ அதே போல் இருக்கு என்பதையும் நிருபணம் செய்ய முடியாது.. இவற்றை மேலும் படிக்க
இங்கு


//பெரியார் சிலைகளை என் ஒவ்வொரு ஊரிலும் திறக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் "பெரியார் சிலை கும்பிட அல்ல(பூஜை செய்யவும் அல்ல), நம் மக்கள் அவரைப் பார்க்கும்போது எல்லாம் அவர் சொன்ன கருத்துகளை சிந்திக்க வேண்டும் என்பது தான்"

ஒரு நிறுவனத்தில் இருக்கிறோம் என்பதற்கே ஒரு அடையாளம் தேவை!

நான் பகுத்தறிவாதி எனக் காட்ட ஒரு அடையாளம்? ஆனால் ஏன் கருப்பு சட்டை என்பதற்கு பெரியார் ஒரு விளக்கம் சொல்லி உள்ளார் படித்துப் பாருங்கள்.//

கடவுளை பற்றி சோல்பவர்களும் இதே விளக்கங்கள்தான் சொல்கின்றார்கள். ஒருவர் சொல்லிவிட்டதால் நாமும் தொடர்ந்து அதே செய்வதும் மூடநம்பிக்கையில்தான் வந்து முடியும். அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் அவ்வளவுதான்.. மிக்க நன்றி நண்பரே... மூடநம்பிக்கையால் உயிர்களிடத்தில் துன்பம் என்றால் கண்டிப்பாக அதை தடுக்க வேண்டும் ...

ஆ.ஞானசேகரன் said...

[[ கலகலப்ரியா said...

//இன்னும் நம்மிடையே கழையவேண்டிய மூடப்பழக்கங்கள் கோடி எனலாம்.//

ஆமாங்க.. மிகவும் தேவையான பதிவு...!]]

வாங்க ப்ரியா மிக்க நன்றிங்க

பின்னோக்கி said...

தேவையான பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...

தேவையான பதிவு//
மிக்க நன்றி நண்பா

baleno said...

அருமையான பதிவு. உங்கள் சிந்தனைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//மூடப்பழக்கங்களை தவிர்க்க சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் இருக்கும் தொடர்ச்சியான பழக்கங்கள் கூட மூடநம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றது. சீருடை அணிதல், தலைவரிடன் குழந்தைக்கு பெயர் வைத்தல், சீர்திருத்த மணம் செய்தல் போன்றவைகளை சொல்லலாம். //
மிகவும் சரியானது.

CorTexT (Old) said...

மூளை என்பது ஒரு கற்று கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது எப்படிபட்ட சூழலில் வளர்கின்றதோ, அதன் படியே அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்று கொள்கின்றது. பகுத்து அறியும் திறன் உட்பட அனைத்தும் அறிவும் அப்படியே வளர்கின்றது. இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம்.

புலன்கள் மூலமாக செல்லும் உலக வியசங்களை கொண்டு, மூளை மாதிரிகளை/தியரிகளை உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை (0% முதல் 100% வரை) பொருத்தது. நாம் கற்று கொள்ளும் போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்கையை கணித்து வாழ்கின்றோம். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் (மூடநம்பிக்கையும்), அவரின் மூளையின்படி நம்பிக்கையே.

ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைபடுகின்றது. அதை தான், க‌லிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?

(http://sites.google.com/site/artificialcortext/putiya-parvai/cariyenru-pattatellam)

ப்ரியமுடன் வசந்த் said...

சிறப்பானதொரு கருத்து..

ஆ.ஞானசேகரன் said...

[[ baleno said...

அருமையான பதிவு. உங்கள் சிந்தனைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//மூடப்பழக்கங்களை தவிர்க்க சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் இருக்கும் தொடர்ச்சியான பழக்கங்கள் கூட மூடநம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றது. சீருடை அணிதல், தலைவரிடன் குழந்தைக்கு பெயர் வைத்தல், சீர்திருத்த மணம் செய்தல் போன்றவைகளை சொல்லலாம். //
மிகவும் சரியானது.]]

வணக்கம் நண்பரே உங்களின் முதல் வருகை எனக்கு மகிழ்ச்சியே! அதேபோல் தாங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

மூளை என்பது ஒரு கற்று கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது எப்படிபட்ட சூழலில் வளர்கின்றதோ, அதன் படியே அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்று கொள்கின்றது. பகுத்து அறியும் திறன் உட்பட அனைத்தும் அறிவும் அப்படியே வளர்கின்றது. இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம்.

புலன்கள் மூலமாக செல்லும் உலக வியசங்களை கொண்டு, மூளை மாதிரிகளை/தியரிகளை உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை (0% முதல் 100% வரை) பொருத்தது. நாம் கற்று கொள்ளும் போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்கையை கணித்து வாழ்கின்றோம். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் (மூடநம்பிக்கையும்), அவரின் மூளையின்படி நம்பிக்கையே.

ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைபடுகின்றது. அதை தான், க‌லிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?}]]


உங்களின் நீண்ட கருத்துகளுக்கு முதலில் நன்றி...
நீங்கள் கூறுவது போல் ஒரு கடினமான ஆராய்ச்சி தெவை என்பதுதான் என் எண்ணங்களும். ஏதொ சொல்லி மூடநம்பிக்கையை போக்கிவிட முடியும் என்பது வேடிக்கையானது...

அதே போல் மூடபழக்கங்கள் பாரம்பறிய செல்கள் மூலம் இருக்க வாய்புள்ளதா? இருப்பதாகவே நான் நம்புகின்றேன்...

மனிதனுக்கு பயம் எதனால் வருகின்றது? அதுவே மூடப்பழக்கங்களுக்கு ஆதாரமாக இருக்க செய்கின்றதே?

மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன்...வசந்த் said...

சிறப்பானதொரு கருத்து..//

மிக்க நன்றி நண்பா...

ஷண்முகப்ரியன் said...

நம்பிக்கை என்பதே ஒன்றைப் பற்றி முழுக்க அறியாமல் இருக்கும் போது நாம் கொள்ளும் உணர்வு.அறிவுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஞானம்.

இதனை அறியவே முடியாது என்ற அறிவின் உச்சத்தில் பிறப்பது 'trust'

அறியாமையில் பிறப்பது ‘belief'

தமிழில் சரியான வார்த்தைகள் கண்டு பிடித்து விட்டு உங்களைச் சந்திக்கிறேன்,ஞானம்.
உங்கள் சிரத்தையான பதிவுகளுக்கு மகிழ்ச்சி.

ஆ.ஞானசேகரன் said...

[[ஷண்முகப்ரியன் said...

நம்பிக்கை என்பதே ஒன்றைப் பற்றி முழுக்க அறியாமல் இருக்கும் போது நாம் கொள்ளும் உணர்வு.அறிவுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஞானம்.]]

சரியாகதான் படுகின்றது சார்... படித்தவர்கள் கூட ஏதொ ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்பது இதனால்தான் என்று படுகின்றது

[[ இதனை அறியவே முடியாது என்ற அறிவின் உச்சத்தில் பிறப்பது 'trust'

அறியாமையில் பிறப்பது ‘belief'

தமிழில் சரியான வார்த்தைகள் கண்டு பிடித்து விட்டு உங்களைச் சந்திக்கிறேன்,ஞானம்.
உங்கள் சிரத்தையான பதிவுகளுக்கு மகிழ்ச்சி.]]

மிக்க நன்றி சார் மீண்டும் உங்களின் கருத்துகளை அறிய ஆசைப்படுகின்றேன்... பகுத்தறிவு பேசுபவர்கள் கூட ஏதொ ஒன்றில் பற்றும் நம்பிக்கையும் வைத்துள்ளார்கள் ஆனால் மறுக்கின்றனர். அதைப்பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்பது என் ஆசைகள். யாரையும் குறைசொல்ல இதை எழுதவில்லை இயல்பை பற்றிய ஒரு ஆய்வாக இருக்கட்டுமே என்றுதான் இந்த முயற்ச்சி

மிக்க நன்றி சார்

CorTexT (Old) said...

புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை/தியரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை...வாழ்கையை புரிந்து...கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம். (கற்றல், அறிவு, நம்பிக்கை அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்று தான்).

பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களை பொருத்தது (கல்வி உதவுகின்றது). முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம்.

எந்த ஒன்று, பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு... (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல் எடுத்தல் (Copy); (3) நகல் எடுக்கும்போது நிகலும் பிழைகள். ஜீன்கள் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது... சூழலுக்கு ஏற்ற தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யேசனையை (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக நகல் எடுக்கப் படுகின்றது. ஜீன்களை போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒருவகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில் நம் உணர்ச்சிகள் (நீங்கள் கூறும் பயம் உட்பட) முக்கிய பங்குவகிக்கின்றன.

CorTexT (Old) said...

மெம்கள் வளர்ச்சி அடைய (ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு செல்ல) தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதை உணர முடியும். அதை கொண்ட மனித இனத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது. மற்ற விலங்குகளில் இல்லை.

Muniappan Pakkangal said...

Nalla pathivu Gnanaseharan.

ஹேமா said...

விஞ்ஞானமும் நாகரீகமும் வளர்ந்தபோதும் மனிதனின் மனங்கள் வளராமல்தான் இருக்கிறது என்பதற்கு மந்திரஙக்ளும் பூஜைகளுமே இன்னும் சாட்சியாய் இருக்கே.

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை/தியரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை...வாழ்கையை புரிந்து...கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம். (கற்றல், அறிவு, நம்பிக்கை அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்று தான்).>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>//

உங்களின் மேலான கருத்துரைகளுக்கு மிக்க நன்றி. என்னுடை கருத்தும் இதேதான் ஒத்திருக்கின்றது. பகுத்தறிவாதிகள் என்று சொல்கின்றவர்கள் உண்மையின் அவர்களின் உள்மனம் பகுத்தறிக்கு கட்டுப்படுகின்றதா? என்பதுதான் என் கேள்வி... கட்டுப்படவில்லை என்பதை அனுபவங்கள் மூலம் நான் உணர்கின்றேன். அப்படி வெளி உலகிற்காக வாழ்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.... அதைப்பற்றி பின் வரும் இடுகைகளில் பார்க்கலாம் என்ற எண்ணங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nalla pathivu Gnanaseharan.//

மிக்க நன்றி சார்

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

விஞ்ஞானமும் நாகரீகமும் வளர்ந்தபோதும் மனிதனின் மனங்கள் வளராமல்தான் இருக்கிறது என்பதற்கு மந்திரஙக்ளும் பூஜைகளுமே இன்னும் சாட்சியாய் இருக்கே.//

வணக்கம் ஹெமா.
நீங்கள் சொல்வதும் உண்மைதான்.. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் எப்படி எதனால் மனிதனிடன் இருக்கு என்ற ஆய்வுதான் இந்த தொடராக இருக்கும்

CorTexT (Old) said...

//பகுத்தறிவாதிகள் என்று சொல்கின்றவர்கள் உண்மையின் அவர்களின் உள்மனம் பகுத்தறிக்கு கட்டுப்படுகின்றதா? //

http://icortext.blogspot.com/2009/11/blog-post.html

இந்த பதிவை எழுத (மறைமுகமாக) தூண்டியதற்கு நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

[[RajK said...

//பகுத்தறிவாதிகள் என்று சொல்கின்றவர்கள் உண்மையின் அவர்களின் உள்மனம் பகுத்தறிக்கு கட்டுப்படுகின்றதா? //

http://icortext.blogspot.com/2009/11/blog-post.html

இந்த பதிவை எழுத (மறைமுகமாக) தூண்டியதற்கு நன்றி!]]


படித்தேன் அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி

Suresh Kumar said...

நல்ல இடுகை வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நல்ல இடுகை வாழ்த்துக்கள்//


வணக்கம் சுரெஷ் குமார் மிக்க நன்றிபா

ஊடகன் said...

சிந்திக்க வைக்க கூடிய அருமையான ஆய்வு கட்டுரை...............

சத்ரியன் said...

கட்டுரை சிறப்பாக இருக்கிறது.
படிக்க படிக்க கேள்விகள் வலுக்கிறது. அறிவியல் மீதே சந்தேகம் வருகிறது.
பகுத்தறிவு என்னும் சொல்லின் மீதும் தான்.

எதையெல்லாம் பழக்கம் எனக்கொள்ளலாம்?
எதையெல்லாம் மூடப் பழக்கம் எனக்கொள்ளலாம்? கேள்வி எழுகிறது.

யாரேனும் பகுத்துச் சொல்ல முடியுமா? என எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.
தனித்தனியே உணர வெண்டியதுதான் என்றால், ஒருவன் வகுத்த சட்டதிற்கு அனைவரும் கட்டுபட்டு வாழ வேண்டியதன் அவசியம் என்ன?

"பூனைக்குட்டியைக் கட்டிவிட்டு" பூசை செய்த‌ கதையுடன் உறவுமுறைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.மனிதன் பீற்றித்திரியும் அறிவியலின் அறிவிலாத் தன்மை புரியும். "தாய்,சகோதரி,அப்பா...அண்ணா,மாமா‍" இவைகளுக்கு அறிவியலில் ஏதேனும் சமன்பாடுகள் உண்டா? இல்லையென்றால் இனியும் நாம் ஏன் பெற்றவளை "அம்மா" என்றழைக்க வேண்டும்? கட்டியவளை ஏன் "மனைவி" என்றழைக்க வேண்டும்? நம்மின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு மாற்றியமைக்க முயற்சிக்கலாமா?

நண்பரே, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக இதை நான் எழுதவில்லை. ஆழ யோசிக்க யோசிக்க இப்படியாக எண்ணற்ற கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கிறது. என்ன‌ செய்யலாம்?

ஆ.ஞானசேகரன் said...

//ஊடகன் said...
சிந்திக்க வைக்க கூடிய அருமையான ஆய்வு கட்டுரை...............//


மிக்க நன்றி ஊடகன்...

ஆ.ஞானசேகரன் said...

[[சத்ரியன் said...
கட்டுரை சிறப்பாக இருக்கிறது.
படிக்க படிக்க கேள்விகள் வலுக்கிறது. அறிவியல் மீதே சந்தேகம் வருகிறது.
பகுத்தறிவு என்னும் சொல்லின் மீதும் தான்.

எதையெல்லாம் பழக்கம் எனக்கொள்ளலாம்?
எதையெல்லாம் மூடப் பழக்கம் எனக்கொள்ளலாம்? கேள்வி எழுகிறது.]]

வணக்கம் சத்ரியன் எது பழக்கம் ? எது மூடப்பழக்கம் என்பதும் அது நம் மூளையில் எப்படி பதிவாக்கப்படுகின்றது என்பதை பற்றியும் ஒரு சிறிய விளக்கம் நண்பர் Rajக் சுட்டியில் குறிப்பிட்டுள்ளார் முடிந்தால் ஒரு முறை அவர் பக்கம் சென்று வாருங்கள்
http://icortext.blogspot.com/2009/11/blog-post.html


[[யாரேனும் பகுத்துச் சொல்ல முடியுமா? என எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.
தனித்தனியே உணர வெண்டியதுதான் என்றால், ஒருவன் வகுத்த சட்டதிற்கு அனைவரும் கட்டுபட்டு வாழ வேண்டியதன் அவசியம் என்ன?

"பூனைக்குட்டியைக் கட்டிவிட்டு" பூசை செய்த‌ கதையுடன் உறவுமுறைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.மனிதன் பீற்றித்திரியும் அறிவியலின் அறிவிலாத் தன்மை புரியும். "தாய்,சகோதரி,அப்பா...அண்ணா,மாமா‍" இவைகளுக்கு அறிவியலில் ஏதேனும் சமன்பாடுகள் உண்டா? இல்லையென்றால் இனியும் நாம் ஏன் பெற்றவளை "அம்மா" என்றழைக்க வேண்டும்? கட்டியவளை ஏன் "மனைவி" என்றழைக்க வேண்டும்? நம்மின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு மாற்றியமைக்க முயற்சிக்கலாமா?

நண்பரே, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக இதை நான் எழுதவில்லை. ஆழ யோசிக்க யோசிக்க இப்படியாக எண்ணற்ற கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கிறது. என்ன‌ செய்யலாம்?]]

அறிவியல் பொய்யாவதில்லை நண்பா, நாம் அறிவியலை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை அல்லது இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை என்றுதான் பொருள். உறவுகளும் அதன் மேல் நம்பிக்கையும் மனிதனின் பரினாம வளர்ச்சியிலும் நாகரிக வளர்ச்சியிலும் உண்டானதே... ஆதிகால மனிதனிடம் உறவுமுறைகள் இருந்ததில்லையே..

உங்களின் நீண்ட கலந்துரைக்கு மிக்க நன்றி நண்பா.... இன்னும் வரும் பகுதிகளில் கலந்துக்கொள்ளுங்கள்

சத்ரியன் said...

//அறிவியல் பொய்யாவதில்லை நண்பா, நாம் அறிவியலை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை அல்லது இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை என்றுதான் பொருள். //

இங்கே சென்று //http://puththakam.blogspot.com/2009/11/blog-post.html

கட்டுரையைப் படியுங்கள்.

ஒரிசாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் ஹாரியார் (Khariar) என்ற உயர்ரக பசுக்களைக் கலப்பினம் செய்து பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் சமன்விட்டா (Samanwita) என்றொரு திட்டம். இரண்டு ஆண்டுகள், இரண்டு கோடி ரூபாய்களுக்குப் பிறகு ஹாரியார் என்ற ஓர் இனமே சுவடில்லாமல் அழிந்துபோக, தீவனத்துக்காக பயிரிடப்பட்ட சுபாபுல் (Subabul) மரங்கள் தோப்புத்தோப்பாக வெட்டித்தள்ளப்பட்டன. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட பகுதிகள் எல்லாம் ஏற்கனெவே உபரியாகப் பால் உற்பத்தி செய்து கொண்டிருந்த பகுதிகள்!

//உறவுகளும் அதன் மேல் நம்பிக்கையும் மனிதனின் பரினாம வளர்ச்சியிலும் நாகரிக வளர்ச்சியிலும் உண்டானதே... ஆதிகால மனிதனிடம் உறவுமுறைகள் இருந்ததில்லையே..//

உங்கள் கூற்றுப்படி, மனதில் பதியும் நம்பிக்கைகளைக் களையவேண்டும். இது எந்த அளவிற்கு சாத்தியம்? ஏனென்றால், பல்லாயிரமாண்டுகளாக இது "சரி" என்றும், இது "தவறு" என்றும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோதும்... தவறுகளும், சரிகளும் இன்னும் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்ட "ஓரினச்சேர்க்கை" செய்தியைச் சொல்லலாம்.

//உங்களின் நீண்ட கலந்துரைக்கு மிக்க நன்றி நண்பா.... இன்னும் வரும் பகுதிகளில் கலந்துக்கொள்ளுங்கள்//

வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் "ஆரோக்கியமான விவாதத்திற்காக மட்டும்" நிச்சயம் கலந்துக் கொள்கிறேன், ஞானம்.

ஆ.ஞானசேகரன் said...

[[Blogger சத்ரியன் said...

ஒரிசாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் ஹாரியார் (Khariar) என்ற உயர்ரக பசுக்களைக் கலப்பினம் செய்து பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் சமன்விட்டா (Samanwita) என்றொரு திட்டம். இரண்டு ஆண்டுகள், இரண்டு கோடி ரூபாய்களுக்குப் பிறகு ஹாரியார் என்ற ஓர் இனமே சுவடில்லாமல் அழிந்துபோக, தீவனத்துக்காக பயிரிடப்பட்ட சுபாபுல் (Subabul) மரங்கள் தோப்புத்தோப்பாக வெட்டித்தள்ளப்பட்டன. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட பகுதிகள் எல்லாம் ஏற்கனெவே உபரியாகப் பால் உற்பத்தி செய்து கொண்டிருந்த பகுதிகள்!]]

இது மனிதனால் ஏற்பட்ட பிழைதான்.. இது போல் பிழைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு தேர்வுள்ள ஆய்வு கண்டிப்பாக தேவை என்பதை ஏனோ மறந்துவிடுகின்றோம்..

[[ //உறவுகளும் அதன் மேல் நம்பிக்கையும் மனிதனின் பரினாம வளர்ச்சியிலும் நாகரிக வளர்ச்சியிலும் உண்டானதே... ஆதிகால மனிதனிடம் உறவுமுறைகள் இருந்ததில்லையே..//

உங்கள் கூற்றுப்படி, மனதில் பதியும் நம்பிக்கைகளைக் களையவேண்டும். இது எந்த அளவிற்கு சாத்தியம்? ஏனென்றால், பல்லாயிரமாண்டுகளாக இது "சரி" என்றும், இது "தவறு" என்றும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோதும்... தவறுகளும், சரிகளும் இன்னும் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்ட "ஓரினச்சேர்க்கை" செய்தியைச் சொல்லலாம்.]]

நீங்கள் சொல்லும் உதாரணம் மிக சரியானதும் யோசிக்க கூடியதும். இது சரி அல்லது இது தவறு என்று வாதிட்டுக்கொண்டெ இருக்கின்றோம். இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? என்ற ஆய்வை உண்டாக்க வேண்டும் என்பதே நம்மை போன்றோர்களின் எண்ணங்கள். அதைதான் இந்த கட்டுரையின் நோக்கமாக எழுதியுள்ளேன். மூடப்பழக்கங்கள் இருக்கு என்பது பல்லாயிராம் ஆண்டுகளாக உண்மைதான். ஆனாலும் நம்முடைய மனங்களிலிருந்து கழைய முடிவில்லையே ஏன் என்ற எழிர்ச்சிதான் இன்று தேவை. ஷண்முகப்ரியன் சார் சொல்லும் கருத்தையும் உற்றுநோக்குங்கள்.

[[//உங்களின் நீண்ட கலந்துரைக்கு மிக்க நன்றி நண்பா.... இன்னும் வரும் பகுதிகளில் கலந்துக்கொள்ளுங்கள்//

வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் "ஆரோக்கியமான விவாதத்திற்காக மட்டும்" நிச்சயம் கலந்துக் கொள்கிறேன், ஞானம்.]]

உங்களின் அன்புக்கு நன்றி நண்பா,..
ஆ.ஞானசேகரன்

அன்புடன் நான் said...

நல்ல பயனுள்ள பதிவு... திறமையான அலசல்... பல கேள்விகளையும் எழுப்புகிறது... பல விடைகளும் கிடைக்கிறது ... பாராட்டுகள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...
நல்ல பயனுள்ள பதிவு... திறமையான அலசல்... பல கேள்விகளையும் எழுப்புகிறது... பல விடைகளும் கிடைக்கிறது ... பாராட்டுகள் நண்பா.//

வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க‌

துளசி கோபால் said...

இறந்தவர்களை நினைவுகூர்தல்கூட ஒருவிதத்தில் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடறாங்க பாருங்க!!!!!

அதைத்தான்.............