_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, August 22, 2008

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி.



இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்.


இதில் உணரப்பட்ட வெப்பநிலை 1.9 கெல்வின் (K)(-271C; -456F) ஆக இருக்கிறது. விண்வெளியில் ஆழமான பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 2.7 கெல்வின் ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


உலகிலேயே பிரமாண்டமான பெளதீகவியல் பரிசோதனைக் கூடமாக விளங்கும் இந்த Cern lab இல் அமைக்கப்பட்டுள்ள Large Hadron Collider (LHC) நடத்தப்படவிருக்கும் பரிசோதனையில், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் எதிர் எதிர் திசைகளில் நேர் ஏற்றமுள்ள புரோத்திரன் (Proton)களை மோதவிட்டு அவை மோதிச் சிதறும் வேளையில் பிறக்கும் துகள்கள் பற்றி ஆராய இருக்கின்றனர்.


இத்துகள்களினை தன்மைகளை அடையாளம் கண்டுவிட்டால் பிரபஞ்சத்தில் சடப்பொருட்களை ஆக்கியுள்ள அணுக்கள் கொண்டுள்ள உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள பிரதான அடிப்படைக் கூறை அல்லது கூறுகளை இனங்காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இவற்றையே அவர்கள் கடவுளின் துகள் அல்லது துகள்கள் என்று கருதுகின்றனர்.


இதற்கிடையே இந்தப் பரிசோதனையால் செயற்கையான கறுப்போட்டை அல்லது கருந்துளை (Black hole) ஒன்று பூமியில் செயற்கையாக உருவாக்கப்படக் கூடிய சூழல் இருப்பதால் அது பூமிக்கு ஆபத்தாக அமையலாம் என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


எதுஎப்படியோ European Organization for Nuclear Research (CERN) அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த LHC ஆய்வு கூடம் தனது கடவுளின் துளைத் தேடும் பரிசோதனையை செய்ய ஆரம்பித்துக் கொள்ள இருக்கிறது என்பதையே மேற்குறிப்பிட்ட அதி குளிர் சூழல் உருவாக்கம் உணர்த்தி நிற்கிறது. இந்தப் பரிசோதனையின் போது மிகப் பெருமளவிலான சக்தி உருவாக்கப்படுவதோடு.. பெருமளவு வெப்பமும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்.. ஆழமான விண்வெளியில் உள்ளது போன்ற இந்த அதி குளிர் சூழல் என்பது இப்பரிசோதனைக்கு முக்கியமான ஒன்றாகும்

1 comments:

அறிவகம் said...

இந்த பிரபஞ்ச தோற்றத்தை(உருவத்தை) அறிவியலாளர்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் இதுபோன்ற ஆய்வுகளை செய்துவருகிறார்கள். பிரபஞ்சத்தின் தோற்றத்தை(உருவத்தை) சரியாக புறிந்து கொள்ளும் போது பிரபஞ்ச தோற்றம்(ஆரம்பம்) என்ன? என்ற கேள்வியே முட்டாள்தனமானதாகி விடும். அதுபற்றிய அறிவியல்பூர்வமான விளக்கங்களை தான் அறிவகத்தில் தொடர்ந்து பார்க்கப்போகிறோம். நன்றி.