முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3
மேலே உள்ள சுட்டிகளில் பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், தேவைக்கு அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. பின்னர் நமக்கு என்ன?/ எவனோ?/ எப்படியோ? செய்கின்றான் என்ற சுயநலமும் ஒரு காரணமாக அமைகின்றது.
இன்றைய மனிதனை என்னதான் அறிவியல் வளர்த்தாலும் தேவையில்லா மூடப்பழக்கங்கள் மனதை பாதிக்கத்தான் செய்கின்றது. அதற்கு முன்பே கூறியது போல மரபியியல் பண்பும் ஒரு காரணமாககூட இருக்கலாம். இப்படிப்பட்ட மனபோக்கை மாற்ற முறையான பயிற்சி தேவை என்பதை மட்டும் மறக்க முடியாது.
வீட்டை விட்டு வெளியில் போகும்பொழுது எங்கே போகின்றாய்? என்று கேட்டால் போகின்ற செயல் நல்லபடியாக நடக்காது என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கு. இப்படி ஒரு பழக்கம் தெரியாதவரை உன்னையும் என்னையும் பாதிக்க போவதில்லை ஆனால் இந்த ஒரு நம்பிக்கை தெரிந்துவிட்டால் (மனதில் பதிந்துவிட்டால்) அதனை எதிர்க்க மனதில் திடம் இல்லாமல் போகின்றதே ஏன்? போகின்ற செயல் நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற ஆசை. அப்படி ஏதேனும் தவறு நடக்குமோ என்ற பயம். எல்லோரும் நம்புகின்றார்களே நாமும் நம்புவதால் என்ன ஆகபோகின்றது என்ற மெத்தன போக்கு. இப்படியே சின்ன சின்ன மூடப்பழக்கங்களை இந்த சமுகத்திற்கு நம் முன்னோர்கள் விட்டு சென்றது ஏராலம்.
எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதுமே ஜாதகம், ஜோசியம் என்ற மனப்போக்கில் இருப்பார். நான் அவரை "ஏன்யா இந்த காலத்திலும் இப்படி இருக்க? என்று கேட்பேன்". அதற்கு அவர் "அவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ என் மனதிற்கு ஆறுதல் தருகின்றது அதனால் நம்புகின்றேன்" என்று வியாக்கானம் சொல்லுவார். இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்தமுடியும். நடிகர் ரஜினி சார் ஒரு படத்தில் "சாவுகின்ற காலம் தெரிந்தால் வாழுகின்ற காலம் நரகம்" என்று சொல்லுவார். அதேபோல ஜொசியம், ஜாதகம் உண்மையாகவே இருந்தாலும் அதை முன்னரே தெரிந்துக்கொண்டு வாழுகின்ற காலத்தை நரகமாக்கிக்கொள்ளும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது. இப்படிப்பட்ட மனிதர்கள் தன்னுடைய கையாலாகாத தனத்தை தன் பிள்ளைகள் மூலம் மூடப்பழக்கம் என்ற விதைகளை உலகில் தெளித்துவிட்டு செல்கின்றார்கள். விதைகள் முளைத்து இன்று ஆலமரங்களாக இருக்கின்றது.
எனக்கு தெரிந்து "ஏன்?" என்று கேட்ககூடிய ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. அப்படி "ஏன்?" என்ற கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் இருந்துவிட்டால் அந்த" ஏன்?" க்கு பின்னால் இருக்கும் குறிபோல வாழ்க்கையும் வலைந்து போய்விடும். பல மூடப்பழக்கங்கள் இந்த "ஏன்?" என்ற கேள்வியை கேட்காமலே இருந்ததால்தான் இன்று மனிதன் அந்த பழக்கங்களுக்கு பின்னால் செல்லவேண்டியுள்ளது. இன்றாவது அந்த கேள்வியை கேட்டுப்பாருங்கள் எப்படியும் ஒரு மூடப்பழக்கமாவது அற்றுப்போய்விடும்.
(புகைப்படம் நன்றி தமிழ் ஓவியா)

மூடப்பழக்கம் என்பது மக்களின் கலாச்சரத்துடன் ஒன்றி ஒழிந்துக்கொண்டுள்ளது. அப்படி ஒழிந்துக்கொண்டுள்ளதால் அப்படிப்பட்ட பழக்கங்களை விடுவதும் சாதாரண விடயமும் இல்லை. தாலிக்கட்டுதல் என்பது நமது சமுகத்தில் இருக்கும் பழக்கம் இதை மாற்றங்கள் செய்யமுடிமே ஒழிய மறுக்க முடியாது. பெரியார் இயக்கத்தினர் தாலிக்கட்டுதலை எதிர்கின்றார்கள் அப்படிப்பட்ட இயக்கத்தினரால்தான் பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார்கள். அங்கேயும் "ஏன்" என்ற கேள்விக்கு பதில் குழப்பமாகதான் இருக்கும். நமது கலாச்சாரமும் அறிவிற்கு அப்பாற்பட்ட பழக்கங்களை கொண்டுள்ளது. அவற்றையெல்லாம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் மனம் ஏற்றுகொள்கின்றது.
மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும். அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.
இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம் (உங்களுக்கு தெரிந்தவற்றையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!)
ஆ.ஞானசேகரன்.