_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, February 24, 2009

நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!...

நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!...
நாமும் ஏதாவது உறுப்புடியா செய்யனும்மில்லையா? சாதனை செய்யனும்னா கொஞ்சனாலும் ஞானம் வேண்டாமா?.. சாதனைக்கு என்னதான் படிக்கனுங்க?.. அய்யோ! இப்பதான் "சிலம்டாக் மில்லியனியர்" திரைப்படத்தை பார்த்தேன்.... சேரில இருந்த ஜமால் மில்லியனியர் ஆகமுடியுமா?... வாழ்கையின் அனுபவக்கல்வி இருந்தா முடியும் போலதான் தோனுதுங்க,... சிறிய கதை, பெரிய காவியம், நல்ல திரைக்கதை அமைப்பு (திரைக்கதை பற்றி சொன்னா நம்மாளு பாக்கியராஜ் சாரை நினைக்க தோன்றும் "அந்த ஏழு நாட்கள்" திரைக்கதை சொல்லவேண்டியதில்லை படம் பார்த்தவர்களுக்கு புரியும். சிலம்டாக் மில்லியனியர் படத்தில் உள்ள திரைக்கதை அமைப்பு எனக்கு பாக்கியராஜ் சாரை நினைக்க தொன்றியது, கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் சொல்ல வேண்டியதாக நினைக்கின்றேன்). சிலம்டாக் மில்லியனியர் படம் எட்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றுவிட்டது. இது இந்தியர் அனைவரும் பெறுமைப் படக்கூடியது. அதில் இரண்டு விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது தமிழகத்திற்கே பெறுமை சேர்கின்றது.... படத்தில் இசை சோக காட்சிகளில் கூட வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் தூண்டும்படி எழுற்சியாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்... அந்த பெறுமை ஏ.ஆர். ரகுமானை சேரும். முக்கியமாக சொல்ல வேண்டும் Sound Mixing (சிறப்பு ஒலி சேர்ப்பு) ஒரு புதிய உணர்வையும், அவற்றுக்காண முகவரியும் கொடுக்கின்றது, ரெசுல் பூக்குட்டி பாராட்டலாம்.

படம் பார்க்கும்பொழுது நானும்(நீயும்) ஒரு மில்லினியராகலாம் என்ற எண்ணங்களை உருவாக்கிவிடுகின்றது. இந்த படத்தின் விமர்சனம் தேவையில்லை, அதை எல்லொரும் சொல்லி முடிந்த விடயம். ஒரு மில்லியனரை உருவாக்கும் ஞானம் நம்மிடைய உள்ள கல்வி முறையில் இருக்கின்றதா? என்பதுதான் என் எண்ணங்களாக இங்கே!!!!!!....

இந்தப் படத்தில் சேரியில் வளர்ந்த "ஜமால்" வாழ்க்கை போராட்டதினால் பக்குவப்பட்ட அனுபவ சம்பவங்களினால் எல்லா கேள்விகளுக்கும் கலக்கமில்லாமல் விடையழிக்க முடிந்தது. இந்த அனுபவ கல்விதான் இன்றய தலைமுறைக்கு தேவைப்படுகின்றது. இந்த அனுபவக் கல்வியால்தான் பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களும் சாதனைப் புரிந்தார்கள்.. இப்படிதான் என்னுடன் படித்த கடைசி பென்ச் நண்பர்கள் கூட தொழிலில் சிறந்து விளங்குகின்றார்கள்.... கொட்ட கொட்ட முழுச்சி நல்லா படிச்சி மார்க்கு வாங்குன எல்லோரும் இப்போ பேந்த பேந்த முழிக்குறாங்க,.. இவங்க முழிக்குறது அறிவில்லாமல் இல்லங்க, இவர்கள் அறிவு உலகத்தாரோடு ஒத்துபோகாததுதான்.

மார்க்கு(மதிப்பெண்) மட்டுமே அறிவாகாது என்பதை ஆசிரியர்களும், பெற்றொர்களும் என்று புரிந்து கொள்கின்றார்களோ!.... அன்று நானும்(நீயும்) மில்லியனியர்தான் போங்க! படத்தில் உள்ள கதைப்பொல கஷ்டப்பட்டு வாழ்கை கல்வியை அறியமுடியும் என்பதில்லை, இயல்பான வாழ்கைமுறையை புரியவைத்து சொல்லிக்கொடுத்தாலே வெற்றிகள் நம்பக்கம் இருக்கும்....
எண்ணங்களில் மில்லியனியராக நீங்களும்,....
நானும்....... ஆ.ஞானசேகரன்

Thursday, February 19, 2009

காலங்களால் வரும் விடைகள்!....

காலங்களால் வரும் விடைகள்!....
சென்றப் பதிவின் தொடர்சியாக மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... என்ற ஒரு விவாதத்தை கடைசியில் வைத்து சென்றேன். எனக்கும் இந்த விவாதத்தில் ஒரே குழப்பங்கள்தான். இன்றைய இளஞர்களிடம் எதார்த்தமான மனோபக்குவம் காணமுடிகின்றது. இவர்கள் இப்படிப்பட்ட நிலையை ஒரு பிரச்சனையாக நினைப்பதில்லை. சூழ்நிலையால் தவறுகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை காலத்தால் இவர்கள் பக்குவப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இருப்பினும் நாம் பல கண்ணோட்டங்களில் சிந்திக்க வேண்டிய நிலையில்தான் இருக்கின்றோம்.. சமீபத்தில் நடிகை குஸ்புக்கு நடந்த விவாகாரத்தையும் நாம் கணக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் உள்ளது. சூழ்நிலைக் காரணமாக ஏற்பட்ட தவற்றை சரி என்றோ இல்லை என்றோ சொல்ல நாம் வரவில்லை, அப்படிப்பட்ட நிலையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாம் முழுமையாக வந்துவிட்டோமா என்ற கேள்வியின் விடையை வைத்துதான் மேற்கண்ட முடிவை சரிப்பார்க்க முடியும். ஏதோ ஒரு காரணத்திற்காக நான் அவளை திருமணம் செய்ய தயக்கப்பட மாட்டேன் என்று கூறினாலும், அவளுக்கு வாழ்க்கை கொடுத்த தியாகிப் போல நடந்துக் கொள்வதனால் என்னப் பயனாக இருக்க முடியும். சூழ்நிலையால் செய்த தவற்றை மன்னிக்கும் பக்குவம் இவர்களிடம் இருந்தால் சாதாரண திருமணப் பந்தங்களில் முறிவுகள் எப்படி வரமுடியும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையோ திருமண முறிவுகளின் சதம் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த உண்மையையும் கணக்கில் எடுத்தால்தான் சரியான பதிலை எதிர்பார்க்க முடியும்.

அதேபோல் ஒருப் பெண் நான் சூழ்நிலையால் தவறிவிட்டேன், இனி செய்யமாட்டேன் என்று கூறும் நிலை இருக்கின்றது என்று வைத்தாலே, இங்கு எதார்த்தமான நிலை இன்னும் வரவில்லை என்றுதான் பொருள். அப்படிப்பட்ட நிலையில் அந்த பெண்ணைப்பற்றி தெரிந்த பின் திருமணம் செய்தால் காலச்சுழலால் அவளை பிரிய வேண்டிய நிலையும் வரலாம் என்று கூறலாம். இங்கு எதார்தமான நிலையிருந்தால் அவள் சொல்ல வேண்டியதும் தேவையில்லையே. அவர்கள் திருமணத்திற்கு முன் அல்லது பின் பிறசூழல்கள் காரணமாக தெரிய வந்தால் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருக்கும் நிலைதான் சரியாக இருக்கும். இப்படிப்பட்ட நிலை காலத்தால்தான் வரமுடியும். ஒருவர்கொருவர் சொல்லிக் கொள்வதினால் எந்த பயனும் வராது என்பதுதான் என்நிலை.

மேலைநாடுகளில் ஒருவனுக்கு வரப்போகும் மனைவியானவள் இதற்குமுன் வேரு ஒருவனிடம் பழகி அவன் அவளுக்கு ஒத்துவரவில்லை என்ற நிலையில் இவனை திருமணம் செய்கின்றாள். இதை அங்கு ஒரு பொருட்டாக நினைக்கும் நிலை இல்லை என்பதும் மேலும் இவனும் இதே நிலையில்தான் வந்தவன் என்பதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த நிலை நம் சமுகத்தில் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்றே சொல்லலாம். மேலைநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளிகள் கூட கலாச்சாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்கள்....

சூழ்நிலையால் தவறு செய்தவளை (இருபாலும்) ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று யாரும் நினைக்கும் நிலை இங்கில்லை. அதற்காக எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் நமது காலம் அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என்று சொல்லிகொள்வேன். அந்த காலமும் வரவேண்டிய கட்டாயம் வரும் அதுவரை பொருத்திருக்க வேண்டும். மேற்சொன்ன வாதத்தின் முழுமையான விடை காலத்தினால் தான் சொல்லமுடியும் என்பது என் விளக்கம்....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்..

Monday, February 16, 2009

மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது!.....

மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது!.....
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி...
காடுவரை பிள்ளை,.. கடைசிவரை யாரோ?.. -கவிஞர் கண்ணதாசனின் வரிகள்......
கடைசிவரை பிள்ளை வருவது இருக்கட்டும், உயிர் உள்ளவரை கூடவே இருப்பவள் அது மனைவியாகதான் இருக்கும், இது மனைவிக்கும் பொருந்தும். இந்த கணவன், மனைவி உறவு என்பது பல பந்தங்களை உருவாக்கும் உறவாகதான் இருக்கும். இதுபோகட்டும் இந்த உறவுகளில் உள்ள மனக் குழப்பங்களைதான் வருடிவிட பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் பேச்சுவாக்கில் உங்கள் வீட்டு தொலைப்பேசி எண் கொடுங்கள் உங்கள் மனைவியிடம் உங்களை பற்றி சொல்லி வைக்கவேண்டும் என்று எல்லொரையும் போல கேட்டார். அதற்கு நான் அதுவும் சரி நானும் என்வீட்டு எண்ணை தருகின்றேன், நீங்களும் உங்கள் வீட்டு எண்ணை கொடுங்கள்,... ஒரு மணி நேர அவகாசம் பொய்யான தகவல்களை சொல்லிப் பார்க்கலாம் என்றேன், நண்பர் சிறிது ஆடிப் போய்விட்டார். மேலும் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று விலகிவிட்டார்.. ஆனால் அவர் மனதில் ஒரே குழப்பம் வீட்டுக்கு சென்றதும் அவர் மனைவியிடம் நடந்ததை சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி நம்பும்படி இருந்தால் நம்பிதானே ஆகவேண்டும் என்று சொல்லியதும் அவருக்கு மேலும் குழப்பமாக இருந்தது. மறுநாள் அவர் மனைவிடம் கேட்டதை என்னிடம் சொல்லி, எப்படிதான் உண்மையாக இருந்தாலும் இந்த மனைவிமார்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது நான் அவரிடம் சில விவாதங்களை சொன்னேன், நம்பிக்கை என்பது மனைவி கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ இருப்பது காலத்தின் கட்டுபாடாகதான் எனக்கு தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு எவ்வளவு காலங்கள் கட்டியாள முடியும். இப்படிப்பட்ட பொய்யான தகவல்களினால் தகற்ககூடிய இந்த நம்பிக்கையால் என்ன பயன் இருக்கமுடியும். நம்பிக்கை என்பது வேண்டும்தான் ஆனால் அந்த நம்பிக்கை மட்டும் வைத்து என்ன சாதிக்க முடியும். இந்த கணவன் மனைவி உறவில் மன்னிப்பு என்ற ஒரு மருந்து இருந்தால் நம்பிக்கைக்கு உரமாக இருக்கும். இந்த உறவுகளில் நம்பிக்கையுடன் மன்னிக்கும் பழக்கம் இருக்குமாயின் எத்தனை சென்மங்களாயினும் உறவில் பிரிவில்லை என்பதுதான் என்வாதமாக இருந்தது.

மன்னிப்பார்கள் என்பதற்காக தவறுகள் செய்யலாம் என்று அர்த்தமில்லை. பொய்யான தகவல்களாலும், புரிதலின் தவறுகளினாலும் உருவாகும் பிரிவுகள் இந்த மன்னிப்பால்தான் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதுதான் என் வாதமாக இருக்கும். அதற்காக நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வரவில்லை எல்லா உறவுகளின் நம்பிக்கை மன்னிக்கும் பண்பினால் உருவாக்கப்பட வேண்டும் எனபதே என் கருத்தாக வைக்கின்றேன். அதன்பின் உங்கள விருப்பம் விஜய்காந்த் (திரைப்படம்) பாணியில் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றால், உறவுகளை நீதிமன்றத்தில்தான் சந்திக்கவேண்டும். நீதிபதியிடம் வைக்கும் நம்பிக்கையை உறவுகளிடம் வைத்து மன்னித்தால் காலம் நம் கைகளில்......!

இயக்குனர் பாக்கியராஜ் சின்னவீடு திரைப்படத்தில் " பொதுவா ஆம்பளங்க உண்மையில் நல்லவங்க, சமயம் கிடைச்சா சங்கதில வல்லவங்க" என்னை பொருத்தவரை இந்த வரிகளில் சமயம் என்பது பெண்ணால் எற்படும் சூழல்கள் என்றுதான் கூறுவேன். இதில் பெண்ணுக்கு ஆணால் ஏற்படும் சூழல் என்பதும் பொருள்தானே!... இதில் மேற்கூறிய நம்பிக்கையில் மன்னிப்பு என்ற நிலை இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் போய்விடும்.

நான் திருமண வயதில் இருக்கும்போது நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கையில் ஒரு விவாதம் வைக்கப்பட்டது. ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... இந்த விவாத அடிப்படையில் நான் என் கருத்தாக அடுத்த பதிவில் கூறுகின்றேன்..

Thursday, February 12, 2009

என்று தனியும்?... எங்கும் சுதந்திர தாகம்!...

என்று தனியும்?... எங்கும் சுதந்திர தாகம்!...
தற்போது எல்லா அரசியல் வாதிகளும், ஆய்வாளர்களும் சொல்வதுபோல இலங்கையின் நடந்துவரும் போர் சூழல்கள் இந்தியாவை பொருத்தமட்டில் முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு முன் அல்லது பின் என்ற நிலைப்பாடுதான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இதில் எந்த நிலைபாடானாலும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது எல்லா சாமானியனின் எதிர்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. மேலும் முத்துகுமார் போன்றவர்களின் தீக்குளிப்புகளும் உருவாக்கியுள்ளது. எதுவாகினும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடுகள் இருக்க கூடாது. அது இலங்கை தமிழாரக இருந்தாலும் இல்லை ஈழத்தமிழராக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும் அது ஒரு பிரச்சனையில்லை.

இப்படி இலங்கை மற்றும் புலிகளின் நிலைப்பாடு இந்தியாவை பொருத்த மட்டில் ராஜிவ் காந்தியின் படுகொலையை வரைகோடாக வைத்துக்கொண்டாலும், ராஜிவின் கொலை சம்மதப்பட்ட வழக்குகள் மற்றும் சாட்சிகள் முழுமைப்படாமல் இருப்பது மோசமான நிலைபாடை குறிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம். ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு 1993 ம் ஆண்டு தொடங்கி , 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. இவர் முன்னிலையில் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் மற்றும் சந்திரசேகர் வாதங்கள் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 2009வரை பதில் இல்லை என்பதே இந்திய அரசின் இலங்கைப் பற்றி கூறும் வாதம் சொத்தையாக்கப்படுகின்றது.... அன்று கேட்கபட்ட கேள்விகளின் சாரம் சுட்டியில் சுட்டி படித்து பாருங்கள்.... இப்படிப்பட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் விடை தெரியாமல் இருப்பது, நாளைய இந்தியாவிற்கு ஆபத்தாக கூட இருக்கலாம்.... சுட்டியை சுட்டவும் ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன

இலங்கையில் நடப்பது ஒரு இன அழிப்பு என ஊடகங்கள் பல சுட்டிக் காட்டுகின்றது. இப்படி ஒரு இன அழிப்பு போர் பக்கத்தில் உள்ள அண்டை நாட்டில் நடப்பதால் இந்தியாவின் நிலைபாடு என்ன என்பதை குறித்து அனைவராலும் எதிர்ப்பாக்கப்படுகின்றது. இதற்கு முன் இந்தியா எந்த ஒரு நாட்டையும் அபகரிக்கும் நடவடிக்கையோ, எண்ணமோ கொண்டதில்லை என்பதுதான் வரலாறு. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியா பக்கத்து நாடான இலங்கை மீது நட்பு நாடாகதான் இருக்க நினைக்கின்றது. இதை ஆட்சியில் உள்ளவர்கள் ராஜிவ் கோலையை சொத்தை சாக்காக சொல்வதுதான் மக்களின் எரிச்சலை கொடுக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை ஞாயப்படுத்தி அப்பாவித் தமிழர்களின் படுகொலையை ஊக்குவிக்க முடியாது என்பதும் என் எண்ணங்கள். அதே சமயம் இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது முடியாத காரியம். அது தற்போது உள்ள காங்கிரஸ் அரசானாலும் சரி, மற்றும் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் சரி இந்த நிலைப்பாட்டில்தான் இருக்க முடியும் என்பதும் உண்மைதான். இதுவே திராவிட கட்சிகளின் நிலையும். அப்படியிருக்க முத்துகுமார் போன்றோரின் தீக்குளிப்புகள் உணர்ச்சியில் உருவாகவேண்டாம் என்பதும் மேலும் உணர்வுபூர்வமாக புத்திசாலியான தீர்வை உருவாக்க முயல வேண்டும் என்பதும் என் எண்ணங்கள்.

இந்தியா போன்ற நடுநிலையான நாடு ஒரு இயக்கம் சார்ந்த பிரிவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ கரம்கோர்க்க முடியாது. மேலும் இந்தியா தன் அண்டை நாட்டுடன் நட்பு நாடாகதான் இருக்க நினைக்கும். இந்த நிலைதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பாக இருக்க முடியும். நாளை புலிகள் வசம் இலங்கை வந்தாலும் இந்தியா இலங்கையின் நட்பு நாடாகதான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள். இதிலிருந்து தெரிவது இந்தியா ஒரு அரசுடன் நட்பு விரும்புகின்றது புரியும்.. ஆனால் இந்தியா சொத்தை சாக்கை சொல்லிக்கொண்டு அப்பாவி ஈழதமிழர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு காட்டாமல் மேலும் அவர்களை பாதுக்காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையை கொடுக்கின்றது. மேலும் கண்டிக்கதக்கதும் கூட. இன்னும் மெளனம் சாதிப்பது மொத்த ஈழத்தமிழர்களுக்கு சவக்குழியில் மெளன அஞ்சலியும், இறங்கல் கவிதையும்தான் சொல்ல வேண்டிவரும்.

இந்தியா போன்ற நாட்டின் தலையிட்டால் தான் சொர்க்க பூமியான இலங்கை அமைதிப் படுத்த முடியும். அதே போல் இலங்கையில் உள்ள அனைத்து பிரிவுசாரார்களும் தங்களின் கொள்கைகளை கொஞ்சம் தளர்த்தி அப்பாவி மக்களுக்கு தரமான சுதந்திர காற்றை சுவாசிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பது என் போன்ற சாமானியனின் ஆசைகள். அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுதை ஐ. நா சபை மூலம் இந்தியா தடுப்பதர்காண ஆவணம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். தமிழகத்தில் திரட்டிய நிதி 150கோடி என்ன சொல்கின்றது என்பதும் புரியவில்லைதான், இதற்கும் அரசு மெளனமே பதிலாக இருக்குமா? பல விடயங்கள் செய்திகள் சுதந்திரயின்மையால் என்னைபோல் சாமானியனுக்கு புரியவில்லை. எதுவாகினும் விரைவில் ஈழத்தமிழனுக்கு உண்மையான சுதந்திர காற்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்......
ஆ. ஞானசெகரன்.

Monday, February 9, 2009

சும்மானாச்சிக்கு!....

சும்மானாச்சிக்கு!....
நாம் பேசுர வார்த்தைகளில் பல வார்த்தைகள் தமிழில் இருக்கின்றதா? என்றால் இல்லைதான் அதற்காக அந்த வார்த்தைகளை பேசாமல் விட்டுவிட்டால் நாம் பேசுவது செயற்கையான தோற்றத்தை கொடுக்கும் என்பதே என் எண்ணங்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளில் "சும்மா"வும் ஒன்று இந்த சும்மா இல்லாமல் சும்மா எதையும் பேசுவது சும்மா சொல்லகூடாது பேசுவதே கடினம்தான். இப்படிதான் சென்றப்பதிவில் முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?... என்ற பதிவில் கொஞ்சம் குத்தலாக இருக்கட்டுமே என்று இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்
- என்று எழுதியதை பார்த்த நண்பர் ஒருவர் இந்த வார்த்தை பேச்சில் உள்ள தமிழாக உள்ளது இதற்கு பதிலாக சரியான தமிழ் சொல்லை பயன் படுத்தி இருக்கலாமே என்று கூறினார். அவர் கூற்று சரி என்றாலும், நான் அவரிடம் அந்த இடத்தில் கொஞ்சம் கடுமையாக இருக்க இந்த சும்மானாச்சிக்கும் இருந்தால் நல்லா இருக்கும் என்று சும்மானாச்சிக்கும் சும்மா போட்டுவிட்டேன் சும்மா இருக்கட்டுமே இந்த சும்மானாச்சிக்கும் என்றதும், அவரும் சும்மா போய்விட்டார். இப்படி பல வார்த்தைகளை சும்மா பயன் படுத்திதான் வருகின்றோம்.

இப்படிதான் கோவையில் இருக்கும் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கையில் " எச்சாதானே" இருக்கு என்னிடம் கொடுங்கள் என்றார்" எனக்கு முதலில் புரியவில்லை பிறகு எச்சா என்றால் அதிகமாகவா என்றேன். அவர் ஆம் என்றார், அது ஆங்கில வார்த்தை எக்ஸ்ட்ரா (extra) போல் உள்ளதே ஆங்கில வார்த்தை மறுவி வந்துள்ளத்தா? என்று கேட்டேன். தெரியவில்லை கோவையில் என் பாட்டி முதல் இந்த வார்த்தையை பயன் படுத்துகின்றோம் என்றார். அதை சரி பார்க்கும் எண்ணத்தில் மற்றொரு கோவை நண்பரிடம் நான் சென்று வேண்டும் என்றே, எச்சா எதாவது இருக்கா? என்று கேட்டேன், அவரும் இல்லை என்று சாதாரணமாக சொன்னதால் அந்த வார்த்தை அவர்களிடம் பழகியுள்ளதை புரிந்துக்கொள்ள முடிந்தது. மேலும் அவரிடம் எச்சா என்ற வார்த்தையை சரிப்பார்க்கதான் நான் கேட்டதாக சொன்னதும் அவர் என்னிடம் சில கேள்விகளாக விளக்கமும் சொன்னார். அதேபோல் காய்ச்சல் என்பது தமிழ் மொழி என்றால் ஜுரம் என்பது என்ன மொழி? மருத்துவமனை என்பது தமிழ் என்றால் ஆஸ்பத்திரி என்பது என்ன மொழி? .. என்று கேட்டதும் ம்ம்ம்ம்ம்ம் என்று தலையாட்டினேன்.

பிறகு எம்டன்மகன் எந்த மொழி என்று கேள்விகளுடன் ஒரு விளக்கமும் சொன்னார். எனக்கும் சரிதான் என்றே தோன்றியது. இரண்டாம் உலகபோரில் ஜெர்மன் நாட்டு சர்வாதிக்காரன் ஹிட்லர் தலைமையில் இந்தியாவின் கடலோரத்தில் M10என்ற நீர்முழ்கி கப்பல் காத்திருந்து அந்த கப்பலினால் இந்தியாவிற்கு எதேனும் ஆபத்தா? என்று நடுங்கிக் கொண்டு இருந்தார்களாம், பிறகு அந்த கப்பலால் ஆபத்தின்றி கப்பல் திரும்பி சென்று விட்டதாம். இந்த பயம்தான் பயன்காட்டும் அப்பாக்களுக்கு எம்டன் என்று கூறுகின்றார்கள். என்று கூறிய விளக்கமும் எனக்கு சரியாகத்தான் படுகின்றது. இதில் மாற்று விளக்கம் இருந்தால் ஆய்வாளர்கள் யாரேனும் சொன்னால் நலமாக இருக்கலாம்..

Sunday, February 8, 2009

சொர்க்கம் என் கைகளில்!...

சொர்க்கம் என் கைகளில்!...
பாட்டினா கதை சொல்லனும், அப்படிதான் என் பாட்டியும் அப்ப அப்ப கதை சொல்லுவாங்க இல்லை கதை சொல்ல சொல்லி அடம் பிடிப்பேன்... என் பாட்டி கதை சொல்லனும்னா நான் ங்ங்ங்ங்.. சொல்லனும். நான் ங்ங்ங்ங்.. சொல்லனா நான் தூங்கிடேனு அர்த்தம். எப்பவும் இப்படிதான் என் கதை கேட்கும் நேரம். பாட்டி சொன்ன கதைனா நல்லதங்காள் கதை, அர்ச்சந்திரன் கதை அப்பறம் சாமி கதைகள். சாமி கதைனா நான் கொஞ்சம் ங்ங்ங்ங்... அதிகமா சொல்லுவேன். சாமிக்கு நல்லது செய்யுறவுங்களதான் புடிக்கும் என்று சொல்லும் பாட்டியிடம் நான் எப்பவும் கேட்கும் கேள்வி தப்பு செஞ்சா என்ன பன்னும் சாமி கேட்பேன். தப்பு பன்னுறவுங்களை சாமி அவுங்க இறந்த பிறகு நரகத்தில் போடுவார்கள் என்பாள். எப்பவும் நல்லது செய்தால் நாம் சொர்க்கத்திற்கு போகாலாம் என்றும் சொல்லுவாள் என் பாட்டி....

எனக்கு நரகம்னா பயம் அதிகம் ஏனா நரகத்தைப்பற்றி பாட்டி சொன்ன விபரதான். தப்பு பன்னுனவுங்களுக்கு நரகத்தில தண்டனை கொடுப்பார்களாம். தப்பு ஏற்றமாதிரி கொதிக்கும் எண்ணையில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்கள் கொடுப்பார்களாம். எனக்கு பயம் வரும் ஆனா ஒன்னும் புரியாது. அப்போ சொர்க்கதில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்பேன், பாட்டி அதற்கு சொர்கத்தில பசி இருக்காது, நோய் இருக்காது, எந்த கடினமும் இருக்காது கடவுளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று கூறுவார்...

இப்படிதான் நரகம் அப்பறம் சொர்க்கம் என்று கானாத ஒன்றை நாம் நம்பும்படி இன்னமும் காலம் கடத்திக்கொண்டே இருக்கின்றோம். அப்பறம் சில கேள்விகள் என் மனதில் தோன்றிய காலங்கள் அர்ச்சந்திரன் மாதிரி உண்மை பேசி எந்த துண்பதிலும் நல்லதே செய்து காத்திருந்த சொர்க்கம் என்னா என்றால் பசி இல்லா உலகம் உழைபே இல்லா உலகமுனு நினைச்சா! புரியலங்க ...... இந்த பூமியை விட சிறந்த சொர்க்கம் இருக்கா என்னால ஒத்துக்க முடியலங்க! இதுதான் சொர்க்கமா தோனுது. எனக்கு பசிக்கனும் அதனால உழைக்கனும் இதுல கிடைக்குற மகிழ்சியை பாட்டி சொன்ன சொர்க்கத்தில இருக்கா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இப்படி சொர்க்கமா இருக்குற பூமியை சொர்க்கமாவே இருக்க நாம தாங்க நல்லது பன்னனும். இந்த சொர்க்கத்தை விட்டு விட்டு எங்கேயோ இருக்கா இல்லையா என்று தெரியா சொர்க்கத்தை காண இந்த வாழ்நாள் எல்லாம் தேடிகொண்டே இருப்பதுதான் தெரியலங்க.

நல்லது பன்னனும் என்பதில் எனக்கு எந்த வித கருத்து வேறுபாடு இல்லை. அதற்காக பகுத்தறிவை வீணடிக்கனுமா? என்பதில்தான் என் கேள்வி. ஒவ்வொறு வலியும் நமக்கும் தெரியனும், அந்த வலி நம்மால் மற்றவர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்வதுதான் நாம் காணும் சொர்க்கம் நம் கைகளில். நாமக்கு பசிக்கனும் பசிக்காக உழைக்கனும் என்பதே சொர்க்கம் அதற்காக மற்றவனை அழிக்கனும் என்பதில்தான் நரகத்தை நம்ம பூமிக்கு விட்டு செல்கின்றோம்.
போதை பொருள் கடத்துவது மகா பெரிய குற்றம் எல்லா நாடுகளிலும் சட்டம் கடுமையாக தண்டனை கொடுக்கப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடிகின்றதே தவிற முழுமையாக தடுக்க முடியவில்லை. இதேதான் நரகத்தின் பயமும், இந்த நரகத்தின் பயம் கண்டிப்பாக மனிதனை பயம் கொள்ள வைக்க முடியாது. நம் அருகில் உள்ள சொர்கத்தை அனுபவிக்க சொல்லிக் கொடுத்தாலே போதும் தவறுகள் திருத்தப்படலாம். இந்த சொர்க்க பூமியில் எல்லோரும் மகிழ்ச்சியுடம் வாழ முடியும் என்பதே என் எண்ணங்கள். பூமியின் உணர்வுகள் புசிக்க கற்றுகொண்டால் சொர்க்கத்தை தேடி செல்ல வேண்டியதில்லை சொர்க்கம் நம் கைகளில் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதே எண்ணங்கள்!.......

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,...
ஆ.ஞானசேகரன்.

Tuesday, February 3, 2009

முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?...

முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?...
கடந்த 25ஆண்டுகாளாய் அனலை கக்கும் எரிமலையாய், தமிழனை பூண்டோடு அழிக்க நினைக்கும் சிங்கள அரசின் கோரத்தாண்டவம்.... கொடூரமான கொலைகள், மற்றும் பள்ளிசிரார்களை சுட்டுத்தள்ளும் சிங்கள ராணுவம், கற்பழிப்புகள் என இன்று மட்டும் இல்லை ஒரு தலைமுறைகளாக நடந்து வருகின்றது..

சிங்கள ராணுவத்திற்கெதிராக பொதுவாக தமிழனின் பாதுகாவலாக புலிகளின் படைகள் சன்டையிட்டு வருகின்றது. இன்று இலங்கை அதிபர் ராஜபக்சே இன்னும் சிலநாட்களில் புலிகளை முழுமையாக அழித்துவிடுவோம் என்று போரை தீவிரப்படுத்தியுள்ளார். போரில் அப்பாவி தமிழ் மக்கள் பலியாவதுதான் முத்துகுமாரை உருவாக்கி உள்ளது... அதுமட்டுமில்லை தமிழ்நாட்டு அரசியலில் இலங்கை தமிழனை சொந்த அரசியல் லாபத்திற்காக ஒப்புக்கு ஒப்பாரி வைப்பதும், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்...

முத்துகுமார் தீகுளிப்பு நடந்து முடிந்து விட்டது.... நம்மால் தடுக்க முடியாமல் போனது நிச்சயம் நமக்கு ஒரு தலைகுனிவுதான். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் தீக்குளிக்கும் முன் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பின்னர்தான் தான் வைத்திருந்த மண்ணெயில் தீக்குளித்துள்ளார்...

(முத்துகுமாரின் விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... சுட்டி சுட்டவும்) நான்கு பக்கங்கள் எழுதிய முத்துகுமாரால் ஒரு நிமிடம் சிந்தித்து தவிற்த்திருக்கலாம்.... அல்லது பிரசுரம் படித்தவர்களாவது காப்பாற்றியிருக்காலாம் என்றே தோன்றுகின்றது. மாறாக அரசியலாக்கி தினம் கொள்ளப்படுகின்றார் என்பதை எண்ணும் போழுது வேதனைதான் மிச்சம். என்னை பொருத்தவரை தமிழனுக்கு வீரன் தேவையே ஒழிய தியாகிகள் தேவையில்லை.. முத்துக்குமாரின் இழப்பு உண்மை தமிழனுக்கு ஒரு பேரிழப்புதான். போராட்டத்திற்கு இதுதான் வழியா? தமிழா சிந்தித்து பார்? இன்று நாம் இழந்த ஒரு முத்துகுமார் போதும்..... இலங்கை போரில் தமிழனின் உயிர்கள் சூரையாடப்படுகின்றன. அவனுக்கு உயிர்கள் தேவையில்லை வீரர்கள்தான் தேவை.. தொடரும் முத்துகுமாரர்கள் நிச்சயம் தேவைப்படாது...

இலங்கையில் போர்நிறுத்தம் வலியுறுத்தி விஷம் குடித்த மாணவர்களுக்கு சிகிச்சை
டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியவர் கைது நன்றி தினமலர்

இளஞர்களே! போராடுங்கள்... ஒன்றுபடுங்கள்! முத்துகுமாரால் கொடுக்கப்பட்ட தீ உங்களிடம் உள்ளது, அந்த தீ தமிழனின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் பயன்படுத்த படவேண்டுமேயொழிய உயிரை விடுவதற்கு இல்லை.... முத்துக்குமாரின் இந்த எண்ணம் ஒரு தியாகம் என்று சொல்லி பல முத்துக்குமார்களை உருவாக்க வேண்டாம்.. தினம் செத்து மடியும் இலங்கை தமிழனுக்கும் தியாகிகள் தேவையில்லை... போராடும் வீரர்கள்தான் தேவை.. இந்த போராட்டம் பத்தாது சிந்தித்து கலம் இறங்குகள்! மொத்த இந்திய அரசை திசைதிருப்பி போரை நிறுத்துங்கள்... காலம் கடந்துவிட்டோம் மிச்சமுள்ள உயிர்களையாவது காப்பாற்றலாம்... தயவுசெய்து முத்துக்குமாரின் மரணசாசனத்தில் அரசியல் நடத்தாதீர்கள்..
என்னால் தீகுளிப்பை ஞாயப்படுத்தவோ, இல்லை கொச்சப்படுத்தவோ முடியாது... இன்று மரணதில் போராடும் இலங்கை தமிழனுக்கு நம்முடைய ஒன்றுப்பட்ட போராட்டம்தான் தேவையே இன்றி உயிர்கள் இல்லை.... தியாகிகளும் தேவையில்லை..... மேலும் முத்துக்குமாரர்கள் உருவாகவேண்டாம், உருவாக்கப்பட வேண்டாம் என்பது தமிழர்களிம் எண்ணம்....

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம் நன்றி நக்கீரன்

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, January 29, 2009

வானத்திலே திருவிழா.. சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா...

வானத்திலே திருவிழா.. சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா...
தீபாவளி என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகள்... அதிலும் ராக்கட் வெடி என்றால் அதில் ஒரு தனி ஆசைதான், அப்பாவிடம் அடம்பிடித்து பெரிய அளவில் உள்ள ராக்கட் வெடிதான் வேண்டும் என்று வாங்கிவிடுவோம். "அப்பாடி பெரிய ராக்கட்" அருகில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் கூப்பிட்டு அந்த ராக்கட் விட தயாராகுவோம். பழைய சோடாப்பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு பாட்டிலை நிறுத்தி வைத்து அதில் அந்த ராக்கட்டை சரியாக நிறுத்தி நண்பர்கள் கோசமிட நெறுப்பை பொருத்தி ராக்கட்டை செலுத்தியதும் ஒரே மகிழ்ச்சிதான். சிலசமையம் ராக்கட் பக்கத்தில் உள்ள கமலா அக்கா விட்டுக்குள் சென்றுவிடுவதும் பின் கமலா அக்கா எங்களை விரட்டுவதும் இன்னும் பசுமையா இருக்கின்றது.....

என்னங்க இப்படி விட்ட வெடி ராக்கட்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த நம்மால் நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க அனுப்பிய சந்திரயான் -1 100வது வெற்றியை மகிழாமலா இருக்கமுடியும்.. இந்தியாவிற்கும் இந்தியனுக்கும் இது ஒரு மைல்கல்தான்... நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -1 வெற்றிகமாக 100வது நாளாக தனது பணிகள் செய்துகொண்டே வருவது நமது விஞ்ஞானிகளின் உழைப்பும் நம்பிக்கையும்தான் என்றால் மிகையாகாது.


நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் தன் குழந்தை சந்திரயான் -1 வின்னில் செலுத்தும் பொழுது நம் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பும். அதன் வெற்றிக்கு பின் அவர்கள் கண்ட மகிழ்ச்சியும் என்னவென்று சொல்ல..... கிழே உள்ள சுட்டியில் காணோளி உள்ளது சுட்டி பார்க்கவும்>>>>> அப்படி இப்படி உள்ள வீடியோவை மெனக்கட்டு உற்காந்து பார்க்கும் பொழுது இதை பார்க்க மாட்டோமா? பார்க்கனும்ங்க.... ம்ம்ம் பார்க்கனும் சுட்டியை சுட்டுங்க>>>>

Launched on Oct. 22, 2008 from SDSC SHAR, Sriharikota, INDIA

India's First Mission to Moon

Lunar Flythrough of Chandrayaan-1

Lunar Flythrough of Chandrayaan-1

ம்ம்ம்ம்ம்ம் அம்மாம்தூரம் உள்ள நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க சென்ற நம்மால்... இங்கே நம் கக்கத்தில் இருக்கும் நம் சகோதரனின், சகோதரியின் குசேலம் விசாரிக்க மாட்டோமா? ராக்கட் விடவேண்டாம்ங்க கரம் நீட்டினாலே போதும். சொந்த அரசியல் ஆதாயத்திற்காக இன்னமும் இலங்கை தமிழின் துயர் துடைக்க உங்கள் நாடகத்தை நிறுத்தி விட்டு கரம் கொடுங்க போதும்.. அதைதான் அவர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்.....

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,

ஆ.ஞானசேகரன்.

நன்றி தினமலர்:
சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா
ஜனவரி 29,2009,12:54 IST
பெங்களூரு : கடந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி பதிவேட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்ததது , சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது . கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து இன்றுடன் வெற்றிகரமாக 100வது நாள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 100 விஞ்ஞானிகள் இன்று பெங்களூருவில் நடக்கும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர். விஞ்ஞானிகள் சந்திரயான் -1 விண்கலம் சேகரித்த முக்கியத் தகவல்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கிறார்கள். இத்தகவலை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். சந்திரயான்- 1 விண்கலத்தினால் விண்ணில் இறக்கப்பட்டுள்ள ' மூன் இம்பாக்டர் பிரோப் ' நிலவின் வியத்தகு படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை யாருமே கண்டிராத கோணங்களில் புகைப்படங்களை ' மூன் இம்பாக்டர் பிரோப் ' எடுத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் புகைப்படங்கள் தற்போதைக்கு இஸ்ரோவிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : குழந்தை சந்திரயான் -1 நலமாக இருக்கிறது. அத்துடன் செலுத்தப்பட்ட 11 கருவிகளும் சிறப்பாக இயங்குகின்றன. இந்தியாவின் இந்த சாதனை பயணம் நிலவு குறித்த இதுவரை புரியாமல் இருந்த புதிரை நீக்கி, விசித்திரமாக தோன்றியவற்றிற்கு விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஈசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் சில விஞ்ஞானிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது

Tuesday, January 27, 2009

இயற்கை இயற்கையாக!...

இயற்கை இயற்கையாக!....
இதற்கு முன் இயற்கையையும் மனிதனால் வரும் மாற்றங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன். இந்த பதிவிற்கு அந்த பதிவும் ஏற்றவையாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்... படிக்காதவர்கள் சுட்டியை சுட்டவும்....

இந்த முறை திருச்சி என் வீட்டிற்கு செல்லும் பொழுது பக்கத்து வீட்டில் இரண்டு கிளி வளர்த்து வந்தார்கள். மிகவும் நல்ல கிளி, கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிங்களமும் கலந்து பேசுமாம் நான் பார்த்ததில்லை. ஒருநாள் ஒரு கிளி வெளியில் பறந்து சென்று விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டார். நான் பரவாயில்லை விடுங்கள் அது சந்தோசமாக இருந்துவிட்டு போகட்டும் என்றேன். அவர் சொன்னார் இல்லை சார் அந்த கிளி எங்கள் வீட்டில் 10வருடம் இருந்துவிட்டது வெளியில் சென்றால் மற்றகிளிகளுடன் போராட பழக்கமில்லாமல் இறந்துவிடும் "அதுதான்" வருத்தமாக இருக்கின்றது என்றார்...........???????
இதுதானுங்க நம்முடைய சின்ன சந்தோசத்திற்காக இயற்கையாக வாழும் பறவைகளையும் விலங்குகளையும் நாம் நசுக்கி விடுகின்றோம்... இயற்கையில் அவைகள் வாழ கற்றுக்கொண்டுவிடும். நாம் அதற்கு உணவழிப்பதன் மூலம் அவைகள் போராட பலம் இழந்தைவையாக இறக்க வேண்டி வரும். பறவைகளும் விலங்குகளும் இயற்கையின் சொந்தகாரர்கள் அவைகளுக்கு இயற்கையே உணவழிக்கும். அந்த உணவில்தான் அவைகள் நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்கின்றது. இந்த இயற்கையான வட்டத்தை கெடுத்தமேயானால் அவைகள் உலகிலிருந்து அழிந்தேபோகும்....

கிழே உள்ள படத்தை பார்க்கவும்....(சிங்கபூர் தேசிய பூங்காவில் வைக்கப்பட்டது...)

மேற்கண்ட படத்தின் சாரம், ... உங்களின் உணவு அவைகளுக்கு ஏற்றவையாக இல்லை என்பதை குறிக்கும்... சிங்கபூரில் இயற்கையான விலங்கினங்களுக்கு உணவழித்தால் அபதாரமும் விதிக்கப்படுகின்றது..

மனிதன் இயற்கையின் அங்கமாக இருந்தாலும் அவனின் ஆறரறிவு இயற்கையை ரசிக்கலாமே தவிற அவற்றை தடுக்கவோ கெடுக்கவோ செய்வானாயின், தீவிறமான பாதிப்பை சந்தித்தே ஆகவேண்டும்.. அந்த இயற்கையின் அழகிற்கு இயற்கையே சொந்தகாரன்..... அந்த இயற்கையின் அழகில் (படம் பார்க்க.....) கல்லை கக்கத்தில் வைத்துக்கொண்டு வளரும் மரம்,....... மர கிளைகளில் பூத்தும் காய்த்தும் சிரிக்கும் மரம்,...... முயலின் முக சாயலில் இருக்கும் பூ..... இப்படி இயற்கை இயற்கையாக இருக்கும் வரை அவைகள் அழகுடனும் நம்மோடு வாழும் என்பதே என் எண்ணம்!.......

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்., ஆ.ஞானசெகரன்.

Sunday, January 25, 2009

நாம் கண்ட குடியரசு!........

நாம் கண்ட குடியரசு!........
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவையாகும். சமத்துவம் இல்லாத சுதந்திரம் பல பேர் மீது ஒரு சிலர் ஆதிக்கம் செலுத்திட வழி செய்யும். சுதந்திரமில்லாத சமத்துவம் தனி மனிதனின் தன்னெழுச்சியான இயல்புகளை குலைவுறச் செய்யும், சகோதரத்துவம் இல்லாத சுதந்திரமும், சமத்துவமும் இயற்கையாக கொண்டிருக்க வேண்டிய தன்மைகளைப் பெற்றிருக்கமாட்டா. சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம் ஆகிய இரண்டும் இந்தியச் சமுதாயத்தில் அறவே இல்லை என்ற உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்"------- இதை கூறியவர் இந்திய நாட்டின் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாபெரும் தலைவர் பாபா சாஹேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள்.......
நன்றி விக்கிபீடியா
பல நூற்றாண்டுகள் மன்னர் ஆட்சியும், முகலாய ஆட்சியும் கொண்டதுதான் நம் நாடு அதற்கு பின் 200ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் அடிமை பட்டு பின்னர் நடந்த போராட்டத்தின் விளைவாகதான் இந்த சுதந்திர காற்றை நம் நாடு சுவாசிக்கின்றது. 1947ல் ஆகஸ்டு மாதம் 15ம் நாள் நாம் நாடு சுதந்திர இந்தியாவாக நடைப்போட்டதில் பலரின் போராட்டத்தினால் உருவாணதை யாரும் மறக்க முடியாது. அதன்பிறகு நாட்டின் ஆட்சி முறையைத் தீர்மானிக்க அரசியல் நிர்ணய சபை நியமிக்கப்பட்டது. 1946 டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 1950 ஜனவரி 25 ஆம் தேதி வரை பணியாற்றி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்துடன் அதற்கு மறுநாள் அதாவது 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்தியக் குடியரசு தொடங்கியது. அதனையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நம்முடைய அரசியல் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய பெருமைக்குறிய அமைப்பு. அதன் பெருமை அதன் நடைமுறையில்தான் சிக்கல் காணமுடிகின்றது. நமக்கு கொடுக்கப்பட்ட முழு சுதந்திரம் சட்டத்தை உதாசீனப்படுத்தப்படுவது கேவளத்துக்குறியது. 60வது குடியரசு தினத்தில் நம் நாட்டையும் நாட்டின் அரசியல் அமைப்பையும் நாம் எந்த அளவிற்கு மதிக்கின்றோம் என்பதை கொஞ்சம் சிந்திப்போம்........ நம் நாட்டின் சட்டதை அரசியல் அமைப்பை நாம் மதிக்கவில்லை என்றால் நம் தாயை அவமதிப்பதாகும்.

அரசியல் சாசனத்தில் 10ஆண்டுக்குள் எல்லோருக்கும் கல்வி என்ற நிலை இன்னுமும் நாம் எட்டவில்லை மாறாக கல்வியை வியாபாரமாக்க பட்டுள்ளது. மதுவை அரசு ஏற்று நடத்துவதும், கல்வியை தனியாரிடம் விற்பனை செய்வதும், அரசியல் சாசனத்தை அடகு வைப்பதற்கு சாமமான செயல்தானே?...

இன்னும் தனிமனித சுதந்திரம் பாதுக்காக்க படுகின்றதா? காவல் துறையில் கூட பாதுகாப்பில்லை. படித்த இளைஞன் கூட காவல் நிலையம் தனியாக சென்று தன் குறைகளை கூற முடியாத நிலைதான் இங்குள்ளது. பெண்கள் நிலை சொல்ல வேண்டியதில்லை. மகாத்மா கண்ட கனவு காவல் நிலையத்தில் கூட காணமுடியாத சட்டசாசனம்தான் நம் காண்கின்றோம்... சட்டங்கள் உள்ளது, சட்டத்தை மதிப்பதிலும் பயன் படுத்துவதிலும்தான் சிக்கல் உள்ளது.

நம் அரசியல் சாசனத்தை மதிப்பதில் கல்விக் கற்றவர்கள் மதிக்கின்றார்களா என்றால்?...... இவர்கள்தான் நம் நாட்டின் தேர்தலை உதாசினப்படுத்துகின்றனர். பெரும்பான்மை படித்தவர்கள் ஓட்டு போடுவதேயில்லை என்பதும், நாட்டை சவக்குழிக்கு கொண்டு செல்வதிற்கு சமமான செயல்தானே.... எத்தகைய சட்டங்கள் இருந்தாலும் நம் நாட்டையும் நம் அரசியல் சாசனத்தையும் மதிக்காமல் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை இந்த 60வது குடியரசு தினத்தில் நினைவில்கூறுவோம்....

நம் நாட்டின் சட்ட சாசனம் ஒரு தொலைநோக்கு பார்வையில்தான் உருவாக்கப்பட்டது. அதை முழுமையாக நடைமுறைப் படுத்த நம் அரசியல் தலைவர்களின் பொறுப்பிலும் உள்ளதை மறக்க முடியாது. அதேபோல் மக்களின் அறிவினாலும் நம்முடைய உரிமைகளை பெறமுடியும். அதற்கு முறையான கல்வியும் அவசியம்.

பொதுவான வளர்ச்சியை இந்தியா கண்டாலும், எல்லா இன மக்களும் அந்த வளர்ச்சியை பெற முடியாமல் இருப்பது சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் கோளாருதானே. இதை இந்த நன்னாளில் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகம் வியக்கும் அரசியல் சாசனம் இருந்தும் நம்முடைய பொறுப்பின்மையால் உலக அரங்கில் பல இழந்துள்ளோம். ஓங்கும் கைகளால் இந்தியாவை நல்ல குடியரசாக உயர்த்துவோம் என்று சொல்லி 60வது குடியரசு வாழ்த்துக்களை பருகுவோம்......
இந்தியாவின் எதிர்காலம் நம்கைகளில்!..
வாழிய இந்தியா!
வாழிய இந்தியர்!......

அன்புடன்
ஆ.ஞானசெகரன்.