நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் பழமொழி " பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்" என்பது. உண்மைதான் சிலர் வேலை செய்யும் இடங்களில் " நான் இல்லை என்றால் இந்த வேலை நடக்க வாய்ப்பே இல்லை " என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள், அப்படிதான் அவர்கள் நடவடிக்கையும் இருக்கும். இதை நான் மட்டுமே சிறப்பாக செய்வேன், நான் இல்லை என்றால் ஒன்றுமே நடக்காது என்று வரிந்து வரிந்து சொல்லிக்கொள்வார்கள். அதே போல குடுப்பங்களிலும் என்னால்தான் எல்லாம், நான் இல்லை என்றால் இங்கு ஒன்றுமே நடக்காது என்ற நிலையில் பேசுவார்கள்.
இதை பார்க்கும் பொழுது நான் படித்த ஜென் கதை ஒன்றுதான் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு ஜென் துறவிக்கு துணையாக ஒரு சிஷியன் இருந்தான். அன்று அந்த சிஷியன் சோகமாக இருந்தான், அதை பார்த்த துறவி " ஏன் நீ இன்று சோகமாக இருக்கின்றாய் உனக்கு என்ன பிரச்சனை " என்று அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "குருவே எனக்கும் உங்களை போல் இயல்பு வாழ்க்கை வெறுக்கின்றது நானும் உங்களை போல துறவியாகி விடலாம் என்றே தோன்றுகின்றது" என்றான். அதற்கு அந்த துறவி " அதற்காக ஏன் சோகமாக இருக்க வேண்டும்" என்றார். " நான் துறவி ஆகதான் விருப்பம் ஆனால் என்னை நம்பிதான் என் மனைவி மக்கள் இருக்கின்றனர், என் தாய் தந்தையரை நினைத்தால் பயம் வந்துவிடுகின்றது" என்று கூறினான்.
அதற்கு அந்த துறவி" நீ அதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றாயா?" என்று கேட்டார், சரி என்று ஒப்புகொண்டான். பிறகு அவனுக்கு மரண நிலையில் இருக்கும் ஆசனம் ஒன்றை அவனுக்கு கற்றுக்கொடுத்தார். பின் அவனிடம் " நீ உன் வீட்டிற்கு சென்று இந்த ஆசனத்தை பயன்படுத்தி படுத்துக்கொள்" என்று அனுப்பிவிட்டார். அவன் வீட்டிற்கு சென்று ஆசனத்தை பயன்ப்படுத்தி படுத்துக்கொண்டான். வீட்டில் உள்ளவர்கள் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அழுதுகொண்டிருந்தார்கள்.அந்த வழியாக ஜென் துறவி வந்தார், அழுதுகொண்டிருந்தவர்களை பார்த்து " அவன் உயிர் பெற வேண்டும் என்றால் உங்களில் யாராவது உங்கள் உயிரை கொடுத்தால் போதும் நான் அவனை உயிர்ப்பெற செய்கின்றேன்" என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக உயிர் வாழ வேண்டும் என்பதாக சொல்லி பின்வாங்கினார்கள்.
அதற்குள் அவன் மனைவி உரத்த குரலில் " யாரும் இவருக்காக சாக வேண்டாம், இவர் இல்லாமலே எங்களால் வாழமுடியும், அவர் இல்லாமலே காலத்தைக் கழிப்போம்" என்று கூறினாள்.
ஆம்! யாரும் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியம் இல்லை, வாழவுமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை ஒப்புக்கொள்ளதான் மனம் தயக்கம் காட்டுகின்றதே தவிற வேறொன்றுமில்லை. நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும். இதற்கிடையில் இருப்பது தான் பந்தம், பாசம், உறவுகள் எல்லாம். தாய், தந்தை, மகன், மகள் உறவுகள் எல்லாமே ஏதோ ஒன்றை மற்றவரிடம் எதிர்ப்பார்த்துதான் வாழ்க்கையும் ஓடுகின்றது. இந்த எதிர்ப்பார்ப்பு இல்லை என்றால் உறவுகள் கூட நொருக்கிவிடுகின்றது.
யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்றுவிடுவதுமில்லை.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.











