_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, September 3, 2008

மனிதரின் முகம் காட்டுங்கள்....

மனிதரின் முகம் காட்டுங்கள்....
ஆதிமனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு, குகைகளிலும் மரக்கிளைகளிலும் தங்கி வாழ்ந்து வந்தான்.. பிறகு சின்ன சின்ன குழுக்களாகவும் வாழத்தொடங்கினான். ஒவ்வொருக் குழுவிற்கும் வலிமையுள்ளவன் தலைவனாகவும் இருப்பான்.

இப்படிப்பட்ட தனித் தனி குழுக்களில் தங்கள் வாழ்க்கை முறைகேற்றவாறு கொள்கைகளும் வகுத்துகொண்டான். அவர்களுகென்று வகுக்கப்பட்ட கொள்கைக்கு மாறாக நடந்தால் தண்டனைகளும் வகுத்துகொண்டான்..
இப்படிப்பட்ட கொள்கைகள்தான் பின்னர் மதங்களாகவும், சமையங்களாகவும் வகுக்கப்பட்டது. மதம் என்பது மனிதன் நல்வழிப்படுத்தும் கொள்கைகளாகதான் உருவானது. மதம் என்பது குறிப்பிட்ட குழுக்களின் கொள்கைகளே! . இப்படிப்பட்ட மதம்(கொள்கைகள்) கடவுளின் பின்னனில் உருவானதுதான் வேடிக்கையும் பிரச்சனைகளூம். கடவுள் என்பது கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட காப்புறுதியாகதான் படைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களும் தனக்கென கடவுள் உருவாக்கப்பட்டது. அதுபோல ஒவ்வொரு காலக்கட்டதிலும் பல சமயங்கள் உருவாகவும் மறையவும் பின் ஒன்று மற்றொண்டோடு கலப்பும் உண்டானது.

மனிதன் தனக்கென்ன ஒரு மதத்தை சார்ந்தே வாழ்கின்றான். மதம் என்பது கொள்கை பொருள் எனக்கொண்டால், பெரியார் போன்றொரின் பகுத்தறிவு கொள்கையும் மதம் சார்ந்த கொள்கையே! இக்கொள்கைக்கு கடவுளை இனம் காட்டாமல் மனிதனை காட்டுகிறது. கடவுளின் பெயரால் காட்டப்படும் மூடபழக்கத்தை வெறுக்கப்படுகின்றது. அறியாமையால் உண்டான பழக்கங்களை மனிதனிடமிருந்து நீக்கி பகுத்தறிவை சொல்கிறது.

மதங்களை தன் பிள்ளைகளையும் கடைப்பிடிக்க சொல்லியும் வருகின்றது. (இதில் பெரியார் கொள்கையும் விதிவிளக்கல்ல). நான் இந்து வீட்டில் பிறந்ததால் நான் ஒரு இந்து. நான் முஸ்லீம் வீட்டில் பிறந்ததால் நான் ஒரு முஸ்லிம். நான் கிறிஸ்துவ வீட்டில் பிறந்ததால் நான் ஒரு கிறிஸ்துவன்.. இப்படிதான் இந்திய சட்டமும் சொல்கின்றது. எந்த மதமும் மனிதனை நெறிப்படத்தான் சொல்கிறது. தான் சார்ந்த மதத்தை உணர்ந்து கொள்ளவே உன் வாழ்நாள் போதாது, அப்படியிருக்க மற்ற மதத்தின் குறைகளை எப்படி உணரமுடியும். எந்த மதமும் கொலைவெறியை தூண்டவில்லை, மனிதன்தான் மதத்தை தூக்கிக்கொண்டு வெறிப்பிடித்து அழைகின்றான்..

உன்மதத்தின் சிறப்பை உன்னைப் பார்த்து தெரிந்துக் கொள்வேன். உன் நேர்மையில் உன்மதத்தை காண்பேன். அப்படியிருக்க மதவெறி வருவது எதற்காக? மதம் உன்கொள்கையே தவிர கொலை வெறியில்லையே!.. மதத்தின் பெயாரால் அரசியலாக்குவதும், அப்பாவி மக்களின் உயிர்களை கொன்று குவிப்பதும் தற்ப்போது நடந்துவரும் கொடுமைகள்..

நாட்டின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் ஒரு சாபகேடாக இருப்பது இந்த மதவெறியும் மதம்சார்ந்த அரசியலும். மதம்சார்ந்த முகதிரையை கிழித்துவிட்டு மனிதா எப்பொழுது மனிதனின் முகம் காட்டுவீர்கள்?.... மனிதன் முகம் காட்டி நாளைய சமுதாயத்தை வாழவிடுங்கள்!.... நாட்டை பிளவை ஏற்ப்படுத்தும் மதம் சார்ந்த அரசியல் போக்கை பற்றி "வெப்துனியா" வில் விரிவாக 30 ஆகஸ்ட் 2008ல் வெளிவந்தவை கீழே சுட்டியும் சுட்ட செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளது..


நமது நாட்டை அரிக்கும் மதவாதம்!
சனி, 30 ஆகஸ்ட் 2008( 16:00 IST )


சமூக, பொருளாதார ரீதியாக எழும் ஒவ்வொரு சிக்கலையும் மதவாதப் பிரச்சனையாக்கி நமது சுமூகமான சமூக வாழ்வில் பிளவை ஏற்படுத்தும் ஒரு அரசியல் போக்கு சமீப காலமாக அபாயகரமான அளவிற்கு தலைதூக்கி வருகிறது.
சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்னரும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவைகள் எதுவும் இப்படி முற்றிலுமாக வேறு பார்வையுடன் திரிக்கப்பட்டு பிரச்சனையாக்கப்பட்டதில்லை.


இதற்கு முன்னரும் மத ரீதியான சிக்கல்களை நமது நாடு சந்தித்துள்ளது.
1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக நமது நாட்டில்
ஒரு மாபெரும் மதக் கலவரத்திற்கு வித்திடப்பட்டு, அதன் காரணமாக பல ஆயிரம் உயிர்கள் பலியாகி, நாட்டின் பல பகுதிகள் இரத்தக் களமாயின.


அதன் காரணமாக ஏற்பட்ட சமூகப் பிளவு அரசியலில் பிரதிபலித்தது. மதக் கோட்பாட்டை மையக் கொள்கையாக கொண்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கட்சி தேச அளவில் வளர்ந்து பிறகு (கூட்டணி அமைத்து) ஆட்சியையும் பிடித்தது.

அந்தக் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததால் அதனால் தனது வெளிப்படையான எந்த ஒரு மதவாத திட்டத்தையும் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்டுவது உட்பட - நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால் அன்று பற்றவைக்கப்பட்ட அந்தத் தீ பல இடங்களில் தனது கோர நாக்கை நீட்டிட, அதன் காரணமாக ஆங்காங்கு பல மத வன்முறைகள் வெடித்தன. கோத்ரா இரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரமும் 2,000 அப்பாவி மக்களின் உயிரைக் குடித்தன.

இப்படி மதவாத கண்ணோட்டத்தோடு தூண்டிவிடப்பட்டு பெரும் பிரச்சனையாக்கப்பட்டு அதன் காரணமாக கலவரம் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது அரசியல் ரீதியான பலனை - ஆட்சியைப் பிடிக்க வகை செய்யும் வாக்கு வங்கியை - உருவாக்கியதால் அதனையே ஒரு அரசியல் வழிமுறையாக இந்து மதவாத சக்திகள் மட்டுமின்றி, மற்ற மதவாத சக்திகளும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் நமது நாட்டின் சுதந்திரத்திற்கும், சமூக கட்டமைப்பிற்கும், அரசியல் போக்கிற்கும் ஒரு பெரும் ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கிறது.

அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரம்!
மிக மிகச் சாதாரண பிரச்சனை இது, ஆனால் மதவாத சக்திகளால் பெரும் பிரச்சனையாக்கப்பட்டு இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அப்படி என்ன ஒரு உரிமைப் பிரச்சனை ஏற்பட்டது என்று புரியவில்லை. இமய மலைப் பகுதியில் உள்ள புனித அமர்நாத் கோயிற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகத் தங்கி, இளைப்பாறிச் செல்ல பால்டால் என்ற இடத்தில் அவர்களுக்கு தற்காலிகமாக தங்குமிடங்களை அமைக்க (கட்டிக்கொள்வதற்கு அல்ல) ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு 40 ஹெக்டேர் நிலத்தை ஜம்மு-காஷ்மீர் அரசு ஒதுக்கியது. இது தற்காலிகமான ஒதுக்கீடு என்று அறிவித்தே அரசு உத்தரவும் பிறப்பித்தது.

ஆனால் அதற்கு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு மதவாத-அரசியல் அமைப்புகளான ஹூரியாத் மாநாட்டின் இரண்டு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீரத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என்று கூறினர். இந்த எதிர்ப்பு சாதாரண அளவிற்குத்தான் இருந்தது. காரணம் ஹூரியாத் மாநாட்டில் இருந்த பெரும்பாலான இயக்கங்கள் மதவாத - பாகிஸ்தான் சார்புடையவையே. இவைகளு‌க்கு காஷ்மீர் மக்களிடத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை.

இப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கியது உமர் ஃபரூக்கின் தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியே. தேசிய மாநாட்டுக் கட்சி, ஃபரூக் அப்துல்லா தலைமையில் இருந்தபோதுதான், அமர்நாத் யாத்ரிகர்களுக்கு அடிப்படை வசதி செய்துகொடுத்து, அவர்கள் பாதுகாப்பாகத் திரும்ப அமர்நாத் கோயில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. ஏனேன்றால், 1995ஆம் ஆண்டு அமர்நாத் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல யாத்ரிகர்கள் உயிரிழந்தனர். எனவே அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அமர்நாத் கோயில் நிர்வாகம் அமைக்கப்பட்டது.


யாத்ரிகர்கள் தங்கிச் செல்ல தற்காலிக தங்குமிடங்களைக் கட்ட நில ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தது தேசிய மாநாட்டுக் கட்சி அரசே. அதை எதிர்த்து அப்பொழுதே ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த எதிர்ப்பு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், அமர்நாத் யாத்திரை நடைபெறும் பொழுது அந்த இடம் (அரசால் ஒதுக்கப்படும் இடம்) அமர்நாத் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், யாத்திரை முடிந்ததும் அது மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்பொழுது நில ஒதுக்கீடு செய்யும் உத்தரவை காங்கிரஸ் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சி தனது தொண்டர்களைத் தூண்டிவிட்டு எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது அந்த வனப்பகுதியில் சுற்றுச் சூழலை கெடுத்துவிடும் என்று எதிர்‌ப்பாளர்கள் (மதவாதிகள்) வாதிட்டனர். ஆனால் அமெரிக்கா சென்று படித்துவிட்டுத் திரும்பிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலை கருத்தில்கொண்டு மிகப் பெரிதாக ஓலமிட்டார்.

போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கத் துவங்கியது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக கலவரம் வெடிக்க, துப்பாக்கிச் சூட்டிற்கு பலர் பலியாயினர்.
இந்த நிலையில்தான், அதுவரை காங்கிரஸூடன் ஆட்சியைப் பகிர்ந்துக் கொண்டு நில ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிந்த மக்கள் ஜனநாயகக் கட்சி, திடீரென பல்டியடித்து நில ஒதுக்கீட்டை ரத்து செய்யாவிட்டால் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று அறிவித்தது. அதன் காரணமாக குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஆட்சியும் கவிழ்ந்தது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது. காஷ்மீரில் கலவரம் ஓய்ந்தது. ஆனால், ஜம்முவில் போராட்டம் தீவிரமடையத் துவங்கியது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு செய்யப்பட்ட நில ஒதுக்கீட்டை திரும்பத் தரவேண்டும் என்று கோரி ஜம்முவில் போராட்டம் வெடித்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள காஷ்மீரில் மதவாத-அரசியல் நோக்குடன் நடத்தப்பட்ட போராட்டம் அதே மதவாத-அரசியல் எதிர்வினையாக ஜம்முவில் தொடர்ந்தது. பன்னெடுங்காலமாக ஒரே மாநிலத்தின் மக்களாக இருந்தவர்கள் மத ரீதியாக பிளவுபடுத்தப்பட்டு பிரிந்து நின்றார்கள். அவர்கள் விரும்பாமலேயே மத்த்தின் பெயரால் பிரிந்து நிற்க நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள்.

அமர்நாத் பிரச்சனையை பெரிதாக்கி, அங்கு காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து அரசியல் குளிர்காய்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, டெல்லி அரசியலில் காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றப்பட ஆதரவளித்தார். அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் பெரும்பான்மை இழந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டுவந்த போது அரசை ஆதரித்து உரையாற்றிய உமர் அப்துல்லா, காஷ்மீரின் நிலம் அபகரிக்கப்படுவதை உயிரைக் கொடுத்தாவது தடுப்போம் என்று மக்களவையில் முழுக்கமிட்டார்.

அடேயப்பா, எவ்வளவு பெரிய பிரச்சனை? அமர்நாத் யாத்ரிகர்கள் தங்கிச் செல்ல 40 ஹெக்டேர் நிலத்தை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்தது அபகரிப்பாம். என்ன அயோக்கியத்தனம். நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அரசு உத்தரவு தெளிவாக உள்ளது. ஆனால் உமர் கர்ஜிக்கிறார்... காஷ்மீரிகளின் உரிமையாம்... பறிபோகிறதாம்.


இதேபோன்ற வேடத்தை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவி மெஹ்பூபா முப்ஃதியும் அணிந்து காஷ்மீரில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார். என்ன அடிப்படையில்? மதவாத சக்திகளுக்கு எதிராகவாம்!ஆட்சியைப் பிடிக்க கொள்கையோ திட்டமோ இல்லாமல், மத ரிதியாக மக்களைப் பிளக்கும் அரசியல் கட்சிகள் மதச்சார்பின்மை பற்றிப் பேசுகின்றன.

ஒரிசா: மதமாற்றமும், மதக் கலவரமும்!ஒரு பக்கத்தில் காஷ்மீரும், ஜம்முவும் ஒன்றுக்கு ஒன்று எதிராக, மதவாத ரீதியில் எரிந்துக்கொண்டிருந்தபோது, ஒரிசாவில் மதவாத கலவரத் தீ பரவ ஆரம்பித்தது.

விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தைச் சேர்ந்த சுவாமி லட்சுமானந்த சரசுவதி உட்பட 5 பேர் கொல்லப்பட்டதற்கு கிறித்துவ அமைப்புகளே காரணம் என்று கூறி, அம்மாநிலத்தில் உள்ள கிறித்தவ வழிபாட்டுத் தலங்களையும், தேவாலயங்களையும் இந்து மதவாத அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் கொளுத்தி தீக்கீரையாக்கி வருகிறது. ஒரு வழிபாட்டுத் தலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரையும் சேர்த்து கொளுத்தி வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர்.

சுவாமி லட்சுமானந்த சரசுவதியைக் கொன்றது கிறித்தவ அமைப்பினர்தான் என்று எந்த ஆதாரத்தை வைத்து வி.இ.ப. கூறிவருகிறது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.




கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் அது. அ‌ன்று, "ஒரிசாவின் கந்த்மால் மாவட்டம், புல்பானி என்ற இடத்தில் உ‌ள்ள ஜலேஷ்பதா ஆஸ்ரம‌த்‌தி‌ல் கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய 30 மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்வாமி லட்சுமானந்தாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலையை தடு‌க்க முயன்ற மேலும் நால்வரையும், அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

இறந்த ம‌ற்றவர்கள் வி.ஹெச்.பி. அமைப்பின் முக்கியத் தலைவர்களான அரூபானந்தா, சின்மயானந்தா மற்றும் மாதாபக்தி மயி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தவிர அடையாளம் தெரியாத மற்றொருவரும் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஏற்கனவே ஸ்வாமி லட்சுமானந்தாவை மாவோ தீவிரவாதிகள் 8 முறை கொல்ல முயன்றனர். எனவே இப்படுகொலையை அவர்கள் தான் நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று செய்தி வெளிவந்தது, அதனை தமிழ்.வெப்துனியா.காம் மறுநாள் காலை வெளியிட்டுள்ளது.

சுவாமி லட்சுமானந்த சரசுவதியை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்தான் சுட்டுக் கொன்றிருக்கக் கூடும் என்று உறுதியாக சந்தேகிக்கும் அளவிற்கு செய்திகள் வந்துள்ளபோது, இவர்கள் கிறித்தவர்களையும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் தாக்குவதும், தீ வைத்துக் கொளுத்துவதும் எதற்கு?


இந்த மத வன்முறையாளர்களால் மாவோயிஸ்ட்டுகள் போன்ற தீவிரவாத அமைப்புகளோடு மோதும் மன வலிமை படைத்தவர்கள் அல்ல என்பது தெரியும். இவர்கள் அப்பாவி மக்களை மத ரிதியாக பிரித்துக் குளிர்காயும் அரசியலிற்கு அல்லவா பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் தங்களுடைய மதவாத கொள்கைத் திட்டத்தின்படி, கொன்றவர்கள் யார் என்று தெரிந்தாலும் பிரச்சனையை திசை திருப்பி மதக் கலவரத்திற்கு வித்திடுகின்றனர்.

ஏற்கனவே, 1999ஆம் ஆண்டு ஒரிசாவில் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஸ்டெய்ன் என்ற பாதிரியாரும், அவருடைய இரண்டு மகன்களும் இரவு தங்கள் வாகனத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த மதவெறியாளர்களால் கொளுத்திக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையை திட்டமிட்டுச் செய்த தாராசிங் மற்றும் இரண்டு பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

ஒரிசாவில் கடுமையான வறட்சியும், பஞ்மும், பட்டினியும் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் திருவிழா போல மாறாமல் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொண்டு கொள்கைத் திட்டம் வகுத்து ஒழிக்க திராணியற்ற மதவாத இயக்கங்களும், பா.ஜ.க.வும் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு பிரச்சனையை திசை திருப்பிக்கொண்டிருக்கின்றன.

இராமர் பெயரால் சேது திட்டத்திற்கு எதிர்ப்பு!
பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கும்போதுதான் சேதுக் கால்வாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முழுமையான ஆய்விற்குப் பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துவக்கப்பட்ட அந்த திட்டத்தை, அத்திட்டப் பகுதியில் குறுக்கே இருக்கும் நிலத்திட்டை இராமர் கட்டிய பாலம் என்று கூறி பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகள் எதிர்த்து வருகின்றன.

சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று தங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்த அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலரும், முன்னாள் முத‌ல்வருமான ஜெயலலிதா, அந்த நிலத்திட்டை இடித்து இந்துக்களின் மத உணர்வுகளை அலட்சியப்படுத்தினால் நாடு கொந்தளிக்கும் என்று கர்ஜனை செய்கிறார்.
தான் முதலமைச்சராக இருந்தபோது சென்னை கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அந்த இடத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை கட்ட திட்டமிட்டபோது, மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு தடுத்துவிட்டதற்கு பழிக்குப் பழிவாங்க சேதுக் கால்வாய் திட்டத்தை புதைத்துவிட வேண்டும் என்பதில்
ஜெயலலிதா அழுத்தமாக உள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதை கேட்கும்போது, இது கூட உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், அவருடைய கட்சி தொடர்ந்து ஆதரித்துவந்த ஒரு திட்டத்தை இவ்வளவு மூர்க்கமாக எதிர்ப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இப்படி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது நாட்டில் எழும் ஒவ்வொரு பிரச்சனையையும் மதச்சாயம் பூசி, பூதாகரமாக்கி மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் ஆட்சி அதிகாரக் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் முடிவுடன் மதவாத சக்திகள் உறுதியாக உள்ளன.

இது ஆபத்தானது. நமது நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி, பணவீக்கம், வேலையின்மை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பலியாகும் பல்லாயிரக்கணக்கான மக்கள் என்று எத்தனையோ பிரச்சனைகள் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் தீர்வு காண கூட்டுச்சேர்ந்து செயல்படவேண்டிய ஒரு நாட்டில் இப்படி மதவாத சக்திகள் எல்லா பிரச்சனைகளையும் தங்கள் நோக்கத்திற்கேற்ப திசை திருப்பி அரசியல் இலாபம் தேட அனுமதிக்கப்பட்டால் அது நமது நாட்டை மிகப் பெரிய ஆபத்தில் வீழ்த்திவிடும். அதன்பிறகு இந்நாட்டை மீட்பது இயலாத காரியமாகிவிடும்.

1 comments:

Ashwin Ji said...

அன்புள்ள திரு ஆ.ஞானசேகரனுக்கு, அமர்நாத் பற்றிய தங்கள் பதிவில் ஜம்மு அருகில் உள்ள வைஷ்ணோதேவி கோவிலின் படத்தை இட்டிருக்கிறீர்கள்.