எனக்கு எங்கள் வீட்டின் அருகில் உள்ள தாத்தாக்களிடம் கதை கேட்பது ரொம்ப பிடித்தமான விடயம். சில சமயங்களில் தாத்தாக்கள் இரண்டு நான்கு பேர்கள் சேர்ந்து கதையடித்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் விடுகதை, துணுக்கு என்று அசத்தலாக பேசுவார். நான் அப்பொழுதெல்லாம் சிறுவனாய் இருபேன், என் வயதிற்கு மீறிய கதைகளையும் காதுகொடுத்து கேட்பதும் உண்டு. அதேபோல் அன்று ஒரு தாத்தா சொன்ன கதை " தன் நண்பனுக்காக பெண்பார்க்க செல்கின்றான் ஒருவன், பெண்ணோ ரொம்ப அழகாக இருந்தாள், அந்த பெண் தன் நண்பனுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பாள் ஆனால் அந்த பெண்ணின் மீது இவனுக்கு ஆசை வந்துவிடுகின்றது. எனவே இவன் ஒரு சூழ்ச்சி செய்கின்றான். பெண்வீட்டில் கொடுத்த புகைப்படத்தை நண்பனிடம் காட்டுகின்றான், நண்பனும் தனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகின்றான் எப்படி? " என்று கேட்டார்... மற்ற தாத்தாக்களும் தெரியவில்லை என்றனர். "ஏய் பேராண்டி நீ சொல்லு பார்க்கலாம்?" என்றார்.. தாத்தா எனக்கும் தெரியவில்லையே, நீங்களே சொல்லிவிடுங்கள் என்றேன். பின் தாத்தா சொன்ன விடை பெண்ணின் புகைப்படத்தில் ஒரு சிறிய குச்சியால் சுண்ணாம்பை எடுத்து ஒரு கண்ணில் பொட்டு போல வைத்து நண்பனிடம் காட்டினான், நண்பனோ அவளுக்கு ஒரு கண் சரியாக தெரியாது என்று நினைத்து இந்த பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டான் என்றார்.
என் மனதிற்குள் அய்யே எச்சில் வைத்து துடைத்தால் போயிரும் இத தாத்தா பெருசா சொல்லுகின்றாரே என்று நினைத்துக்கொண்டேன். ( இந்த காலத்தில் photo shop கொண்டு பல சித்தவேலைகள் செய்யலாம் அது வேறு விடயம்)
நடிகர் திலகம் சிவாஜி சார் நடித்தபடம் "படித்தால் மட்டும் போதுமா" இவருடன் பாலாஜி சாரும் பட்டம் பெற்ற தம்பியாக நடித்துள்ளார். சிவாஜியோ படிக்காதவர் இருவருக்கும் வீட்டில் பெண் பார்க்கின்றனர், இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்யலாம் என்பதுதான் வீட்டாரின் எண்ணம். சிவாஜிக்காக படிக்காத நல்ல பெண் வரனும், பாலாஜிகாக படித்த நல்ல பெண் வரனும் வருகின்றது. பெண்ணை பார்க்க இருவரும் ஒரு திட்டம் போடுகின்றார்கள் சிவாஜிக்காக உள்ள பெண்ணை பாலாஜியும், பாலாஜிகாக உள்ள பெண்ணை சிவாஜியும் பார்த்துவிட்டு பின் சம்மதம் சொல்லலாம் என்றனர். பெண்ணை பார்த்த பிறகு " நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை நான் பார்த்தப் பெண்ணை நீ பார்க்கவில்லை " என்று இருவரும் பாட்டு பாடி சொல்லிக் கொள்கின்றனர். இதில் பாலாஜி பார்த்த பெண் சிவாஜிகாக, ஆனால் அந்த பெண் இவருக்கு பிடித்துவிட சுழ்ச்சியில் அந்த பெண்ணையே திருமணம் செய்கின்றார். (மீதி படத்தில்)
"நீ வருவாய் என" என்ற படத்தில் அஜித் ராணுவ வீரணாக இருப்பார், இவருக்காக வீட்டில் பெண்பார்த்து வைத்திருப்பார்கள். அஜித் விடுமுறையில் வந்த பிறகு பெண்ணை மாப்பிள்ளையும், மாப்பிள்ளையை பெண்ணும் பார்த்த பின் சம்மதம் செய்யலாம் என்பதுதான் வீட்டார்களின் எண்ணம். அந்த படத்தில் அஜித் விடுமுறையில் வந்ததும், முன்அறிவுப்பு இல்லாமால் பெண்ணை(தேவயானி) பார்த்து விட்டு அவளுடன் கலகல என பேசிவிட்டு பிறகு பெண்ணின் வீட்டிற்கே சென்று பெண்ணின் அப்பா அம்மாவிடமும் நன்றாக பேசி கலகலப்பாக இருப்பார். பின்னர் அஜித் அவர்களிடம் "நான் மாப்பிள்ளை என்னை பிடிச்சி இருக்கா? பிடிச்சிருந்தா சொல்லி அனுப்புங்கள் அம்மா அப்பா வந்து நிச்சயம் செய்வார்கள் என்று சொல்லிவிட்டு விடைபெறுவார்". ( இதுவும் மீதி படத்தில்)
இப்படி பெண்பார்ப்பது என்பது நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. மேலை நாடுகளில் நம்மை போல் பெண்பார்ப்பது இல்லை என்றாலும் பெண்ணிடம் சம்மதம் பெறுவது என்ற நோக்கம் ஒன்றாகதான் இருக்கும். முறைகள்தான் வேறாக தெரிந்தாலும் எண்ணங்களும் செயலும் ஒன்றுதான்.
ஒரு முறை நண்பன் ஒருவனுக்காக பெண்பார்க்க குடும்பத்துடன் சென்றோம். பிடித்திருந்தால் உடன் சம்மதமும் சொல்லிவிடலாம் என்பதுதான் திட்டம். மாப்பிள்ளையும் எங்களுடன் வந்திருந்தார், பெண்ணை பார்த்தாகிவிட்டது. பெண்ணை மாப்பிள்ளைக்கு அவ்வளவாக பிடித்தமில்லை மேலும் சிலருக்கும் அப்படியே. எனவே பெண்வீட்டாரிடம் நாங்கள் வீட்டில் சிலருடன் கலந்துகொண்டு பதில் அனுப்புகின்றோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம். வீட்டிற்கு வந்ததும் எல்லோருடைய பேச்சுகள், பேச்சின் முடிவு வேண்டாம் என்றெ சொல்லிவிடலாம் என்பதுதான். அதில் ஒருவரின் வாதம் "அது எப்படி ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்வது? நமக்கும் பெண் இருக்கு" என்றார்.. இவர் சொல்லின் ஞாயத்தை பார்த்தாலும் பிடிக்காமல் எப்படி மணம் முடிப்பது? என்ற குழப்பமும்.
இதன் இடையில் என் தங்கையின் பதிலாய் பெண் என்றால் நாலுபேர் பார்க்கதான் வருவார்கள். வருபவர்கள் எல்லாருமே நமக்கு பிடித்தவர்களாக இருக்கவும் மாட்டார்கள். என்னையும் நான்கு பேர் பெண்பார்க்கதான் வந்தார்கள், அதில் எல்லொருக்குமா என்னை பிடித்தது? என்னை பிடித்திருக்கு என்று சொன்னவரை எனக்கும் பிடிச்சிருக்கும் என்று எப்படி சொல்ல முடியுமா? ஏதோ ஒன்றை பெற்று ஒன்றை இழந்துதான் வாழ்ந்து வருகின்றோம். இதில் எல்லாமே சரியாகத்தான் இருக்கவேண்டும் என்றால் வாழ்க்கையே இருக்காது. எனக்கு பிடிக்காதவர்களும் என்னை பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது என்ற எண்ணம்தான் எனக்கும் இருந்தது. இதுதான் எதார்த்தம் , இதை எல்லாம் கடந்தால்தான் வாழ்க்கை. எல்லா பெண்களும் இந்த நிலையை கடந்துதான் வருகின்றார்கள். இதில் பிடிக்காத சில செயல்களை தூக்கி எரிந்தால்தான் வாழ்க்கை அனுபவிக்க முடிமே தவிற. முறையற்ற பேச்சுகளால் ஒன்றும் புண்ணியமில்லை. என்று கூறியதும் வீட்டில் சில வினாடிகள் அமைதியாக இருந்தது.
மீண்டும் தொடரலாம் என்ற எண்ணம்
அன்புடன் ஆ.ஞானசேகரன்.














