_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, September 25, 2008

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலி

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலி

சுட்டது தினமலர்.






திருக்கழுக்குன்றம் விபத்தில் இறந்த டாக்டர் மகன் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய டாக்டர் தம்பதியை அனைவரும் பாராட்டினர்.

திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் அசோகன்; இவரது மனைவி புஷ்பாஞ்சலி; இருவரும் டாக்டர்கள். திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் கிளினிக் வைத்துள்ளனர். இவர்களின் மூத்த மகன் இதயேந்திரன்(15); செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தான். இளைய மகன் லஷ்மண்(11) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 20ம் தேதி மாலை, பெற்றோர் கிளினிக்கில் இருந்தனர். சகோதரர்கள் வீட்டில் இருந்தனர். இதயேந்திரன் குளிர்பானம் வாங்க வெளியில் செல்ல முடிவு செய்தான். மோட்டார் சைக்கிளில் செல்ல, கிளினிக்கிலிருந்த அம்மாவிடம் அனுமதி கேட்டான். அவர், அப்பாவிடம் கேட்டுவிட்டு, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும்படி கூறினார். இதயேந்திரன், தந்தையிடம் கேட்காமல் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றான்.

வீடு திரும்பும் வழியில், சாலையோரம் நின்றிருந்த மீன்பாடி வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயமடைந்த இதயேந்திரன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தான். அவனது பெற்றோர், இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். இதயேந்திரனின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. பரிசோதனை முடிந்து, இரவு 8 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று டாக்டர் வீட்டில், அவரது மகன் உடலுக்கு அஞ்சலி செலுத்த, நகரின் முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரண்டனர். இதயேந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டாக்டர் வீட்டின் அருகில் வசிக்கும் சிறுவன் அசோகன் வந்ததும், டாக்டர் மனமுடைந்து அழுதார். "உன்னுடைய நண்பன் எல்லாரையும் விட்டுவிட்டு போய்விட்டான். நீங்கள் பெற்றவர்களை தெய்வமாக மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள்' என்றார்.

பின் அவர், நமது நிருபரிடம் கூறியதாவது: இதயேந்திரன் டாக்டருக்கு படிக்க மறுத்துவிட்டான். எனவே, கம்ப்யூட்டர் இன்ஜினியராக்க முடிவு செய்தோம். அவன் இப்போது இல்லை. மனிதனுக்கு மூளை இறந்துவிட்டால் 10 நாட்களில் உயிரிழப்பது நிச்சயம். இடைப்பட்ட நாட்களில், மற்ற உறுப்புகள் உயிரோடு தான் இருக்கும். எங்கள் மகன் இறந்துவிட்டாலும் அவனது உறுப்புகளால் மற்றவர்கள் பிழைக்கட்டும்; அவர்கள் மூலம் எங்கள் பையனும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பான். அவன் இறந்துவிட்டான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொழிலில் பிசியாக இருந்ததால் அவனை கவனிக்க முடியாமல் இழந்துவிட்டேன். விபத்தில் காயமடைந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஓடோடி வந்த திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை டிரைவருக்கு நன்றி. அவர் வந்திருக்காவிட்டால் அங்கேயே இறந்து, மற்றவர்கள் பிழைக்க வாய்ப்பு இருந்திருக்காது. குழந்தைகள், வாகனத்தை திருட்டுத்தனமாக ஓட்டிச் செல்லக்கூடாது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். இவ்வாறு டாக்டர் அசோகன் கூறினார்.

இதயேந்திரனின் பள்ளி தோழர்கள் அருண், பிரவீன் ஆகியோர் கூறும்போது, ""நல்ல பழக்கவழக்கங்களுக்கு இதயேந்திரனை உதாரணமாகச் சொல்லலாம். யாரிடமும் வம்பு செய்ய மாட்டான். இரக்க குணம் உண்டு. ஏதேனும் தேவை என்று சொன்னால் தனது பணத்தில் வாங்கி கொடுப்பான். படிப்பிலும் திறமையானவன். என்.சி.சி., ஸ்கவுட் செயல்பாடுகளில் விருது வாங்கியுள்ளான்,'' என்றனர். டாக்டர் அசோகன், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த எழில் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி; பெங்களூரில் இன்ஜினியராகப் பணிபுரிந்தவர். அசோகன் இரண்டாவது மகன். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் படித்தார்.
இலவச மருத்துவ முகாம்களுக்கு அதிகம் செல்வார். திருக்கழுக்குன்றத்தில் கிளினிக் நடத்திய டாக்டர்கள், கிளினிக்கிற்கு வரமுடியாத நிலையில், மாணவராக இருந்த அசோகனை தங்கள் மருத்துவமனைக்கு வரவழைத்தனர். திருக்கழுக்குன்றத்திற்கு அடிக்கடி சென்ற அசோகன், அங்கு ஏழைகள் அதிகளவில் இருப்பதைக் கண்டார். எனவே, படிப்பு முடித்ததும் அங்கேயே கிளினிக் துவக்கினார்.

அப்பல்லோவில் உறங்கும் உறுப்புகள்: மூளைச் சாவு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட இதயேந்திரனின் உடல் உறுப்புகள், அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் வேண்டுகோளின்படி, அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி அபிராமிக்கு, இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. இறந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளையும் அவனது பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். கிட்னி, கல்லீரல், எலும்பு மஜ்ஜை ஆகியவை அகற்றப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கண்கள் இரண்டும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டு, சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

கிட்னி, கல்லீரல் உறுப்புகள், தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட உள்ளன. புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எலும்பு மஜ்ஜை பயன்படுத்தப்பட உள்ளது. உறுப்பு தானம் குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ""இதயேந்திரனின் உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்படுகின்றன என தெரிந்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் பிழைத்தது என் மகனால் தான் என்பதை அறிந்து, அவனை புகழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,'' என கண்ணீர் மல்கக் கூறினர்.

20 கி.மீ., தூரம்; 120 கி.மீ., வேகம்; 12 நிமிடம்: கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திராபுரத்தில் வசிக்கும் தமிழ் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). பிறந்தது முதல் சுட்டியாக, மற்ற குழந்தைகள் போல் இருந்த அபிராமிக்கு, திடீரென மூச்சடைப்பு, கால்வீக்கம், உணவு சாப்பிடுவதில் சிரமம், மயக்கம், மார்புவலி என தொடர் பாதிப்புகள் ஏற்பட்டன. பெற்றோர், அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். நாள்கணக்கில் அலைந்தும் மகளின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன், சென்னை முகப்பேரில் உள்ள பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்தனர்.

அங்குள்ள டாக்டர்கள், சிறுமிக்கு பல்வேறு உடல் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது சிறுமி அபிராமி, "டைலேட்டர் கார்டியோ மையோபதி' என்ற இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து, மாத்திரை உட்கொண்டாலும் பலன் இருக்காது என்பதை சிறுமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் எடுத்துக் கூறினர். இருப்பினும் ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை (எலும்பில் உள்ள செல்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை), சிறுமிக்கு பலனளிக்குமா என்பது குறித்து டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போதைய நிலையில், அதுவும் சிறுமியின் உயிர் காக்க உதவாது என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்தனர். கடைசியாக இதய மாற்று சிகிச்சை மட்டுமே இப்பிரச்னையை தீர்க்கும் என்ற தகவலை அபிராமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாத உறுப்பை டாக்டர்கள் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், செய்வதறியாது திகைத்தனர். பத்து மாதம் சுமந்து பெற்று ஒன்பது ஆண்டுகள் பாசத்தைக் கொட்டி வளர்த்த தங்கள் மகள் உயிர் பிழைக்க, இறைவனிடம் சிறுமியின் பெற்றோர் வேண்டினர்.

அந்த நேரத்தில் தான், விபத்தில் மூளை செயல்பாடு இழந்த டாக்டர் தம்பதியர் மகன் இதயேந்திரனின் இதயம், சிறுமி அபிராமிக்கு உயிர் கொடுக்க துடித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. 20 நிமிடங்களுக்குள் இதயம் தனது கைக்கு கிடைத்தால், சிறுமியை மீண்டும் சுட்டிக்குழந்தை ஆக்க முடியும் என்று பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையின் இயக்குனர் செரியன் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து தான் அந்த இதயம், அப்பல்லோ மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து 20 கி.மீ., தூரத்தை 12 நிமிடத்தில் 120 கி.மீ., வேகத்தில் கடந்து முகப்பேரில் உள்ள பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையை வந்தடைந்தது.

டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள் 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணிநேரம் சிறுமிக்கு இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போதில் இருந்தே, இதயம் கொடுத்த சிறுவன் இதயேந்திரனையும் அதற்கு பெரிய மனதுடன் சம்மதித்த அவனது பெற்றோர்களான டாக்டர் தம்பதியையும், சிறுமி அபிராமியின் உறவினர்கள், கடவுளாக நினைத்து வணங்கினர்.
இதயம் இடம் மாறியது எப்படி?: இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது தான். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா போன்ற வெளிநாடுகளில் இந்த சிகிச்சை சர்வசாதாரணம் ஆகிவிட்டது. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகச்சிரமம். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், தொடர்ந்து 10 நாட்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

அந்த நாட்களில், சிகிச்சை பெற்றுக்கொண்டவருக்கு எலும்பு சோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈ.சி.ஜி., சோதனைகள், நடப்பதற்கான சோதனை, ரத்த அழுத்த சோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் எனப்படும் இதயத் துடிப்பு சோதனைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதன்பிறகே சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகள், வீட்டிற்கு அனுப்பப்படுவர். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒரு முறையாவது அவர்கள் இந்தச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி, நாள்தோறும் இரண்டு வேளை என, வாழ்நாள் முழுவதும் சைக்ளோஸ் போரிக், இமுரான், பிரட்னி சொலோன் ஆகிய மருந்துகளையும் அவர்கள் உட்கொள்ள வேண்டும்.

மாற்று உடலில் இருந்து பெற்ற இதயம் சீராக செயல்படுவதற்கு இந்த மருந்துகள் உதவுகின்றன. ஒருவரது உடலில் இருந்து எடுக்கப்படும் இதயம், நான்கு மணி நேரம் வரை செயல்படும். இந்த நான்கு மணி நேரத்திற்குள்ளேயே இதயத்தின் செயல்பாட்டில் மாற்றம் தெரியும். அதனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்று உடலில் இதயத்தை பொருத்திவிட வேண்டும். ஒரு முறை ஒருவரது உடலில் இருந்து எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்த இதயத்தை, மீண்டும் மற்றவர் உடலில் பொருத்த முடியாது. மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர் உடலில் இதயத்திற்கும், சதைகளுக்கும் இடைவெளி குறைந்துவிடுவது தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் இதய சிகிச்சை நிபுணர்கள்.

சாதனை: கடந்த 1995ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த 24 வயது வாலிபருக்கு டாக்டர் செரியன் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார். அவரிடம் சிகிச்சை செய்துகொண்ட அந்த நபர், இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் தற்போது உள்ளார். இதேபோல 2000ம் ஆண்டில், இந்தியாவிலேயே முதல் முறையாக 11வயது சிறுவனுக்கு, இதயமாற்று சிகிச்சையை செரியன் செய்து, சாதனைப் படைத்தார். தொடர்ந்து இந்தியாவில் இரண்டாவது முறையாக 9 வயது சிறுமிக்கு அவர் மீண்டும் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளார்.

நன்றி தினமலர்:

சாதி ,மதம், இனத்திற்கு அப்பால் இன்னுமும் மனிதம் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது. மாணவன் இதயேந்திரனை இழந்த பெற்றோருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரியபடுத்துவோம்.... இறந்தும் இறவா மாணவன் இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!........

3 comments:

யூர்கன் க்ருகியர் said...

இதயேந்திரன் பெற்றோர்கள் வாழும் தெய்வங்கள்!
நேயம் என்றும் மறைவதில்லை!
என்றும் அதற்கு முடிவுமில்லை!

ஆ.ஞானசேகரன் said...

ஜுர்கேன் க்ருகேர் said...
//இதயேந்திரன் பெற்றோர்கள் வாழும் தெய்வங்கள்!
நேயம் என்றும் மறைவதில்லை!
என்றும் அதற்கு முடிவுமில்லை!//

நன்றி! ஜுர்கேன் க்ருகேர் இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மனிதநேயங்களும் இருக்கின்றது,..

vinthaimanithan said...

hello gnanasekaran.i'm rajaraman from chennai.this comment is not related to your posts. because for the last two days only i've been started to search for tamil blogs.by the by, i'm a manpower recruiting agent from chennai.our company is authorised by ministry of manpower, govt of india.i'm searching for good contacts to do this business in singapore. i'm searching this contacts for a long period. i would like to contact you. if you can arrange jobs, visas for indian workers, we can do this business well. my mail id is spsrajaraman@gmail.com. waitng for positive reply.