_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, April 29, 2009

அன்புடன் விடுமுறை விண்ணப்பம்

Photobucket



நண்பர்களே!

கோடைக்கால விடுமுறையின் காரணமாகவும், தேர்தல் பார்வையாளனாகவும் இந்தியா (அண்ணாநகர் திருச்சி-620026) செல்ல இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு பதிவின் பக்கம் என்னால் வர இயலாது. எனவே நண்பர்கள் அன்புடன் எனக்கு விடுமுறைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதுவரை புதிய இடுக்கைகள் வராது என்பதையும் தெரியப்படுத்துகின்றேன். ஹிஹிஹிஹி........

அன்புடன்.
ஆ.ஞானசேகரன்

Saturday, April 25, 2009

பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 2

பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 2

மனித சமுகத்தில் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வாழ்கைத் துணையை தேர்ந்தெடுக்கப்படுவது வெவ்வேறு முறையாக இருந்தாலும், எல்லோருடைய நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இந்திய சமுகத்தில் பொதுவாக பெற்றோர்கள் தேடி வரண் அமைப்பதுதான் இன்றுவரை முறையாக உள்ளது. மேல்நாட்டினர் அவர்களாகவே தன் துணையை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் சில நேரங்களில் பெற்றோர்களிடம் ஆலோசித்தலும் இருக்கும்.

இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும் பெண்ணொன்று கண்டேன்...

ஆண்பாவம் திரைப்படத்தில் பாண்டியராஜன் சீதாவை பெண்பார்க்க செல்வார். அங்கே சில பெருசுகள் பெண் மாப்பிள்ளையைவிட உயரம் குறைவாக இருக்குமோ? என்று சொல்லி உயரத்தை சரிபார்க்க முதலில் பாண்டியராஜனை சுவரின் பக்கமாக நின்று அவரின் உயரத்தை ஒரு கோடு போடுவார்கள். பின்னர் சீத்தாவை அழைத்து அந்த கோடு இருக்கும் இடத்தில் நிற்க சொல்லுவார்கள், சீத்தாவோ தன்னுடைய உயரம் குறைவாக இருக்குமோ என்று எண்ணி காலை சற்று உந்தி நிற்பார். இதை கவனித்த பாண்டியராஜன் சீத்தாவையே திருமணம் முடிப்பார்... ( மணமகளின் மன ஒப்புதலுடன் மணமுடிந்தால் வாழ்கை சுகமாகத்தான் இருக்கும் என்பதும் உண்மைதானே).

பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்ற போக்கு ஆண்களுக்குத்தான் இருக்கும் என்று எண்ணம் வேண்டாம். பல நேரங்களில் பெண்களும் ஆண்களை பிடிக்க வில்லை என்று சொல்வதும் உண்டு. ஆனால் இதை பொதுவாக பெரிதுப் படுத்துவதில்லை. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் உயரம் சற்றே குறைவாக இருப்பார். எனவே அவர் தன்னைவிட உயரமான பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசை. உயரமான பெண்ணை திருமணம் செய்தால் தனக்கு பிறக்கும் குழந்தை தன்னை விட உயரமாக இருக்கும் என்பதுதான் இவர் கணக்கு. பல பெண்கள் இவருக்கு பிடித்திருந்தும், இவர் அவர்களால் நிராகரிக்கப்பட்டார். கடைசியில் இவரை விரும்பிய பெண்ணை மணந்தார். அவர் மனைவி இவரைவிட உயரம் குறைவுதான், இருப்பினும் இவர்களின் பிள்ளைகள் நல்ல உயரமாக இருந்தனர்.

மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன் இவள் என் தோழி என்றும், இவன் என் தோழன் என்றும் பழகிக்கொள்கின்றார்கள். இப்படி இவர்கள் பழகியபின் பிடிந்திருந்தால் திருமணம் செய்துக்கொள்கின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி இவர்கள் பழகி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக்கொண்டு திருமணதிற்கு பின் விலகுவது ஏன் என்று புரியவில்லை. என்னுடன் வேலைச் செய்யும் சீனர் ஒருவன் அன்று ஏதோ இழந்துவிட்டதுபோல இருந்தான். அவனிடன் நான் ஏன் இன்று சோகமான முகத்தில் இருக்கின்றாய்? என்றதும், அவன் அழத்தொடங்கிவிட்டான். நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். அவனின் பெண்த் தோழி மேல் படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கின்றாள், அவள் செல்வதற்கு முன் இவனிடம் "நீ என்னை மறந்துவிடு நான் மேல்ப் படிப்புக்கு செல்கின்றேன் அதனால் நமக்கு பொருத்தம் வராது என்று சொல்லி நீ வேறு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொள்" என்றாளாம். அதை அவனால் தாங்க முடியாமல்தான் அழுதேவிட்டான். நான் அவனிடம் உனக்கு சிறுவயதுதான் எனவே நீயும் வேலைசெய்துகொண்டே படி உனக்கு இவளைவிட நல்ல பெண் கிடைப்பாள் என்றேன். அவனும் படித்தான் தற்பொழுது நல்ல வேலையில் இருக்கின்றான்.

எதோ ஒன்றை எதிர்பார்த்து துணை தேடுவதில் பல விடயங்கள் பார்த்தோம். (என்னைப் பற்றி இங்கு சொல்லவில்லை பின் ஒருநாளில் சொல்கின்றேன். )எப்படி இருந்தாலும் பெண்பார்த்தல் என்பது சமுதாயத்தில் எதார்தமானதா? தேவையான ஒன்றா? இவற்றை சரியாக புரிந்துக் கொள்கின்றோமா? என சிந்திக்க ஒரு சில துளி நேரங்கள் அவ்வளவுதான். இதில் யார் மனதையும் புண்படுத்த சொல்லப்படவில்லை. ஒரு ஆண் பெண்ணை பிடிக்கவில்லை என்றாலும், ஒரு பெண் ஆணை பிடிக்கவில்லை என்றாலும் மனதில் ஒருவித நெருடல் இருக்கதான் செய்யும். இதில் எந்த அளவிற்கு எதார்த்தமாக நம்மால் பார்க்கமுடிகின்றது. ஒரு பிடிக்காத மாப்பிள்ளையானாலும் அவன் அவளை பிடிக்கவில்லை என்று சொன்னால் அவளுக்கு ஒரு நெருடல் வருவதும் உண்மைதான். அது ஆணுக்கும் பொருந்தும். இதில் உள்ள ஞாயமான உணர்வை புரிந்துகொண்டால் போதும்......

எங்கிருந்தோ வானொலியில் பாடல் ஒலிக்கின்றது
"நீங்கள் கேட்க இருப்பது இனிய தென்றலின் திரைப்பட பாடல்கள்..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்........"
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, April 24, 2009

பட்டாம்பூச்சி பறபற...

பட்டாம்பூச்சி பறபற...

பட்டாம்பூச்சி என்றாலே எனது சிறுவயது ஞாபகம் வரும், எனக்கு மட்டும் என்று சொல்வதைவிட எல்லோருக்கும் என்பதுதான் சரி. மழைக்காலம் வந்தாலே எங்கள் வீட்டு தோட்டத்தில் தும்பைச்செடி வெள்ளை நிற பூக்களுடன் அழகூட்டும். எங்கிருந்து வருகின்றனவோ தெரியாது இந்த பட்டாம்பூச்சி, தும்பைபூவில் இருக்கும் தேனை அருந்தும். பட்டாம்பூச்சிகளில் கருப்பு சிகப்பு புள்ளிகள் உள்ள பட்டம்பூச்சி பார்க்க அழகாக இருக்கும். எனக்கு ரொம்ப காலம் தெரியாது "இந்த இரட்டை பட்டாம்பூச்சி ஏன் இரட்டையாய் பறக்கின்றன?". அதில் ஒன்று மட்டும் பறக்கும் மற்றொன்று சும்மேனு இருக்கும்.

அது இருக்கட்டும் நம்ம பாசமிகு சொல்லரசன் இந்த சாமானியனுக்கு பட்டாம்பூச்சி விருதை கொடுத்து விட்டார். அந்த பாசமிகு நண்பருக்கு நன்றியை இந்த வலையில் சொல்லிக்கொள்கின்றேன். அந்த விருதிற்கு நான் தகுதியோ இல்லையோ, என்னை தேடி வந்த பட்டாம்பூச்சிக்கு நல்ல தேனை உடனே கொடுக்க வேண்டும் என்பது என் கடமையாக ஆக்கப்பட்டுவிட்டது (இதன் மரபுப்படி நான் மூன்று பேருக்கு கொடுக்க வேண்டுமாம்) . என்னிடம் தேனை தேடி வந்த பட்டாம்பூச்சிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கலாம். எனவே ஒரு நல்ல தோட்டத்தில் விட்டுவிட தயாராகிவிட்டேன். அதை சிறையில் அடைக்க எனக்கு விருப்பமும் இல்லை. என்னுடன் இந்த விருதை பெற்ற சகோதரி உமாவிற்கும் (சில கவிதைகள்) மற்றும் உழவன் அவர்களுக்கும் (உழவனின் உளறல்கள்) மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ் வீதி சா.தமிழ்ச்செல்வன் ஐயா அவர்கள் 30 வருடகாலமாக சிறுகதைகள் எழுதிக்கொண்டுள்ளார். மேலும் சமிபத்தில் வெளிவந்த வெற்றித் திரைப்படம் " பூ" திரைப்படக் கதைக்கு சொந்தக்காரர் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இவரின் வலையில் பல எதார்த்தங்களை பார்க்கலாம்.

ஷண்முகப்ரியனின் 'படித்துறை' ஷண்முகப்ரியன் ஐயா அவர்கள் ஒரு திரைப்பட எழுத்தாளர் மற்றும் இயக்குனர். வெற்றி விழா, சின்னத்தம்பி பெரியத்தம்பி போன்ற படங்களுக்கு எழுத்தை வழங்கியவர். ஒருவர் வாழும் ஆலயம் போன்ற நான்கு படங்களை எழுதி இயக்கியவர். தனது 57 வது வயதிலும் இளமை மாறாமல் தனது வலைத்தளத்தில் எழுதி வருகின்றார்.

முனியப்பன் பக்கங்கள் கு.வேலுசாமி B.A.,B.L நேர்மை மாறா நீதிபதியின் மகனாக பிறந்த நல்ல மனிதர். இவர் ஒரு மருத்துவர், தமிழ் மேல் காதல் கொண்டு பதிவிடுகின்றார். அவரின் சுவராசியமான அனுபவங்களை பகிர்துள்ளார்.

மேற்கண்ட மூவருக்கும் இந்த பட்டம்பூச்சி விருதை வழங்க எனக்கு துளியும் தகுதியில்லை என்பது எனக்கு தெரியும். என்னை போன்றவர்களிடம் வந்து ஏமாந்த இந்த பட்டாம்பூச்சிக்கு நல்ல தேனை கொடுக்க ஆசைப்படும் ஒரு சாமானியன். இவர்கள் தோட்டத்தில் நற்தேனை அருந்தி அங்கேயே மயங்கிவிடுமோ இல்லை மகிழ்ச்சியில் பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று ஆர்பரிக்குமோ!..... எப்படியும் இந்த பட்டாம்பூச்சிக்கு பெருமையே!
**********************************************************************************************
இந்த பட்டாம்பூச்சியை எப்படிதான் விடுதலை செய்வது
1.இந்த பட்டாம்பூச்சியின் நிரலியை உங்கள் பக்கத்தில் ஒட்டி விடவும்.
2.உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்.
3.மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களுக்கு இந்த பட்டாம்பூச்சியை கொடுத்து அவர்களின் இணைப்பையும் உங்கள் தளத்தில் கொடுக்க வேண்டும்.
4.நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்.

"அப்பாடி" எப்படியோ என்னிடம் வந்த பட்டாம்பூச்சியை நல்ல தோட்டத்தில் விட்டுவிட்ட மகிழ்ச்சியில் நான் நன்றாக தூங்குகின்றேன்........

உங்களுள்
ஆ.ஞானசேகரன்


Wednesday, April 22, 2009

பெண்ணொன்று கண்டேன்...

பெண்ணொன்று கண்டேன்...


எனக்கு எங்கள் வீட்டின் அருகில் உள்ள தாத்தாக்களிடம் கதை கேட்பது ரொம்ப பிடித்தமான விடயம். சில சமயங்களில் தாத்தாக்கள் இரண்டு நான்கு பேர்கள் சேர்ந்து கதையடித்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் விடுகதை, துணுக்கு என்று அசத்தலாக பேசுவார். நான் அப்பொழுதெல்லாம் சிறுவனாய் இருபேன், என் வயதிற்கு மீறிய கதைகளையும் காதுகொடுத்து கேட்பதும் உண்டு.

அதேபோல் அன்று ஒரு தாத்தா சொன்ன கதை " தன் நண்பனுக்காக பெண்பார்க்க செல்கின்றான் ஒருவன், பெண்ணோ ரொம்ப அழகாக இருந்தாள், அந்த பெண் தன் நண்பனுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பாள் ஆனால் அந்த பெண்ணின் மீது இவனுக்கு ஆசை வந்துவிடுகின்றது. எனவே இவன் ஒரு சூழ்ச்சி செய்கின்றான். பெண்வீட்டில் கொடுத்த புகைப்படத்தை நண்பனிடம் காட்டுகின்றான், நண்பனும் தனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகின்றான் எப்படி? " என்று கேட்டார்... மற்ற தாத்தாக்களும் தெரியவில்லை என்றனர். "ஏய் பேராண்டி நீ சொல்லு பார்க்கலாம்?" என்றார்.. தாத்தா எனக்கும் தெரியவில்லையே, நீங்களே சொல்லிவிடுங்கள் என்றேன். பின் தாத்தா சொன்ன விடை பெண்ணின் புகைப்படத்தில் ஒரு சிறிய குச்சியால் சுண்ணாம்பை எடுத்து ஒரு கண்ணில் பொட்டு போல வைத்து நண்பனிடம் காட்டினான், நண்பனோ அவளுக்கு ஒரு கண் சரியாக தெரியாது என்று நினைத்து இந்த பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டான் என்றார்.

என் மனதிற்குள் அய்யே எச்சில் வைத்து துடைத்தால் போயிரும் இத தாத்தா பெருசா சொல்லுகின்றாரே என்று நினைத்துக்கொண்டேன். ( இந்த காலத்தில் photo shop கொண்டு பல சித்தவேலைகள் செய்யலாம் அது வேறு விடயம்)

நடிகர் திலகம் சிவாஜி சார் நடித்தபடம் "படித்தால் மட்டும் போதுமா" இவருடன் பாலாஜி சாரும் பட்டம் பெற்ற தம்பியாக நடித்துள்ளார். சிவாஜியோ படிக்காதவர் இருவருக்கும் வீட்டில் பெண் பார்க்கின்றனர், இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்யலாம் என்பதுதான் வீட்டாரின் எண்ணம். சிவாஜிக்காக படிக்காத நல்ல பெண் வரனும், பாலாஜிகாக படித்த நல்ல பெண் வரனும் வருகின்றது. பெண்ணை பார்க்க இருவரும் ஒரு திட்டம் போடுகின்றார்கள் சிவாஜிக்காக உள்ள பெண்ணை பாலாஜியும், பாலாஜிகாக உள்ள பெண்ணை சிவாஜியும் பார்த்துவிட்டு பின் சம்மதம் சொல்லலாம் என்றனர். பெண்ணை பார்த்த பிறகு " நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை நான் பார்த்தப் பெண்ணை நீ பார்க்கவில்லை " என்று இருவரும் பாட்டு பாடி சொல்லிக் கொள்கின்றனர். இதில் பாலாஜி பார்த்த பெண் சிவாஜிகாக, ஆனால் அந்த பெண் இவருக்கு பிடித்துவிட சுழ்ச்சியில் அந்த பெண்ணையே திருமணம் செய்கின்றார். (மீதி படத்தில்)

"நீ வருவாய் என" என்ற படத்தில் அஜித் ராணுவ வீரணாக இருப்பார், இவருக்காக வீட்டில் பெண்பார்த்து வைத்திருப்பார்கள். அஜித் விடுமுறையில் வந்த பிறகு பெண்ணை மாப்பிள்ளையும், மாப்பிள்ளையை பெண்ணும் பார்த்த பின் சம்மதம் செய்யலாம் என்பதுதான் வீட்டார்களின் எண்ணம். அந்த படத்தில் அஜித் விடுமுறையில் வந்ததும், முன்அறிவுப்பு இல்லாமால் பெண்ணை(தேவயானி) பார்த்து விட்டு அவளுடன் கலகல என பேசிவிட்டு பிறகு பெண்ணின் வீட்டிற்கே சென்று பெண்ணின் அப்பா அம்மாவிடமும் நன்றாக பேசி கலகலப்பாக இருப்பார். பின்னர் அஜித் அவர்களிடம் "நான் மாப்பிள்ளை என்னை பிடிச்சி இருக்கா? பிடிச்சிருந்தா சொல்லி அனுப்புங்கள் அம்மா அப்பா வந்து நிச்சயம் செய்வார்கள் என்று சொல்லிவிட்டு விடைபெறுவார்". ( இதுவும் மீதி படத்தில்)

இப்படி பெண்பார்ப்பது என்பது நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. மேலை நாடுகளில் நம்மை போல் பெண்பார்ப்பது இல்லை என்றாலும் பெண்ணிடம் சம்மதம் பெறுவது என்ற நோக்கம் ஒன்றாகதான் இருக்கும். முறைகள்தான் வேறாக தெரிந்தாலும் எண்ணங்களும் செயலும் ஒன்றுதான்.

ஒரு முறை நண்பன் ஒருவனுக்காக பெண்பார்க்க குடும்பத்துடன் சென்றோம். பிடித்திருந்தால் உடன் சம்மதமும் சொல்லிவிடலாம் என்பதுதான் திட்டம். மாப்பிள்ளையும் எங்களுடன் வந்திருந்தார், பெண்ணை பார்த்தாகிவிட்டது. பெண்ணை மாப்பிள்ளைக்கு அவ்வளவாக பிடித்தமில்லை மேலும் சிலருக்கும் அப்படியே. எனவே பெண்வீட்டாரிடம் நாங்கள் வீட்டில் சிலருடன் கலந்துகொண்டு பதில் அனுப்புகின்றோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம். வீட்டிற்கு வந்ததும் எல்லோருடைய பேச்சுகள், பேச்சின் முடிவு வேண்டாம் என்றெ சொல்லிவிடலாம் என்பதுதான். அதில் ஒருவரின் வாதம் "அது எப்படி ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்வது? நமக்கும் பெண் இருக்கு" என்றார்.. இவர் சொல்லின் ஞாயத்தை பார்த்தாலும் பிடிக்காமல் எப்படி மணம் முடிப்பது? என்ற குழப்பமும்.

இதன் இடையில் என் தங்கையின் பதிலாய் பெண் என்றால் நாலுபேர் பார்க்கதான் வருவார்கள். வருபவர்கள் எல்லாருமே நமக்கு பிடித்தவர்களாக இருக்கவும் மாட்டார்கள். என்னையும் நான்கு பேர் பெண்பார்க்கதான் வந்தார்கள், அதில் எல்லொருக்குமா என்னை பிடித்தது? என்னை பிடித்திருக்கு என்று சொன்னவரை எனக்கும் பிடிச்சிருக்கும் என்று எப்படி சொல்ல முடியுமா? ஏதோ ஒன்றை பெற்று ஒன்றை இழந்துதான் வாழ்ந்து வருகின்றோம். இதில் எல்லாமே சரியாகத்தான் இருக்கவேண்டும் என்றால் வாழ்க்கையே இருக்காது. எனக்கு பிடிக்காதவர்களும் என்னை பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது என்ற எண்ணம்தான் எனக்கும் இருந்தது. இதுதான் எதார்த்தம் , இதை எல்லாம் கடந்தால்தான் வாழ்க்கை. எல்லா பெண்களும் இந்த நிலையை கடந்துதான் வருகின்றார்கள். இதில் பிடிக்காத சில செயல்களை தூக்கி எரிந்தால்தான் வாழ்க்கை அனுபவிக்க முடிமே தவிற. முறையற்ற பேச்சுகளால் ஒன்றும் புண்ணியமில்லை. என்று கூறியதும் வீட்டில் சில வினாடிகள் அமைதியாக இருந்தது.

மீண்டும் தொடரலாம் என்ற எண்ணம்
அன்புடன் ஆ.ஞானசேகரன்.

Sunday, April 19, 2009

மாபெரும் சிங்கபூர் பதிவர் மாநாடு 2009 - ஏப்ரல்18 (காணொளி)

மாபெரும் சிங்கபூர் பதிவர் மாநாடு 2009 - ஏப்ரல்18 (காணொளி)

"அப்பாடி" 'டோன்' லீ ன் சிங்கபூர் பதிவர் மாநாடு அறிவுப்பு தெரிந்தும், இரவுப் பணியின் காரணமாக (18-04-2009) நல்ல உறக்க நிலையில் இருந்தேன். 'டிரிங் டிரிங்...' ஒன்னும் இல்லைங்க ஜோதிபாரதியின் அலைபேசி அழைப்புதான் "ஞானசேகரன் எப்படி இருக்கீங்க பதிவர் மாநாட்டுக்கு வருகின்றீர்களா?? ஓ ஆம்மாங்க இதோ புறப்பட்டு விட்டேன்.... " அப்பறம் என்னங்க அடிச்சி புடிச்சி கிளம்பி பெடோக் தொடரூந்து மாற்று நிலையத்திற்கு நான்கு மணிக்கு வந்துவிட்டேன்... சில்லுன்னு உக்கர காத்து அப்பப்பா நான்கரை மணிக்குதான் 401 பேருந்து வந்தது. அதன் பிறகு கிழக்கு கடற்கரை அடைய ஐந்து மணியாகிவிட்டது. பின்னர் கோவி.கண்ணனின் வழி அறிவிப்புடன் ஆக கடைசியாக நான் மாநாட்டில் ஐக்கியமானேன்..

கடைசியாக வந்ததால் சுண்டல், கேசரி அதிகமாகவே கிடைத்தது. ஜோதிபாரதியின் பார்வை அடுத்தமுறை காலதாமதமாக வந்தால்; வெளியில் முட்டிப்போட வைப்பேன் என்று சொல்வதுபோல் இருந்தது. முதல் முறையாக கிழக்கு கடற்கரை பார்த்ததில் மகிழ்ச்சிதான், மணல் வெளி இல்லாத நல்ல மக்கள் கூட்டம். ( மணல் இல்லாமல் என்ன கடற்கரைனு கேட்கபுடாது) அதன் பின் இனிதான பல விவாதங்கள்...... இவற்றை எல்லாம் நண்பர்கள் பதிவில் பார்க்கலாம் 'டோன்' லீ ன் சிங்கை பதிவர் மாநாடு 18.04.2009 அறிக்கை மற்றும் அறிவிலியின் சிங்கை பதிவர் மாநாடு 18-04-2009 . கடைசியாக மாநாட்டுக்கு வந்ததால் கடைசியாக பதிந்த என்னுடைய அறிக்கையை நண்பர்களும் பெரிதுப்படுத்த மாட்டார்கள்...

மாநாட்டின் அறிக்கை காணொளியில்.......


இனிதே முடிந்த மாநாட்டுக்கு பின் என்னுடன் டோன் லீ , ஜோதிபாரதி, இளங்குமரன், மீனாட்சி, அறிவிலி ஆகியோர் பேரூந்தில் ஏறி ஒரு சிற்றுலா சென்று விட்டு பெடொக் வந்தடைந்தோம். பின் அவரவர் வழியனுப்பியதற்கு பின் கடைசியாக என்னை "டோன் லீ" புக்கித் பாதோக் வரை விட்டு சென்றார். டோன் லீ க்கு நன்றி சொல்ல வேண்டும், வரும் வழிகளில் பல விடயங்கள் கதைத்ததில் பெரும் மகிழ்வு.... (முக்கிய குறிப்பு சில புகைப்படம் காணொளிக்காக அனுமதியின்றி டோன் லீ, அறிவிலி பதிவுகளில் சுட்டது)

நண்பர்களே காணொளியை You Tube ல் பார்க்க இயலாதவர்கள் கீழ்கண்ட சுட்டியில் இறக்கி பார்த்துக்கொள்ளலாம் நன்றி..... >>>> இறக்கவும்

அன்புடன்

ஆ.ஞானசேகரன்..

Saturday, April 18, 2009

கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம்...

கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம்...

என் கைக்குள் வைரக்கள் இருக்கின்றது என்பதாக வைத்துக் கொள்வோம் என் கைக்குள் இருப்பதை நான் தான் நிருபணம் செய்ய வேண்டும். என் அருகில் இருப்பவன் என் தகுதியின் பொருட்டு இருக்கு அல்லது இல்லை என்று சொல்லதான் முடியுமே தவிற அவனால் நிருபணம் செய்வது முடியாது. அப்படியே என்கை திறக்க முயற்சிப்பது வன்முறைபோல ஆகிவிடும். இப்படிதாங்க கடவுள் இருக்கின்றார் ஒருசாரார், இல்லை என்று சொல்லும் ஒருசாரார்.. இரு பிரிவுகளும் அவரவர்கள் வாதங்களை வைத்து விவாதிப்பதும், பின் நான் சொல்வதில்தான் உண்மை இருப்பதாக சொல்லிக்கொள்வதும் வாடிக்கையாக இன்றும் இருக்கின்றது. வலைதளங்களில் இந்த வாதங்கள் அடிக்கடி வந்துக்கொண்டே இருக்கின்றது. சில நேரங்களில் ஆரோக்கிமற்ற வாதங்களாகவே வந்துவிடுகின்றது.

கடவுள் இருக்கின்றானோ? அல்லது இல்லையோ... ஆனால் மனிதன் இருக்கின்றான் அவனிடத்தில் மனமும் அறிவும் இருக்கின்றது. அந்த மனிதனின் அறிவின் தேடல்தான் அறிவியல், அந்த அறிவியலின் விளைவுதான் மனிதனின் கண்டுபிடிப்புகள். ஒரு வகையில் கடவுளையும் கண்டுபிடித்தவனும் மனிதன்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்த அறிவின் தேடல் மற்றும் அதன் கண்டுப்பிடிப்புக்கு அப்பால் என்ன? இந்த கேள்வியைதான் கடவுளின் நிருபணம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்....

ஆதிமனிதனின் அறிவுக்கு எட்டியவரை இந்த அண்டத்தில் என்ன நடக்கின்றது என்பதில் ஒரு குழப்பமான நிலையில் இருந்தான். பசிப்பதும் புசிப்பதும்தான் இவனின் வேலை. தன் அறிவில் சொல்லாத அல்லது பார்க்காத பொருளை மற்றும் செயலை கண்டு வியந்தும் பயந்தும்தான் வாழ்ந்து வந்தான். இதைதான் பின்னர் கடவுள் என்ற பொருள் கொடுத்தான். இப்படிதான் ஆதிமனிதன் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என இவைகளை கடவுளாக்கி பார்த்தான். இதில் யாருக்கும் எந்த குழப்பங்களும் இல்லை. பின்னர் இவன் அறிவால் இவற்றை அடக்கியாளவும் மேலும் இவனின் தேடல்களினாலும் தேவைகளினாலும் புதிய பரிணாமங்கள் உருவாக்கப்பட்டது. இங்கேதான் கடவுளின் எல்லைக் கோடு மெதுவாக நகர்த்தப் பட்டுவிட்டது. ஆதிமனிதன் அறிவுக்கு அப்பால் உள்ளதாக இருந்த கடவுள் மெதுவாக எல்லை மாற்றப்பட்டது. இப்படிதாங்க ஒவ்வொரு முறையும் மனிதனின் அறிவு வளர்ச்சியின் காரணமாக இந்த உலகை வியக்கவைக்கும் முன் கடவுளின் எல்லை கோடும் நகர்த்தப்பட்டே வருகின்றது. இப்படி ஒரு அழுவுனி ஆட்டம் தான் நடந்துக்கொண்டு வருகின்றது.

முன்பு சொல்லியது போல் கடவுளை நிர்பணம் செய்ய வேண்டியவர்கள் நிர்பணம் செய்யாமல் மாறாக இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும். மனிதனால் ஆண்யின்றி பிள்ளை பெறமுடியுமா? அப்படியும் செய்துவிட்டால் ஆண் பெண்ணின்றி உயிர் படைக்க முடியுமா? ஒரு திசுவை வைத்து உயிர் படைத்ததும் பின்னர் இவர்கள் கேட்பது திசுவே இல்லாமல் உயிர் படைக்க முடியுமா?... என்னயா இந்த அழுவுனியாட்டம்...

மனிதனின் அறிவும் தேடல்களும் நின்றுவிடவில்லை இன்னும் மேலே இன்னும் மேலே...... சென்றுகொண்டே இருக்கின்றது. ஆனால் இந்த கடவுளின் எல்லை கோடு நகர்த்தப் படுவதுதான் புரியாத அழுவுனியாட்டமாக இருக்கின்றது.

மனிதன் ஒரு இயந்திரம் அல்ல அவனிடம் இரத்தம், சதை எல்லாம் இருக்கின்றது. இவனிடத்தில் மனம் இருக்கின்றது...... இந்த மனதிற்கு ஆறுதல், நிம்மதி, ஓய்வு எல்லாம் தேவைப்படுகின்றது. இவற்றால் இல்லாத கடவுளையும் நினைத்துப் பார்க்கின்றான். எப்படியானாலும் மானுடம் காக்கப்பட வேண்டுமே தவிற அழிக்கப்படவோ நசுக்கப்படவோ கூடாது என்பதில்தான் கவனம் தேவை.....

மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிபாடும்..
கன இரும்பும் நடனமாடும்- பொன்மொழி

என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்..

Thursday, April 16, 2009

Support

Support



தென்சென்னை: இ. சரத்பாபு என்ற 27 வயது இளைஞர் தென் சென்னையில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
மேலும் செய்தி இட்லி வடையில்

Tuesday, April 14, 2009

சந்தோச(மகிழ்ச்சி) நரம்புகள் புடைக்கட்டும்

சந்தோச(மகிழ்ச்சி) நரம்புகள் புடைக்கட்டும்

மனம் ஒரு குரங்குனு சொல்லுவாங்க சோகத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக பார்க்கின்ற பக்குவம் அதற்கு கிடையாது. ஒரு சிலர் சோகம் என்றால் அப்படியே ஒரு மூலையில் ஒதுங்கிவிடுவார்கள். அட சந்தோசம் என்றால் ஒரே ரகளைதான் போங்க.

எல்லா மனிதனுக்கும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் நினைக்கும் எண்ணங்கள். அப்படி எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா என்றால் எதோ ஒரு காரணதிற்காக மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றோம். பணம் செல்வங்கள் இல்லை என்று ஒருவன், பணம் செல்வங்கள் இருந்தும் மகிழ்ச்சியில்லையே என்று ஒருவன். ...

இப்ப எல்லோருக்கும் தெரிந்த நான் படித்த கதை ஒன்று, ... ஒரு பெரிய செல்வந்தர் எல்லா செல்வங்களும் இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக மகிழ்ச்சியின்றி வாழ்வையே வெறுக்கின்றான். ஒன்றுமே இல்லாத சாமியார்கள் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் நான் ஏன் எப்போழுதும் சோகமாக இருக்கின்றேன். ஒரு நாள் தன்னுடைய எல்லா செல்வங்களையும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு ஒரு சாமியாரிடம் செல்கின்றார். அவரிடம் சென்று என்னிடம் எல்லா செல்வங்கள் இருந்தும் என்னிடம் சந்தோசம் இல்லை. இந்த செல்வங்களை எடுத்துக்கொண்டு எனக்கு சந்தோசமான வாழ்க்கையை கொடுங்கள் என்றார். அந்த சாமியார் அவரை ஒருவாறு பார்த்துவிட்டு அவர் எடுத்து வந்த செல்வங்கள் மூட்டையை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்.. அந்த செல்வந்தர் ஆகா நாம் ஒரு போலி சாமியாரிடம் நம் செல்வங்களை கொடுத்துவிட்டோம் என்று அந்த சாமியாரை துரத்த ஆரம்பித்தார்..... அந்த சாமியார் சந்து பொந்துகள் எல்லாம் ஓடி கடைசியில் அதே இடத்திற்கு வந்து அந்த செல்வங்களை வைத்துவிட்டார். சாமியாரை விரட்டி வந்த செல்வந்தர் தன்னுடைய செல்வங்கள் மீண்டும் கிடைத்ததில் மிகவும் சந்தோசமானான்.. அந்த சாமியார் அவனிடம் இதே செல்வங்கள்தான் வரும்போது வைத்திருந்தும் சந்தோசம் இல்லை என்று என்னிடம் வந்தாய்.. இப்போழுதும் இதே செல்வங்கள் கிடைத்தது சந்தோசமாக இருக்கின்றாய்..

ஆமங்க சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்கள்!.. வாழ்வை வளமாக்குவோம்!...

பின்குறிப்பு; உயிர்க்கும் உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் வன்னிகாடுகளில் இன்னல்படும் உறவுகளுக்கு சந்தோசத்தை எப்படி கொடுப்போம்.... சித்திரை ஒன்று தமிழர் புத்தாண்டா? அல்லது சித்திரைத் திருநாளா?? என்று பட்டிமன்றம் செய்து முடிவில் சந்தோசத்தை வன்னிகாடுகளுக்கு அனுப்பிவைப்போம்.....

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

என்றும்
ஆ.ஞானசேகரன்

Saturday, April 11, 2009

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம்.....

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம்.....

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். "- திருக்குறள்

நான் படித்த பள்ளியில் வாரம் ஒரு முறை ஒரு வகுப்பு தோட்டக்கலை பாடம் இருக்கும். எனது ஆசிரியர் திரு ராமச்சந்திரன் வேளாண்மையில் பட்டம் பெற்றவர். தோட்டத்தில் எது செய்தாலும் அறிவியலும் சேர்ந்தே சொல்லுவார். மேலும் அதை செயல் விளக்கமாக சொல்லுவார். அன்று அவர் சொல்லி தந்தது தாவரங்களில் இனப் பெருக்கம் மற்றும் இனப் பெருக்கத்தின் நுண்ணியல் பற்றியும் விளக்கினார். இனப் பெருக்கத்தில் விதைத்தல், போத்து நடுதல், பதியம் இடுதல், ஒட்டுதல் பற்றி தெளிவாக கூறி சில செயல்முறைகளையும் காட்டினார். இன்னும் எனக்கு நினைவில் உள்ளது........

அன்று ஒட்டுதல் பற்றி விளக்கமும் செயல்வடிவமும் நடந்தது. உயர் ஜாதி வகை மாமரத்தையும் கொட்டை மா கன்றையும் வைத்து ஒட்டுதல். இதனால் கொட்டை மா நல்ல மா வகையாக மாற்றம் வரும் என்று கூறினார்.. நான் வீட்டுக்கு சென்றதும் இதே ஞாபகம் மற்றும் குழப்பம்.....

இப்படி ஒட்டி சேர்க்கை செய்து புதிய வகை மா உருவாக்கப் படுகின்றதே, அதே போல் ஒரே மரத்தில் மா, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு பொன்ற மரகன்றுகளை ஒட்டுதல் செய்தால் ஒரே மரத்தில் எல்லா வகையான பழங்கள் கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் காலை பள்ளிக்கு சென்றதும் முதலில் என் ஆசிரியரிடம் இதைப்பற்றி சொன்னேன். அவர் சிரித்தார் மேலும் ஒரே வாகை பயிர்களைதான் ஒட்ட முடியும் ஏனனில் அதன் செல்கள்தான் ஒட்டிக்கொள்ளும் மாற்று கன்றுகள் ஒட்டாமல் காய்ந்துவிடும் என்றார். இது எனக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. மாறாக மேலும் நல்ல விவரங்கள் தெரிந்தது.

கீழெ உள்ள படங்களில் உள்ள செடிகளை பார்த்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. அதை உங்களிடம் பகிர்வதில் ஒரு ஆணந்தம்........



மேலெயுள்ள இரண்டு படங்களை பார்க்கும்பொழுது இதன் தண்டு ஒரு தூண் போல தெரியும். ஆம் இதில் எட்டு ஒரேவகையான செடியைக் கொண்டு ஒட்டுதல் மூலம் ஒவ்வொரு செடியுடன் ஒட்டி ஒரு தூண்போன்று அழகாக வடிவம் கொடுத்துள்ளார்கள். இதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியையும் வியப்பையும் கொடுத்தது.........

மற்றொன்று கீழ் உள்ள படம் செடியின் தண்டு பாகம் பின்னல் வடிவில் இருக்கும். இதில் மூன்று ஒரே வகை செடியை சடை பின்னுவதுபோல பின்னி அழகாக வைத்துள்ளார்கள். இவற்றை பார்க்கும் பொழுது நம் இந்திய நாட்டின் விவசாயத்தை நினைக்க வைக்கின்றது......



நம் நாடு இந்தியா ஒரு விவசாய நாடு. கிராமங்கள் அதிகம் கொண்டுள்ள மாபெரும் நாடு. கிராமங்களில் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் அதன் சார்புள்ள தொழில்கள்..

நான் சிறுவானாய் இருக்கும் பொழுது வயல்வெளிக்கு சென்று வருவேன். அதிலும் நெற்பயிர் வந்த பிறகு வயல் வெளியில் நடந்து சென்றால் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த சத்தம் முதிர்ந்த நெல் மணிகள் காற்றில் உரசி கொள்வதால் வரும் சத்தம்.. கேட்க நன்றாக இருக்கும். அனுபவித்தவர்களுக்கு புரியும் என்றே நினைக்கின்றேன்.. எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் எங்கள் ஊரில் மூன்று வைகை நெற்கள்தான் பயிரிட்டனர். வெள்ளைக்கொடி, சம்பா, சிகப்பு பொன்னி போன்றவை.. பின்னர் வேளாண்மை ஆராய்ச்சிக்கு பின் நுண்ணியல் மகரந்த சேர்க்கையால் பல ரக நெல் மணிகள் வர ஆரம்பித்தது. இதனால் குறைந்த காலாத்தில் நிறைந்த மகசூல் என்ற நிலை உருவானது... இதன் பின் ஐ ஆர்-8, கோ-1, கோ-2 என பல புதினம் காணமுடிந்தது.

இன்றய காலத்தில் கிராமங்களிருந்து மக்கள் நகரங்களுக்கு வேலைத்தேடி சென்று விட்டனர்( என்னையும் சேர்த்தே). தற்போது கிராமங்களில் விவசயத்திற்கு போதிய வேலை ஆள் இல்லாமல் நலிந்துள்ளது. இது இப்படியே போனால், நாம் அண்டை நாடுகளில் கையேந்தும் நிலையும் வரலாம். அதற்குள் நம் அரசாங்கம் முன் ஏற்பாடு செய்யவேண்டியது கடமை. மேலைநாடுகளை போல விதை தெளிக்க, நாற்று நட, கதிர் அறுக்க போன்ற வேலைக்கு நம் நாட்டிற்கு ஏற்றப்படி புதிய கருவிகள் உருவாக்கவும், அதன் தொழிநுட்பம் இஸ்ரேல் போன்ற நாடுகளிருந்து பெறுவதற்கும் இந்த அரசுதான் செய்யவேண்டும். அப்படி ஒரு பசுமைப்புரட்சி வராவிட்டால் நாளைய உலகம் அழியும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.....

நான் சென்றமுறை இந்தியா வந்திருந்த பொழுது கதிரடிக்க எந்திரம் சில பார்த்தேன். மிக பெரிய வகையாக இருந்தது. நம் கிராமங்களில் வயல் வெளிகள் சிறிது சிறிதாகத்தான் இருக்கும் இதனால் இதை வைத்து சரியாக கதிர் அடிக்க முடியவில்லை. நம் நாட்டு சூழல்களுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க. நம் அரசாங்கம் ஊக்கம் கொடுக்க வேண்டும் எனபதும் எல்லொருடைய ஆசைகள்..

அன்புடன்,

ஆ.ஞானசேகரன்


மேலும் முக்கிய செய்தி இன்று தினமலரில் உங்களுடன் ஒரு பகிர்வு....

கரும்பு சாகுபடிக்கு அதிநவீன இயந்திரம்.....


Friday, April 10, 2009

டிசிட்டல் போட்டோவை அலுப்பு இல்லாமல் பார்க்கலாமே!...

டிசிட்டல் போட்டோவை அலுப்பு இல்லாமல் பார்க்கலாமே!..
வணக்கம்,
இந்த நவீன உலகத்தில் புகைப்படம் எடுப்பது சாதரணமாகிவிட்டது. ஒரு சிறிய டிசிட்டல் கேமரா இருந்தாலே போதும், எல்ல புகைப்படங்களையும் நன்றாகவே எடுக்கலாம். இப்படி எடுக்கப்படும் புகைப்படம் நூற்றுக் கணக்காக நமது கணனியில் அடைப்பட்டு கிடக்கின்றது.. அத்தகைய புகைப்படம் நண்பர்களிடம் மற்றும் உறவினரிடம் காட்டுவதற்க்கு இசையுடன் கூடிய வீடியோ கோப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்தானே.. அதை எப்படி பெருவது என்பது பலருக்கு தெரிந்த விடயம்தான். இருப்பினும் நான் கண்ட எழிய முறையை தெரியப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இங்கு கொடுத்துள்ளேன்..

இதற்கு உங்கள் கணனியில் (Microsoft Photo Story 3 for Windows XP ) என்ற நுண்பொருளை நிறுவினாலே போதும். நல்ல தரத்துடன் பார்க்க முடியும். இப்படிப்பட்ட நுண்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. மின் பொருளை இறக்கம் கொடுக்க இங்கே சொடுக்கவும் Microsoft Photo Story 3 for Windows XP
இப்பொழுது இந்த நுண்பொருளை உங்கள் கணனியில் பதிந்து விட்டீர்கள். பின்னர். மிண்பொருளை start manu விலிருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் கீழ்கண்டபடி தெரியும் begin start story யை மார்க் செய்து விட்டு next ஐ start பன்னவும்...
2வது தேவையான போட்டோவை இறக்கம் செய்ய்வும்
3வது தேவையான திருத்தம் செய்து next அழுத்தவும்
4 வது தேவையாயினும் பெயர் எழுதவும்.

5வது உங்களுக்கு பிடித்த இசையை சேர்க்கவும்..

6வது உங்கள் story யை சேமிக்கவும்.

இப்பொழுது நீங்கள் செய்த போட்டோ கதை தயாராகிவிட்டது. இதற்கு பின் Nero வில் வீடியோ தட்டுகளாக மாற்றி கோப்புகளை இயங்கும் படம்மாக பின்னனி இசையுடன் பார்க்கலாம். ஒரு முறை முயற்சிசெய்து பார்க்கவும்.. மேலும் விவரம் கேட்கலாம்..

நான் இதன் மூலம் செய்த காணோளி சுட்டிப் பாருங்கள்..

Tuesday, April 7, 2009

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு...(சிரிக்கும் ஸ்டவ்கள்)

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு...(சிரிக்கும் ஸ்டவ்கள்)

1986-ல் அப்பொழுது நான் தொழிற்கல்விக்காண பயிற்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பயின்றுகொண்டிருந்தேன். ரொம்ப சுறுசுறுப்பு என்று சொல்ல முடியாது, எதாயிருந்தாலும் நாமும் செய்துதான் பார்க்கலாமே என்ற ஆர்வம் அதிகம் இருக்கும். துப்பாக்கித் தொழிற்சாலையில் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். அவ்விழா கலை இலக்கிய விழாவாக இருக்கும்( இன்றும் அப்படியே கொண்டாடுகின்றார்கள் என்பது தனிப்பட்ட மகிழ்ச்சி).

அந்த பொங்கல் விழாவில் நாடகம், கவிதை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடனம் என்ற பல அம்சங்கள் மிக நேர்த்தியாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் ஒரு பிரிவுக்கு சிறப்பு கொடுப்பார்கள். அதே போல் அந்த வருடம் வழக்காடு மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக பேராசிரியர் சாலாமன் பாப்பையா, பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியை காந்திமதி அம்மா.. வருகை புரிந்தார்கள். அதற்கு முன் சில பகிர்வுகள்;- என்பதுக்கு முன் பட்டிமன்றம் மற்றும் வழக்காடு மன்றம் என்பது ஒரு இலக்கிய சொற்பொழிவாக "ராமன் வீரனா? ராவணன் வீரனா?" " கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?" இப்படி இதிகாச சம்மந்தபட்ட தலைபில் எடுத்து வழக்காடவொ, பட்டி மன்றமோ இருக்கும் அதுவும் சில கோவில் திருவிழாக்களில் மற்றும் இலக்கிய மன்றங்களில்... பேராசிரியர் சத்தியசீலன் தலைமையில் முதல் முதலாக சமுக நோக்கதில் சமுதாய சீர்திருத்த கருத்துகளை... சமுகத்தில் புழங்கும் சம்பவங்களை வாதிட வந்தார்கள்.. கொடைக்காணல் தொலைகாட்சி அலை வரிசைக்கு பின்தான் மக்கள் மத்தியில் வழக்காடு மன்றம் மற்றும் பட்டி மன்றம் பார்வைக்கு வந்தது.

இப்ப நம்ம மேடருக்கு வருவோம் அன்று நடக்க இருக்கும் வழக்காடு மன்றம் முன் கவிதை போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது. நம்ம ஆர்வ கோளாரு என் பேரை முதலில் கொடுத்தேன். போட்டியின் விதி கவிஅரங்கம் ஆரம்பிக்கும் அரை மணிக்கு முன்தான் போட்டியாளர்கள் தலைப்பை கொடுப்பார்காள்... போச்சுடா நான் பரிச்சைக்கு படிப்பது போல நூலகம் சென்று படிக்க ஆரம்பித்தேன். போட்டிக்கு நீதிபதிகள் வழக்காடு மன்றத்திற்கு வந்த பேராசிரியர்கள், பயம் உதரல் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு வகையாக போட்டிக்கு தயாரானேன். போட்டியாளர்கள் வந்ததும் பரிச்சைக்கு கேள்வித்தாளை எதிர்நோக்கும் மனநிலை... ம்ம்ம்ம் தலைப்பை சொன்னார்கள் "சிரிக்கும் ஸ்டவ்கள்" . எனக்கு உண்மையில் பொருளே புரியவில்லை கொடுத்த தாளில் தாலம் போட ஆரம்பித்தேன்... 15 நிமிடங்கள்தான் உள்ளது ஒரு வழியாக இது ஒரு வரதச்சனை பற்றிய பொருள் என்று புரிந்தது. பொருள் புரிந்தது ஆனால் வரதச்சனைப் பற்றி அந்த வயதில் ஒரு அழுத்தமான உணர்வு எனக்கு இல்லை இதில் கவிதை எப்படி? ம்ம்ம்ம்ம்ம் . அப்படி இப்படி ஒரு 20 வரிகள் கிருக்கிவிட்டேன்..

அதில் சிலதான் ஞாபகம் இருக்கு பரணியில் இருக்கும் காகிதம் கிடைத்தால் பின் ஒரு நாளில் பதிவிடுகின்றேன் (தப்பித்துவிட்டீர்கள்).
அந்த சில வரிகளில்..

வெடிக்கும் ஸ்டவ்கள் மாமுனார் வீட்டில் இல்லை இல்லை..
பெண்ணே! நீ பெண்ணுக்கு எதிரியானாய்..
பெண்ணடிமை பற்றி பேசும் பெண்ணே! ..
உன் அடிமையிலிருந்து என்று நீ வெளியே வருவாய்..
சட்டங்கள் ஆழ்வது இருக்கட்டும்-இந்த வெடிக்கும் ஸ்டவ்கள்,
சிரிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்!..

என்று கைகளை நீட்டி இரண்டுமுறை வாசித்ததும் பேராசிரியை காந்திமதி அம்மா எழுந்து நின்று கைதட்டினார்கள்... இன்றும் என் நினைவுகளில் . அவர் கைதட்டியது என் வரிகளுக்கு இல்லை இந்த சமுகதில் உள்ள நியாங்களை வெளிகாடியதற்கு. ஒரு பெண்ணாக அனுபவ வார்த்தகளாக புரிந்ததால் அவர் அப்படி கைதட்டி வரவேற்றார்கள்.... என்னை பொருத்தவரை பெண்ணுரிமை என்பது.......

உரிமை என்பது-கேட்டு
பறிப்பதும் எடுப்பதுமில்லை;-மாறாக
பகிர்வதும் உணர்வதுமே!.....


அந்த கவியரங்கம் இனிதே முடிந்து வழக்காடு மன்றம் தொடர்ந்தது. பேராசிரியை கைதட்டல் மட்டுமெ கிடைத்த எனக்கு பரிசு கிடைக்காதது வருத்தம் இல்லை. எனது நண்பரும் நல்ல காவிஞருமான தோழர் கலியமூர்த்தி நல்ல சமுக பார்வையுடன் கவிபாடி பரிசையும் பெற்றார்.....

சின்ன காணோளி பகிர்வு

Monday, April 6, 2009

அன்பு அண்ணனின் அரிய புகைப்படம்..

அன்பு அண்ணனின் அரிய புகைப்படம்...

ரொம்ப கஷ்டப்பட்டு புதுவகை கேமராவில் எடுத்த புகைப்படம்... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......... (எனக்கு அரசியல் அந்த அளவிற்கு தெரியவில்லை)

Saturday, April 4, 2009

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்...

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்...
செய்த பொம்மைகள் இரண்டு, பொம்மைகள் சேர்ந்து செய்த பொம்மைகளோ கோடான கோடி. இந்த பொம்மைகளுக்கு உணர்வுகளும் உறவுகளும் எக்கச்சக்கம். உறவுகளில் முதன்மை அம்மா அப்பா, அதற்கு பின்தான் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மாமி,தாத்தா, பாட்டி, மனைவி கணவன் இப்படியெல்லாம்.

இன்றய அம்மா, அப்பா நேற்றய பிள்ளைகள்; இன்றய பிள்ளைகள் நாளைய அம்மா,அப்பா. உலகமும் உறவுகளும் சுற்றி வருவது இதேபோலதான். இதில் ஏன் என்ற கேள்விகள் அர்த்தம் கொடுக்க முடியாது. அப்பன் துப்பிய எச்சிலில் பிறந்தோம் என்றால் அதில் உணர்வுகளை மறுக்க வேண்டி வரும். யார் என்னை பெற்றெடுக்க சொன்னது? என்ற கேள்வியை யாரிடம் கேட்பது; நாளைய பெற்றொராய் நீ இருந்தால்..... இலங்கை போரில் குண்டு மழைக்குள் தன் பிஞ்சு பிள்ளைகளை தோலில் தூக்கிக்கொண்டு உயிருக்கு போராடி ஓடி வரும் காட்சியை பார்த்தபிறகு, யார் என்னை பெற்றெடுக்க சொன்னது என்ற கேள்வியை கேட்க யாருக்கு துணிவுள்ளது? இந்த உறவுகளில் உணர்வுகளைதான் பார்க்கமுடிகின்றது.

இங்கே யாரும் யாருக்காவோ பிறந்தவர்கள் இல்லை. எல்லோரும் ஒருவர் வழி வந்தவர்கள் என்பதும் சந்தேகம் இல்லை. நமக்குள் இருக்கும் உணர்வுகள் உறவுகளால் பின்னபட்டுள்ளது என்பதும் உண்மை. இந்த உறவுகளை உருவாக்குவதுதான் கணவன் மனைவி என்ற ஒரு முக்கிய நிகழ்வு. இந்த கணவன் மனைவி உறவுக்கு நம்மை நாம் தயார்படுத்த வேண்டும். இந்த உறவுகளில் காமதிற்கு அப்பால் உணர்வும் சார்ந்துள்ளது என்பதை புரியப் படுத்துவது யார்? இதற்கு ஒரு ஆலோசனை(கவுன்சிலிங்) தேவைப்படுகின்றது. கிருஸ்துவ மதத்தில் திருமணத்திற்கு ஆலோசனை நடத்தப்படுகின்றது பாராட்டப் படவேண்டிய விடயம்.

பரிணாம வளர்ச்சியில் நாம் பல மாற்றங்களை கண்டுள்ளோம். முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே உள்ள சண்டைகள் தெருமுனைக்கே வரும், நான் என் சிறுவயதில் பல பார்த்துள்ளேன். இன்று அப்படியில்லை என்றாலும் பல உறவுகள் கோர்ட்களில் முறிக்கப்படுகின்றது. இதற்கும் கவுன்சிலிங் தேவைப்படுகின்றதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இதற்கு தன்னைப் பற்றியும் தன் உறவுகளைப் பற்றியும் சரியாக புரிதல் இல்லாததுதான் என்பதும் என் எண்ணங்கள். ஒரு பெண் திருமணதிற்கு பின் கணவனை சார்ந்து வாழத் தொடங்குகின்றாள், என்பதுதான் இன்றைய வழக்கம். இதில் பெற்றோரின் சுயநல தலையிடால்தான் இந்த பிரச்சனைக்கு வேராகின்றது. என்னை பொருத்தவரை தன் மகன் அல்லது தன் மகள் திருமணத்திற்கு முன் இவர்களுக்கும் கவுன்சிலிங் (ஆலோசணை) வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியம். திருமணதிற்கு பின் தன் மகனிடம் அல்லது தன் மகளிடம் எப்படி புரிதல் வேண்டும் என்பதை ஆலோசனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இவர்களாகவே ஆலோசனை பெறுவதும் நல்லதே......

பெற்றொர்களிடம் முக்கிய குறைகளாக தன் மகளுக்கும், தன் மருமகளுக்கும் உள்ள புரிதலின் குறைகள்தான் ஒட்டுமொத்த குடும்ப பிரச்சனைக்கு காரணங்களாக இருக்கும். இதற்கு பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது. காலத்தின் மாறங்களாலும் நாகரிக வளர்ச்சிகாளாலும் உடைகள் பழக்கவழக்கங்கள் இளையத் தலைமுறையினரிடம் மாற்றத்தை காணமுடியும். இதை மகள்களிடமும் மருமகளிடமும் காணமுடியும். ஒரு பொற்றோர் தன் மகளின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏன் மருமகளின் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை? இந்த மனோபோக்குதான் இவர்களின் குறைபாடுகளின் அடிநாதம். இதை ஒட்டு மொத்தமாக பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது. மகன் மீது உள்ள அலாதியான பாசம் நமக்கு கிடைக்காமல் போகுமோ என்ற பயம் இப்படியாக நடக்க வாய்ப்பழிக்கின்றது. இதை மகனாலோ மருமகளாலோ புரிய வைப்பது இன்று வாழும் வாழ்க்கை முறையில் கடினமான காரியம். எனவேதான் தன் மகன் மகள் திருமணத்திற்கு முன் தானாகவே சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன்....

நான் மருத்துவமனையில் என் நண்பருக்காக காத்திருந்தேன், அங்கு இருக்கும் செவிலியர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது எல்லாம் வயதான முதியோர்களை மருமகன்கள்தான் அழைத்து வருகின்றனர். ஏன் மகன்கள் அழைத்து வருவதில்லை என்று கேலியுடன் பேசிக்கொண்டார்கள். இவர்களின் கனிப்பும் ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்று. நான் இதை ஒரு பரினாம மாற்றங்களாக பார்க்கிறேன். இந்த மகன் வேறு ஒருவருக்கு மருமகனாக இருக்கின்றான் என்பதையும் மறந்துவிட கூடாது. என் தந்தைய காலகட்டத்தில் மனைவியானவள் குடும்ப அமைதிக்காக என்ன நேர்ந்தாலும் அமைதி காப்பவளாகவும், கணவன் எப்படி அடித்தாலும் ஏற்றுக்கொண்டு தன் பிள்ளைகளுக்காக சகிக்கும் குணத்துடன் வாழ்ந்ததை என்னால் பார்க்க முடிந்தது. இன்றைய கல்வியறிவு அப்படி ஒரு நிலையைக் ஆண்களுக்கு கொடுக்கவில்லை என்பது பாராட்டக்கூடிய விடயம். இதை பெண்கள் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வார்கலோ என்ற எண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றது. அப்படி பெண்கள் தனக்கு சாதகமாக எடுத்து கொள்வார்களேயாயின் நாளைய தினங்களில் ஆண் அடிமைப்பற்றி பேச வேண்டி வரலாம் என்பதும் உண்மை.

சிறுவனாக இருக்கும் பொழுது பல வீடுகளில் பார்த்துள்ளேன். அப்பாக்கள் வேலைக்கு சென்று வருவார்கள். சமைக்கும் பலார்த்தங்களை அப்பாவிற்காக தனியாக எடுத்து வைப்பார்கள். இது அரசாங்க வேலையில் இருக்கும் அப்பாக்கள் வீட்டில் அதிகம் பார்த்துள்ளேன். இன்னும் தனி சிறப்பாக முட்டை, பால் என்று தனிக் கவனிப்பு அப்பாக்களுக்கு இருக்கும். இதை பிள்ளைகளும் பெரிப்படுத்திக் கொள்வதில்லை. நாம் அப்பா ஆனால் நமக்கும் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்திருக்குமோ என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்றய பாரம்பரிய மாற்றங்களில் பிள்ளைக்கு பின் தான் மீதம் உள்ளதை பெற்றோர்கள் எடுத்துக்கொள்கின்றனர். (அப்படியெல்லாம் இல்லை என்ற வாதம் வரலாம் நான் எதையும் குறையாக சொல்லவில்லை மாற்றங்களை சொல்கின்றேன்) பிள்ளையின் பெயர் என்ன? பிள்ளை என்ன படிக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கும் பெற்றோர்கள் கூட இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைய காலம் அப்படியில்லை கல்வியால் பரினாம வளர்ச்சியால் மாற்றங்கள் இருக்கின்றது. இதை நேற்றய அம்மா அப்பாக்கள புரிந்துக்கொள்ளதான் வேண்டும். எனவேதான் கவுன்சிலிங் வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.

ஒவ்வொரு உறவுகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு வாழ்ந்தால் நாம் மகிழ்வதுடன் நம்மை சாந்தவர்களும், நம் உறவுகளும் மகிழ்வுடன் இருப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட புரிதல் வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு... நேரமும் எழுதுவதற்கு ஏற்ற உந்துதலும் வந்தால் மேலும் உணர்வுகளின் பகிர்வுகளைப்பற்றி எழுதுகின்றேன்...

அன்புடன்..
ஆ.ஞானசேகரன்.