_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, June 13, 2009

என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்

என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்
என் ஊர், ஊரின் குளத்துமேட்டில் ஒரு பள்ளிக்கூடம், போகும் வழியில் நான்கு புளியமரம் என்று சொன்னதும் எல்லொருடைய மனதிலும் "ஆமாம் எங்கள் ஊர் புளியமரமும் " என்று கதை சொல்ல தொடங்கிவிடும். அந்த அளவிற்கு பால்ய வயதில் புளியமரத்தோட உறவு ஒரு நெருக்கம் உறுவாகி இருக்கும்.

"காய்த்த மரம் கல்லடிப்ப
டும்" என்று சொல்வதுண்டு இந்த புளியமரம் எங்களின் கல்லடி படாத நாட்களே இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமா எல்லா விதமான பால்ய விளையாட்டின் ஆடுகலமே இந்த புளியமரத்தடிதான். சில சமய கட்டப்பஞ்சாயத்துகளும் இந்த புளியமரத்தடியில்தான் நடக்கும். புளியமரத்தில் பேய்கள் இருக்கும் என்றும் சொல்வதுண்டு, எங்களை பார்த்துதான் அப்படி சொல்வார்களோ என்னவோ.... சுற்றி சுற்றி அந்த புளியமரத்தடியில்தான் நாங்கள் இருப்போம். எங்களை போன்றே அந்த புளியமரம் அடுப்பெரிக்கதான் பயனாகும், வேறு எந்த மரவேலைகளுக்கும் ஆகாது.

ஒவ்வொரு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு அந்த புளியமரம் எங்களோடு உறவாடுவதை நினைத்தால், இன்றும் பசுமரத்து ஆணிபோல நினைவில் உள்ளது. ஆணி என்றவுடன் ஒரு நினைவுகள் புளியமரத்தில் ஆணிகள் அடித்து வைக்கப்பட்டு இருக்கும். பேய் பிடிதவர்களை பேயை இறக்கி இந்த ஆணியில்தான் அடித்து வைப்பதாக கூறுவார்கள். எது எப்படியோ இந்த ஆணிகள்தான் புளிமரத்தில் ஏறுவதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த புளியமரம்தான் குண்டு,பம்பரம்,சில்லு, பேபந்து போன்ற விளையாட்டுக்கு ஆடுகலம். ( இதனோடு விளையாடிய காலம் மீண்டும் எப்போ வரும்????????)

பூக்காலம்; ஆடி காற்றில் அம்மியும் நகருமாம், இந்த காற்றில் புளியமரத்தின் இலை மட்டும்தான் நகரும். இந்த காத்தடிகாலம் முடிந்ததும் புளியமரம் பூ பூக்க ஆரம்பிக்கும். காத்தடிக்காலம் முடிந்ததும் கண்ணுவலியும் (கண்நோய்) வர ஆரம்பிக்கும். புளியம்பூவிற்கும் கண்ணுவலிக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்றாலும் புளியம்பூ
வை பார்த்தால் கண்ணுவலி வரும் என்று சொல்வதுண்டு. புளியம்பூ மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும். வாயில் போட்டு சுவைத்தால் துவர்ப்பு கலந்த புளிப்பு சுவையாக இருக்கும். தீப்பெட்டியில் இரண்டு மூன்று பூக்களை போட்டு ஒருப்பக்கம் அட்டையை எடுத்து விட்டு காகிதத்தால் மூடி மறுப்பக்கம் ஒரு ஊசி துவாரத்தில் பார்த்தால் வீரர்கள் சண்டை போடுவது போல காட்சி தெரியும்.

காய்க்காலம்; கிட்டதட்ட அரையாண்டு பரிச்சை முடிந்து பள்ளிக்கு செல்லும் காலமிது, இப்பொழுதுதான் புளியம்பூக்கள் எல்லாம் பிஞ்சாக காட்சியளிக்கும். உஸ்ஸ்... நினைத்தாலே வாயில் எச்சிலல்லவா வரும். பிஞ்சுகள் இதமான புளிப்பு சுவையுடையவை. இங்கு ஆரம்பிக்கும் கல்லெரிகள் பழமாக கீழே விழும் வரை தொடரும். சுத்தம் சோறு போடும் என்பார்கள் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. கல்லடிப்பட்டு கீழே விழும் பிஞ்சுகள் எல்லாம் எங்கள் வாயில்தான். புளியம்பிஞ்சை உப்புடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ..... சொன்னால் புரியாது. இன்னும் சிலர் மா இலை
கொழுந்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள் (மாங்காய் சாப்பிடுவதுபோல இருக்கும்).

கனிக்காலம்
; காய்த்த மரம் கல்லடிப்படும்பொழுது கனிந்த மரம் என்னாவாகும். பக்கத்தில் உள்ள அத்தனை கற்களும் இந்த புளியமரத்தடியில்தான். முழு ஆண்டு பரிச்சையும் முடியும், இந்த புளியம்பழமும் எங்கள் கைகளில் இருக்கும். எங்கள் ஊரின் நான்கு புளியமரம் பரம்பர பரம்பரையாக ஒரு பதினைந்து குடுப்பதிற்கு சொந்தமாக இருக்கும். மரத்தின் மேலே ஏறி உழுக்கியும் தொரட்டியில் உழுக்கியும் பழங்களை எடுத்து எல்லோரும் பங்கிட்டுகொள்வார்கள். இப்படி பார்த்தால் முழுஆண்டு பரிச்சை லீவில் எங்கள் தெருவில் புளியம்பழம் வாசலில் காய வைத்திருப்பார்கள்.

காய்ந்த பழங்களை தோலுரித்து பின் காயவைக்க வேண்டும் . தோல் உரித்த புளியம்பழம் காய்ந்ததும் அதன் பிசுப்பு இல்லாமல் இருக்கும். இவற்றை கோணி ஊ
சிகொண்டு கொட்டை எடுக்க வேண்டும். இப்படி கொட்டை எடுக்கும் பொழுது வாயில் போட்டு சுவைக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். கொட்டை எடுத்த புளியை தனியாக காயவைத்து பானையில் எடுத்து வைத்துக்கொண்டு அந்த வருட சமையலுக்கு பயன்படுத்தப்படும். புளி இல்லாத இந்திய சமையல் இல்லை என்றே சொல்லலாம். மீன் குழம்பிற்கு புளி மிக முக்கியமாக பயன்படுத்துவார்கள்.

ஒத்தையா ரெட்டையா; புளியிலிருந்து வரும் கொட்டை புளியங்கொட்டை, இவற்றை நாங்கள் எடுத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு ஒத்தையா இரட்டையா. அவரவர்கள் வீட்டு புளியங்கொட்டையை எடுத்துக்கொண்டு இந்த ஆட்டம் துவங்கும். ஒருவர் தான் வைத்திருக்கும் கொட்டையின் ஒரு பகுதியை தனியாக காட்டி ஒத்தையா? இரட்டையா? என்று கேட்பார். அதற்கு அடுத்த ஆட்டக்காரர் பதில் சொல்ல தனியாக காட்டிய பகுதியை இரண்டு இரண்டாக பிரிக்கப்படும் கடைசியில் வருவது ஒன்றாகவோ அல்லது இரண்டாகவோ இருக்கும் . அடுத்த ஆட்டகாரர் சொன்ன பதில் சரியாக இருந்தால் அந்த பகுதி புளியங்கொட்டையை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லை எனில் அவர் ஆட்டகாரருக்கு ஒரு சோடிக்கு ஒரு புளியங்கொட்டை என்று கொடுக்க வேண்டும் இதுதான் ஆட்டம்.

இப்படி விளையாடிய புளியங்கொட்டை வீடுவந்து சேரும்.... புளியங்கொட்டையின் தோலை டீ தூளில் கலப்படம் செய்வார்களாம். மேலும் காகித ஆலைக்கு தேவைப்படுமாம் அதனால் வியாபாரிகள் காசுக்கு வாங்கிச்செல்வதும் உண்டு. புளியங்கொட்டையை வறுத்து உப்புபோட்டு தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவதும் உண்டு. எழ்மையின் சாப்பாடு என்றும் சொல்வார்கள். முழு ஆண்டு பரிச்சை முடிந்து படித்து கிழித்த காதிதத்தையும் புளியங்கொட்டையையும் நுணுக்கி தண்ணீரில் கூழாக வேகவைத்து காகித பெட்டிகள் செய்வதும் உண்டு. இந்த காகித பெட்டிக்கு அச்சாக குடம், தவலை, செம்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள். காகிதப் பெட்டிக்கு வர்ணம் செய்து பார்க்க அழகாக இருக்கும்.

சென்றமுறை ஊருக்கு சென்றபொழுது அந்த புளியமரத்திற்கு வயதாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் யாரும் என்மீது கல்லெரிவதே இல்லை என்று என்னிடம் சொன்னது. நாகரிக வளர்ச்சியில் என்னடியில் எந்த கட்டப்பஞ்சாயத்துகளும் நடப்பதில்லை. பிள்ளைகள் ஆட்டோ, வேன்களில் பத்திரமாக பள்ளிக்கூடம் சென்றுவருவதாகவும் கூறி மகிழ்ந்து சிரித்தது அந்த புளியமரம்.....

புளியமரத்து நினைவுகளுடன்..
ஆ.ஞானசேகரன்.

51 comments:

அகநாழிகை said...

ஆ.ஞானசேகரன்,

நல்ல பதிவு. ‘மரம் தன் வரலாறு கூறுதல்‘ என்ற தலைப்பு கொடுத்து பள்ளிகளில் எழுதச் சொல்லுவார்கள்.
சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை நினைவுக்கு வந்தது.
புளியமரத்தை பலர் மறந்திருப்பார்கள்,
நினைவு படுத்தியதற்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

//"அகநாழிகை" said...

ஆ.ஞானசேகரன்,

நல்ல பதிவு. ‘மரம் தன் வரலாறு கூறுதல்‘ என்ற தலைப்பு கொடுத்து பள்ளிகளில் எழுதச் சொல்லுவார்கள்.
சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை நினைவுக்கு வந்தது.
புளியமரத்தை பலர் மறந்திருப்பார்கள்,
நினைவு படுத்தியதற்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

வணக்கம் வாசு,
உங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்

சொல்லரசன் said...

புளிய மரத்து நினைவுகளை படிக்கும் போது எச்சில் ஊறவைத்து விட்டீர்கள்,
மலரும் நினைவோ!

வினோத் கெளதம் said...

நல்ல பதிவு..எனக்கு என் சிறு வயது நினைவுகள் வந்து விட்டது..
தோட்டத்தில் ஒரு புளிய மரம் விடாமல் எல்லவற்றிளையும் ஏறி விளையுடுவோம்..
இன்னும் சொல்ல போனால் அதில் தான் விடுமுறை நாட்களில் குடிகொண்டு இருப்போம்..மற்ற மரங்களை விட புளிய மரத்தில் சுலபமாக ஏறி விடலாம்..அருமையான அனுபவம்..

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

புளிய மரத்து நினைவுகளை படிக்கும் போது எச்சில் ஊறவைத்து விட்டீர்கள்,
மலரும் நினைவோ!//

வாங்க சொல்லரசன் மலரும் ஆசைகளும்

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

நல்ல பதிவு..எனக்கு என் சிறு வயது நினைவுகள் வந்து விட்டது..
தோட்டத்தில் ஒரு புளிய மரம் விடாமல் எல்லவற்றிளையும் ஏறி விளையுடுவோம்..
இன்னும் சொல்ல போனால் அதில் தான் விடுமுறை நாட்களில் குடிகொண்டு இருப்போம்..மற்ற மரங்களை விட புளிய மரத்தில் சுலபமாக ஏறி விடலாம்..அருமையான அனுபவம்..//

வாங்க வினோத்கெளதம்,...

உங்களின் அனுபவமும் நல்ல இனிய சுகம்தான்.... பள்ளிக்கூடம் செல்லும்பொழுது இந்த புளியமர அனுபவம் ரசனைமிக்கது

ஆ.சுதா said...

மிக நல்ல பதிவு ஞானசேகரன்.

எனக்கும் இந்த புளியரத்து நினைவுகள் நிறைய உண்டு உங்கள் எழுத்து அதை மீட்டுவதாக உள்ளது.

சிறப்பான பதிவு நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...

மிக நல்ல பதிவு ஞானசேகரன்.

எனக்கும் இந்த புளியரத்து நினைவுகள் நிறைய உண்டு உங்கள் எழுத்து அதை மீட்டுவதாக உள்ளது.

சிறப்பான பதிவு நண்பரே!//

வாணக்கம் நண்பா நம்மை போன்றவர்களுக்கு புளியமரத்து நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். அதை அசைபோடும் நோக்கமே இந்த பதிவு... நன்றி ஆ.முத்துராமலிங்கம்

அன்புடன் அருணா said...

புளிப்பு இனிப்பான மலரும் நினைவுகள்!!!!

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

புளிப்பு இனிப்பான மலரும் நினைவுகள்!!!!//

நன்றி அருணா

புதியவன் said...

//புளியமரத்தில் பேய்கள் இருக்கும் என்றும் சொல்வதுண்டு, எங்களை பார்த்துதான் அப்படி சொல்வார்களோ என்னவோ....//

ரசித்தேன் ஞானசேகரன்...

ஆ.ஞானசேகரன் said...

// புதியவன் said...

//புளியமரத்தில் பேய்கள் இருக்கும் என்றும் சொல்வதுண்டு, எங்களை பார்த்துதான் அப்படி சொல்வார்களோ என்னவோ....//

ரசித்தேன் ஞானசேகரன்...//

வாங்க புதியவன் மிக்க நன்றிங்க

புதியவன் said...

புளியமரம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்களை அழகான நடையில் சொல்லி அசத்திவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

///புதியவன் said...

புளியமரம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்களை அழகான நடையில் சொல்லி அசத்திவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்...//

நன்றி நன்றி புதியவன்

தேவன் மாயம் said...

புளியமரம் படங்கள் எங்கே பிடித்தீர்கள்!
நல்ல படங்கள்!!

தேவன் மாயம் said...

சிங்கப்பூரில் புளியமரம் இருக்கா?

பழமைபேசி said...

ஞாபம் வருதே ஞாபகம் வருதே....

//மிக நல்ல பதிவு//

மிக நல்ல இடுகை!

தமிழ் said...

நினைக்க இனிக்கும் நினைவுகள்

அருமை

வாழ்த்துகள்

Muniappan Pakkangal said...

Puliamara ninaivuhal super Gnanaseharan.Rottora puliamaram thaan naan paarthathu.

Anonymous said...

உங்கள் வாழ்வோடு ஒன்றி போன புளியமரம்..மரத்தைப் பற்றியும் அதை நாம் பாவிக்கும் முறையையும் அழகா சொல்லியிருக்கீங்க சேகர்...

பழத்தைப் போட்டு நாவூறச் செய்திட்டீங்க.....

ஆ.ஞானசேகரன் said...

// thevanmayam said...

புளியமரம் படங்கள் எங்கே பிடித்தீர்கள்!
நல்ல படங்கள்!!//
//சிங்கப்பூரில் புளியமரம் இருக்கா?//

வணக்கம் தேவன்சார். படங்கள் விக்கி நூல்களில் சுட்டது. சிங்கபூரில் சாதாரண இடங்களில் புளியம் மரம் இல்லை. "புலாஉபீன்" என்ற சிங்கபூருக்கு சொந்தமான தீவில் உள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

ஞாபம் வருதே ஞாபகம் வருதே....

//மிக நல்ல பதிவு//

மிக நல்ல இடுகை!//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//திகழ்மிளிர் said...

நினைக்க இனிக்கும் நினைவுகள்

அருமை

வாழ்த்துகள்//
நன்றிமா

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Puliamara ninaivuhal super Gnanaseharan.Rottora puliamaram thaan naan paarthathu.//
வணக்கம் சார்.
ரோட்டோரம் அரசாங்கத்திற்கு சொந்தமான மரங்கள் இருக்கும்

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...

உங்கள் வாழ்வோடு ஒன்றி போன புளியமரம்..மரத்தைப் பற்றியும் அதை நாம் பாவிக்கும் முறையையும் அழகா சொல்லியிருக்கீங்க சேகர்...

பழத்தைப் போட்டு நாவூறச் செய்திட்டீங்க.....//

மிக்க நன்றி தோழி

ஷண்முகப்ரியன் said...

ஸ்தல விருட்சம் என்பது கோவிலகளில் மட்டும் இல்லை.
எல்லோருடைய சிறிய வயது நினைவுகளிலும் நிச்சயம் ஒரு ஸ்தல விருட்சம் இருக்கும்.

இன்று நகரங்களில் வாழ நேரும் சிறிய வயதுப் பையனகள் இழப்ப்து இயற்கையின் இந்த முதல் கொடையைத்தான்,ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...

ஸ்தல விருட்சம் என்பது கோவிலகளில் மட்டும் இல்லை.
எல்லோருடைய சிறிய வயது நினைவுகளிலும் நிச்சயம் ஒரு ஸ்தல விருட்சம் இருக்கும்.

இன்று நகரங்களில் வாழ நேரும் சிறிய வயதுப் பையனகள் இழப்ப்து இயற்கையின் இந்த முதல் கொடையைத்தான்,ஞானசேகரன்//

உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஷண்முகப்ரியன் சார்.
ஸ்தல விருட்சம் என்பதன் தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்...

Suresh Kumar said...

நினைவுகளை வாசலில் கொண்டு வந்திருக்கிறீர்கள்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நினைவுகளை வாசலில் கொண்டு வந்திருக்கிறீர்கள்//

வணக்கம் சுரேஷ் குமார்,
மிக்க நன்றி நண்பா

நசரேயன் said...

நல்ல நினைவுகள்.. அப்படியே கள்ளுகடை நினைவுகள் இருந்தா போடுங்க

Anonymous said...

அருமையான பதிவு. நானும் சின்னப்பிள்ளையாக இருக்கு போது புளியம்மரத்தில் புளி பிடுங்க ஏறியிருக்கிறேன். புளியம்மரத்து நிழலில் விளையாடியிருக்கிறேன். உங்களின் இந்த பதிவு பலருக்கு மலரும் நினைவுகளை நினைவுபடுத்தியிருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

//நசரேயன் said...
நல்ல நினைவுகள்.. அப்படியே கள்ளுகடை நினைவுகள் இருந்தா போடுங்க//

அன்புள்ள நண்பா உண்மைய சொல்லனுனா, எனக்கு கள்ளுக்கடை அனுபவம் இல்லை. முடிந்தால் நண்பர்களிடம் கேட்டு எழுதுகின்றேன்.

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
அருமையான பதிவு. நானும் சின்னப்பிள்ளையாக இருக்கு போது புளியம்மரத்தில் புளி பிடுங்க ஏறியிருக்கிறேன். புளியம்மரத்து நிழலில் விளையாடியிருக்கிறேன். உங்களின் இந்த பதிவு பலருக்கு மலரும் நினைவுகளை நினைவுபடுத்தியிருக்கும்.//


கண்டிப்பாக ஒரு நல்ல நினைவுகளாகதான் இருக்கும், ஆனால் இந்த கால குழைந்தைகளுக்கு இப்படிப்பட்ட இனிமையான நினைவுகள் இல்லாமல் போகின்றது.மிக்க நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. என்ன அருமையாக சொல்லியுள்ளீர்கள். புளியமரம் பெரும்பாலும் கிராமங்களில் வாழ்வோருக்கு, தங்கள் வாழ்வின் ஒரு பகுதிதான் நீங்கள் சொன்னதுபோல்.
எங்கள் ஊரில் உள்ள ஒரு புளியமரத்திற்கு " இனிச்சமரம்" என்றே பெயர். இப்போதும் அம்மரம் உள்ளது. அந்த மரத்தின் பழம் அவ்வளவு இனிப்பாக இருப்பதாலேயே அந்தப் பெயர்.

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
ஆஹா.. என்ன அருமையாக சொல்லியுள்ளீர்கள். புளியமரம் பெரும்பாலும் கிராமங்களில் வாழ்வோருக்கு, தங்கள் வாழ்வின் ஒரு பகுதிதான் நீங்கள் சொன்னதுபோல்.
எங்கள் ஊரில் உள்ள ஒரு புளியமரத்திற்கு " இனிச்சமரம்" என்றே பெயர். இப்போதும் அம்மரம் உள்ளது. அந்த மரத்தின் பழம் அவ்வளவு இனிப்பாக இருப்பதாலேயே அந்தப் பெயர்.//
உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா

அது சரி(18185106603874041862) said...

மறந்து போனதெல்லாம் ஞாபகம் வருது ஞான சேகரன்..நல்ல பதிவு..

ஆ.ஞானசேகரன் said...

// அது சரி said...

மறந்து போனதெல்லாம் ஞாபகம் வருது ஞான சேகரன்..நல்ல பதிவு..//

வணக்கம் நண்பரே,
உங்களின் முதல் வருகை மற்றும் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க

கண்டும் காணான் said...

அருமையான படைப்பு ஆனால் எழுத்துப் பிழை உறுத்துகின்றது அதுவும் தலையங்கத்திலேயே. " கல்லெறிந்தவர்கள்" என வரவேண்டும் அதாவது "ரி" அல்ல "றி". எனது ஆதங்கமெல்லாம் இத்தனை பேர் படித்தார்களே யாருமே சொல்லவில்லையே எனபதுதான்.

ஆ.ஞானசேகரன் said...

//கண்டும் காணான் said...

அருமையான படைப்பு ஆனால் எழுத்துப் பிழை உறுத்துகின்றது அதுவும் தலையங்கத்திலேயே. " கல்லெறிந்தவர்கள்" என வரவேண்டும் அதாவது "ரி" அல்ல "றி". எனது ஆதங்கமெல்லாம் இத்தனை பேர் படித்தார்களே யாருமே சொல்லவில்லையே எனபதுதான்.//

உங்களின் முதல் வருகை என்னை மகிழ்ச்செய்கின்றது. நன்றி நண்பரெ பிழையை மாற்றிவிட்டேன்.. மீண்டும் நன்றி

priyamudanprabu said...

///
தீப்பெட்டியில் இரண்டு மூன்று பூக்களை போட்டு ஒருப்பக்கம் அட்டையை எடுத்து விட்டு காகிதத்தால் மூடி மறுப்பக்கம் ஒரு ஊசி துவாரத்தில் பார்த்தால் வீரர்கள் சண்டை போடுவது போல காட்சி தெரியும்.
/////
.......
அடடே!!!!!!!!

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...

///
தீப்பெட்டியில் இரண்டு மூன்று பூக்களை போட்டு ஒருப்பக்கம் அட்டையை எடுத்து விட்டு காகிதத்தால் மூடி மறுப்பக்கம் ஒரு ஊசி துவாரத்தில் பார்த்தால் வீரர்கள் சண்டை போடுவது போல காட்சி தெரியும்.
/////
.......
அடடே!!!!!!!!//

வாங்க பிரபு, மிக்க நன்றிங்க

வலசு - வேலணை said...

//
புளியமரம் என்று சொன்னதும் எல்லொருடைய மனதிலும் "ஆமாம் எங்கள் ஊர் புளியமரமும்
//
அட!
உண்மைதாங்க.

ஆ.ஞானசேகரன் said...

/// வலசு - வேலணை said...
//
புளியமரம் என்று சொன்னதும் எல்லொருடைய மனதிலும் "ஆமாம் எங்கள் ஊர் புளியமரமும்
//
அட!
உண்மைதாங்க.///

வணக்கம் வலசு - வேலணை
நன்றி நண்பா

கண்டும் காணான் said...

நன்றி ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// கண்டும் காணான் said...

நன்றி ஞானசேகரன்//

வாங்க நண்பா

SUFFIX said...

புளிய மரம்!! பதிவு புளிக்காமல் இனிப்பாகவே இருந்ததது

ஆ.ஞானசேகரன் said...

// ஷ‌ஃபிக்ஸ் said...

புளிய மரம்!! பதிவு புளிக்காமல் இனிப்பாகவே இருந்ததது//

மிக்க நன்றி நண்பரே

cheena (சீனா) said...

அன்பின் ஞானம்

சிறுவயதுக் குறும்புகளை நினைவூட்டி விட்டீர்கள். அருமையான இடுகை

புளியம்பழம் தின்றதும் - ( இப்பொது எழுதும் போதே வாய் புளிக்கிறது) - அதனுடைய கொட்டைகளை எடுத்து விளையாடியதும் - ஆகா ஆகா - அச்சுகம் எப்பொழுது மீண்டும் கிடைக்கும் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//cheena (சீனா) said...

அன்பின் ஞானம்

சிறுவயதுக் குறும்புகளை நினைவூட்டி விட்டீர்கள். அருமையான இடுகை

புளியம்பழம் தின்றதும் - ( இப்பொது எழுதும் போதே வாய் புளிக்கிறது) - அதனுடைய கொட்டைகளை எடுத்து விளையாடியதும் - ஆகா ஆகா - அச்சுகம் எப்பொழுது மீண்டும் கிடைக்கும் நண்பா//

நன்றி ஐயா

Thangamani said...

அன்புள்ள ஞானசேகரன்!
அருமை உங்கள் கட்டுரை!
தென்னிந்திய மக்களின் சமையலில் புளிக்கு
முக்கிய பங்குண்டு!புளியங்கொட்டையைத் ஒருபுறம்
தரையில் தேய்த்து (சோழிக்கு பதில்)நான்கு சோழி ஆட்டம்,
ஆடுவதும் உண்டு!
'பொங்கும் காலம் புளியங்காய்
மங்கும் காலம் மாங்காய்' என்று ஒரு பழமொழி உள்ளது.
அன்புடன்,
தங்கமணி.

ஆ.ஞானசேகரன் said...

// Thangamani said...

அன்புள்ள ஞானசேகரன்!
அருமை உங்கள் கட்டுரை!
தென்னிந்திய மக்களின் சமையலில் புளிக்கு
முக்கிய பங்குண்டு!புளியங்கொட்டையைத் ஒருபுறம்
தரையில் தேய்த்து (சோழிக்கு பதில்)நான்கு சோழி ஆட்டம்,
ஆடுவதும் உண்டு!
'பொங்கும் காலம் புளியங்காய்
மங்கும் காலம் மாங்காய்' என்று ஒரு பழமொழி உள்ளது.
அன்புடன்,
தங்கமணி.//

வணக்கம்
உங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.... மிக்க நன்றிமா